பூமணியின் அஞ்ஞாடியில் வந்த தென் மாவட்டங்களின் வரலாற்றுச் சித்திரம் என்னை மதுரையைப் பற்றி இன்னும் படிக்கச் செய்தது.
கடந்த ஒரு மாத காலமாக படித்த, கீழே வரும் வரலாற்று புனைவு நூல்களின் collage என்றுதான் இப்பத்தியைச் சொல்ல வேண்டும். தகவல் போல சொல்லப்படும் வரலாறு எப்போதுமே என் ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. ஒரு சங்கிலித் தொடர் போல் வரலாற்றை கதைகளாய் வாசிப்பது இனிய அனுபவமாய் இருக்கிறது. வழி மதுரை என்று போர்டு போட்டு வரும் பேருந்து ஊரெல்லாம் செல்வது போல் தான் இதுவும்.
![]() |
| கிழக்கு கோபுரம் |
ராயர் கோபுரம் , பாதியில் நிற்பது
புதுமண்டபம்
கோட்டை முகப்பு, இன்றைய அரசு மருத்துவமனை இருக்கும் இடம்
![]() |
| விளக்குத் தூண் |
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
ஒன்றில் ஒரு வரியாய் வருவது, இன்னொருவரால் மிக விரித்து சொல்லப்படுகிறது. கணவன் இறந்ததும் உடனே சாவதும் , மன்னர்கள் படையெடுப்பின் விளிம்பில் மொத்த அந்தப்புரத்தையும் வெடியால் தகர்ப்பதும் மிக எளிதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் தானே உயிரை மாய்ப்பது என்பது எவ்வளவு பெரிய தருணம். தாஸ்தாவெஸ்கி சைபீரிய முகாமில் அன்றைய தினம் சுட்டு கொல்லப்பட தேர்வாகி, துப்பாக்கி முனையில் இருக்கும் போது, ஜார் மன்னரின் பிறந்த நாள் என்பதால் விடுதலை ஆகிறார். முடியெல்லாம் அந்த கனத்தில் நரைத்தது என்று எழுதி இருக்கிறார். ராணி மீனாட்சியின் இந்த ஒரு போராட்டத்தை எரிசிதை என்னும் சிறுகதையாய் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். இதை விரித்துப் படிக்கும் போது , வரலாற்றுக்கு அருகில் இருப்பதாக உணர்வு ஏற்படுகிறது.
மிகப் பெரிய வரலாற்றின் நடுவே அன்றைய தினம் எப்படி இருந்திருக்கும் . இதை ஒட்டி இருந்த சாதாரண மனிதர்கள் எவ்வாறு இருந்திருப்பார்கள். பெரும் செயல்கள் எவ்வாறு சிறு சிறு செயல்களாய் பெருகி வந்து இருக்கும். பல இடங்களில் இதைப் பற்றிய ஒரு சித்திரம் காணக் கிடைக்கிறது. நமக்குச் சொல்லப்படும் , எழுதப்பட்ட வரலாறு ஒரு மாபெரும் reverse engineering என்றே தோன்றுகிறது. இடைவெளிகளில் வழியாக கீழிருந்து மேல் எழும் வரலாறில்லாமல் இதை நிரப்ப , அர்த்தம் காண முடியாது. கிருஷ்ண தேவராயர் தன் குழந்தையை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து காக்க முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம். விஷம் வைத்து சேடியின் வழியாக மிக நெருங்கி இருப்பவர்கள் கொல்கிறார்கள். இந்த அந்தப்புரம் எவ்வாறு அடுக்குகள், அலர்கள், சதிகள் நிறைந்தது என்பதை (எரிசிதை) நம்பும் விதமாக சொல்லப்படுகிறது. அதிகாரம் படிநிலைகள் உள்ளது. படிக்கு அருகில் இருப்பவர்களே பங்கெடுக்கிறார்கள். இந்த படிநிலைகளில் ஆட்களை நுழைத்தவண்ணம் , கீழே தள்ளிய வண்ணம் இருக்கிறார்கள்.
இப்புத்தகங்களைப் படிக்கும் போது வரும் மிகச் சிறிய வரலாற்று எச்சங்கள் இன்றும் நம் நடுவே நின்று இருக்கின்றன. இப்போது மதுரை நாச்சியார் ஜவுளிக் கடைக்கு அருகில் நின்று இருக்கும் விளக்குத்தூண் ப்ளாக்பர்ன் என்ற ஆங்கில ஆட்சியாளரின் சேவையை பாராட்டி எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம் என்று தெரியாது. இவர் மதுரையைச் சுற்றி அரணாக இருந்த கோட்டையை இடிக்க முடிவு செய்கிறார். இடிக்காமல் விட்ட கோட்டையின் ஒரு வாசல் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே படிப்பகமாய் இருக்கிறது. காந்தி மியூசியம் ராணி மங்கம்மாளின் தமுக்கத்தின் மேல் எழுந்துள்ளது. இப்போது பொது மருத்துவமனை இருக்கும் இடம் கோட்டையின் இன்னொரு வாசல். மதுரையை சுற்றி உள்ள நான்கு மாரட், பெருமாள் முதலி தெருக்களும், கோட்டை இடிக்க உதவிய அதிகாரிகளின் பெயர்கள்.
இதில் காணக் கிடைக்கும் தனி மனிதர்களின் ஆணவச் சிக்கல்கள் வரலாற்றயே புரட்டிப் போட்டுவிடுகின்றன. சொக்கநாத நாயக்கரின் காதல் ஒட்டு மொத்த ஆட்சியையுமே வேறு திசையில் கொண்டு சென்று விடுகிறது. ஔரங்கசீப் தன் தந்தை அவர் பாட்டனாருடன் போரிட்டு (?) தோற்றபின், தன்னையே நன்னடத்தை அவரிடம் ஜாமீனாக அனுப்புகிறார். தன் அண்ணன் தாராவை அனுப்பவில்லை என்பது கறையாக விழுந்து, அவர் அப்பாவையே சிறையில் வைக்க வழி செய்கிறது. ஸ்வாதி திருநாள் ராஜா ஒரு இசைப்பித்தர் (ஆயிரம் ஊற்றுக்கள்: மலையரசி ). வீணை வாசித்து , கீர்த்தனைகள் எழுதிக் கொண்டு மாதக் கணக்கில் அரசியலை கிடப்பில் போடுகிறார், நோயில் விழுகிறார் . அவர் சின்னம்மை பார்வதி பாய் அவரைக் கண்டிக்க வருகிறார். “சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”
“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது” 33 வயதில் இறக்கிறார்.
இக்கதைகளின் இன்னுமொரு அழகு இவற்றில் வரும் நுண் சித்தரிப்புகள். கிருஷ்ண தேவராயருக்கு இடுப்பு வலி இருந்திருக்கிறது. விஸ்வநாத நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகத்திற்கு அழைக்கிறார். இடுப்பு வலி கரணம் காட்டி வர முடியாது என்கிறார். ஆண்டாளைப் பற்றி ஆமுக்த மால்யத என்னும் நூல் எழுதியவர் ராயர். புலிநகக் கொன்றையில் பாஞ்சாலக்குறிச்சி வீழ்ந்த பின் சிதறிய வீரர்களை வைத்து இந்தியன் நேஷனல் ஆர்மி உருவாவதன் சித்திரம் வருகிறது. தங்கத்தை அடமானம் வைத்து படை திரட்டுகிறார்கள்.
இறுதியில் எல்லா வரலாற்று நாயகர்களுக்கும் எஞ்சுவது தனிமையே ஆகும். ராணி மங்கம்மாளில் இருந்து, ஔரங்கசீப் வரை, இறுதியில் ராணி மீனாட்சி விஷம் அருந்தி மடிகிறாள். ஒரு வழி தன்னை அறிந்து தனிமையில் முடிவது. மற்றொன்று உலகை வென்று தனியாவது போலும் .
இக்கதைகளின் வெற்றி என்பது மாபெரும் மனிதர்களை , நம் கண் முன் வந்து நிறுத்துவதும், அவர்களை நம் உலகத்தில் நடமாட விடுவதுவும், தங்களின் பலமும் , பலவீனமும் சேர்த்து முழு மனிதர்களாக்கிக் காட்டுவதுமே ஆகும்.
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
மிக நீண்ட நாவல், 1800 பக்கங்களுக்கு மேல். மதுரையில் நடக்கும் கதை. 14ம் நூற்றாண்டில் குமார கம்பனன் படையெடுப்பில் ஆரம்பித்து பென்னிகுக் முல்லைப்பெரியாறு அணை கட்டி முடித்த பின்னும் (1895) நீள்கிறது. ஒரு பக்கம் நாயக்கர்கள் வழியாக மதுரையின் கோட்டை எழுவது, இதைப் பிண்ணியவாறே பிறமலை கள்ளர்கள் வழியாக இதன் பாதுகாப்பும் மறுபக்கம் சேர்ந்து எழுவதும் , பின்பு இரண்டும் ஒரு சேர ஆங்கில ஆட்சியின் கீழ் வீழ்வதன் மாபெரும் சித்திரம். கணிசமான என்னுடைய நாட்களை மதுரையிலே கழித்திருப்பதால், இக்கதை இன்னும் நெருக்கமாகிவிட்டது. உதாரணம், கதையின் மையமான கீழக்குயில்குடி வீட்டுக்கு வெகு அருகில் இருக்கிறது. சென்ற வருடம் இதே அமணமலை ஏறினேன், ஆனால் அடுத்த முறை இக்கதையை நினைவு கூறாமல் இருக்க முடியாது . இதைப்போல் இன்னும் பல வரலாற்று உணர்வே இல்லாமல் சென்று கொண்டிருந்த இடங்கள் பல அர்த்தப்பட ஆரம்பித்துள்ளன.
மாலிக்கபூர் மதுரை படையெடுப்பில் நாவல் ஆரம்பமாகிறது.காவலுக்கு நிற்கும் கருப்பணன் வீழ்கிறான்,மாலிக்கபூர் படைகள் ஊரேயே கொள்ளையிடுகின்றன. ஊரை விட்டு வெளியேறி சடச்சி வயிற்றில் பிள்ளையுடன் அமணமலையில் சென்று சேர்கிறாள். அறுபது வருடம் கழித்து குமாரகம்பணனின் மனைவி கங்கா விஜய நகர படையெடுப்பின் போது பிள்ளை குட்டிகளுடன் பார்க்கிறாள். இவளும் இவள் அவ்வாவும் இவ்வாறே பாமினி முஸ்லீம் படைகளால் ஆனைகுந்தியில் இருந்து மலைநோக்கி துரத்தப்பட்டார்கள். தீயே தீயை வளர்க்கிறது. நாளையே போர் என்று அறைகூவல் விடுக்கிறாள். நாயக்கர்கள் மதுரைக் கோட்டையில் வென்று நுழைகிறார்கள். விஜய நகர படையின் வர்ணிப்பும், அவர்களின் உட்பிரிவுகளும், சண்டைக்கு முன் வரும் பலி சடங்குகளும் அபாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒருவர் தானே கழுத்து அறுத்து சாகும் இடம் உச்சகட்டம் . போர் என்பது ஒரு பெரிய அர்ப்பணிப்பு என்றுதான் நினைக்கிறேன். கண்முன்னே ஒரு உயிர் பிரியும் போது , நமக்காக என்று தோன்றுமோ ?. டோமினோ விளைவு போலாகி, எல்லோரையும் கொல்லும் , கொள்ள வைக்கும் விளிம்பில் வைக்கத் தான் இந்த சடங்குகள் என நினைக்க வைக்கிறது.போரில் முன்னூறு பேர் கொண்ட ஒரு பெண்கள் அணி இருந்திருக்கிறது. கங்கா போரிட்டு கோட்டை முதலில் உள்ளே நுழைகிறாள். மாலிக்கபூர் படையெடுப்பிற்கு பயந்து, மதுரை மீனாட்சியை திருநெல்வேலி கடந்து ஆரல்வாய் மொழியில் ஒரு சாஸ்தா கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அறுபது வருடங்கள் கழித்து கங்கா இதை திரும்ப கொண்டு வரக் கேட்கிறாள்.
இந்த இடத்தை விரித்து ஜெயமோகன் குமரித்துறைவி என்று ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார். வேழநாட்டு ராஜா அனுப்ப மனமில்லாமல் சுந்தரேசருக்கு கல்யாணம் செய்து அப்பா இடத்தில் இருந்து அனுப்பி வைக்கிறார். இந்த இடம் தான் இன்றைய சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக இருக்கலாம்.
பின்னர் ஒரு இடைவெளி, முகம்மதியர் படையெடுப்பு, கிருஷ்ண தேவராயரின் கீழ் நாகம நாயக்கர் படையெடுப்பில் இரண்டாம் கட்டமாக நகர்கிறது. இவர் கொல்லவாரு நாயக்கர் உட்பிரிவைச் சேர்ந்தவர். ராயர் பலிஜ நாயக்கர். நாகமர் வென்ற மதுரையை பாண்டியனிடம் தர மறுக்கிறார். ராயர் இதை ராஜதுரோகம் என்று பார்க்கிறார். இவர் மகனையே(விஸ்வநாத நாயக்கர்) இவரை பிடித்து வர அனுப்புகிறார். இவர் மூவர் இடையே நடக்கும் இந்தக் காட்சி அழகாக காட்டப்பட்டுள்ளது. எவ்வளவு நாள்தான் தளபதியாகவே இருப்பது என்று ராயரைக் கேட்கிறார். துரோகத்திற்காக கொல்லப்பட வேண்டியவருக்கு வேழ நாட்டை அளிக்கிறார். இவர் மறுக்கிறார். விஸ்வநாத நாயக்கர் மதுரை அரசராகிறார்.
இன்று நாம் காணும் மதுரைக்கு அடித்தளம் இட்டவர் இவரே. மீனாட்சி கோவிலையும் , கோட்டையையும் எழுப்பினார், மூன்றே ஆண்டுகளில் . திருச்சி கோட்டையும் குளமும் இவர் காலத்தில் கட்டியதே. இவருக்கு அரியநாத முதலி என்று ஒரு முதலமைச்சர் இருந்தார். இவர் தான் மதுரை, திருநெல்வேலியின் ஆயிரம் கால் மண்டபங்களைக் கட்டியவர். இவர் வழி வந்தவர்கள் தான் காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீட்டையும் கட்டினர் . விஸ்வநாத நாயக்கரும், அரியநாதரும் சேர்ந்து அமைத்ததுதான் பாளையக்காரர்கள் ஆட்சிமுறை. 72 பாளையங்களை ஒன்றாய் இணைத்து , எங்கெல்லாம் உள்ளூர் அரசர்கள் பலமாய் இருக்கிறார்களோ அங்கு அவர்களையே சண்டையில்லாமல் அரசராக்கினார். பதிலுக்கு படைகளும், கப்பமும் தலைமை அரசுக்கு கொடுக்க வேண்டும். தாங்களே வரி வசூல் செய்து கொள்ளலாம். இந்த சமரச அமைப்பு தான் தமிழ் நாட்டை பெரிய படையெடுப்புகளில் இருந்து மிக நீண்ட காலம் காத்தது. பாமினி சுல்தான்கள், வடக்கே நெறுக்கியபோது , தமிழகம் நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். இதே Palegar முறை விஜய நகர பேரரசை சுற்றி இருந்திருக்கிறது. இன்றைய பெங்களூர் , மைசூர் , இதன் பகுதியாய் இருந்துள்ளன. கெம்பே கௌடாவும் , உடையாரும் பெங்களூரையும் , மைசூரையும் கட்டி எழுப்பினார்கள். இதையும் ஒரு புனைவாய் படிக்க முயற்சிக்க வேண்டும், வரலாறாகவே இவை எழுதப்பட்டுள்ளன.
2.ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி
காவல் கோட்டத்தில் வரும் ராணி மங்கம்மாளின் கதையும் , அவரின் முடிவும் என்னை மிகவும் நெகிழச் செய்தன. பின் வரப்போகும் இவரின் கணவர் சொக்கநாத நாயக்கர் , தஞ்சை இளவரசியின் மேல் காதல் கொள்கிறார். தஞ்சை மன்னர் ஜாதியை காரணம் காட்டி பெண் தர மறுக்கிறார். சொக்கநாதர் தஞ்சையை படையெடுத்து பின்னர் வெற்றியின் முனையில் பெண் கேட்கிறார். தஞ்சை மன்னர் மறுத்து எல்லா ராணிகளையும், இளவரசிகளையும் தற்கொலைக்கு தள்ளி, பித்துபிடித்து காவலனால் எதிர்பாரா தருணத்தில் களரியால் சாகிறார். சொக்கநாதர் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லாமல் ஆகிறார். வேண்டா வெறுப்பாக மங்கம்மாளை மணக்கிறார். தாது வருட பஞ்சம் (1877) இவர் காலத்திலே நிகழ்கிறது.
ராணி மங்கம்மாள் சொக்கநாதாரின் தளபதியின் மகள். எதிலும் ஈடுபாடில்லாத , ராஜ்யத்தை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கும் கணவர் 36 வயதில் இறக்கிறார், மகனுக்கு பிறந்து 3 மாதம் . எல்லோரும் உடன்கட்டை ஏற நிர்பந்தம் செய்கிறார்கள். மகன் முத்துவீரப்பனை காக்க ராணியாக அரியணை ஏறுகிறார். மகனை 15 வயதில் அரியணை ஏற்றுகிறார். இவர் மிகச் சிறந்த ஆட்சியாளராய் வருவார் என்று எதிர்பார்க்கும் போது பெரியம்மையால் இறந்து போகிறார். பேரன் பிறக்க இருக்கும் நிலையில் மங்கம்மாள் மீண்டும் அரியணையில் ஏறுகிறார். மகனின் இறப்பிலிருந்து மீள முடியாமல் மருமகள் முத்தம்மாள் பன்னீர் அதிகம் குடித்து ஜன்னி கண்டு இறக்கிறார். இவர் ஔரங்கசீப் உச்சத்தில் இருக்கும் போது இங்கு ஆட்சி புரிகிறார். இவரின் புகழாக இன்று சொல்லப்படுவது எல்லாம் இத்தகைய அடுக்கான துன்பங்களுக்கு நடுவிலேயே நடக்கிறது. கடைசியில் தான் வளர்த்த பேரனே அவரை சிறையில் வைக்கிறான்.மதி பிறழ்ந்து இறக்கிறான்.
3.ஆயிரம் ஊற்றுகள்,ஜெயமோகன்
இத்தொகுப்பில் 5 சிறுகதைகள் உள்ளன.ஆயிரம் ஊற்றுக்கள் , மலையரசி, லட்சுமியும் பார்வதியும் - இவை மூன்றும் ராணி உமையம்மை, பார்வதி பாய் , லட்சுமி பாய் என்ற ராணிகளின் கதை. இவர்கள் புரட்சிக்காரர்கள் இல்லை, நடைமுறைவாதிகள்,மங்கம்மலைபோலவே. பார்வதி பாய் தாது வருட பஞ்சத்தில் ஒரு உயிரும் போகாமல் காக்கிறார். சமீபத்தில் திருவனந்தபுரம் கோவிலில் மூடிவைக்கப்பட்டிருந்த கஜானாவை பாதுகாத்து, மக்கள் நலனுக்காகவும், முதலீடாகவும் பயன்படுத்தியவர்கள் இவர்களே. ஆயுத பலம் இருந்த ஆங்கிலேயர்களுடன் இவர்கள் உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். ராஜதந்திரி போல், வீழ்த்த வேண்டிய தருணத்தில் வீழ்த்தி, பணிய நேரும்போது பணிந்து செல்கிறார்கள்.
மற்ற இரண்டு கதைகளும்-போழ்வு , இணைவு- வேலுத்தம்பி தளவாய் பற்றியவை . வேலுத்தம்பிக்கு பெயரிட்டவர் கேசவ தாஸ். கார்த்திகைத் திருநாள் மன்னரின் திவான். அரசர் ராமேஸ்வரம் வரும் வழியில் நகைகள் பறி போகின்றன. கள்ளர்கள் திருடியபின் மலையில் ஒளிந்து விடுவார்கள். வீட்டில் பெண்களே இருப்பார்கள். மீட்க வருவோர் பெண்களை யாரும் தண்டிப்பதில்லை. இச்சித்திரம் காவல் கோட்டத்தில் வருகிறது. ஆனால் வேலுத்தம்பி பெண்களை கழுவிலேற்றி , கள்ளர்களை மலையில் இருந்து இறக்குகிறார். பரிசாக அரசபதவியில், வரிவசூல் செய்பவராக ஏறுகிறார். இவரைச் சந்திக்கும் ஒரு ஆங்கில பத்திரிகையாளரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. சந்திப்பின் போது , சுல்தான் அரசர்கள் போடும் அங்கியை தைத்துப் போட்டுப் பார்த்து தானே ரசித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு குறியீடாக வருகிறது. இவரின் பதவி ஆசையும், அதில் நிலைகொள்ள செய்ய வேண்டிய சதிகளும் , இவரையும் தற்கொலையில் சென்று நிறுத்திவிடுகிறது . நான் அதிர்ச்சி அடைந்த இடம் இதுவே: இவரை மேலே ஏற்றிய கேசவனின் மருமகனை(கிருஷ்ண பிள்ளை) இரு பக்கமும் சங்கிலியால் பிணைத்து ,யானையால் உடல் பிளந்து கொல்கிறார். போழ்வு என்றால் பிளவு, இந்த இடத்தில பிளவு பட்டது அவரும் தான். சாகும் தருவாயில் கிருஷ்ணபிள்ளை சொல்கிறார், "வேடம் அணியாதே வேலாயுதா என்று சொன்னார். ஏனென்றால் இந்த ஆடையை அணிந்துகொண்டால் பிறகு கழற்ற முடியாது. ஆனால் நீ அவர் போட்டிருந்ததை விடப்பெரிய ஆடையை தைத்து அணிந்திருக்கிறாய். வேலாயுதா, நீ இன்று இரண்டாக இருக்கிறாய்.இந்த அலங்கார ஆடை ஒருவன். உள்ளிருக்கும் தலக்குளத்து வேலாயுதன் செண்பகராமன் இன்னொருவன்".
பின் வருவன ஜெயமோகனின் வரிகள்:
வேலுத்தம்பி தளவாய் கேரளத்தின் வீரபாண்டிய கட்டப்பொம்மன். சுதந்திரப்போராட்ட காலத்தில் எல்லா இடங்களிலும் வெள்ளையருக்கு எதிராகப் போராடி உயிர்விட்ட வீரர்கள் கண்டடையப்பட்டனர். தேசியநாயகர்களாக ஆக்கப்பட்டார்கள்.
வேலுத்தம்பி மாவீரர், நேர்மையான ஆட்சியாளர், களப்பலியானவர். ஆகவே அவரை வீரநாயகர் என்று சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.
ஆனால் எல்லா வீரநாயகர்களைப் பற்றியும் எனக்கு ஏறத்தாழ ஒரே மதிப்புதான். அவர்கள் வன்முறையின் வெளிப்பாடுகள். அந்த வன்முறை நம் எதிரிமேல் திரும்பியிருக்கும்போது நாம் கொண்டாடுகிறோம். நம் மீதும் அது திரும்பும் என்பதை மறந்துவிடுகிறோம்.
வீரநாயகர்களின் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கமான வளர்ச்சிக்கோடு இருக்கும்.
அ. ஈவிரக்கமற்ற ஒரு செயல்பாடு வழியாக அவர்கள் கவனம் ஈர்ப்பார்கள். அது வீரம் என வழிபடப்படும். அதை சாமானியர் செய்யமுடியாது. ஆகவே அவர்கள் மாமனிதர்களாக கருதப்படுவார்கள். அவர்களின் வீரம் பாடல்பெறும்
ஆ. மக்கள்நாயகர்களாக அவர்கள் உயர்வார்கள். மக்களுக்காக போராடுவர்கள். அதிகாரத்தை அடைவார்கள்.
இ. அவர்கள் ‘ஒற்றைப்பெருந்தலைவர்’ ஆக மாறவேண்டுமென்றால் போட்டியோ சமானமோ ஆக எவரும் இருக்கக்கூடாது. ஆகவே அவர்களை ஆதரித்து துணைநின்ற அத்தனைபேரையும் அழிப்பார்கள்
ஈ. அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றபின் அங்கே நின்றிருக்கவேண்டும். ஆகவே சமரசம்செய்துகொள்வார்கள். அதில் இரண்டாக பிரிவார்கள். ஒருபக்கம் நடைமுறைசமரசம் செய்பவர் மறுபக்கம் இலட்சியவாதி.
உ. தங்கள் ஈகோவுக்காக மக்களை பேரழிவில் ஈடுபடுத்தி அழிப்பார்கள்.
ஊ. அத்தனை அழிவை மக்களுக்கு அளித்தபின்னரும் அவர்கள் அதே மக்களால் வீரநாயகர்களாக வணங்கப்படுவர்கள்.
வேலுத்தம்பியின் கதையும் அதுதான். அவர் செய்த மிகப்பெரிய பிழை என்பது மெக்காலேவை நம்பி நாயர்படையை கலைத்தது. திருவிதாங்கூரின் உள்நாட்டு விஷயத்தில் வெள்ளையர் நேரடியாக தலையிட வழிவகுத்தது. நாயர் படையை அயலவரை கொண்டு அழித்தது அந்த தவறால் அவர் அழிந்தார். மெக்காலே அவரை தூக்கி அப்பால் போட்டபோது அவர் எதிர்த்து கலகம் செய்தார். குண்டறையில் வெளியிட்ட அறிக்கையில் வெள்ளையருக்கு எதிரான கலகத்தை ஆரம்பித்தார். கொல்லம்போரில் மெக்காலேயிடம் தோற்றார். மண்ணடியில் தற்கொலைசெய்துகொண்டார். அது எல்லா வீரநாயகர்களும் சென்றடையும் விதி. அப்படிச் சாகாமலிருந்தால் அவர் கொடூரமான ஆட்சியாளராக நினைவில் நின்றிருப்பார். நல்லவேளை. "
4.புலிநகக்கொன்றை - பி எ கிருஷ்ணன்
இக்கதை நாங்குநேரி கோயில் அருகில் வாழும் ஒரு ஐயங்கார் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது. இது ஒரு அழகான சிற்றூர். இங்குள்ள கண்மாய் மிகப் பெரியது. மிகப் பெரிய கோவில்.கோவிலில் யாருமே இருக்கமாட்டார்கள். உள்ளே நாயக்கர்களின் சிலை இருக்கிறது.
நினைவு தப்பி கடைசி நாட்களில் இருக்கும் நூறு வயது நிரம்பிய ஒரு பாட்டியின்(பொன்னா) நினைவுகளில் 1970-ல் கதை தொடங்கி பின் செல்கிறது. மொத்தக் கதையும் இவர் நினைவின் நீட்சியாகவும், இவர்களின் மூன்றாம் தலைமுறை பிள்ளைகளின் நிகழ் காலமாகவும் சொல்லப்படுகிறது. இரண்டும் சென்று சேரும் இடம் என்னவோ ஒன்று போலவே தோன்றுகிறது.
இவர் பையன் நம்மாழ்வார் ஒரு லட்சியவாதி. விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு சுதேசி இயக்கத்தில் சேர்கிறான். சிதம்பரம் பிள்ளை , பாரதியார் எல்லாம் மனிதர்களாக வருகிறார்கள். சிதம்பரம் பிள்ளை கப்பல் கம்பெனியில் பணம் போட முன் வருகிறான். அம்மா சொல்ல முயல்கிறாள். அவன் மிதவாதிகளின் போக்கு செல்லாது என்கிறான். திலகர் , மாஜினி போன்ற தீவிரவாதிகள் பக்கம் சாய்கிறான். சுதேசிக் கூட்டத்திற்கு கூட்டிச் செல்லும் ஒருவர் , கடையில் நிறுத்தி தான் சாப்பிட்ட இட்லிக்கு காசு கொடுக்கச் சொல்கிறார். வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொல்ல திட்டமிடும் கூட்டத்தில் இருக்கிறான். ஆனால் ஏன் அவர் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று பிடிபடவில்லை. கூட்டத்தில் வ.வே.சு.அய்யர், பாரதியார் இருக்கின்றனர். வாஞ்சிநாதன் துப்பாக்கியை இவர்கள் காலில் வைத்து ஆசி வாங்குகிறான்.தற்கொலை செய்து கொள்கிறான்.. குற்றம் சாட்டப்பட்டவர்களில் வ.வே.சு.அய்யர் பெயர் இல்லை. இவரிடம் கருத்து வேறுபாடு கொண்டு இயக்கத்தின் வெளியே சென்ற நீலகண்டன் முதல் குற்றவாளி. அருகில் வந்த சாவு இவனை உலுக்கி விடுகிறது. தாமும் போலீசில் சிக்குவோமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நேரத்தில் மனைவியும் பிரசவத்தில் இறக்கிறாள். தனியே பேச ஆரம்பிக்கிறான். மறு கல்யாணம் பேச ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிறு சண்டையில் வீட்டை விட்டு வெளியேறி துறவி ஆகின்றான். போகிறேன் என்கிறான், அம்மா தவறி மழை நின்று போ என்கிறாள். போயே விடுகிறான்.
60 வருடம் கழித்து இவர் பேரன் நம்பி இவரை இமயமலையில் சந்திக்கிறான். தம் ஒரு கோழை என்கிறார். இவர் திரும்பி வரும் முன் அவன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வழி தவறி நக்சலைட் என்ற சந்தேகத்தால் போலீசால் கொல்லப் படுகிறான். இது 1960-ளில் கேரளாவை ஒட்டி நடந்தது.
சுதேசி ராணுவத்துக்கு ஆள் திரட்டுவது எப்படி நடந்தது என்று வருகிறது, வேடிக்கை என்று சொல்லித்தான் ஆக வேண்டும். இயக்கத்தில் ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போவதாக நம்மாழ்வாரை நீலகண்டன் கூட்டிச் செல்கிறான். கடைசியில் இந்த முக்கியமான ஆள், பிச்சாண்டித் தேவர், இவர் நிலத்தில் குத்தகைக்கு பாடு படுபவர்.
'மூவாயிரம் பேரை தயார் பண்ணீட்டிரா?' - நீலகண்டன்
'அவனுக எங்க போவானுக சாமி, வேலைய வெட்டியா? குடிச்சிட்டு கிடப்பானுக .ஒரு வாரம் போதும். துப்பாக்கி தாரேன்னு சொன்னேங்களே?' - பிச்சாண்டித் தேவர்
'வரது , வரது , பொறுமையா இரும்'
'வேற வளி '
தேவர் போனபிறகு நம்மாழ்வார் மூவாயிரம் பேர் என்ன செய்வார்கள் என்று கேட்டான்.
'மூவாயிரம் மட்டும் இல்லை, ஐயங்கார். மாப்பிள்ளை சாமீ கெட்டிபொம்மு பரம்பரை இருபதாயிரம் பேரை திரட்டறதா சொல்லியிருக்கார். எல்லோரும் ஜெர்மனியில் இருந்து ஆயுதம் வர காத்துண்டு இருக்கா'
'ஆயுதமா, இவ்வளவு பேருக்கா?ஜெர்மன்காரன் சும்மா கொடுப்பானா?வெள்ளைக்காரனுக்கு தெரியாம இது நடக்குமா?இவ்வளவு பேர் எங்க தங்குவா ? யார் சாப்பாடு போடுவா?'
'காளி மாதா நம் பக்கம். அவள் வழி காட்டுவாள். பணம் நிச்சயம் கிடைக்கும். பரோடா மகாராஜா தறேன்னுருக்கார்'
சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்தித்து ஆயுதம் வாங்க, போர் உதவி கேட்டு ஒரு வருடம் வரை காத்து இருந்ததாக படித்திருக்கிறேன்.
ஆஷ் வழக்கில் வ.வே.சு ஐயர் சாட்சிகள் இல்லாததால் தப்பிக்கிறார். இப்போது மிதவாதி, காந்தியவாதி ஆகி விடுகிறார். நம்மாழ்வார் மகன் இவர் பள்ளியில் படிக்க வருகிறான். தட்சசீலம் போல் மலை நடுவில் ஒரு பள்ளி அமைக்க முயல்கிறார். கம்பராமாயண வகுப்பு எடுக்கிறார். தன் மகளை காக்க வேண்டி , அருவியில் கால் தவறி விழுந்து இறக்கிறார்.
5.படையல் , திரை, எரிசிதை,யட்சன்,கந்தர்வன் - ஜெயமோகன் சிறுகதைகள்
யட்சன், கந்தர்வன் கதைகள் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் நடந்த மிக அதிக வரி விதிப்பும் , அதற்க்கு எதிராக எதையும் செய்வதில் உள்ள கஷ்டங்களையும் காட்டுகிறது. அரசர் திருக்கணங்குடிக்கு வருகிறார். வரி நிலுவை வருடக் கணக்கில் இருக்கிறது, மழையும் இல்லை. வேளார்கள் சேர்ந்து ஒரு மனு (சங்கட ஹர்ஜி ) எழுத ஆரம்பிக்கிறார்கள். இதை காறுபாறு , ரயாசம், இவர்களை தாண்டி தளவாய் கையிலோ , அமாத்யர் (அமைச்சர்) கையிலோ சேர்க்க நினைக்கிறார்கள். எழுதும் முன் பிடிபடுகிறார்கள், கசையடி வாங்குகிறார்கள். பின்னும் முயற்சி. அக்காலத்தில் இந்த மாதிரி வாரிக்கொடுமையினல் மன்னரின் கவனத்தை ஈர்க்க கோவில் கோபுரத்தில் இருந்து ஒருவர் குதிப்பது நிகழ்ந்திருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் என்று படித்தேன். அணஞ்ச பெருமாள் கோவிலில் வேலை செய்பவன், எதிர்பாராவண்ணம், அவன் மன்னர் முன் கோபுரத்தில் இருந்து விழுக சரி என்கிறான். இவன் உண்மையில் கந்தர்வன், ஊர்ப் பெண்களின் கண் இவன் மேல் உண்டு.
முருகப்பன் இதே ஊரில் அரிசி வியாபாரம் செய்பவன். இங்கு வரி கூடுதலாக இருந்ததால் ஆரல்வாய்மொழி கடந்து மலையாள நாட்டுக்கு ஆள் வைத்து அரிசி கடத்துகிறான்.பணத்தையும், பொன்னையும் கடையில் பதுக்கி வைக்கிறான். மனைவியை அணஞ்ச பெருமாளை இணைத்து திட்டிய வண்ணம் இருக்கிறான். வெளியே கருமியாய் வாழ்கிறான். அணஞ்ச பெருமாள் அடுத்த வேளைக்கு சேர்க்காமல், மனதால் அரசன் போல் வாழ்கிறான்.
இதன் திருப்பம் அணஞ்ச பெருமாள் கோபுரத்தில் இருந்து விழுந்தவுடன் முருகப்பனின் மனைவி சிதை ஏறுவது. இவனுடைய கழுத்தணி அணிந்து குதித்ததால் முருகப்பனால் வெளியே நடமாட முடியாது, ரெகார்டில் செத்தது முருகப்பனே. சொத்தையெல்லாம் விட்டு ஊரை விட்டு மலையாளத்துக்கு ஓட வேண்டியதாகிறது. அடுத்த வேளை உணவின்றி , கணக்கனாக , முதலாளியாக தன்னை மறுபடியும் கண்டடைகிறான். போகத்தில் திளைத்து ரோகியாகி, தெய்வமான தன் மனைவியின் , அணஞ்ச பெருமாள், அருகில் சித்தனாக முடிகிறான்.
படையல் ஒரு சூபியின் கதை. போர்களும், படையெடுப்புகளும், ராஜதந்திரங்களும் ஒரு பக்கம் நடக்கும் போது , தரையில் அன்றாடம் என்ன நடந்தது. சாதாரண மக்கள் ரத்தம் சிந்தியதையும் , அலைக்கழிப்புக்கு உள்ளானதையும் காட்டும் இக்கதை, ஞானிகள் இதில் படாமல் , ஞானப்பாதையை ரத்தக் கறைபடாமல் காப்பாற்றியுள்ளனர். ஆற்காடு நவாப் திருவண்ணாமலை கோவிலில் நெடுங்காலம் படைகளை நிறுத்தி இருந்தார். இவர் ஆங்கிலேயருக்கு உதவ மெட்ராஸுக்கு படையெடுத்து சென்றிருக்கும் போது மைசூர் படைகள் கீழே இறங்கி கோவிலில் எஞ்சி இருந்த எழுநூறுக்கும் மேற்பட்ட முஸ்லீம் படைகளை கோவிலுக்குள் கொல்கிறார்கள். ஆற்காட்டு நவாபின் படைகள் இந்து முஸ்லீம் பயணிகளை படைகள் என நினைத்து மசூதிக்குள் கொல்கிறார்கள்.
உடைவாளும், குதிரையுமாக மழைக்கு ஒதுங்கிய இரு படைவீரர்கள் , இவர்களை அடித்து உதைத்து பறித்து உண்கிறார்கள். சூபி எல்லா அடியும் வாங்கிய பின்னும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அல்லா அளவற்ற கருணையுடையவன் )" என்று சொல்லிய வண்ணம் இருக்கிறார். இது ஒன்று தான் அவர் பேசும் வார்த்தை. அங்கு இருக்கும் ஆனைப்பிள்ளைச் சாமி சாப்பாடு போட்டுக் கொண்டே ஆதி வாங்கிய பின்னும் அவர்களை கலாய்த்த வண்ணம் இருக்கிறார்.
“நீரு சாமியாருல்லா ஓய்? நீரு எதுக்கு இந்த துலுக்கன்கூட சேந்திருக்கீரு?”
“சேல்கொண்ட விழியாள் இருமங்கை மணம்கொண்டு வேல்கொண்டு வெண்பரி ஊரும் ராவுத்தனல்லோ என் தெய்வம்?”
”அது என்ன ஓய்?”
”அருணகிரி ,கந்தரலங்காரமோ திருப்புகழோ என்னமோ.”
”அப்டி பாடியிருக்கானா?”
“கொடுஞ்சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் ராவுத்தனேன்னு பாடுறார். மேலே சொல்லப்பட்டது நான் பாடினது”
யாருக்கும் உணவில்லாமல் பாடி இரவைக் கழிக்கிறார்கள்.
"ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்
அடுக்குமோடி எம்மகளே?
ஆறுமுகத்தால் வேவுபாத்தால் எம்மகளே- நீ
அடுத்தமனை பாக்க ஏழுமுகம் வேணுமேடி! ”
இவர்கள் நடுவே திருவண்ணாமலையில் இருந்து வரும் ஒரு சாமியார் சேருகிறார். மூன்று நாள் முன் புதிதாய் பிறந்தேன் என்கிறார்.
காளகஸ்திக்கு அருகில் கோவிலில் கொள்ளையிட வந்தவர்கள், சிவலிங்கத்தில் கால் வைத்ததால் ஒருவரை கொன்று விட்டதாகவும், சாவுக்கு பயந்து இறைவனை மறந்து விட்டதாகவும் சொல்கிறார். பிறகு ஒரு சூபியிடம் கேட்டதகாவும் , சாவு பயம் இருந்தால் செத்தால் தான் தீருமென்றும் சொல்லி, திருவண்ணாமலை போகச் சொல்கிறார். எழுநூறு பேர் கொல்லப்பட்ட அன்று கோவிலில் நுழைகிறார்.
"ரத்தம்… அவ்ளவும் ரத்தம்…அங்க அத்தனைபேரையும் வெட்டிக்குவிச்சு போட்டிருக்கானுக. துண்டு துண்டா உடம்பு. கை காலு தலை குடலு …”
“ரத்தத்திலே நான் சறுக்கிச்சறுக்கி விழுந்தேன். எந்திரிச்சு நின்னா மண்ணு இளுக்குது. ரத்தம் இளுக்குது. விளுந்து புரண்டு நவுந்து போனேன். நடக்கமுடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு. இது ஏதோ யட்சிபூதகண வெளையாட்டுன்னு புரிஞ்சுபோச்சு. கையை ஊணி அப்டியே தவழ்ந்தே உள்ளே போனேன். விடமாட்டேன், அண்ணாமலையே வந்திட்டேன், பாத்து சேவிச்சுட்டுதான் போவேன்னு சொல்லிப் போய்ட்டே இருந்தேன்… ரத்தம் மலம் சலம் வழியா ஊர்ந்து கருவறைக்கு போய்ட்டேன்… உள்ள சிக்கிக்கல் இருந்துச்சு. கல்லகலிலே எண்ணையும் திரியும் இருந்திச்சு. தீபம் ஏத்தி கும்பிட்டேன். அண்ணாமலையேன்னு கூவுறப்ப தெரிஞ்சுட்டுது, நான் ரத்தப்பாதையிலே மறுபடி பொறந்து வந்திருக்கேன்… எல்லா பிறவிப்பயமும் போச்சு. சேத்ததும் செலவளிச்சதும் கணக்கு செரியாயாச்சு. புனர்ஜென்மம்… ”
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று பாவா சொன்னார்.
6.அழகர் கோவில், தொ.பரமசிவன்
இது ஒரு விரிவான ஆய்வுப் புத்தகம். அழகர் கோவிலை மையமாக வைத்து , அதன் தோற்றம், எழுதப்பட்ட இலக்கியங்கள், கோவில் பணியாளர்கள் கட்டமைப்பு, கோவில் பணிகள் , சமூகத் தொடர்பு , திருவிழாக்கள் ஆகியவற்றை ஆராய்கிறது. இக்கோவிலுக்கும் , மேலூர் உட்பட இப்பகுதிகளில் வாழும் கள்ளர் (சேர்வை) பெரும் பிணைப்பு இருந்திருக்கிறது. விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் தம் காவலை ஏற்காததால் அழகர் உற்சவத்தை வழிப்பறி செய்ததாகவும் , அதைக் குறிக்கும் வேடுபறி திருவிழா இன்றும் நடக்கிறது. வாழை மட்டையை வைத்து வேல் காம்புகளால் குத்தி இன்று நடக்கிறது என்று தொ.ப. கூறுகிறார். ஒருமுறை பார்க்க வேண்டும் அழகர் திருக்கோலத்தில் கையில் இருக்கும் களரி, சாட்டை கள்ளர்களின் ஆயுதம். அழகர் ஆற்றில் இறங்குவதையும் , மீனாட்சி திருக்கல்யாணத்தையும் ஒன்றாக சேர்த்தவர் திருமலை நாயக்கர் என்று சொல்கிறார். அழகர் கோவிலுக்கு காவல் இருந்த மேலூர் கள்ளர்களும், மதுரை ஊருக்குள் காவல் செய்த பிறமலை கள்ளர்களும் ஒப்பிடத் தகுந்தவர்கள். கள்ளர்கள் ஒரு காலத்தில் 'ஹாக்கர்ஸ்' போல் செயல் பட்டு இருக்கிறார்கள். கள்ளனும், காவலும் ஒருவரே, ரோல் தான் முக்கியம்.
7.மொகலாய இந்தியாவில் எனது குறிப்புகள் - நிக்கோலா மனுச்சி (1638 -1717)
இந்தப் புத்தகம் வரலாற்று நிகழ்வுகளை நேரடியாக பார்த்தவர் பதிவு செய்தது. நிக்கோலா மனுச்சி வெனிஸில் பிறந்து உலகம் பார்க்கும் ஆர்வத்தில் கள்ள கப்பலேறி பெர்சியா , பாரசீகம், வழியாக சூரத்தில் நுழைகிறார். சிரியாவிலிருக்கும் போது "புலாவ்" சாப்பிடுகிறார். மருத்துவம் கற்று , மருத்துவராயும் , தூதுவராயும் வேலை செய்கிறார்.
ஒரு ராஜ ஊர்வலம் எவ்வாறு இருக்கும், மன்னர் தர்பாரில் எப்படி இருப்பார் , பக்கத்தில் யார் இருப்பார் என்று எழுதியிருக்கிறார். ஔரங்கசீப், மற்றும் அவர் தமையர் தாரா ஆகியோருக்கு வேலை பார்த்து இருக்கிறார். இவருக்கு கிடைக்கும் அரசர்களின் அருகாமை , இவர் வெள்ளையர் என்பதால் தான் என நினைக்கத் தோன்றுகிறது. எல்லா மன்னர்களும் ஆறு மாதம் ஒரு முறை ரத்தத்தை சுத்தப் படுத்திக்கொள்கிறார்கள். இவர் செய்ததாக எழுதுகிறார்.ஒரு ரன்னிங் கமென்டரி போல் இருப்பதால் தான் , இப்புத்தகம் சுவாரசியமாய் இருக்கிறது.
8.ஔரங்கசீப்-இந்திரா பார்த்தசாரதி
இது ஒரு நாடகம். ஔரங்கசீப், தாரா , ஷாஜஹான் மற்றும் அவர் சகோதரிகளுக்குள் நடக்கும் காட்சிகள். தாரா ஒரு சூபி போல் நடக்கிறான். ருத்திராட்ச மாலை அணிகிறான் , உபநிடதங்களை மொழி பெயர்க்கிறான். நானும் கடவுளே என்கிறான். ஔரங்கசீப் ஒரு தீவிர முஸ்லீம். ஔரங்கசீப் தாரா ஒரு முஸலமான் இல்லை என்று சொல்லி படைகளுக்குள் பிளவை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கிறான்.
ஷாஜஹான் மும்தாஜ் இறந்த கடந்த காலத்திலேயே உறைந்து இருக்கிறார். தாராவை விரட்டிக் கொல்கிறான் , அப்பாவை சிறை பிடிக்கிறான். அப்பா அவனை பாட்டனாரிடம் விற்றதாக நினைத்து அவரை பழி வாங்குகிறான். அவன் மகனும் அவனுக்கு எதிரே கிளம்புகிறான். ஔரங்கசீப்பிற்க்கும் தனிமையே கிடைத்தது கடைசியில்.




















Comments
Post a Comment