Posts

Showing posts from 2026

Translate

பெருஞ்சொல்வெளியில் ஒரு சொல்

Image
பெருஞ்சொல்வெளியில் ஒரு சொல் ----------------------------------------------- [1] அவன் Vestiges of Old Madras என்ற அப்புத்தகத்தை அந்தப் பொறியின் தட்டில் வைத்தான். ஆயிரம் பக்க புத்தகம் எளிதாய் அமரும் வகையில் அதன் தளம் இருந்தது. பூசிய கை வழுக்கும் வழுவழு பிளாஸ்டிக் தரை. அதன் பற்கள் என உள்பகுதியில் இரண்டடி நீளமான கத்தியின் முனை பளபளத்தது. அதன் கூர்முனையைப் பார்த்ததும் அவன் முன் பற்கள் கூசின. அதன் நெற்றியில் திரை இருந்தது. அதை அழுத்தும் முன், நூலைக் கையில் எடுத்து மீண்டும் ஒருமுறை பார்த்தான். எத்தனை கைகள் மாறி இங்கு வந்திருக்கும் என்று எண்ணினான். பழைய நூல்களை மொத்தமாக வாங்கி டிஜிட்டைஸ் செய்வது அவன் வேலை. ஒரு வரலாற்று செயற்கை நுண்ணறிவுக் கம்பெனியின் இரண்டாம் தரப் பணி. சுற்றி பொன்னிறத் தோரணத்தில் நடுவே புத்தகத்தின் பெயர் எழுதப் பட்டிருந்தது. 1640-1800 என்ற எண்கள் பற்றியே அவன் யோசித்தான். திறந்தும், மூடியும் அதன் முதுகு தளர்ந்திருந்தது. ஆனால் பக்கங்கள் விரைத்து நின்றன. திறந்து ஒரு தாளை விரல்களுக்கு இடையில் வருடினான். சிறு முரசின் ஓசை எழுந்து ஓய்ந்தது. மீண்டும் அதைத் தட்டில் வைத்தான். தொட...

ஒரு ஜெராக்ஸ் கடைக்காரரின் பிரைவசி

  ஒரு ஜெராக்ஸ் கடைக்காரரின் பிரைவசி ---------------------------------------------------- அவர் கடையில் இரண்டு கணிப்பொறி மானிட்டர்கள் உண்டு. ஒன்றில் அவர் கல்லாவில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இன்னொன்று பார்வையாளர்களைப் பார்த்து இருக்கும். எதிரில் மணல் கடிகாரம் போன்று இடுப்பில்லாத மூங்கில் சேர்கள் போட்டிருப்பார். மேலே அழகிய போட்டோக்கள் போட்டோ பிரேம் அளவைக் காட்டத் தொங்கும். ஒரு குடகு கல்யாண ஜோடி. இறுக்கிக் சுற்றிக் கட்டிய சேலையில் அந்தப் பெண். குடகின் நீள அங்கியில் அந்தப் பையன். கடைக்காரர் அந்தப் பகுதி தேரோட்டத்தில்,  ட்ராக்டர் டிரைவராய்   தேரை இழுக்கும் படம். அப்புறம் வெவ்வேறு அளவில் பொன் பூட்டிய ஏழுமலையான் உருவங்கள். ஒருவர் வந்து பிரிண்ட் அவுட் என்றார். 'To whomsoever it may concern' என்று வெளித்திரையில் தெரிந்தது. 'உங்கள் ஆகஸ்ட் முதல் தேதி ராஜிநாமாக் கடிதம் பெற்றுக் கொண்டோம். உங்களை வேலையில் இருந்து விடுவிக்கச் சம்மதம். 31 ஆகஸ்ட் இறுதித் தேதியாக இருக்கும். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் அட்மின் ஆபீசராக 2023-ல் துவங்கி பணி புரிந்தீர்கள். உங்கள் இறுதிச் ச...

ஒரு ஊருக்கு இரண்டு தல புராணங்கள்-மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
ஒரு ஊருக்கு இரண்டு தல புராணங்கள்-மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ------------------------------------------------------------------------------------- வரலாற்றை வாசிப்பது பழைய பெட்டியைக் குடைவது போன்று, குறையாத சுவை கொண்டது. எதையோ எடுக்க நினைத்து பெட்டியைத் திறந்தால், ஒரு துண்டுக் காகிதம், ஒரு போட்டோ, ஒரு கடிதம் வேறெங்கோ இழுத்துச் செல்லும். இப்படி வரலாற்றில் சம்பவங்கள் பெட்டியில் இருந்து வருவதைப் போல் வருகின்றன. மகாத்மா காந்திக்கு மன அழுத்தம் இருந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு எப்போதும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது என்றும், அவர் உடலமைப்பு அது என்றும் படித்திருக்கிறேன். ஆனால், 1927 அவர் வேலையில் நான்கு மாதம் துண்டு விழும் வகையில் சிக்கல் இருந்தது தெரியாது.ஸ்டோக் என்று சந்தேகிக்கிறார்கள். பெங்களூர் நந்தி ஹில்ஸில் முழு ஓய்வு எடுத்தார் என்பதை மனம் நம்பவில்லை. தாங்க முடியாத தலை வலியை, பிரார்த்தனை செய்து சமாளிக்கிறேன் என்று எழுதுகிறார். நடுவில் பையன் காதலில் விழுகிறார். சம்பந்தி ராஜாஜி. இது இவர்கள் இருவருக்குமான உறவை முறித்து, தேசத்திற்கே இழப்பை உண்டு பண்ணியிருக்கலாம். ஆனால், ...

பறக்கும் விருட்சம்

Image
பறக்கும் விருட்சம் ----------------------- இரு கிளிகள் மேகப் பெரும் பறவையிலிருந்து கீழிறங்கின. முன்பே பறந்து கொண்டிருந்த அந்த மரத்தில் வந்து அமர்ந்தன. மரத்தின் ஆயிரம் ஆயிரம் நாவுகள் எதையோ சொல்லியபடி இருந்தன. அதனுடன் காற்றும் எப்போதும் உடன் பறந்தபடி இருந்தது. அதன் தண்டுகளின் வழி நீரும் எந்நேரமும் உள்ளே பறந்தது. விருட்சத்தின் வேரின் கீழ் ஆகாயம் இருந்தது.  அதனுள் நீர் மேகமென அங்குமிங்கும் பறந்தபடி இருந்தது. தண்ணீர் வேர் கண்டதும் , மேலெழும்பி இன்னும் உயரப் பறந்தது. ஒரு கணத்தில் அதில் ஓர் வண்ணப் புதுப் பறவை துளிர்த்தது. பின்பு ஆயிரம் ஆயிரம் வண்ணப் பறவைகள். கிளிகளில் ஒன்று , அதில் ஒன்றை நுகர்ந்தது. இன்னொன்று அதைப் பார்த்தது. பின் இரண்டும் அந்தப் பெரும் பறவையில் ஏறிக் கரைந்தன. த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே | தயோரந்யஃ பிப்பலம் ஸ்வாத்வத்த்யநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி || முண்டக உபநிடதம் (3.1.1) [த்வா : இரண்டு.ஸுபர்ணா : அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைகள் ஸயுஜா: எப்போதும் பிரியாத; ஸகாயா : தோழர்கள்;  ஸமானம் : ஒரே;  வ்ருக்ஷம் : மரத்தை (இங்கு உடல் அல்லது உலகைக் குறிக்கி...

கல்வி , காப்பி, குடகு - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
கல்வி , காப்பி, குடகு - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை --------------------------------------------------------------- குடகில் காடும், மலையும் முடிவதே இல்லை. நிலம் விதை போல் காட்டைக் கிழித்து வெளியே வரவேண்டும். பார்க்கும் இடமெங்கும் ,தூசி போல் காடு ஏறி நிலத்தை மூடிக் கொண்டே இருந்தது. சரியான வண்டிப் பாதை அளவே, காடு நிலத்தைக் காட்டியது. மடிக்கேரி அரண்மனை செல்லும் நுழைவில் கைவிடப்பட்ட ஒரு அம்பாசடர் கார் நின்றது. காலத்தால் அரித்து எடுக்கப்பட்டு, மாபெரும் துருவென எஞ்சி நின்றது. துருவும் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. ஓரிரு இடங்களில் மட்டும் வெள்ளை நிறம் ஒட்டிக் கொண்டிருந்தது. இரும்பின் கருப்பும் , செம்மஞ்சளும் கவ்வியிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் நாடு பிடித்தலும் இப்படித்தான் இருந்தது. குடகு போல் வேறு எங்கும் இது தெளிவாக எழுதப்படவில்லை. குடகு வரலாறு பற்றிய எனது மெட்ராஸ் பேப்பர் கட்டுரை இவ்வாரம் வெளியாகியிருக்கிறது. https://madraspaper.com/kudagu/  

ராஜகேசரிப் பெருவழி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
ராஜகேசரிப் பெருவழி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ----------------------------------------------------------------- பெருவழிகள் ஒரு நிலப்பகுதியின் தலைவிதியை மாற்றி விடுகின்றன. நம் வீட்டின் கதவைப் போல. திறந்து இருப்பது வாய்ப்பு. மூடியிருப்பது பாதுகாப்பு. இரண்டுக்கும் ஒரு சமநிலை வேண்டியிருக்கிறது. கோவையைப் போல் சில நகரங்கள் இப்படிக் கதவருகில் அமைந்து விடுகின்றன. 2500 வருடம் முன் கொங்கு நாட்டு இரும்பு விற்பனை எகிப்துக்கும், ரோமுக்கும் நடந்திருக்கிறது. இங்கு கிடைத்த மரகதக் கற்கள் பற்றி ரோமில் சான்றுகள் உள்ளன. முசிறித் துறை எகிப்தில் எழுதப் பட்டிருக்கிறது. மலபாரையும், கேரளத்தையும், தமிழகத்துடன் இணைக்கும் பாலக்காட்டுக் கணவாயை ராஜகேசரிப் பெருவழி என்று ராஜராஜன் பெயரிட்டான். நதிகள் காலம் கடந்தவை என்பார்கள். ஆனால் பாதைகளும் என்றும் இருப்பவை. கோவையையும் ராஜகேசரிப் பெருவழியையும் ஆராயும் எனது மெட்ராஸ் பேப்பர் கட்டுரை. https://madraspaper.com/history-of-coimbatore/  

ஞானி.AI

Image
ஞானி.AI -------------------------- நேற்றும் இன்றுமாக இரண்டு நினைவு கூற வேண்டிய சம்பவங்கள். ஒரு மணி நேர மெட்ரோவில் பூமிக்குக் கீழே மூன்று நிறுத்தங்கள். மற்றெல்லாம் வானத்தில். உதாரணமாக, எல்லா தனி வீடுகளின் தண்ணீர்ப் பீப்பாய்களும் மஞ்சள் வண்ணமாய் இருக்கின்றன. மாடியில் பூ வைத்தது போல். வண்டி முன்னால் செல்லும்போது தொட்டு விலகி , பின்னால் பூக்கள் மறையும். லால்பாக் பகுதியில் மரங்கள் மெட்ரோ பாலத்தை விட இருமடங்கு உயரமிருக்கும். எலெக்ட்ரானிக் சிட்டி பின்புற சூரிய அஸ்தமனம், ஒட்டுமொத்த மடிவாலா ஏரி என ரம்மியமான இயற்கையும் உண்டு. முன்னரெல்லாம் நிறைய வேடிக்கை பார்ப்பதுண்டு. இப்போது சிறிது குறைச்சல். நேற்று பசவனகுடி நிறுத்தத்தில் வண்டி புறப்படும் போது ஒரு கம்பெனி பெயர்ப் பலகை. ஞானி.AI என்ன ஒரு ஜெயின் டைட்டில். இருமுனைக் கத்தி. ஞானி என்பவன் முழுதும் அறிந்து, முடிவில் அதையும் துறந்தவன். அதனருகில் செயற்கை அறிவு நிற்கிறது. யாரோ ஞானி அதைப் பக்கத்தில் ஆணி அறைந்து உட்கார வைத்திருக்கிறார். இந்த செயற்கை அறிவை நினைத்துத் தான் பீதி கிளம்பியிருக்கிறது. இல்லை ஞானியும் செய்யறிவும் இங்கே ஒரு புள்ளியில் சந்திக்கிறத...

அஸ்மி அல்லது பொருள் தொலைதல்

Image
அஸ்மி அல்லது பொருள் தொலைதல் ---------------------------------------------------- மறுநாள் டிரைவர் வேலையை நினைத்து முதல் நாள் இரவே யோசனையாக இருந்தது.இப்போதெல்லாம் ஊருக்குள் கார் ஓட்டுவது அதிகம் பீதியைக் கிளப்புகிறது. ஞாயிறு மதியத் தூக்கத்தையும் பலி கேட்டது இன்னோர் சோகம். ஏனோ காலை எழுந்ததும் நல்லூழ். சாரதி வேலை  கேன்சல் ஆனது. ஞாயிறு நேரம் கிடைத்தது குதூகலகமாக இருந்தது. மகிழ்ச்சியில் கட்டாயத் தூக்கம். என்ன செய்தும் வரவில்லை. எங்கேயோ தலை முட்டியது போல் இருந்தது. தொண்டையிலும், நாக்கிலும் சேர்த்து ரப்பர் பேண்ட் போட்ட மாதிரி மெல்லிய வலி. தூங்கியிருக்கிறேன் என்றும் தூக்கம் போச்சு என்று ஒரே நேரத்தில் நினைப்பு.   எண்ணியவுடன் முழிப்பு பொங்கி, குறட்டை வெடித்து, படுக்கையில் சிந்தி விட்டது. எழுந்து செய்ய ஒன்றும் இல்லை. சும்மா எப்படி இருப்பது. பையனை இரண்டாம் தடவை முடி திருத்த அழைத்துச் சென்றேன். குடியிருப்பின் பின் வாசல் வழி கோபசந்திரா கடந்து பிரதான சாலை செல்ல வேண்டும். எனக்கு இது ராபர்ட் ப்ராஸ்டின் 'ரோட் நாட் டேக்கன்'. அன்றெல்லாம் டிவி பார்க்கும் போதே தெரிந்தவர்கள் செட்டிங் என்பார்கள...

' ----------------------------------- '

Image
' ' --------------------------------- குருவிடம் பிரபஞ்ச ரகசியம் என்னவென்று கேட்டான். சிதம்பரம் நோக்கி கை காட்டினார். அங்கு கூட்டத்தில் ஒருவனாய் நின்றான். தெய்வத்தின் வலப்பக்கம் நீலத்திரை ஆடியது. மணி 7:30. பூசகர் திரையை விலக்கி ஒளி காட்டினார். அந்தரத்தில் ஒரு வில்வ மாலை. அதன் பின்னால் ஒன்றும் இல்லை.  

சென்னை என்னும் சோதனைச் சாலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
சென்னை என்னும் சோதனைச் சாலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ------------------------------------------------------------------------------------ நம் வாழ்வைப் போல் வரலாறும் தற்செயல்களின் ஒழுக்கு தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 1600-ல் கூட்டு முதலீட்டில் ஆரம்பமான கிழக்கிந்தியக் கம்பெனி , பல நாடுகளின் தலை விதியை நிர்ணயம் செய்வதாக இருந்தது. சென்னை , மும்பை, கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களும் அதன் பாதையில் வந்தன. அதன் கடல் பயணங்களும், ஆரம்பமும், வளர்ச்சியும் சென்னையின் ஆரம்பமும், வளர்ச்சியும் என இணை கோடுகளாகப் பார்க்கலாம். இன்றைய யூனிகார்ன் ஸ்டார்ட் அப் ஒன்றின் கதையே அது. முழுதும் வணிக நோக்கமும், வளர்ச்சியும் மட்டுமே குறிக்கோள்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஊடாக சென்னை நகர் உருவான கதை பற்றிய எனது கட்டுரை. https://madraspaper.com/chennai-new-airport-land-history/  

வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ---------------------------------------------------------------------------------- வரலாற்றை வருடங்களின் கோர்வையாகப் பார்ப்பது சலிப்பூட்டும். யார் யாருக்கு மகன், எப்பொழுது பிறந்தார், எங்கே என்னென்ன சண்டைகள் , ஜெயித்தது, தோற்றது போன்றவை தகவல் அடுக்குகள் என்று தோன்றும். ஒரு வகையில் வரலாறு என்பது மாபெரும் தொங்கும் போட்டோ பிரேம்கள் தானோ என்ற எண்ணம் வருகிறது. ஸ்டாம்ப் அளவில் இருந்து, கட் அவுட் அளவு வரை தொகுத்துச் சேர்த்த போட்டோ ஆல்பம். அக்கால ஜமீன் வீடுகளில், மான் வேட்டைக்குப் போய் வந்த ஆதாரமாய், தோலை உருவி வைக்கோலில் அடைத்து, கொம்பு சொருகி சுவற்றில் அறைந்திருப்பார்கள். வரலாறும் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எல்லாமும் அப்படி இல்லை. ஒரு சொல்லோ, வரியோ நம்மை எழுந்து அமர வைக்கிறது. ஒரு பொறி. வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் பின்வருமாறு சொன்னால் அவரை என்னவென்று நினைப்பது? "வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே நான் விரும்பினேன். தனிப்பட்ட முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் எனது செயல்களைத் தீர்மானிக்கவில்லை. இப்படி நான் கூறினால், அத...

சல்லி வேரில் வெள்ளை மீன்கள்

Image
சல்லி வேரில் வெள்ளை மீன்கள் -------------------------------------------------- துறவி சிரசாசனத்தில் நின்றபடி இப்படி நினைத்தார். நீரின் வேர் கடலில் பூமியின் வேர் ஆகாயத்தில் மழையின் வேர் பூமியில் எதிரில் இருந்தவர் கண்மூடி தலைகீழாய் இருந்தார். சல்லி வேரென தரையில் படர்ந்தது முடி வாழ்வின் தழும்பென அதன் மேல் நீந்தும் நரை. மனிதனின் வேர் தலை.

எரர் 404

Image
எரர் 404 ----------- இருபுறமும் ஓடும் கறுப்பு நதி என்று துறவி மனதில் நினைத்தார். ஆசிரமத்தின் அடுக்களைச் சுவற்றில் பிள்ளையார் எறும்புச் சாரைகள் சிறு நூல் அசைவெனச் சென்றன. மேல் செல்லும் வரிசை அடுப்பருகில் தேங்காய்ப் பத்தையில் ஆரம்பித்தது. ஊறிய எறும்புகள் , தேங்காய் மூடியை பனிமலையெனக் காட்டின. கீழே சென்றவை துளியைச் சுமந்து சிறு குழியில் இறங்கி மறைந்தன. எதற்கென்று தெரியாமல், ஒவ்வொன்றும் தனக்கிடப்பட்டதைச் செய்தன. எதிர்பாராமல் சுவரிலிருந்து பூனை குதித்து, தேங்காய் மூடி தரையில் விழுந்தது. எறும்புகள் சிதறி, ஒட்டுமொத்த வரிசையும் திசையில்லாமல் தடுமாறின. மாணவன் பத்தையை திரும்ப அதே இடத்தில் வைக்கட்டுமா என்றான். இல்லை என்றார் துறவி .

3x (1+1) = 1

Image
3x (1+1) = 1 ------------- குகைக்குள் உள்முகந்து தியானத்தில் கண் மூடியிருந்தார் அத்துறவி. எப்போதோ கண் திறந்தார். மரக்கிளை அமர்ந்த பறவையொன்று விண்ணில் எழுந்து பறந்தது. மலையும் வானமும் அங்கேயே இருந்தன. ------- குழலென காற்று மரத்தை இசைத்தது. மயிர்களென எழுந்து ஆடின அதன் இலைகள். ஒரு இலை சுழன்று உதிர்ந்தது. அதை தோட்டக்காரர் பாய்ச்சிய நீர் சுமந்து கால்வாயில் விட்டது. இலையின் மற்றொரு பயணம் துவங்கியது. மரத்தில் இலைகள் இன்னும் ஆடிக் கொண்டிருந்தன. மரம் அசையாமல் இருந்தது. --------- நகைக்கடைக்காரர் வெல்வெட் மடிப்பில் பொன் ஆரங்களைப் பரப்பினார். காலை வெயில், இளங்காலை வெயில், உச்சி வெயில், மாலை வெய்யிலென பொன் நிறச் சாயைகள். அப்பெண் எதைத் தேர்வது என்று தடுமாறினார். அப்போது செய்கூலி என்ன, ஆண்டிக் எது , கிளாசிக் எது, டிரெண்டிங் எது என்று பிரித்துக் காட்டினார். பெண் இன்னும் முகவாயைத் தொட்டபடி இருந்தார்.  'எல்லாப் பவுனும் ஒன்னு தான். கோல்ட் பிஸ்கட் பார்க்கிறீங்களா மேம்.'  

அதிகாரத்தின் அருகே வளர்ச்சி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
அதிகாரத்தின் அருகே வளர்ச்சி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை  ------------------------------------------------------------------------------ மைசூர் எப்போதும் பார்த்துத் தீராத ஊராகவே இருக்கிறது. வரலாற்றில் ஒரு நகரம் எப்படி உருவாகிறது என்ற கேள்வியின் விளைவாக எழுதிய கட்டுரை. விதையிலிருந்து ஒரு உயிர் எழுவதைப் போல் தான் இதுவும். கோடிக் கணக்கான மனிதர்கள்,  கோடிக் கணக்கான மனங்கள், அவற்றில் கணந்தோறும் எழும் எண்ணங்கள், இதன் ஊடாக திரண்டு எழும் ஒரு வரலாறு. https://madraspaper.com/mysore-story/  

கதைக்கு உதவாத ஜென்

Image
கதைக்கு உதவாத ஜென் -------------------------------- நரசுஸ் காபிக் கடையின் படியில் அந்த அறுபது வயது அம்மாள் கையில் வயர் கூடை, உள்ளே எவர்சில்வர் சாப்பாட்டுக் தூக்குமாய் , இவ்வகைப் பொடி வாங்குபவரின் எவ்வித இலக்கணமும் இல்லாமல் நின்றார். கடைக்காரப் பெண் காப்பிக் கொட்டைகளை இயந்திரத்தில் அரைத்தபடி , ' அம்மா, உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார். 'ஒரு தாக்கல் மட்டும் கேக்கணும், கை வேலைய முடிச்சுட்டு வா தாயி' என்று சொல்லிக் காத்திருந்தார். பின்னர் மகள் வயதிருந்த அப்பெண் வந்ததும், 'தாயீ , நாலு நாளா வேல செய்யுற சமையல் வேலையும் போயிருமோன்னு தலை வேதனையா இருக்கு...வேல பாக்க இடத்துல பில்டர் காப்பி போடச் சொல்லுதாக, காலேல நல்ல பில்டர் காப்பி போடனும் ....' அப்பெண், வேலைக்குப் புதிதென்றும், இதுவரை வாழ்வில் பில்டர் காபி குடித்ததில்லை என்றும் சொல்லிக் கைவிரித்து விட்டார். அருகில் இருந்த ஒரு பெரியவர் இரக்கப்பட்டு, பொடியின் அளவு, கொதி அளவு, கீழ் பில்டர், மேல் பில்டர், மேல் வடிகட்டி, பால் அளவு, கவனிக்க நிறமாற்றம் என்று எல்லாம் அம்மாவிடம் சொல்லி முடித்தார். 'நீங்க சொன்ன மாத...

அமைதிக்கும் கறிக்கும் புறா உகந்தது

Image
அமைதிக்கும் கறிக்கும் புறா உகந்தது  ------------------------------------------------- அந்தத் துறவி வேர்க்கடலை பொட்டலத்தைப் பிரித்து, எழுதியிருந்ததைப் படித்தார். “அனிச்சா வத சங்காரா, உப்பாதவயதம்மினோ..." “உலகில் தோன்றும் அனைத்துப் பொருட்களும்,நிலையற்றவை.  தோன்றி அழியும் தன்மை கொண்டவை.  இந்த உண்மையை உணர்ந்து பற்றுக்களை விடுவதே உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும்.” கடலையை மென்று காகிதத்தைக் கீழே கசக்கி எறிந்தார் 

பிக்காசோவுக்கு பியானோ வாசிக்கத் தெரியாது

Image
பிக்காசோவுக்கு பியானோ வாசிக்கத் தெரியாது ------------------------------------------------------------------------- அவன் விசைப் பலகையில் கைவைத்தான். ஏனோ ஒரு சொல்லும் வெளியில் வரவில்லை. எழுந்து போய் மேற்கூரையற்ற வானின் கீழ் நின்றான். எங்கிருந்தோ வந்த காற்று விசைப் பலகையென மரத்தின் இலைகளைத் தொட்டு இசைத்தது. ஒரு பவள மல்லி மண்ணில் வீழ்ந்து பிரபஞ்ச யாழ் சிறிது அதிர்ந்தது. பின்னர் ஒரு கண நேர அடை மழையென பவள மல்லிகள். பின்னர் விசைப் பலகையில் அவனுக்கு முதல் சொல் திறந்தது. 

மூக்குக்கு மூன்று துவாரங்கள்

Image
மூக்குக்கு மூன்று துவாரங்கள் -------------------------------------- மூக்குக்கு மூன்று துவாரங்கள் ---------------------------- அவன் ஓடும் பலகையில் அதி தீவிர இடைவெளி ஓட்டம்(HIIT) ஓடிக் கொண்டிருந்தான். 30 நொடிகள் குதிரையாய் தலை தெறிக்கும் ஓட்டம்.  தொடர்ந்து 60 நொடிகள் யானை போன்ற ஓட்டம். இப்படிப் பத்து முறை. நான்காவது ரவுண்டில் குதிரைக்கு வாயில் எச்சில் கொட்டியது. யானையை நினைத்து மனது ஏங்கியது. எட்டாவது சுற்றில் கால்கள் தளர்ந்து, வயிறு இறுகிப் பிடித்தது. ஒன்பதாவதில் நரம்புகள் புடைத்து தலை நோக விசையை நிறுத்தி முடியாமல் யானையும்,குதிரையும் வெளியேறியது. இறங்கி மூச்சு நிதானமானபின், அவன் மனதில் தலை கால்கள் உள்ளிழுத்த ஆமை தோன்றியது. பரவெளி என்ற நாசி அவனையும் காற்றாய் உள்ளிழுத்துக் கொண்டது.

இரு வனபிரஸ்தங்கள்

Image
இரு வனபிரஸ்தங்கள் ---------------------------- மைசூர் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்புகள் அசோகர் கால கல்வெட்டுகளிலும் , சங்கப் பாடல்களிலும் வருகின்றன. 'பெரும்புல் வைப்பின் எருமையூர் நன்னாட்டு' என்ற வரியின் எருமையூர் இதுதான் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எருமை என்ற சொல் 'மகிஷ' எனும் வேர்ச் சொல் குறிப்பது. புராணக் கதைகளின் படி இப்பகுதியை ஆண்டவன் மகிஷன் எனும் அரக்கன். இவன் கொடுங்கோல் ஆட்சி அகற்ற பத்து நாள் போரிட்டு அவனை வென்றாள் அன்னை சாமுண்டி.இதைக் குறிப்பது தான் இன்றும் கொண்டாடப்படும் பத்து நாள் தசரா. மகிஷாசுர மர்த்தினி வதம் செய்து குடியிருக்கும் ஊர் மகிசூர். மகிசூர் மருவி மைசூர் என்றானது. அசோகர் மகிஷ மண்டலத்திற்கு புத்த பிக்குகளை அனுப்பிய சான்றுகள் உள்ளன. பௌத்தத்தைப் பரப்ப மகாதேவர் என்ற துறவி மகிஷ மண்டலத்திற்குச் சென்றதை இலங்கையின் மகாவம்சம் சொல்கிறது. சந்திரகுப்த மௌரியர் அசோகரின் தாத்தா. இவர் வாழ்ந்தது கிமு மூன்றாம் நூற்றாண்டு. இவர் தான் இந்திய வரலாற்றின் முதல் பேரரசர். அலெக்சாண்டருக்குப் பின் வந்த செலுக்கஸ் நிகேடரை வென்றவர். வடக்கை முழுதுமாய் ஆட்சி செய்தார். படைகளுடன...

புல்லின் நுனியில் நில்

Image
புல்லின் நுனியில் நில் ------------------------------ மாணவன் புத்தரைக் கேட்டான் : 'நீங்கள் ஆறு வருடத் தவத்தில் நாள்தோறும் எதை எண்ணி மனத்தைக் குவித்தீர்கள்?' 'அதன் வாளெனும் கூர் முனையை, இலையற்ற , கிளையற்ற, காற்றுக்கு அசையாத, வேர் மட்டுமென நின்ற, விசும்பெனும் கருணையாம், புல்லையே  எண்ணியிருந்தேன்.  ஒரு நாளில் என் கூர் முனையும் அகன்றது.' என்றார் புத்தர்.  

'புத்தருக்கு பட்டர் ஸ்காட்ச்சில் தோய்த்து பஜ்ஜி தின்னப் பிடிக்கும்'

Image
'புத்தருக்கு பட்டர் ஸ்காட்ச்சில் தோய்த்து பஜ்ஜி தின்னப் பிடிக்கும்' ----------------------------------------------------------------- வெண்மேகமென பனி மலையை முழுதும் மூடியிருந்தது. அந்த மடாலயத்தில் இருந்து பள்ளத்தாக்கின் வீடுகளின் விளக்கொளி தெரிந்தது. ஒரு முகடில் அஸ்தமனச் சூரியன் பொன் தகடை இன்னும் பரப்பியிருந்தது. சடைமாடு ஒன்று முதுகில் நின்ற பனியைச் சிலிர்த்து உதறியது. புத்தர் உத்தரசங்கத்தை மட்டும் போர்த்தியபடி இமைக்காமல் நெடுநேரமாய் முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த மாணவர்கள் உதடுகள் நடுங்கியபடி, கைகளை உடையினில் மடித்திருந்தனர். அவர்களைப் பார்த்துச் சொன்னார்: 'முதல் அம்பைத் தடுக்க முடியாது. ஆனால் இரண்டாவதைத் தடுக்கலாம். அதன்பின், ஸ்காட்ச்சில் பஜ்ஜியைத் தோய்த்துத் தின்னலாம்.'  

ஆழம் என்பது தலைகீழ் உயரம்

Image
ஆழம் என்பது தலைகீழ் உயரம் ------------------------------------- அவன் பறக்க ஆரம்பித்தான். வண்ணப் பூக்கள் கீழே தெரிய ஆரம்பித்தன. ஆதிப் பறவைகள் இவனைப் விளித்துப் பார்த்தபடி நின்று, பின் மீண்டும் நீந்தின. கண் உள்ளே நீல வெளியில் ஆக்சிஜன் வளையங்கள் எங்கும் பறந்தன. மூச்சு சிறிது சிரமமாகி , காதடைத்துப் பின், சில நிமிடங்களில், வெளி மட்டும் இருந்தது. அமைதி என்ற இடைவிடாச் சொல்லில் மூச்சும் சீரானது. மனம் வண்ணங்களால் நிரம்பியது. பின் எப்போதோ பரவெளிக்குள் இருந்து வெளியேறினான். அடியாழத்தில் அடங்கிய அந்த அலைகள், ஸ்கூபா குதியல் முடிந்ததும் பரப்பில் அடித்தன.

புத்தர் ஏன் உடைந்தார்? ஜென் பெருகி வழிகிறது. #9

Image
  புத்தர் ஏன் உடைந்தார்? ஜென் பெருகி வழிகிறது. #9 -------------------------------------------------------------------- 1. பால்வண்ணன் ஆழ்துயிலில் குருவைக் கண்டான். 2.'குருவே, நீங்கள் எங்கு எப்படி உடைந்தீர்கள் ? 3.'எனக்கு அந்தப் பெருந்தருணம் எப்போது வாய்க்கும் ' என்று கேட்டான். 4. குரு சொன்னார் : 5.'நான் அன்று உடையவில்லை , சேர்ந்தேன். 6. இளவயதில் ஒருநாள் நடைபாதையில் பொன்னென்று ஒளிரும் பூவைக் கண்டேன். 7.கையில் எடுத்தேன். 8.பொன்னல்ல , அது பூவின் சருகு. 9.பொன் என்பது பூவிற்குப் பின் என்று கண்டேன். 10..அது முதல் காண் என இயற்கை என்னுள் பெருகி வழிகிறது.'

புத்தரின் மனைவிக்கு ஜீவனாம்சம் எவ்வளவு? #8

Image
  புத்தரின் மனைவிக்கு ஜீவனாம்சம் எவ்வளவு? #8 ---------------------------------------------------------- சித்தார்த்தன் புத்தராகி ஏழு வருடம் கழித்து அன்று தான் கபிலவாஸ்துவிற்கு வருகிறார். ராகுலன் பிறந்த அன்று சொல்லாமல் வெளியேறியவன். ஊரே வரவேற்பில் கூடியிருக்கும் போது, யசோரதாராவிற்குப் அவளாய்ப் போய்ப் பார்ப்பதில் இஷ்டம் இருக்கவில்லை. செய்தி போய் புத்தரே அவளைத் தேடி வந்தார். சுத்தோதனர் ஏழு வருடம் அவள் அங்கு வாழ்ந்ததும் ஊனும் உறக்கமும் சிறுத்த துறவு வாழ்க்கையே என்றார். யசோதராவிற்கு அதற்கு மேல் துக்கத்தை அடக்க முடியாமல் , முன்னால் வந்து புத்தன் காலின் முன் விழுந்தாள். 'ஏன் சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டீர்கள்?" என்று கேட்டாள். புத்தன் சிரித்தான். பின்னால் அவளும் அவன் பின்னால் வெளியேறிச் சென்றாள்.

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடத்தான் வேண்டும் / சுண்டெலிக்கு சுருட்டு வாசனை பிடிக்காது # ஜென் கதை #6,7

Image
கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடத்தான் வேண்டும் # ஜென் கதை 6 ----------------------------------------------------------------------------------------------- பால்வண்ணனுக்கு அன்று காலையில் தாங்க முடியாத தலை வலி. உடலும் மனமும் வேறு என்றும் உடலுக்கே நோவும் என்றார் டிவியில் ஓடிய சாமியார். அமிர்தாஞ்சனுக்குக் கை போனது.  மனைவி அதன் எரிச்சல் வலியாவதால் அதை மூட நம்பிக்கை என்பாள் என்று தடவாமல் விட்டுவிட்டான். ஆபிஸ் புத்தரும் தலைவலி பொய் என்றே சொல்லுவார். பாவம் இப்படி தலைவலி சைன்டிபிக் ஆகாமல், வெளியில் சொல்லமுடியாமல் போய்விட்டதே என்று தன் வலியை நினைத்து வருந்தினான். எழுந்து வேலைக்கு ஆட்டோ கூப்பிடுகையில் , 'வாடகைப் பறவை' என்ற ஆட்டோ வந்தது. 'மோதி விடாதே ,அத்தனையும் கடன்' என்ற வாசகத்துடன் கடந்த ஆட்டோவை முறுவலுடன் திரும்பிப் பார்த்தான். காலை வெளிச்சம் பார்த்து , தலைவலியும் குறைந்திருந்தது.   ஆட்டோ மீட்டர் அன்று அவன் மனம் போல் ஏனோ நிதானமாய் ஓடிக்கொண்டிருந்தது. சுண்டெலிக்கு சுருட்டு வாசனை பிடிக்காது #7 ------------------------------------------- வெள்ளெலி -தோஷி அந்தக் கடையின் பன்னிரண்...

கதாயுதமும் கர்லாக்கட்டையும் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
கதாயுதமும் கர்லாக்கட்டையும் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை --------------------------------------------------------------------------- எப்போது மனிதன் பணம் கட்டி உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான்? அந்தக் காலத்தில் படைப் பயிற்சியில்லாத உடற்பயிற்சி என்று ஒன்று இருந்ததா? உடல் நலமும் உடற்பயிற்சியும் எப்போது ஒரு புள்ளியில் சந்தித்தன? ஜிம் கருவிகளில் எப்படி உருவாகின? இந்தக் கேள்விகள் ஏனோ தோன்றி,விடை தேடி எழுதிய மெட்ராஸ் பேப்பர் கட்டுரை கதாயுதமும் கர்லாக்கட்டையும் https://madraspaper.com/dumbell-history/  

பாகூறிக் குண்டினைக் கொண்டு கொல் #3, ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்? - #4 (ஜென் கதைகள்)

Image
பாகூறிக் குண்டினைக் கொண்டு கொல் #3 ------------------------------------------------------ (பாகூறிக் குண்டு - குலாப் ஜாமூன்) பால்வண்ணன் ஆபிஸ்-புத்தரிடம் கேட்டான். 'குருவே ! ஒரு இனிப்பில் கொல்வது எது ?' குரு சொன்னார் : 'பெருங்கொலைகள் அழகிற்கே. கொலை வாளும் அழகே. அழகு என்பது எண்ணம். எண்ணமும் கையிருக்கும் வாளே!' ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்? - #4 -------------------------------------------------------------------------------- பால்வண்ணன் பிள்ளைப் பிராயத்தில் இருந்தே வெளியுலகமே பாராமல், பொழுதெல்லாம் படித்தும், கிடைக்காத முதல் இடத்தை துரத்தித் துரத்தி , இரண்டாம் வகுப்புக் கல்லூரியும், இரண்டாம் வகுப்பில் வேலையும், இரண்டு கல்யாணமும், இரண்டு பிள்ளைகளும், கடனை வாங்கி எண்ணி இரண்டே முன்னேற்றமும், என்று வாழ்வே இரண்டாம் வகுப்பு ரிசர்வ் ரயில் பிரயாணம் போல் போய்க் கொண்டிருக்கும் போது, 'குருவே , இவ்வாறு முன்பதிவு செய்யும் வாழ்க்கை இன்னும் எவ்வளவு தூரம் 'என்று கேட்டான். 'இங்கே லட்டின் அளவு அவரவர் கைப்பிடி' என்றார் குரு.

குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன (ஜென் கதை -2)

Image
குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன ------------------------------------------------------------------- 'எனக்கு, எப்போ 'என்று கேட்டதும், 'பிளம்பிங் சரியா இருந்தா எல்லாம் ஸ்மூத்தா இருக்கும்' என்று மேலாளர் மதிய ஏப்பத்தை வெளியேற்ற முடியாமல் கண்ணாடி அறையில் சொன்னது நினைவில் வந்தது. இந்த வருஷமும் பதவி உயர்வு தள்ளிப் போகும் என்று பால்-வண்ணன் எதிர் பார்த்திருந்தாலும் அவனுக்கு ஏன் என்று பிடிபடவில்லை. பிளம்பிங் பற்றித்தான் ஆபீஸ்-புத்தரிடம் பேச நினைத்தான். வழியில் பார்த்த தூண்கள் , விளக்குகள், கட்டிடங்கள் எல்லாமும் , இலைகளில் ஓடிய நரம்புகள், மரங்களின் ஓங்கிய கிளைகள், வேர்கள் என எல்லாமும் , தன் உடலின் நரம்புகள், எலும்புகள், மூடிய தோல் என்று எல்லாமும் வெறும் குழாய்கள் மட்டுமே என்றே அவனுக்குத் தோன்றின. எப்போதும் யாரோ, எங்கோ ஏதோ ஒரு குழாயைத் தோண்டிப் , பிரித்துப் , புதைத்து என ஏதேனும் செய்து கொண்டே இருந்தார்கள். பிரபஞ்சமே குழாய்களால் கட்டப்பட்டது என்று தோன்றியது. இதில் தான் ஒரு குழாயா இல்லை, அதைப் பிரிப்பவனா என்று அவனுக்குப் புரியவில்லை. 'குருவே , நான் குழா...