'கண் இலான் பெற்று இழந்தான் '- பரங்குன்றம் சிட்டி சென்டர் மேலை நாடுகளில் சிட்டி சென்டர் அல்லது ஸ்கொயர் என்று ஊரில் ஒரு இடம் இருக்கும். ஊரின் மிகப் பெரிய சர்ச் , அதை ஒட்டிய கடைத் தெருக்கள் நாலாபுறமும் இருந்து அந்த பெரிய சதுர சதுக்கத்தில் முடியும். சதுக்கத்தில் நடுவில் நூற்றுக் கணக்கான புறாக்கள் சாட்டையை வீசியது போல ஒன்றாய் எழுந்து பறந்து மீண்டும் அமர்ந்து தத்தித் தத்தி கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். சிலர் உள்ளங்கையில் சோளத்தை வைத்துக் காட்டினால் , முழங்கையில் உட்கார்ந்து கொத்தி உண்ணும். ஆண்களும் பெண்களும் சதுக்கத்தை ஒட்டி அமைந்த பிஸ்சாரியாக்கள் , கஃபே , பார்களில் மணிக்கணக்காய் அமர்ந்து வேடிக்கை பார்த்திருப்பார்கள். சதுக்கத்தில் நடுவில் ஓவியம் வரைபவர்கள், வயலின் வாசிப்பவர்கள் போன்று எவரையாவது பார்க்க முடியும். சதுக்கம் சுற்றி நாற்காலிகள் போட்டிருக்கும். துளி மண்ணைக் காண முடியாத , பாறைகளை பதித்துக் கட்டப்பட்ட கல்பாதைகள். இப்படி வேடிக்கை பார்க்க மதுரையில் சிட்டி சென்டர் என்று சொல்லத்தக்க பல இடங்கள் இருக்கின்றன. முதலில் வருவது அன்னை மீனாட்சியைச் ச...