சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர்
'நாங்கள் அனைத்து இருப்பையும் அங்கீகரிக்கிறோம். ஆனால் ...'
'ஆனால் என்ன..'
'அவை இல்லாமல் இருக்கும் நிலையும் அவற்றில் அடங்கியுள்ளது.'
மேலே உள்ளது விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானசபை விவாதத்தில் சமண தீர்த்தங்கரர் கூறும் வரி. தலைப்பை மீறி இந்தப் பதிவும் சைக்கிள் இல்லாத கடந்த சில நாட்களில் நடந்த குறிப்பாய் அமைகிறது. இதை ஒட்டி என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லும் இன்னொரு சம்பவமும் நினைவில் வருகிறது. பையன் படித்தது பசுமாடு கட்டுரை. தேர்வில் கேட்கப்பட்டது தென்னை மர கட்டுரை. இந்த இடத்தில் மேலும் வரப்போவது உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்கிறேன். பையன் பதில் எழுத ஆரம்பித்தான். மாட்டுக்கு இரு கண்கள் , இரு காதுகள், ஒரு மூக்கு, நான்கு கால்கள், ஒரு மடு மற்றும் ஒரு வால். புல் , வைக்கோல் , புண்ணாக்கு என்ற உணவுப் பட்டியல். அப்புறம் பால், தயிர், வெண்ணெய், சாணி, எரு என நீட்டி, பால் , தயிர் சாப்பிட்டால் மனிதனுக்கு வரும் நன்மைகள், அதீதத்தில் வரும் கெடுதல்கள் என கட்டுரை எழுதி முடித்தால் கை வலித்தது. கடைசியில் கேட்ட கேள்விக்கு நியாயமாய் , இவ்வாறான பசுமாடு , ஓங்கி உயர்ந்த , குலைவிட்ட தென்னையில் கயிறால் கட்டப்பட்டிருந்தது என்று இரண்டையும் பிணைத்தான் என்று சொல்வார். இந்த இடத்தில் இரு செயல்களுக்கிடையில் தொடர்பு எப்போதும் இருக்கலாம் என நினைத்தால், நீங்கள் மேலே தைரியமாய் வாசிக்கலாம். விரல் நகற்றி மேல் சென்று தலைப்பை மீண்டும் படித்தாலும் சரி, சும்மா பொழிவதை இங்கு நிறுத்தி இப்போது நம் கதைக்கு செல்வோம். இவ்வளவு துறுத்தி ,வெளிப்படையாய் தெரியாது என்றும் உறுதியாய் சொல்கிறேன்.
தென்மேற்குப் பருவமழை இங்கு கூடிவிட்டது. எட்டாம் மாடியில் இருந்து பார்த்தால் அன்று மாலை ,மழை பெய்வது போலும் , பெய்யாதது போலும் இருந்தது. கண்ணாடியில் எங்குமே ஒரு துளி விழவில்லை. இப்போதெல்லாம் நம் கண்கள் பற்றி சந்தேகம் வருகிறது, ஏனென்றால் சுற்றி எல்லோரும் கண்ணாடி போட்டிருக்கிறார்கள். அருகிலிருந்தவரிடம் கேட்டேன். மேலே ஷீல்டு இருக்கும் என்று கூறினார். நம்ப முடியவில்லை , பதினைந்து மாடி உயரத்தில் இருப்பது எப்படி எட்டாவது மாடியில் ...அப்போது ஒரு சிலர் குடையுடன் போய்க்கொண்டிருந்தார்கள். எங்கும் சாம்பல் பூசிய வானின் முகட்டில் மரங்கள் அசையாது நின்றன. பாதுகாவலர் மழைக் கோட்டை மாட்டிவிட்டார். இன்னும் இரு சக்கர வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. கிளம்பிவிடலாம் என நினைத்தேன். நினைக்கும் போதே மழை வலுத்தது. பின்னால் இருப்பவரிடம் காரில் வந்திருக்கிறாரா எனக்கேட்டேன். அவருடன் வருமாறு அழைத்தார். செல்வதற்கு முன் சைக்கிள் மின்கலத்தை அடுத்தவர் பெட்டியில் வைத்து மூடினேன். ஏனெனில் எனது கடவு எண் , முதல் முறை பெட்டி மூடிய பின் , எனக்குள்ளே மூடிப் புதைந்து விட்டது.
இப்போது இன்னொரு பழங்கதை சொல்லி அடுத்த நாள் வரவிருக்கும் சிக்கலை விளக்க வேண்டும். ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்லுக்கட்டு மூன்றும் தனித்தனியாய் படகில் ஏற்றிக் கொண்டு செல்லும் கட்டாயமுள்ள ஒரு படகோட்டிக்கு, ஏற்படும் சிக்கலை விடுவிக்கச் சொல்லி, எங்காவது ஒரு மாமாவோ , அத்தையோ உங்களை இதற்குள் வாழ்வில் கேட்டிருப்பார். இது போல், சைக்கிள் வைக்கும் கார் இருந்தால் மறு நாள் காலையில் எடுத்துச் செல்லலாம், மாலையில் உற்சவமாய் காரில் சைக்கிள் சுமந்து வரலாம். எப்பவும் போல் சைக்கிளை ஆஃபிஸில் போட்ட அடுத்த நாள் காலையில் மனைவியின் ola வில் சென்றால் என்ன என்ற கேள்வியும், ola செயலியைத் திறந்து , காலையில் சில மணித்துளிகள் செலவழித்து பின் , பலமுறை அந்தச் சுழலும் காலச் சக்கரத்தையும் , தலை வாலாவதையும், பின் எல்லாம் ஒரு நொடி சூனியமாய் இருண்டு , திரும்ப தலை முளைப்பதையும் மீணடும் மீண்டும் பார்க்கலாம். நல்ல விளையாட்டு, ஆனால் டாக்ஸி வராது.
இறங்கி நடந்தேன் , மனதில் மெட்ரோ ரயிலில் செல்லவேண்டும் போல் இருந்தது. கே ஆர் புறம் செல்லும் எ/சி பீடர் ஒன்று வந்தது. பிதுக்கல் இல்லாமல் சீட்டுகள் காலியாய். டிக்கெட்டின் விலையையும் குறைத்திருக்கிறார்கள். இவ்வளவு சரியாய் எல்லாம் நிகழ்வது மனதில் மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனாலும் உள்ளுள் எதோ ஒன்று பின் வருவதை எச்சரிக்கை செய்தது. கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தேன். நமக்கேயாய் இருதுளை எ/சி பீறிட்டு நேராக சகஸ்ர சக்கரத்தில் விழுந்தது. ஞானியருக்கு கடைசி காலத்தில் பீறிட்டு ஓசையுடன் உயிர் இங்கிருந்து வெளியே செல்லும் என்பார்கள். அதற்க்குதான் இப்போது உள்ளே செல்கிறதோ என நினைத்தேன்.
கைபேசியை எடுத்து ஜெயமோகன் தளத்தில் கர்ம யோகம் பற்றிய விளக்கக் கட்டுரைகளை விட்டதில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் மூன்றாவது முறையில் படித்ததில் விஷ்ணுபுரம் கதை பிடிபட்டதாக தோன்றியது. கௌஸ்துபம் என்னும் இரண்டாம் பகுதியில் வரும் ஞான சபை விவாதங்கள் என்னை முடிவில் மூழ்கடித்து விட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் இம்முறை வாசிப்பில் இன்னும் நீண்ட நேரம் நதியில் மிதக்க முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்புகள் நிறைய எடுத்தேன் , விரைவில் தொகுத்து எழுத வேண்டும். இதை ஒட்டி இமைக்கணம் படிக்க ஆரம்பித்தேன். இது கீதையின் மிக அழகிய மீள் உருவாக்கம். ஒரு சிலமுறை சித்பவாநந்தர் கீதை உரையை வாசிக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இமைக்கணம் புனைவாய் இருப்பதால் ஒன்றிப் படிக்க முடிகிறது. இதன் தொடக்கமும் கவித்துவமாய் அமைந்திருக்கிறது. இறப்பென்ற ஒன்று உலகில் இல்லாமல் போய்விட்ட நேரத்தில் ஒரு புழுவும்(தியானிகன்) , பறவையும்(பிரபாவன்) இறப்பில்லாத உலகை வாழ்ந்து அனுபவிக்க ஆரம்பிக்கின்றன. 'கீழே மான்களும் முயல்களும் அச்சமின்றி துள்ளிவிளையாடின. புலிகளை தேடிச் சென்று சீண்டின கன்றுகள். இருளுக்குள் மறைந்தே வாழ்ந்திருந்த பல்லாயிரம் உயிர்கள் வெளிவந்து வெயிலில் திளைத்தன. பறவை எரியில் பறக்கிறது, நெருப்பு சுடவில்லை.' கொல்லும் தேவை இல்லாமல் , எனவே நஞ்சின் தேவை இல்லாமல் , குளவிக்கு கொடுக்கின் தேவை இல்லாமல் போகிறது. சிலந்தி யாரும் சிக்க அவசியமில்லாமல் வெறும் வலையை நாளும் களிப்புடன் நெய்கிறது. நாளடைவில் பற்களும் , உகிர்களும், உதிர்ந்தன. கூர்கள் மழுங்கின. பின்னர் கை கால்கள் பொருளிழந்தன. உடலில் இறப்பில்லாமல் உள்ளிருந்த பசியும் இல்லாமல் ஆனது. பசியில்லாமல் விளைவும் தேடலும் இல்லாமல் போனது. 'இறப்பே பசியென்றாகி உலகை ஆண்டது என்று அறிந்தது பிரபாவன். பசியே விழைவென்று உயிர்களை செயல்கொள்ளச் செய்தது. செயலில்லாத உயிரென்பது வெறும் பருப்பொருளே. பாறைகளும் யானைகளும் ஒன்றென்றாயின. முதலைகள் மரக்கட்டைகளாயின. நாகங்கள் சுள்ளிகளாக. பறவைகள் சருகுகளாக. வண்டுகள் கூழாங்கற்களாக. மானுடர் சேற்றின் அலைகளாக.'
விஷயம் என்னவென்றால் இறைப்புகிறைவன் தன் தொழிலை நிறுத்தி விட்டான். ஏன் , ஒருநாள் சித்திரகுப்தனிடம் யமன் பேசிக்கொண்டிருக்கும்போது , தன்னுடைய ரெகார்ட் எப்படி இருக்கிறது என்று ஆர்வத்தில் கேட்டு விடுகிறார். அவன் ஒரு இடத்தில் அறம் பிழைத்துவிட்டதாகச் சொல்கிறான். அது விண்ணளந்தோன் ராமனாய் மண்ணில் வாழ்ந்த காலம். ராமனுக்கு வாழ்ந்து தீரவில்லை. எனவே பிரம்மா இடைபுகுந்து, காலனை முனிவனாய் புவிக்கு அனுப்பி ராமனை விண்ணேற அறிவுரை சொல்லச் செய்கிறார். இவர் சாகாமல் இருக்கும் உபாயம் உறைக்கும் போது இடையில் தடுப்பவரை தலையைக் கொய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யமன் உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார். ராமன் , வழக்கம் போல் லக்ஷ்மணரை வெளியில் நிறுத்திக் கேட்கிறார். இடையில் லக்ஷ்மணன் , துர்வாசர் வந்து ராமன் கையால் , ஒரு மாத விரதத்தை முடிக்கக் காத்திருப்பதாக சொல்கிறார். பொறுமையின்றி நாட்டையும் , குடிகளையும் தீச்சொல் இடப் போவதாக மிரட்டுகிறார். ராமன் தீர்த்து வைக்க இடையில் எழுந்து செல்கிறார். பல நாழிகைகள் காத்திருந்து யமன் காரியம் முடிக்காமல் திரும்ப நேரிடுகிறது. ஆனால் அவரிட்ட சாபத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். தம்பி தலைகொய்வதற்கு இணையாக காடேறுகிறார். வெறுமையில் , அண்னனை எண்ணி , சரயு நதியில் குதிக்கிறார். ராமன் தம்பி போய் விட்டதை நினைத்து , காடேறி இறுதியில் அவரும் நதியில் குதிக்கிறார். இருவரும் இன்னும் மாயையில் சிக்குண்டவர்களாக இருப்பதாகவே சித்திரகுப்தன் சொல்கிறான். ஆயிரம் ஆண்டுகள் இருளில் தவம் செய்து விண்ணேறுகிறார். இந்தப் பிழையை எண்ணி இறைப்புகிறைவன் தன் செயலை நிறுத்தி விடுகிறார். தன் மனம் துலாக்கோலின் சமநிலையை இழந்து விட்டதாகச் சொல்கிறான். ஒரு யுகம் பொறுத்து , அடுத்த யுகத்தில் விண்ணளந்தோனிடமே ஐயங்களை தெளிவுறுத்திக்கொள்ளுமாறு நாரதர் சொல்கிறார். முதல் முறை இறைக்கு நிகழாத முழுமை அம்முறை அவனில் நிகழும் என்று கூறுகிறார் . யமன் மஹாபாரத கதை மாந்தர்களின் மனதில் புகுந்து, தன் மனதின் ஐயங்களைத் கேட்டுத் தெளிவதாக இமைக்கணம் அமைந்துள்ளது. ஒவ்வொரு கீதை அத்தியாயத்திற்கும் ஒரு அழகிய தருணத்தை அமைக்கிறது. உதாரணமாக சாங்கிய யோகம் கர்ணனுக்கும் , கர்ம யோகம் பீஷ்மருக்கும் சொல்லப்படுகிறது. நாரதர் தொழிலை இப்போதைக்கு மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்துகிறார். இறப்பு பூமியில் மீள்கிறது.
இறப்பும் எங்கோ எவருக்கோ ஒரு செயலே என்பது மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. கர்ம யோகத்தில் வரும் கர்மம் என்ற சொல்லுக்கும் , வேள்வி என்ற சொல்லுக்கும் செயல், அன்றாடச் செயல் , மாபெரும் செயல் என்று பொருள் கொண்டால் மட்டுமே , அதன் கவித்துவத்திற்கு நியாயம் செய்ததாகும். பொதுவாக ஹோமம், வேதச் சடங்கு என்ற பொருளிலேயே கீதை உரைகள் இருக்கும். உதாரணமாய் கீழ் வரும் பாடல்,
"வேள்வியென ஆற்றப்படும்
செயல்கள் தவிர்த்த பிறவற்றால்
இவ்வுலகம்
செயற்சுழலில் சிக்கியிருக்கிறது
ஆகவே குந்தியின் மகனே
அவ்வாறான செயலை
பற்றில்லாது செய்க."
மண்ணில் பிறந்த கணத்தில் இருந்து ஒவ்வொருவரும் செயலாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் கன்றும் குழந்தையும் கை கால் அசைத்து எழ முயற்சிக்க வேண்டியுள்ளது, அழுகாமல் உணவில்லை. நம் முன் செயல் வடிவிலேயே உலகம் வெளிப்படுகிறது. பேருந்தின் ஜன்னல் வழியே கறுத்து திரண்ட மேகங்கள் வானில் ஒன்றை ஒன்று விரட்டிச் சென்று கொண்டிருந்தன. முந்தைய சீட்டில் ஒரு பெண்மணி அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்து ஊசிக்கொண்டை ஆக்கி , மடிக்கணினியில் இன்னும் கொஞ்சம் டைப் செய்தார். வெளியில் கடைக்காரர் ஒருவர் நான்கு வெள்ளை பிராய்லர் கோழிகளை கூண்டை விட்டு வெளியில் எடுத்து , ஒரு கையில் இரண்டாய்த் தலைகீழாய்த் தொங்க விட்டு அன்றைய வேலைக்கு உள்ளே சென்றார். டிரைவர் விசையை அழுத்த , எங்கோ ஒரு பெண்ணின் குரல் வரும் நிறுத்தத்தை அறிவித்தது. ஒரு பத்துப்பேர் வேலைக்குக் கீழிறங்கினார்கள். ஒரு செயல் மற்றொரு செயலாய் , அது மற்றொன்றாய், , சிலவாகி , பலவாகி , இன்னும் பலவென்றாகி , மணியாய், நாளாய் , மாதமாய், வருடமாய் என்று விரிந்தபடியே தான் சென்று கொண்டிருக்கிறது. பிறர் செயல்கள் நமக்கு நேராகவோ, அல்லது குறுக்காகவோ விழுகின்றன. உடனடியாக விழுபவை நம் கண்ணில் நன்றாய்த் தெரிகின்றன. ஆனால் ஸ்லோ மோஷனில் , அல்ட்ரா ஸ்லோமோஷனில் நம்மை மெதுவாய் பின் தொடர்ந்து கொண்டிருப்பவை எவ்வளவோ? எவ்வளவு கோடுகள் நம்மைப் புள்ளியாய் கடந்து சென்றுள்ளனவோ, இன்னும் செல்லவேண்டிய கோடுகள் எவ்வளவோ? ஆனால் கேள்வி என்பது எவ்வளவு முறை கோடு புள்ளியை அம்பாய்க் கிழித்து, ரத்தத்துடன் கடக்கிறது என்பதே.
இந்தச் சிக்கல் கடந்த வாரங்களாக எனக்கு மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. சாங்கியம் மனதை ஆறாவதாக ஒரு புலன் என்கிறது என்று படித்தேன். இன்று போனையும் ஒரு புலன் என்று கொள்ள வேண்டியுள்ளது. அப்புலனில் இடைவிடாமல் விழுபவை குறுஞ்செய்திகள். மீம்ஸ் என வருபவைகளை வேண்டும் போது படிக்கலாம் ,இல்லை சட்டை செய்யாமல் விட்டு விடலாம். அலுவலகத்தில் வேலை என்று வரும் செய்திகளை என்ன செய்வது? அம்பாய்க் கிழிக்க வரும் செய்திகளை என்ன செய்வது? எத்தனை எதிர் அம்பு விடுவது? எதிரே அவரும் ஓயவில்லை என்றால் என்ன செய்வது? சரி எதிர் உள்ளவர் அர்ஜுனன் சொல்லும் உற்றார் உறவினர் போல் வட்டத்திற்கு உள்ளே இருப்பவர் என்றால் என்ன செய்யலாம் ? எல்லாம் செயலென்று தான் கடக்க வேண்டும்.
பேருந்தில் இருந்து இறங்கி மெட்ரோ வாசலில் ஒரு தேநீர் குடித்தேன். ஒரு வட இந்தியக் குடும்பம் பெரிய பெட்டிகளுடன் புகைவண்டி நிலையத்தில் இருந்து வெளியே வந்து வெளியே நின்றிருந்தது. இளம் அப்பா குழந்தையுடன் பெட்டிகளுக்கு நடுவே ஓடிப் பிடித்து விளையாடினார். ரயிலேறி கதவருகே வடபுறமாய் நின்று கொண்டேன். இன்னும் மனிதர்கள், இன்னும் செயல்கள். மெட்ரோவில் இருந்து கீழே பார்ப்பது ஒரு பறவை பறப்பது போல அனுபவம். கீழே எல்லாமும் வழுக்கிப் பின்னோடும். அல்சூர் சோமநாதர் ஆலய கோபுரம் சுழன்று பின்னோடியது. எம் ஜி ரோடு நிறுத்தத்தில் இறங்கி கால் நடையாக அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் அலுவலகம் சென்றேன்.
வேலை முடித்து வீடு செல்ல வேண்டும் என்று தோன்றியபோது , சைக்கிளைப் பற்றி நினைவு வந்தது. பாட்டரி அடுத்தவர் பெட்டியில் பூட்டியது உறைத்தது. அவர் வீடு சென்றிருந்தார். போன் அடித்தேன், அவர் இப்போது மெட்ரோவில் இருந்தார். அங்கு நிலவுவது ஜாக்ரத், ஸ்வப்ன நிலைகளைத் தாண்டிய சுசுப்தி. போன் போகாது. அவர் திரும்பி அழைத்தார். ஒரு வழியாக மானத்தை விட்டு கடவு எண் கேட்டு , மின்கலத்தை வெளியே எடுத்தேன். இந்தப் பூட்டு உடைப்பது எளிது, திறப்பது கடினம். எல்லாம் நல்லபடி ஆயிற்று, மணி ஐந்தரை , எட்டு மணிக்கு அடுத்த மீட்டிங் என நினைத்தேன். இந்த மீட்டிங்கை எனக்காக நேரம் மாற்றி இருந்தார்கள். யார் அறிவார் பின் வரப்போவதை.
லிப்ட்டில் இறங்கி கால் சட்டைப் பையில் கையை விட்டேன். சாவி இல்லை என்பதை மனம் மறுத்தது.இரண்டு பைகளிலும் மீண்டும் இருமுறை விட்டேன். சைக்கிளில் இருக்கிறதா என்று பார்த்தேன். பின் தோள்ப் பையைக் கீழிறக்கி அதிலிருக்கும் மேல், இடை, கடை, உள் , உள்உள்பைகள், சுருக்குப்பைகள், புறத்தில் இருக்கும் சந்துப்பைகள் என எல்லாவற்றிலும் கைவைத்தேன். பொதுவாக இதைச் செய்யும் போது, முன் ஊருக்கு செல்லும் போது வைத்து அப்படியே உள்ளிருக்கும் சேவிங் ரேசர் கையைக் கடிக்கும். சே சே என்னப்பா இப்படி பண்ணிட்டியே என்று ரத்தம், இன்னும் வரவா, துடைக்கிறயா என்று எட்டிப் பார்த்திருக்கும். எவ்வளவு பதமாய்த் தேடியும் இல்லை. வீட்டில் இருக்குமா என்று தோன்றியது. இருந்தால் நிம்மதியாய் வேறு வழி பார்க்கலாம். போனை எடுத்தேன். மெட்ரோ போலவே, பேஸ்மெண்டும் சுசுப்தியிலேயே இருக்கும். மீண்டும் லிப்ட் பிடித்து மேலே சென்றேன். போன் போட்டேன், தெரிந்த பதில் தான் உடனே கிடைத்தது. என்னிடம் இருந்து மீண்டும் ஒரு தேடல் கோரிக்கை. இடைவெளியில் தோள்ப்பையை இன்னுமொரு சலிப்பு. இரண்டொரு பழைய சூயிங்கம் சிக்கியது. ஓரிரு பழைய ஆபீஸ் சாவிகள் .இப்போது போனில் மீண்டும் அதே பதில். அப்புறம் இப்போது நான் பயன் படுத்திக் கொண்டிருப்பதே ஸ்பேர் சாவி என்ற ஒரு நினைவூட்டல். செயல் என்பது பொருள் வெளியில் நடப்பது மட்டுமில்லை. மனத்தில் நடப்பதும் செயலே , இல்லையா? எவர் எவர் மனதின் செயல்களில் நாம் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறோமோ ? நாளை பூட்டை எவ்வாறு உடைப்பது என்று மனம் ஓடியது. உள்ளே ஆள் வரவழைக்க அனுமதி ஏதும் வாங்க வேண்டுமா? ஒரு கட்டிங் பிளேயர் அல்லது குறடு நாளை எடுத்து வருவது என்று முடிவு செய்தேன். ரயிலில் ஸ்கேனரில் குறடு பிடிபடுமா தெரியவில்லை என்று மனம் சொல்லியது. சாவி வீட்டில் உள்ளது என்றும் சொல்லியது. நாளை பார்க்கலாம் என்று ரயிலேறினேன்.

Comments
Post a Comment