கல்பொரு சிறுநுரை - வெண்முரசு நாவல் 25 - நூல் பதிவு
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து பின் இன்னொரு நாவலையும் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.
சிவராம காரந்த் எழுதி சிவலிங்கையா தமிழ் மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ள அழிந்த பிறகு என்னும் நாவல்.(https://ia802706.us.archive.org/11/items/AzhinthaPiraguKaranth/Azhintha-Piragu-Karanth.pdf)
காரந்த் எதேச்சையாக யசவந்தர் என்னும் பின்னாளில் நெருக்கமா நண்பராகப்போகும் சக பயணியை ரயிலில் சந்திக்கிறார்.இக்கதை எழுத்தாளர் காரந்த் அவர்களின் பார்வையிலே சொல்லப்படுகிறது. இவ்வாறு ரயிலில் அரைநாள் பார்த்து பின் அதிக பட்சம் ஆண்டுக்கொருமுறை சந்தித்த ஒருவரின் மேல் பற்று வளர்ந்து ஒரு நாவலே எழுதியது ஆச்சர்யமாய் இருக்கிறது.
யசவந்தர் தான் இறப்பதற்குள் காரந்தை சந்தித்து தன் உயிலையும் பணத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறார். ஆனால் இறந்து விடுகிறார். காரந்திடம் தன்னுடைய 15000 ரூபாயும், குறிப்பிடும் மூன்று பேருக்கு கடைசிவரை மாதம் 25 ரூ அனுப்பும் பொறுப்பையும் எழுதி வைத்து விட்டு இறக்கிறார்.
தான் உச்சத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் உதறி விட்டு வானப்ரஸ்தமாக பம்பாயில் இறுதிக் காலத்தில் வாழ்கிறார். இங்கு தனியாகவே இறக்கிறார். உறவினர்கள் யாரும் இல்லாமல் காரந்த் கடைசி காரியங்கள் செய்கிறார். யசவந்தர் வரைந்த ஓவியங்கள் மூலமாகவும், எழுதிய நாட்குறிப்புகள் மூலமும் மனிதர்களை தேடுவதாக கதை விரிகிறது. துப்பறியும் நாவலின் திருப்பங்களுடன் , வட கர்நாடக மலைக் காட்சிகளுடன் , சாப்பாட்டு , சிற்றுண்டி விவரணைகளுடனும் உள்ளம் கதையிலும் , கதாபாத்திரங்களுடனும் ஒன்றாகிவிடும். யசவந்தர் பெரிய குடும்பியாய் இருந்தாலும் , தான் விரும்பி வானப்ரஸ்தம் ஏற்ற பின்னும் 3 பேரை விட முடியவில்லை - தன் வளர்த்த தாய், நலிந்த நிலையில் இருக்கும் ஒரு மகள், புத்தகம் எழுதும் தன் நண்பர் ஒருவர்- இவர்களை தான் கைவிடக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் தன் மகன் , மனைவி உள்பட யாவரையும் துறக்கிறார்.
ஆனால் இதையும் கிருஷ்ணரால் செய்ய முடிகிறது. ஒரு under dog ஆக மஹாபாரத்தை ஆரம்பித்து , against the tide என்று சொல்லும் அளவுக்கு அன்று இருந்த அதிகார சக்திகளுக்கு எதிராக படை திரட்டி, பிரிந்து கிடந்த தன் குலத்தை ஒன்று திரட்டி, முழு விசையுடன் வெற்றிக்காக போரிட்டு, வெற்றியும் அடைகிறார். அன்று இருந்த social fabric -ஐ ஒரு மறுக்கருத்துருவாக்கம் செய்து , அதற்க்கு தானே ஒரு proof of concept ஆகவும் , master salesman agavum கருத்துத் தளத்திலும் பெரும்செயல்கள் செய்கிறார்.
ஆனால் எல்லாம் செய்தும் , எப்படி அதில் இருந்து முழுமையாக வெளியேறுவது என்று இந்நாவல் காட்டுகிறது.
கிருஷ்ணர் பெரும்போரின் வெற்றிக்குப்பின் எல்லாவற்றையும் உதறி விட்டு தண்டகாரண்யத்தில் யாரும் அறியாத மந்தரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்து வருகிறார். எவ்வளவு தீவிரமாக அரசியலிலும், போரிலும் ஈடுபட்டரோ, அவ்வளவு தீவிரமாக ஒதுங்கியும் விடுகிறார். இது மிக அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. அர்ஜுனன் பெரும் விரக்தியில் , வாழப் பிடிக்காமல் , அரசிலும் ஒட்டாமல் கிருஷ்ணரை சந்திக்க வருகிறான். கிருஷ்ணர் அங்கிருக்கும் குழந்தைகளையெல்லாம் சேர்த்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இவனையும் சேர்த்து விளையாடுகிறார். அஸ்தினபுரியின் இன்றைய நிலைமை, உடன் பிறந்தவர்கள் போருக்குப்பின் எவ்வாறு உள்ளார்கள் உட்பட தன்னுடைய மனதில் உள்ளதை எல்லாம் இவ்வாறு அர்ஜுனன் சொல்லி முடிக்கிறான்.
"எனக்கென ஒரு சொல் உரையுங்கள், பெற்றுக்கொண்டு நாளை காலையில் இங்கிருந்து கிளம்புகிறேன்.
இளைய யாதவர் நகைத்து “இங்கு நான் வெற்றிருப்பென அமர்ந்திருக்கிறேன். எவரிடமும் பெற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் அளிப்பதற்கும் எதுவும் இல்லை. இப்புவியில் நான் எழுந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இயற்றுவதற்கொன்றுமில்லை. காத்திருப்பதற்கே ஒன்றுள்ளது” என்றார். "
இதைச் சொல்லி முடித்து சாப்பிட்டபின் கிருஷ்ணர் தூங்கி விடுகிறார் , அர்ஜுனன் சொல்லாமல் கிளம்பி விடுகிறான்.
அடுத்தது சாத்யகி கிருஷ்ணரை தேடி வருகிறார். இவர் தன மைந்தர்களுக்குள்ளான பூசலை மிக விரிவாக சொல்கிறார். எவ்வாறு தன் மனைவியரும் மைந்தரின் பிடியில் உள்ளனர் என்று காட்டுகிறார். திரும்ப கிருஷ்ணரை துவாரகைக்கு வருமாறு மன்றாடுகிறார். எட்டு மனைவியரிடமும் , பிள்ளைகளிடமும் வருமாறு ஓலை வாங்கி வருகிறார். இதற்காக பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்கிறார்.கிருஷ்ணர் இதையெல்லாம் தாண்டி நிற்கிறார். எதற்கும் பதிலே இல்லை. இடையில் குழந்தைகளுடன் விளையாட சென்று விடுகிறார். சாத்யகி திரும்பி வருவார் என்று காத்திருக்கிறார். பின் நேராக ஆற்றில் குளிக்க சென்று விடுகிறார். வந்து இருவரும் உணவு அருந்துகின்றனர். தூங்கி விடுகிறார், எழுப்பி எழுப்பி சொல்ல வேண்டி இருக்கிறது . இவ்வாறு முடிகிறது.
இளைய யாதவர் எழுந்து கைகழுவிவிட்டு வந்தார். அவன் அவரை நோக்க அவர் புன்னகைத்தபடி “நல்ல விளையாட்டு… இன்று நிலவில்லை. இருந்திருந்தால் இரவிலும் விளையாடியிருக்கலாம்” என்றபடி மேலிருந்து பாயை எடுத்துப் போட்டார். அதில் மல்லாந்து படுத்துக்கொண்டார். அவன் அருகே அமர்ந்திருந்தான். அவர் அவனிடம் ஒன்றும் பேசவில்லை.
“அரசே” என அவன் அழைத்தான். அவர் ஒருக்களித்து “சொல்” என்றார். “நான் கோரியவற்றுக்கு நீங்கள் மறுமொழி உரைக்கவில்லை” என்று அவன் சொன்னான். அவர் “எவற்றுக்கு?” என்றார். “நான் கொண்டுவந்த ஓலைகளுக்கு…” என்றான் சாத்யகி. “ஆம், ஆனால் அவற்றை என்னால் உளம்வாங்கவே முடியவில்லை. உகந்ததை நீயே செய்துகொள்” என்றார் இளைய யாதவர். “நீங்கள் என்னுடன் வரவேண்டும், அரசே” என்றான் சாத்யகி. அவர் ஒன்றும் சொல்லவில்லை. முகத்தில் அந்த இளமைந்தருக்குரிய புன்னகையே இருந்தது. துயிலில் இமைசரிவதை காணமுடிந்தது. “உங்கள் குடி காக்க, கொடிவழியினர் அழியாமல் தடுக்க, நகரை மீட்க நீங்கள் வந்தாகவேண்டும், அரசே” என்றான் சாத்யகி. அவர் இமைகள் மூடிக்கொண்டன. மூச்சின் ஓசை கேட்டது.
“அரசே” என்று அவன் அழைத்தான். மீண்டும் உரக்க “அரசே” என்றான். இளைய யாதவர் திடுக்கிட்டு விழிதிறந்து “சொல்க!” என்றார். “நான் கிளம்பவேண்டும்” என்றான். “ஆகுக!” என்றார் இளைய யாதவர். “எனக்கு நீங்கள் அளிக்கும் மறுமொழி என்ன?” அவர் புன்னகையுடன் “நான் எதையுமே உளம்கொள்ளவில்லை. ஆகவே எனக்கு சொல்வதற்கும் ஏதுமில்லை…” என்றார். “உங்களை எண்ணி தவமிருக்கும் அரசியருக்கு நீங்கள் உரைப்பதென்ன? ஒரு சொல்லேனும் கூறுக!” என்று சாத்யகி சொன்னான். அப்போது அவன் குரல் உடைந்ததைக் கேட்டு அவனே உளமுருகினான். “அவர்களை நீங்கள் முற்றாகக் கைவிடலாகாது, அரசே. அவர்கள் அத்தகு பிழை என எதையும் செய்ததில்லை.”
“நான் எவரையும் கைவிடவில்லை” என்றார் இளைய யாதவர். “ஆனால் அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு சொல்லும் இல்லை.” சாத்யகி “அரசே” என்றான். அவர் “நான் இங்கே வந்தபின்னர்தான் பொருளை ஒளித்து வைத்து மீண்டும் கண்டுபிடிக்கும் விளையாட்டை ஆடத்தொடங்கினேன். ஒரு பொருளை இந்தப் படுகையில் எங்கேனும் ஒளித்துவைக்கவேண்டும். அதை தேடிக் கண்டுபிடிப்பவர் வென்றார். காலடிகளைக்கொண்டு கண்டுபிடிக்கலாம். ஆனால் சித்ரன் பின்னோக்கி நடந்துசென்று ஒளித்துவைத்தான் ஒருமுறை… சில குழந்தைகள் மரம் வழியாகவே செல்கின்றன. மிகக் கடினம். ஒன்றை ஒளித்துவைத்தவர் அதை நினைவில் வைத்திருப்பார் என்றால் எப்படியும் கண்டுபிடிக்கலாம். தேடும்போது அவர் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தாலே போதும். சிறுகுழந்தைகள் உடனே மறந்துவிடுவதுண்டு. அவர்களே மறந்த இடத்தை நாம் சென்றடையவே முடியாது” என்றார்.
அவர் புரண்டுபடுத்து அவனிடம் “நாம் இதையெல்லாம் துவாரகையிலோ மதுராவிலோ மதுவனத்திலோ விளையாடுவதுண்டா?” என்றார். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “அங்கே நாம் ஆடும் விளையாட்டுக்களெல்லாம் சற்று முதிர்ந்தால் போர் என ஆகக்கூடியவை.” அவர் புன்னகையுடன் காலை ஆட்டியபடி “ஆம், போர். அதுகூட நல்ல விளையாட்டுத்தான்” என்றார். அவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். காலில் ஆட்டம் நின்றது. இமைகள் சரிந்து மூடிக்கொண்டன. அவர் துயில்கொள்ளலானார்.
மூன்றாவதாக சத்யபாமையின் பத்து மைந்தர்களில் எட்டாமவனாகிய பிரதிபானு கிருஷ்ணர் பார்க்க வருகிறான்.
36 அத்தியாயங்கள் வரும் இப்பகுதியை ஒரு பெரிய ஒப்புதல் வாக்குமூலம் என்றுதான் கூற வேண்டும். எண்பது பேருக்கும் இடையில் இருக்கும் பிளவுகள், சதிகள் , கூட்டுகள், யாருக்கு யார் பக்கம், யாருக்கு யார் எதிரி, தனது நோக்கம் என எல்லாம் இவன் வாயால் சொல்லப் படுகிறது. இவர் ஒரு தரகர் போல எல்லாரிடமும் பேரம் செய்கிறார். கடைசியில் தம்பியைக் கொல்வதில் முடிகிறது. இது ஒரு தொடர் விளைவை உண்டு பண்ணி துவாரகையின் அழிவுக்கு விதையிடுகிறது.
தன் மைந்தர்கள் செயலும், கொலைகளின் ஆரம்பமும், கொலை செய்த ஒருவனின் வாக்குமூலமும், தன் மனைவியையும், குழந்தைகளையும் காப்பாற்ற கெஞ்சுவதும் கிருஷ்ணரில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்வருமாறு இந்த அத்தியாயம் முடிகிறது.
அவர் அங்கிலாததுபோல் இருந்தார். அவன் அம்முகத்தை பார்த்தான். அது அவனுடைய ஒவ்வொரு சொல்லாலும் பல்லாயிரம் காதம் தள்ளி கொண்டுசெல்லப்பட்டு எங்கோ எங்கோ எங்கோ என சென்றுகொண்டிருந்தது. இங்கிருந்து ஒரு சொல்லும் ஒரு உணர்வும் அங்கு சென்று சேரமுடியாதென்று தோன்றியது. அவன் திகைப்புடன், தனிமையுடன், மேலும் தனிமையுடன், மேலும் மேலும் பெருகும் தனிமையுடன் அதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை துளியாக்கி, அணுவாக்கி, இன்மையென்றாக்கி நிறுத்திய தனிமையுடன் அங்கிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவனுள் ஏதோ ஒன்று அறுந்தது. அவன் அனைத்தில் இருந்தும் வெளியேறினான். எழுந்து தன் மூட்டையை தூக்கிக்கொண்டு திரும்பி நடந்து அச்சிற்றூரிலிருந்து வெளியே சென்றான்.
காளிந்தியின் மைந்தன் சோமகன் தேடி வந்து யாதவர்கள் துவாரகையை விட்டு ப்ரபாஸ ஷேத்திரம் சென்றதையும் வழியில் பாலைவனத்தில் பலர் அடி தடியில் இறந்ததையும் கூறுகிறான். பின்பு ப்ரபாஸ ஷேத்திரம் கண்டடைந்ததையும் , மீண்டும் வாழ்வு தழைத்ததையும் விவரிக்கிறான். இறுதியில் எவ்வாறு ஒரு கணத்தில் அவர் தம் மைந்தர் அனைவரும் வெட்டிச் தனக்குள்ளே சாய்ந்தனர் என்றும் கூறுகிறான். தான் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும், இதையெல்லாம் சொல்வதற்கே வந்தேன் என்றும், தனக்கென ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறான். கிருஷ்ணர் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை.
காளிந்தியின் மைந்தனாகிய சோமகன் சொன்னான். “தந்தையே, உங்களிடம் பிறிதொன்று எனக்கு கூறுவதற்கில்லை. உங்கள் மைந்தன் என கேட்பதற்கும் பெறுவதற்கும் ஒன்றுமில்லை. பொறுத்தருளும்படி கோரவோ பிழையுணர்ந்துவிட்டேன் என்று உரைக்கவோகூட இன்று நான் தகுதி உடையவன் அல்ல. என் கடன் முடிந்தது.”
அவனுடைய சொற்களை இளைய யாதவர் விழிதழைந்திருக்க கைகள் மடியில் விரல்கோத்துப் படிய அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். கருவறைத்தெய்வம் என, கல் என அங்கிருந்தார். அவருடைய தலையில் அந்தப் பீலிவிழி அவனை நோக்கிக்கொண்டிருந்தது.
அவன் அவரை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றான்
கதை சுருக்கமாக -:
கிருஷ்ணருக்கு 8 மனைவிகள். எல்லாம் சேர்த்து 80 புதல்வர்கள். இவர்கள் மூன்றாகப் பிரிகிறார்கள். யாதவர்கள் , க்ஷத்திரியர்கள் மற்றும் நிஷாதர்கள். ஒவ்வரும் தனக்குள்ளும் , பிறருடனும் சண்டையிடுகின்றனர். இவர்களது மனைவியர் அதிகாரம் செலுத்துகின்றனர் (உ-ம்) கிருஷ்ணை துரியோதனன் மகள்,சாம்பனின் மனைவி ,கிருஷ்ணரின் மருமகளாய் ஆகிறார் . திரௌபதி போல் விஸ்வரூபம் எடுக்கிறார். கடைசியில் துவாரகையை கடல் கொள்ளும் போது படகில் தப்பி மீள்கிறார்.
சாத்யகியும் , க்ருதவர்மனும் பிதாமகர்களாய் திரும்பி வருகிறார்கள். எவ்வளவோ முயன்று 80 பேரையும் ஒன்று சேர்த்து ஒரு வகையான coalition government உண்டாக்கி விட்டதாக நினைத்து , எண்களை சேர்த்துவிட்டதாக விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மிக்கு தூது விடுகிறார்கள்.தூது செல்பவர் பிரதி பானு. அரசராக போகிறவர் பானு , சத்யபாமாவின் மகன். மற்ற இரு குழுக்களும் இதற்கு சம்மதிக்கின்றன அரை மனதாக. இதில் ஒரு குழு தலைவர் பிரத்தியும்னனின் மாமனார் ருக்மி. இவரது இரண்டாவது பொன்னும் பிரத்தியும்னனின் தம்பியும் ஜோடிகள். மாமனாரிடம் முன் அனுமதி கோரி தூது அனுப்பச் சொல்கிறார் ப்ரத்யும்னன்.
தூது செல்லும் பிரதி பானுவுக்கு தான் அரசராக வேண்டும் என்று நெடுநாள் கனவு. இவர்தான் சாத்யகியையும் , க்ருதவர்மனையும் ஒரு கேம்ப் ஆக்கி , அதன் மூலம் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறார். தூது சென்ற இடத்தில் மாமனார் மருமகன் இடையில் சந்தேகம் உண்டு பண்ணி நடுவில் தனக்காக வாதாடுகிறார். இதே நேரத்தில் மேல் சொன்ன பிரத்தியும்னனின் தம்பி சுதேஷ்ணா தன் இன்னொரு தம்பியை அண்ணனுக்கு தெரியாமல் தூது அனுப்பியிருக்கிறார். இவருக்கும் அரசராக ஆசை. தனியாக மாமனாரிடம் படை திரட்டி ஆயத்தமாய் இருக்க பணம் கொடுத்திருக்கிறார். இரண்டு தூதுவர்களும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தும் கேட்டும் விடுகிறார்கள். பயந்து விட்ட பிரதி பானு தம்பி சாருவை கழுத்தை வெட்டி கொன்று விடுகிறார். இதில் ஆரம்பிக்கிறது சரிவு. ஒருவருக்கு ஒருவர் சந்தேகப்பட்டு கொலை செய்கிறார்கள், அணி மாறுகிறார்கள். மக்கள் கலகத்தில் குதிக்கிறார்கள்.
இதற்கிடையில் ஆழிப் பேரலை துவாரகையை தாக்குகிறது. கோட்டை சரிகிறது. கடல் இறுதியில் துவாரகையை விழுங்குகிறது.இதில் இருந்து ஆளும் வர்க்கம் தப்பி விடுகிறது. கிருஷ்ணர் விட்டுச் சென்ற கருவூலத்தைக் கைப்பற்ற மீண்டும் சமரசமடைகிறார்கள்.
குடிகளுடன் துவாரகையை விட்டு பாலைவனம் கடந்து பிரபாச க்ஷேத்திரம் செல்லலாம் என்று முடிவு செய்கின்றனர். இது இன்றைய சோம்நாத் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி. போகும் வழியில் பூசலினால் கைகலப்பு வந்து பலர் இறக்கின்றனர்.இறந்தவர்களையும் , முடமானவர்களையும் அப்படியே விட்டு பயணம் தொடர்கிறது. பிரபாச க்ஷேத்திரம் கடலை ஒட்டிய சதுப்பு நிலம். மூங்கில் கழிகளை ஊன்றி வீடுகளையும் , தெருக்களையும் அமைக்கிறார்கள். ஆபுரந்து ஊனும் நெய்யும் சேர்த்து சிந்து வழியாக விற்பனை செய்கிறார்கள்.மிகுதி சேர்கிறது. அதை ஆள அதிகாரம் மீண்டும் உருவாகிறது. அதே மூன்று முடிச்சு உருவாகிறது.
ஒரு உண்டாட்டில் கேலிப் பேச்சுக்கள் முற்றுகிறது. சாத்யகி க்ருதவர்மனின் பழைய துரோகங்களை குடித்த நிலையில் நினைவு படுத்துகிறார்.
க்ருதவர்மன் எதிர்பாராத ஒரு நொடியில் சாத்யகியின் தலையை வெட்டிச் சாய்க்கிறார். வ்ருஷ்ணிகளை எல்லாம் அங்கேயே கொல்ல அறைகூவல் விடுகிறார். அனைவரும் வெட்டிச் சாகிறார்கள். ஆம் அனைவரும்.
கிருஷ்ணரின் மைந்தர்கள் போரிட்டு மடிந்த அன்று ப்ரத்யும்னன் அமைச்சர் ஸ்ரீகரரை மாமனார் ருக்மியிடம் முன்பு படை திரட்ட கொடுத்த பணத்திற்கு இணையாக நிலத்தை வீட்டுக் கொடுக்க தூது அனுப்புகிறார். அவர் சாவு முந்திவிடுகிறது. இருந்தும் ஸ்ரீகரர் ருக்மியிடம் யாதவர்களுக்காக நிலத்தை ஈடு கேட்கிறார். ருக்மணியிடம் முறையிடுகிறார், அவர் இசையவில்லை. பலராமரை பயன்படுத்தி போருக்கு அறைகூவல் விடுகிறார். கடைசியில் நிகர்ப்போர் (சதுரங்கம்) நடக்கிறது. ருக்மி பலராமரின் மாணவர், அவரிடம் கதை பயின்றவர். ஆடுகளத்தில் பலராமரின் மைந்தர் வெட்டிய காயை திரும்ப வைத்து விடுகிறார். ருக்மி கோபத்தில் பலராமரை பழி சாற்றுகிறார். அவை நம்ப மறுக்கிறது. பலராமர் ருக்மியை அவையில் எல்லாரும் பார்க்க அடித்தே கொள்கிறார். பின்னர் உண்மை தெரிய வரும்போது வடக்கிருந்து உயிர்விட முடிவு செய்கிறார். தாத்தா சூரசேனரும், தந்தை வசுதேவரும் நீர் புகுகின்றனர்.
கிருஷ்ணர் எதிர்பாராத தருணத்தில் வேடனின் அம்பு பட்டு இறக்கிறார்.
ஒரு திரைப்படம் எடுக்க எல்லா விதமான காட்சிகளும் ,திருப்பங்களும், கதை ஓட்டமும் அமைந்து உள்ளது.
நான் மிகவும் தட்டையாக ஒரு வழிப்பாதையாக கதைச் சுருக்கத்தை எழுதியிருக்கிறேன். இந்த நாவலின் அழகே கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் தான் .
Comments
Post a Comment