Skip to main content

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி



ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே.

அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும்.

'கலை என்பது வெளிப்பாட்டு விதம். பேச்சு, நடனம் போல எழுத்து ஒரு கலை. 
எழுத்துங்கறது கதை சொல்றது. 
கதைங்கிறது உண்மை..அஸ் இட் இஸ்..நடக்காத கதையை எழுதமுடியாது'

இங்கே நிறுத்தி பாட்டி வடை சுட்ட கதையை எப்படி எழுதுவீர்கள் என்று  கேட்டார். 

'ஊர்ப் புளியமரத்துக்குக் கீழ ஒரு பாட்டி அடுப்புல வடை சுடறாங்க' என்று ஆரம்பித்தேன்.
ஊரு கிராமமா, நகரமா , யாரு வடை வாங்கப்போறது என்று கேட்டார்.
நரியை அதற்கான காட்டையும் எதிர் பார்த்து ' கிராமம் , ஊருக்கு வெளியே' என்றேன்.
'இதுனால தான் இந்தக் கதையை யாரும் எழுதல..வாயால சொல்லிக்கிட்டே இருக்காங்க' 
இக்கதையை எழுதினால் வரும் தர்க்கப் பிழைகளைக் காட்டினார். இதே கதையை நரியின் பார்வையில் , காக்காயின் பார்வையில், வடையின் பார்வையில் சொல்லிக் காட்டினார்.

பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது என்று சொன்னேன். எண்பது புத்தகங்கள் எழுதியிருப்பவர் வகுப்பில் தன்னைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? எட்டு நாட்களில் ஒரு இடத்திலும் தன்னுடைய எழுத்தை முன்நிறுத்தவே இல்லை. பெரிய எழுத்தாளர்களையும் , மரபையும் மட்டும் மீண்டும் முன்னிறுத்தினார்.  

தன்னுடைய எழுத்தைத் தொட்டுக்காட்டி இவ்வாறு எழுதினேன் என்று சொல்வது அவருக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் தான் கற்றது யாரிடம் என்று காட்டினார். அழகிரிசாமியையும், லா.ச.ராவையும், சு.ராவையும் அ.முத்துலிங்கத்தையும் ஜெயமோகனையும் தொட்டுக்காட்டியபடி வகுப்பை நடத்தினார். 

முதல் கதை பொன்ஜூர் ரூஸோ!,  ஷோபாசக்தி இரண்டு வாரங்கள் முன் எழுதியிருந்தது. பிரான்சில் இருக்கும் லிபி வட்டம் என்னும் ஈழத் தமிழர் அமைப்பு  இலங்கையில் இருக்கும்  எழுத்தாளருக்கு விருது கொடுக்கிறது. விருது வாங்க வந்தவர் அகதியாக அடைக்கலம் கேட்கிறார். சட்டச் சிக்கல் வரும் என்கின்றனர் லிபி வட்டத்தினர். காணாமல் போகிறார். பந்தியோன் மண்டபத்தில் ரூசோவின் சமாதியின் மேல் ஒளிந்து கொள்கிறார். இது கலைஞர்கள் , புரட்சியாளர்கள் சமாதி. அங்கு கூட்டித் துடைப்பவர் ஆப்பிரிக்கப் பெண். அவர் மேலிருக்கும் குற்றம், பிரெஞ்சு பழகாதது. ஆனால் மேலதிகாரிகளுக்கு பொன்ஜூர் (வணக்கம்) சொல்ல மட்டும் கற்றிருந்தார். அவர் மேலதிகாரியிடம் சொன்னார்: பொன்ஜூர், திரு. ரூசோ சமாதியில் இருந்து வெளியே வந்து விட்டார்.

அடுத்து இரண்டு கதைகள் வண்ணநிலவனின் அந்திக் கருக்கல் , மா.வெ.சிவக்குமாரின் நாயகன் .. 

எத்தனை கதைகள் எழுதியவர். பாத்திரங்களும் கதைச்சூழலும் அவர் மொழியில் கச்சிதமாய் விரிந்துகொண்டே சென்றன. மேகக்கூட்டம் விலகி தெருவில் சூரிய ஒளி மீண்டும் வருவது போல். சரியாய் நிழல் விழவேண்டிய இடமும், ஒளிபாய்ச்சும் இடமும். 

பையன் வைப்பு வைத்திருப்பதைக் கண்டிக்கப் போகிறார் கண் தெரியாத பெரியவர். மருமகள் படும் பாடு இவருக்குச் சகிக்கவில்லை. அவள் காப்பி கொடுத்து உபசரிக்கிறாள். நயமாக பையன் போகமாட்டேன் தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்கிறார். கடைசியில் காலில் விழுகிறார், பெரியவர் ஆசிர்வாதம் செய்து திரும்புகிறார். 

வாழ்வில் எதுவும் கருப்பு வெள்ளையாக துல்லியமாக இல்லை. எழுத்து அதைத் தொட்டுக் காட்ட வேண்டும்.

நாயகன் தன்னை கமலுக்கு மேல் என்று நினைக்கும் ஒருவரின் கதை. ஒரு பேங்க் குமாஸ்தா கமலைப் பார்ப்பது. என்ன நடந்தது என்று தெரியாமல் வாழ்வு திசை திரும்பிவிடுகிறது. குண்டுப் பெண்ணை கல்யாணம் பண்ணி, கடன் வாங்கி வீடு கட்டும் குமாஸ்தாவாகிவிடுகிறார்.

32வது பிறந்தநாளில் நாயகன் படம் பார்த்து , இரவில் மீசையை மழித்து வேலு நாயக்கர் ஜெயிக்கிறார். வன்மமும் மழிந்திருக்கும் என்று நினைத்தேன். 

இன்னும் இரண்டு வேற்றுமொழிக் கதைகள். மிருகத்தனம் மண்டோ எழுதியது. குறித்து வைத்திருக்கிறேன் , கண்டு பிடிக்க முடியவில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் பசு கன்றை விட்டு மாட்டைக்  கூட்டிக்கொண்டு போகும் குடும்பத்தின் கதை. பதுங்கியிருக்கும் போது கன்றை நினைத்து மாடு மா என்று கத்திக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 

கதைகள் கேட்டபின் எனக்குள் தோன்றியது எழுதுபவன் கதைசொல்லியாக இருக்க வேண்டும். கதைகள் எல்லாம் அவர் மொழியில் அமைந்திருந்தது. சொல்லும்போதே கதையைக் கட்டமைத்தார். உரையாடல்கள் உணர்ச்சிகரமாய் இருந்தன. காட்சிகளை மனதில் பார்த்திருந்தார். அந்திக்கருக்கல் பெரியவர் கயிற்றுக்கட்டிலில் எழுந்து செருப்பைத் தேடும்போதே பார்வையிழப்பு சொல்லப்பட்டது.
ஆச்சி வந்து அவர் நியாயம் பேசினார்.

கதைக்குப் பின் சொல்லவேண்டிய கோட்பாடுகள் சொல்ல ஆரம்பித்தார். மேக் புக்கில் கீ நோட்டுகளாக தொகுத்திருந்தார். தேர்ந்த குறிப்புகள். எல்லாம் ஒரே வரியில் கூராய்த் தைப்பவை.

நல்ல எழுத்துக்கு நான்கு விஷயங்கள் முக்கியம். நம்பகத்தன்மை , காலத்தெளிவு, பாத்திரவார்ப்பு, தகவல் செறிவு.

எழுதும் முன் சொல்லிப் பார்க்க வேண்டும். காதிற்கு எழுத்தைக் கண்டு கொள்ளும் பலம் உண்டு. தான் நேற்று எழுதியதை வாய்விட்டுச் சொல்லி எழுதியதாகச் சொன்னார். 

பார்க்கததை விவரிக்கக்கூடாது, தவறுகள் வரும். சொற்சிக்கனம் வேண்டும். வீரியம் கூடும். பிழை குறையும்.

கதையில் உள்மடிப்புகள் அவசியம். 
மதிலுகள் கதையில் வரும் மதில் இந்தியாவும் , அவர் வெளியே வருவது சுதந்திரம் கிடைப்பதுவும் என்றார். சுதந்திரத்திற்குப் பின் எதுவும் பெரிதாய்  மாறிவிடாது என்று பஷீர் சொல்வதாகச் சொன்னார்.

சிறுகதை இன்றைய வடிவம் இல்லை. இரண்டு ஸ்க்ரீனுக்கு மேல் யாரும் படிப்பதில்லை. பதிப்பகங்கள் சிறுகதைகள் விரும்புவதில்லை. இன்றைய கதை வடிவம் நாவல் என்று கலைத்து முடித்தார்.

பாராவை டாஸ்க் மாஸ்டர் என்பேன்.
பேசாதே, செய் ,கையைக் காட்டு என்று நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
கடைசியில் ஒரு அசைன்மென்ட். எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு அத்தியாயத்தை 2500 சொற்களில் இருந்து 500 ஆக குறைக்க வேண்டும். கதை குன்றாமல், அவர் சொற்களில் இல்லாமல், சுய மொழியில், ஆறு நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

அவரே எழுதியதைத் திருத்தி எல்லோருக்கும் வாய்ஸ் நோட்டில்  பதில் அனுப்பினார்.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...