Skip to main content

சம்பக தாமா

சம்பக தாமா

ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம்,  ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது.  ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும்  அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி  இருந்தால் வேலையும் ஆகிறது.  

ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும்  கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது.  நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூங்காற்றும் , அதில் வரும் சுகமும், அந்த சுகத்தால் வரும் பயனும்...  இந்த மன நிலையில் பாட்டை சொல்லாமல் விட மனமில்லை. 

     கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

          குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

     ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

          உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

     மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

          மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

ஆம், சுகத்தில் உறும் பயனே. கூர்ந்து நம்மைக் கவனித்ததில், நம்முள் எதிர் மன நிலையை விதைத்து , விருட்சமாக்கும் ஒரு சில ஆட்களை மனதில் லூப்பில் ஓட்டக்கூடாது என்று முடிவு.  பார்ப்போம், வலது மூளை பட்டம் போல் வானில் பறக்கும் என்கிறார்கள். அதற்க்கு நேரம், திசை , நினைவுகளாக காலத்தை முன் பின் அடுக்குவது, எதுவும் தெரியாது.அந்தக் கணமே அதற்குத் தெரியும், பறக்கவும் தெரியும். இது பட்டம் என்றால் ,  இடது மூளை அதன் வாலும் , கயிறும் . கீழே இழுக்கும், திசை பார்க்கும், சென்ற வழியறிந்து, வரும் வழி கணிக்கும். எங்கும் சமநிலை தானா ? கொஞ்சம் பட்டம் மேலே  பறந்தால் தான் என்ன?

இந்த சுகத்தில்உறும் பயனே, கடந்த வார ஓரிரு சிறு பயணங்கள்.

மீண்டும் இணையத்தில் தேடிப் பிறக்கி, ஓரிரு புத்தகங்களின் உதவியுடன் அருகிலிருக்கும் பழைய கோவில்களை தெரிந்து கொண்டேன். இது இருவர் பயணம், நான் மற்றும் பார்ட்னர் இன் கிரைம். இவருக்கு காலில் அடி பட்டிருக்கிறது. அடி என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். இன்னும் பழைய நடை வரவில்லை. அதற்குத்தான் இந்த மலையேற்றம். சிரிப்பும் , அடக்கிய அழுகையுமாய், அமர்ந்தும் , எழுந்தும்  உடன் வந்தார். மலை  ஏற்றமும் , இறக்கமும்  சேர்த்து ஒரு எட்டு கிலோ மீட்டர்.  'போகும் இடம் வெகு தூரம் இல்லை , நீ வாராய் ... நீ வாராய்...ஆஹா மாருதம் .. ' . நமக்கும் வழி தெரியாது , மேலே சொன்னது தான் பார்முலா.









கண் முன்னால் தெரியும் சம்பக ராயர், மலை அடிவாரத்தில் இருப்பவர். இவர் பின்னால் ஓங்கிய மலை. அதன் மேல் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். அதன் பின்னால், சுவர்ணமுகி என்று  சொல்லப்படும் இடத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய கற்கால கல்திட்டைகள் (dolmen), மற்றும் கற்கால வட்டப் புதிர் நிலை(labrynthe/maze ) ஒன்று. அதற்கும் அப்பால் ஒரு கல்யாணி எனப்படும் குளம். ஜனமேஜயன் சர்ப்ப தோஷம் நீங்க இங்கு குளித்ததாக தொன்மம். இது தான் சுருக்கமான பயணத்  திட்டம்.

இந்த சம்பக தாமா என்ற பெயர் தான் ஈர்த்தது. செண்பக மலர் சூடியவரின் ஆலயம். பன்னெர்கட்டா முன்பு செண்பக வனம் - சம்பக ஆரண்யா  என அழைக்கப் பட்டிருக்கலாம் என்கிறார்கள். அருகிலிருக்கும் இக்கோவிலின் பெயர் சம்பக தாமா, இறைவன் பெயர் சம்பக ராயா.

இது 1257-ல் ஹொய்சாளர்  காலத்தில் கட்டியதற்கான கல்வெட்டு சான்று கோவிலில் உள்ளது. இப்பகுதியை ஆண்ட பூர்வாதிராயா என்ற ஹொய்சாள மன்னரின் ஆளுகைக்கு கீழ் இருந்தவரால் கட்டப்பட்டது.  இவரே ஓசூரில் இருக்கும் சந்திர சூடேஸ்வரர் கோவிலையும் எழுப்பினார். எழுநிலை கோபுரம் விஜய நகர காலத்தைச் சார்ந்தது என்கிறார்கள். கோபுரத்தின் பிட்டியில் கோபுரத்தைத் தாங்கும் தோற்றத்துடன் உள்ள கதாயுதங்களை முதல் முறை பார்க்கிறேன். ஹொய்சாள கோவில்களுக்கே உரிய , உயரிய பீடம், படியேறியே கோபுரவாயிலை அடைய வேண்டும். கருவறை , அர்த்தமண்டபம் , வெளியே அதை ஒட்டிய இறங்கிய அந்தராளம். அதன் வெளியே நவரங்கம் என்று சொல்லப்படும் இரண்டாகப் பிரிக்கப்பட்ட மஹா மண்டபம். அர்ச்சகர் முன்னிலே வேஷ்டி மடிப்பே தெரியாமல்  ஒரு விதமாய் பஞ்சகச்சம் கட்டியிருந்தார். தோளில் குறுக்காய் விழுந்த வெள்ளை உத்தரீயம். கருங் கட்டையில் வெள்ளைத் துணி சுற்றியது போல் இருந்தார். ஒரு முறை கூட தட்டில் விழும் பணத்தைக் கண்ணால் பார்க்க வில்லை. பூமகள், திருமகள் இருபுறம் இருக்க , நின்ற நிலையில் தாமோதரன். கோவிலின் நுழையும் தெரு முனையில் மிகத்தள்ளி ஒரு கொடிமரம் இருக்கிறது. இதை ஒட்டி பின்புறம் கழுத்தை அறுத்து தானே பலிகொள்ளும் சிலைகள் இருக்கின்றன. இவை போன்றே டோமளுர் சொக்கநாத ஸ்வாமி கோவில் வெளியேயும் உள்ளன. இவை முக்கியமான அரசர்கள் இறப்பின் போது உடன் கழுத்து அறுத்து இறந்தவர்களின் உருவம் என்கிறார்கள்.

வெளியே அழகிய பெரிய எவர் சில்வர் தட்டில் அன்ன தானம் நடந்து கொண்டிருந்தது.  அன்ன சாம்பார் , கோவக்காய் அங்கங்கு வயதானவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கடைகளில் எவரும் கண்ணில் படவில்லை, டீ அடுப்பு அணைந்திருந்தது. கடைக்காரர் போன் பார்த்துக்கொண்டிருந்தார். 

கோயிலின் தென்புற வாயிலில் வெளியே வந்தால் மேலே மலைக்குப் பாதை இருக்கிறது. 200 படிகள் இருக்கலாம். அருகிலிருக்கும் கல்லூரி மாணவிகள் ஒரு சிறு கூட்டமாய் வந்திருந்தனர். வழியில் ஓரிரு இடத்தில் இருக்கைகள் இருந்தன. பாதி வெளியில் சுற்றிலும் பார்த்து இதுதான்  தக்காணப்  பீடபூமி என்று மற்றொரு முறை சொன்னேன். பெரும் கற்குவியல்கள் , இடையிடையே பூமி . உறைந்த கல் அலை என்று நினைத்துக் கொண்டேன். அப்போது அலையின் மீது நிற்பதாகத் தோன்றியது. 

மேலே லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். அர்ச்சகர் கோவிலை மூட பாத்திரங்களை கழுவிக் கவிழ்த்துக்கொண்டிருந்தார். இக்கோவிலைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை . சமீபத்திய கோவிலாய் இருக்க வேண்டும். தூய வெள்ளை அரிசிச் சோற்றை பலிபீடத்தில் துணிபோல் விரித்திருந்தார்.




இந்தக் குன்றின் பின்னால் இறங்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து சுவர்ணமுகி குன்றை அடையவேண்டும். இங்கு இப்போதெல்லாம் சூரியன் வெளியே தெரிவதில்லை. ஊரே ஒரு சாம்பல் நிறத்திலே ஆறு மணி போலேயே தான் இருந்து கொண்டிருக்கிறது. வழி நெடுகிலும் பாறைகளில் பெரிய அம்புக்குறியால் வழியிடப் பட்டிருந்தது. மிக முன்னால் சென்ற ஒரே ஒருவர் ஏனோ ஒரு பெரிய கம்பை கையில் எடுத்துக்கொண்டார். கண் எட்டும் முட்டும் மூவரைத் தவிர எவரும் இல்லை. ஒரு கீரி சென்றதைப் பார்த்ததாக  நீலா சொன்னாள் . உடனே  நான் கீழே பார்த்து இது யானைக் கழிவா என்று தீவிரமான முகத்துடன் கேட்டேன். இல்லை மாடு சென்றிருக்கிறது என்றார். அருகில் இலைகள் படபடக்கும் ஒலி ஒன்றே கேட்டது. மிக மேலேயிருந்து யூக்கலிப்டஸ் இலைகள் சீராய் அசையும் சத்தம். மூங்கில்கள் அவ்வப்போது முறுகும் ஒலி. கீழே உதிர்ந்தும் காய்ந்தும்  கிடக்கும்  சிறு நாவல் பழங்கள். 

ஒரு சிறு பள்ளத்தாக்கில் நடந்து இடதுபுறம் மேலே ஏறியதும் பார்த்தது மாபெரும் புதைவிடம் என்றே நினைத்தேன். ஒரு நான்கைந்து பெரிய  கற்களை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி ஒரு நடுகல் போன்ற அமைப்பு. அவ்விடம் முழுதும் அப்படிப்பட்ட அடுக்கிவைக்கப்ட்ட கற்களால் நிறைந்திருந்தது. இதற்க்கு முன்னர் ஒரு கல்திட்டை(dolmen)  இருந்தது. இது இறந்தவர்களுக்கான கற்கால நினைவுச் சின்னமாகும். இது உலகெங்கும் கண்டடையப் பெற்றுள்ளது.படுக்கவைக்கப் பட்ட ஒரு பெரிய கல்லைத்  தாங்கும் , மூன்று அல்லது நான்கு செங்குத்தான கற்கள். இவற்றின் காலத்தை 3000 வருடங்களுக்கு குறையாமல் மதிப்பிடுகிறார்கள். அகழ்வாராய்வில் இவற்றின்  கீழ் புதைக்கப்பட்ட மனித எலும்புகள் கிடைத்துள்ளன. கற்களின் அளவை வைத்து இறந்தவரின் முக்கியத்துவைத்தை மதிப்பிடலாம் எனச் சொல்கிறார்கள்.

இந்த இடத்தில் இருந்து சிறிது கீழிறங்கினால் , ஒரு வட்டப் புதிர்நிலை(labrynthe)  , அதன் நடுவே கற்களால் கூம்பாய்க் குவிந்த கோவில் போன்ற ஒரு அமைப்பு. இந்தப் புதிர்நிலையும் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளன. சிக்கலான ஒரு வழிப்பாதை வழியாக மையத்தை அடையும் அமைப்பு. பிறப்பு இறப்பை காட்டும் ஒரு குறியீடாகவோ, மனிதன் மையம் என்ற உருவகத்தை அடையவேண்டியதில் இருக்கும் சிக்கல்களின் குறிப்பாகவோ இதைச் சொல்கிறார்கள். இவைகளும் கற்காலம் முதல் , புதிய கற்காலம் வரை காலம் கணிக்கப்பட்டவை. 3000-ம் வருடங்களுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். இதன் அருகில் Hulimavu என்னும் குகைக் கோவிலையும் வரலாற்றுக்கு முந்தியது என்று சொல்கிறார்கள்.











இன்னும் பின் நடந்தால் ஸ்வர்ணமுகி கல்யாணி இருக்கிறது. செல்லும் வழியில் அழகான சோலைக்குள் ஒரு சிவன் கோவில். ஒருவரும் இல்லை. பித்தளை மணியை பூசாரி மறந்து வெளியே விட்டுவிட்டுச் சென்று விட்டார். ஒரு குரங்கு சிறு கொடியின் இலைகளைப்  பறித்து  தான் உண்டு , மடியில் இருந்த பிள்ளைக்கும் ஊட்டியது. சளி பிடித்தது நெஞ்சில் அதன்  போல் சத்தம் வருகிறது என்று சொன்னேன். குரங்குக்கு எல்லாம் சளி பிடிக்காது என்றாள். ஏன் என்றேன் உள்ளே, சரி என்றேன் வெளியே. எங்கள் இருவரைப் பார்த்ததும் , இரண்டு காதல் பறவைகள் ஓடி ஒளிந்தன.  

இந்த மொத்த இடமும் புகழ் பெற்ற ராபர்ட் பிராஸ்டின்  road not taken என்ற பாடலில் வரும் வரிகள் போலவே என நினைத்தேன்.

பன்னெர்கட்டா நுழையும் இடத்தில் பாதை இரண்டாய் பிளக்கிறது. பொதுவாய் எல்லோரும் வலதுபுறம் செல்வார்கள், ஜூ - உயிரியல் பூங்கா இங்குதான் இருக்கிறது. மேலே சொன்னதெற்கெல்லாம் இடது புறம் நுழைய வேண்டும் -  road less travelled. நமக்கே நுழைய இவ்வளவு நாள்  பிடித்திருக்கிறது.

இன்னும் மேலே தெரிந்த ஒரு குன்றை ஏறிப் பார்த்தேன். ஒற்றையடிப் பாதை போய்க்கொண்டிருந்தது. ஒரே ஒரு பெரியவர் மட்டும் சென்று கொண்டிருந்தார். இன்றைக்கு இவ்வளவே, மீண்டும் இறக்கம்.  


உதவிய இணைப்புகள் :

Seen & Unseen Bangalore - Vijay Bharadwaj 

https://www.jeyamohan.in/152107/

https://www.jeyamohan.in/152105/



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...