அறுசுவை அரசர் --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன். அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...