Translate

இரு நியூட்டன் ஆப்பிள் தருணங்கள்

 இரு  நியூட்டன் ஆப்பிள் தருணங்கள் 


கடந்த வாரம் வேலையில் கொஞ்சம்  மன உளைச்சல் அதிகம் . அகால நேர மீட்டிங்குகள், மயிர் பிளக்கும் திட்டமிடல்கள் , உள்ளே  உள்ள சதுரங்க விளையாட்டுகள், வலை விரிப்புகள் . குறிப்பாக நம்மவராயிருந்த அயலவர்கள் - நன்றாக விளையாடுகிறார்கள், எங்காவது எதிர் வரிசை கிடைக்கும்போது  கைகோர்த்து கும்மியடிக்கிறார்கள் .  இவ்வாறு அவ்வப்போது ஆவது வெயில் , மழை போல் தான் என்றாலும் org change (நிர்வாக மாற்றம் ?) ஆகும்போது வரும் ஒரு சில மாதங்கள் இப்பிடித்தான் இழுபறியாக இருக்கின்றன .  எப்போதுமே புதிதாய் வரும் மேனேஜர் நம்மை கீழே விழ விட்டு  தான் தூக்கி விடுவார். இவர் இப்போது முயற்சிக்கின்றார். விழாமல் , விழுந்தாலும் அடி விழாமல், பார்த்து சமாளித்து எழுந்து கொள்ளத் தெரிய வேண்டும். அவரும் இதைக் கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும்  ஒரு சில படிகள் கீழே இறக்கப்பட்டு  இப்போது மேலே வந்து கொண்டிருக்கிறார்.   இது இப்படித்தான்  தான் இருக்கிறது . இவைகளை ஒரு விளையாட்டாக எடுத்து கடந்து போக முயற்சிக்கிறேன் . கசப்பு , வெறுப்பு ஒன்றும் இல்லை.  மனுஷ்யபுத்திரனின் இந்தக்  கவிதை ஞாபகம் வருகிறது.


"நீங்கள் ஒரு நல்ல மனிதர்  என்பது 

உங்களுக்குத்  தெரியும் 

நான் ஒரு நல்ல மனிதன் என்பது 

எனக்குத் தெரியும் 


நீங்கள் உங்களைப் பற்றி புகழ்ந்து 

பேசிக்கொண்டிருக்கிறீர்கள் 

நான்என்னைப்  பற்றி புகழ்ந்து

பேசிக்கொண்டிருக்கிறேன் 


உங்களை அவமதித்தவர்களை 

நீங்கள் பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள் 

என்னை அவமதித்தவர்களை

நான் பழிவாங்கிக்கொண்டிருக்கிறேன் 


உங்களுடைய தந்திரங்களால் 

நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள் 

என்னுடைய தந்திரங்களால்

நான் முன்னேறிச் செல்கிறேன் 

....

....

என்னை எப்படிக்  கையாள்வதென்று 

உங்களுக்குத்  தெரியும் 

உங்களை எப்படிக்  கையாள்வதென்று

எனக்குத் தெரியும்


நல்லது நண்பரே !

நமக்குள் யார் மனமும் 

சந்தேகிக்காமல் 

நம் கைகளை விடுவித்துக்கொள்வது எப்படி ? "


- 'கைகளை விடுவித்துக் கொள்வது எப்படி '



ஆனால் விளையாட்டு தான் என்றாலும் ,அந்த நேரத்தில்  தலைக்குள் அது முழுதாக சென்று விடுகிறது. IPL கிரிக்கெட்டை நான் பார்க்காமல் இருக்க முடிவு செய்தது இதனால் தான். நான்கு மணி ஆட்டத்தில் CSK  தோல்வி அடைந்தால்,  முதல் ஒரு சில நிமிடங்கள் தொண்டை வரளும், பின்  கொஞ்ச நேரம் அடுத்தவர்களிடம் பேசுவது குறைந்து விடும்.  அப்புறம் தேவை இல்லாத எரிச்சல் வரும். சகஜம்ஆவதற்கு  ஒரு மணி நேரமாவது  ஆகும். இதுவே ராத்திரி மாட்ச் அனால் தோல்விக்குப் பின் தூக்கம் கெடும்.


சினிமாவையும் இதே காரணத்திற்காகவே தவிர்க்கிறேன் . வயதாகும் நேரத்தில் இறுதியாக வரும் 'சுபத்திற்கு ', கண்ணீர் மல்குவதற்கு காத்திருக்கலாம் என்றாலும் , நடுவே வரும் சின்னச் சின்ன சூழ்ச்சிகள், பதற்றக் காட்சிகள் மனதிற்கு இப்போது தேவையாக இல்லை. போன வாரம் குடும்பமாக பார்த்த விக்ரம் படமும் இங்கு விலக்கல்ல. படம் தோறும் வரும் பின்னல்கள், சதிகள், திடீரன வீட்டில் இழுக்கும் காட்சிகளை  மனம் ஒட்டி பார்க்கும் போது சோர்வே  வருகிறது . இறுதியில் அவருக்கு கிடைக்கும் வெற்றிக்காகவே முழுப் படம் என்றாலும், வழி நெடுக இந்த சிக்கல்களை நாமும் அனுபவித்து வர வேண்டி இருக்கிறது . இதே மன நிலையையே அசுரன் திரைப்படம் பார்த்த போது அடைந்தேன். 


நிற்க , சுற்றி வளைத்தாயிற்று , விஷயத்திற்கு வருகிறேன். 

இவ்வாறு எதிர்மறை நினைப்புகளை தவிர்ப்பதற்கும், மனதை வேறு இடம் செலுத்துவதற்கும் "எங்க ஊரு பாட்டுக்காரன் " படத்தை youtube -ல் வைத்துப் பார்த்தேன் - மனைவியுடன் . ஏனோ கடந்த இரு நாட்களாக 'செண்பகமே  செண்பகமே'  பாட்டு மனதில் ஓடிக் கொண்டே இருந்தது தான் காரணம். 


எந்த விதமான சிக்கல்களோ, எதிர்மறை விஷயங்களோ இல்லாமல் பேட்டரி கார் , yulu- பைக் போல படம் செல்கிறது. பெரும்பாலும் நியூட்ரல் , உச்சத்தில்  30 கிமீ வேகம் . 


உதாரணத்திற்க்கு இது. 


ஊர்த் திருவிழா, ஜல்லிக்கட்டு நடக்கிறது. எல்லாரும் மாட்டை அடக்குகிறார்கள் . எல்லாம் நடக்க ராமராஜன் மாட்டு வண்டியில்  நண்பர்களுடன் உட்கார்ந்து இருக்கிறார். ஒரு வழியாக உதிரி மாடுகளை சிலர் அடக்குவதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார்கள். இது வரை ஹீரோ செய்வதற்கு ஒன்றும் இல்லை , மாட்டு வண்டியில் இன்னும் உட்கார்ந்து பொங்கல் தின்று கொண்டு இருக்கிறார்.


இப்போது நாம் மனது எதிர்பார்த்து  காத்திருந்த காட்சி வருகிறது. சண்டி மாடு உள்ளே நுழைகிறது. நம்பியார் படை பரிவாரங்களுடன் மேடை ஏறுகிறார். மைக்கை வாங்கி காளையின் மெய்க்கீர்த்தி படிக்கிறார். மாட்டை அடக்க அறைகூவல் விடுக்கிறார். பரிசு அறிவிக்கிறார். அப்புறம் போனஸ் அறிவிக்கிறார். இதற்கும் யாரும் முன் வரவில்லை. இலக்கணப்படி இந்த இடத்தில்  "பொதுவாக எம்மனசு தங்கம்' template - ஐ  நினைத்துக்  காத்து இருக்கும் போது இவ்வாறு நிகழ்கிறது. இதுவரை வண்டியில் உட்கார்ந்து இருந்த ராமராஜன் இன்னும் உட்க்கார்ந்தவாறே பொங்கல் கொண்டு வந்த பையனிடம் எதோ கேட்டு வரச் சொல்கிறார். என்ன கேட்டார் கவனக் குறைவால் என்பதை விட்டு விட்டேன், அப்புறம் மனைவி சொல்லித் தெரிந்தது  , அவர் கேட்டு வர சொன்னது  மாட்டின் பேரை. இப்போது எனக்கு பொறி தட்டியது. பையன் வந்து காதில்  'பேச்சி' என்கிறான். இப்போது ஒரு வழியாக மாட்டு வண்டியில் இருந்து  ராமராஜன் எழுந்திருக்கிறார்.  வேட்டியை மடித்துக் கட்டி மைதானத்தில் இறங்குகிறார். நாம் அவர் காளையை கொம்பு பிடித்து அடக்கக் காத்து இருக்கும் போது , பேச்சி பேச்சி என்று பாடியே வழிக்கு கொண்டு வருகிறார். கடைசியில் காளை குழந்தை போல் கீழே உட்கார்ந்ததும் தலையில் இருந்த பரிசு பவுனை ஒரு கையால் எடுத்துக் கொள்கிறார்.


https://www.youtube.com/watch?v=wbLHt9nhCjc


இந்த இடத்தில் ஜெயமோகனின் 'ஆனையில்லா' சிறுகதை ஞாபகம் வருகிறது.

https://www.jeyamohan.in/130198/


இதில் குட்டி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்று முன்பக்கம் வீட்டிற்குள்ளும் , பின்பாகம் வீட்டிற்கு வெளியேயும் மாட்டிக் கொள்கிறது. ஊரே முயன்றும் முடிய வில்லை. “எலிப்பொறியிலே பெருச்சாளி சிக்கின மாதிரில்லா நிக்குவு!”. யானை மேல் நாலு டின் எண்ணெய் , கிரீஸ்  தடவி வெளியே இழுக்க முயல்கிறார்கள் . கடைசியில் வீட்டை இடித்து தன ஆக வேண்டும் எனும் நிலையில் ஒரு மந்திரவாந்தியை (கடுவா ) அழைக்கிறார்கள். கடுவா அந்த யானையின் பெயரைத் தெரிந்து கொண்டு அதைக்  கொஞ்சியே மத்தகம் தாழ்த்தி , சுருங்க வைத்து விடுவிக்கிறார். 


“அவரு நம்ம கோபாலகிருஷ்ணனை பாத்து சின்ன குட்டிய விளிக்குத மாதிரி விளிச்சாரு… சின்னக்குட்டிக்கிட்ட பேசுத மாதிரி பேசினாரு… இவன் அதைக்கேட்டு அப்டியே நம்பி சுருங்கி சின்னக்குட்டியா ஆயிட்டான்”


திரும்பவும் கதைக்கு. தோல்வி அடைந்த நம்பியார் ராமராஜனை வீட்டுக்கு போகும் வழியில் மடக்கி வம்புக்கு இழுக்கிறார். இங்கும் இலக்கணப் படி நம்பியார் வில்லனாய் உருவெடுப்பர் என்று எதிர் பார்க்கும் பொது, அவரே சண்டையை நிறுத்தி மன்னிப்பு கேட்டு , டெஸ்ட் செய்ததாகச் சொல்கிறார். வாழ்த்தி விடை பெறுகிறார். 


இருந்தாலும் இறுதிவரை பார்க்க முடியவில்லை , தூக்கம் இழுத்தது, சில தினங்களுக்குப்   பிறகு.


இவ்வாறு எழுதித் தீர்ப்பதும் நன்றாய்த்தான் இருக்கிறது

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2