Skip to main content

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 1



மறுபடியும் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில மாதங்களில் திரும்பவும் வந்தபடியே  இருந்தது. வார இறுதி நாட்களில் கணினி திறப்பதை அறவே நிறுத்திப் பார்த்தேன். குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வருவது தெரிந்து , செயலியை திறப்பதையே குறைத்தேன். இருந்தும் எல்லாம் இருபுறமும் குமுறி நெருங்கியபடியே வருவது தெரிந்தது. மேலே கேட்டால் சொல்வதற்காக, என் பக்கத்தை கோர்வையாக சில பக்கங்கள் கோர்வையாக எழுதி வைத்தேன். அவருடன் வரப்போகும் மீட்டிங்குகளுக்கு என இரவெல்லாம் கத்தியை கூர்  தீட்டியவாறு முழித்து இருந்திருக்கிறேன். கூடே வேலை பார்ப்பவர்களை என் முனைக்கு தயார் செய்ய நெருக்கடியில் செலுத்தியிருக்கிறேன். அன்று அப்படி சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கூர்தீட்டிய முனையுடன், அவருடன் பேச தயார் செய்து சைக்கிளை மிதித்து மேலும் யோசித்தபடி சென்று கொண்டிருந்தேன். வேறு எங்காவது படகில் ஓட்டை இருக்க்கிறதா, அவரது எல்லா நகர்த்தலுக்கும் நம்மிடம் பதில் உள்ளதா , சொல்லியே ஆக வேண்டிய குறிப்பிட்ட பஞ்ச் வாக்கியங்கள் ...இவையெல்லாம்.

ஆபீஸ் கண்ணில் தெரியும் அந்த சிக்னலுக்கு முன்னால் இடது ஓரத்தில் இருந்தால் , லெப்ட்டில் அலுவலகத்தில் நிறுத்தாமல் நுழையலாம். முந்தய சிக்னலுக்கும் இதற்கும் தூரம் குறைவாதலால் , ஒரு கேப் கிடைக்கும் எப்போதும் , வலது பக்கம் இருந்து , இடது மூலைக்கு வந்து விடலாம். வண்டிகள் சத்தம் காதில் விழாததால் , வண்டியை ஏற்கனவே திருப்பி விட்டேன். அப்போது தான் ஒரு கருப்பு  OLA எலக்ட்ரிக் பஉச்சகட்ட வேகத்தில் வருவது தெரிந்தது. வில்லில் இருந்து அம்பு வெளியேறி விட்டது. அவரும் , நானும்,  இரு வண்டிகளும் மட்டுமே சாலையில். ஏனோ ஆஸ்பத்திரி ஞாபகம் வந்து சென்றது. நானும் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர் பிரேக் போட்டு நிறுத்தும் தொலைவில் இல்லை. சைக்கிளை  உள்ளே புகுந்து ஸ்கூட்டர்  வெளியே வந்துவிடும் என நினைத்தேன். அவரை என்னால் பார்க்க முடியவில்லை, நான் இன்னும் இடது பக்கம் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன். இது சாதாரண அடியாக இருக்காது என்று நினைத்தேன். எப்போதும் நடை பழகும் சிறு குழந்தைகள் நாம் கண்டிப்பாக கீழே என்ற இடத்தில் அவர்கள் விழுவதே இல்லை.  படியோ , கல்லோ எங்கும் கடவுளே இருந்து  அவர்களை காக்கிறார். ஒரு பிளாஸ்டிக் பாகம் கழன்று விழுந்து , பிளாட்பார்மில் அடித்துத்  தெறித்துப்  பல துண்டுகளாய்  மீண்டும் சாலைக்குள் வந்தது. என் இடது  காலுக்கும், பெடலுக்கும் இருந்த ஒரே ஒரு அங்குல இடை வெளியில் ஸ்கூட்டர் இடித்து சிறிதாக திசை மாறியது. ஒரு சில அடிகள் முன்னால் சென்று அவர் வண்டியை நிறுத்தினார். என் சைக்கிளும் சென்று கொண்டுதான் இருந்தது. கீழே  விழுகாமல், ஏதுமே ஆகாமல் இருந்தது எனக்கு நம்ப முடியவில்லை. பெயர் ஜாவித் என்று சொன்னார். புத்தம் புது வண்டி, ரிப்பேர் செய்து கொள்ளச் சொன்னேன். பாதி செலவாக பகிர ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

மீண்டும் சில நிமிடங்களில் இருக்கும் மீட்டிங் ஞாபகம் வந்தது. அடிபட்டு மருத்துவ மனையில் இருந்திருந்தால், தலை காலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் ? கடந்த இரண்டு நாள் அலட்டல்களுக்கு ஏதேனும்  அர்த்தம் இருக்கிறதா  ?  ஏன் இப்படி ஓர் சிலர் நம்மை தீவிரமாக பாதிக்க வேண்டும் ? வெற்றிடத்தில் காற்றுப்போல் ஏன் எங்கும் பரவ வேண்டும்? செய்யும் வேலையில் ஏன் இவ்வளவு அனல் காற்று அடிக்க வேண்டும் ? எதைக் கண்டு இந்த பயம்? இல்லை எந்த எதிர் பார்ப்பு இவ்வாறு நம்மை வெளியில் தள்ளுகிறது?  இதையெல்லாம் எளிதாக ஒரு விளையாட்டுப் போல் செய்ய முடியாதா?

இதையெல்லாம் கடந்து மேலே ஏறி அலுவலகம் சென்றேன். ஒரு வாரமாய் தீவிரமாய் எதிர்பார்த்து வந்த மீட்டிங் கான்செல் செய்யப்பட்டிருந்தது. சோர்வாய் உணர்ந்தேன் , இப்படி ஆகியிருக்கும் என்றால் , கடந்த சில நாட்களின் குமையல் என்னை வெட்கம் கொள்ள வைத்தது.எப்போதும் வேலை என்றாலே எனக்கு தீவிரம் என்றே பொருள். சமரசம் பெரும்பாலும் அரிது. அதனால் எப்போதும் உரசல்கள் இருந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன. இப்பொழுது வயதாக ஆக குறைந்திருக்கிறது. அன்று ஒரு ஒளிப்படம் கண்டேன். மலைப்பாம்பு நாகத்தை வாயினுள் வைத்திருந்தது. ஆனால் நாகத்தின் பற்கள் , மலைப் பாம்பின் உடலைக் கவ்வி இருந்தது. இரண்டும் பிணைந்து உறைந்து போய் செயலில்லாமல் இருந்தன. அப்படித்தான் ஒரு சிலரின் அகங்காரம் நமக்கும் ஆகி விடுகிறது. யார் கவ்வியதை விடுவது ?

இதை ஒரு கீதைத் தருணம் என்று சொல்லமுடியுமா தெரியவில்லை. இந்திய  சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் வெடித்த இந்து முஸ்லிம் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர நவகாளி யாத்திரையை மேற்கொண்டார்.  பல்லாயிரக் கணக்கில் மக்கள் தானே சண்டையிட்டு செத்து மடிந்து கொண்டிருந்தனர். பெண்கள் கடத்தப்பட்டனர். பிரிட்டிஷ் ராணுவம் பொறுப்பை இந்திய ராணுவத்தின் கையில் ஒப்படைத்து வெளியேற தயாராகிக் கொண்டிருந்தது. எங்கும் அழிவு, வன்முறை ,கொலைகள் . இந்த நிலையிலே தனி ஒருவராக , வெறும் காலில் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். அன்று தங்க வேண்டிய கைவிடப்பட்ட அந்த வீட்டில், முட்களும் , மலமும் வேண்டுமென்றே போடப் பட்டிருந்தன. தானே மலத்தையும் , முள்ளையும் சுத்தம் செய்தார். இதற்குத்தானா சுதந்திரம் என்று இழிசொல் பேசினார்கள். பிரிட்டிஷார் வெளியேறியதும் இந்தியா சண்டையிட்டுச் சிதறும் என்று சொன்னார்கள்.  அனைத்திற்கும் அவரே காரணம் என்று பழி சொன்னார்கள். இதையெல்லாம் கண்டு சோர்வுற்ற நிலையில் , ' இது தான் எனது சுயதர்மம். எவரும் இல்லாவிட்டாலும் அதையே செய்வேன்' என்று சொன்னார். வாழ்வில் எங்குமே ஒளியே இல்லாமல், இருள் மட்டுமே இருப்பதாய் உணரும் போது கீதை வரிகளையே நாடி சிரிப்பை மீட்டதாக எழுதியிருக்கிறார். ராணுவத்தால் முடியாத அமைதியை தனி ஒருவராய் நவகாளியில் ஏற்படுத்தினார். "I confess to you that, when doubts haunt me, when disappointments stare me in the face, and when I see not one ray of light on the horizon, I run to the Bhagavad Gita and find a verse to comfort me, and I immediately begin to smile in the midst of overwhelming sorrow."  

இந்த மன நிலையில் தான், ஆனால் தற்செயலாக , இமைக்கணம் வழியே கீதையை படிக்க ஆரம்பித்திருந்தேன். இதைப் புரிந்து கொள்ள சித்பவானந்தர் உரையை அருகில் வைத்து , எந்த யோகம் எங்கு வருகிறது என்று குறிப்பெடுத்தேன். பின்னர் நித்ய சைதன்ய யதியின் கீதை வகுப்புகளை காணொளியில் குறிப்பெடுத்துப் படித்தேன். 20 மணி நேர வகுப்புகள் 9-அத்தியாயங்கள்  , இன்னும் 15 மணி மீதம் உள்ளது.அவரது ஆங்கில உரையை புத்தக வடிவில் வாங்கினேன். பின்னர் ஜெயமோகனின் கீதைப் பேருரை , ஐந்து மணி நேர உரை இது. பழைய காந்தி உரைக்கும் , பாரதியார் உரைக்கும் இன்னும் நேரம் வரவில்லை.

இவரது கீதை வகுப்புகளை ஒரு முதல் தர ஆவணப்படம்  போல் உணர்ந்தேன். நாற்பது ஐம்பது வருடங்கள் முன் ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். மாணவர்களை பார்த்துப் பேசுகிறார். எதிரே அமர்ந்து ஆன்ட்ரு அவர் சொல்வதை அழகிய ஓவியமாய் வரைந்தபடி இருந்தார். படங்களை வைத்து கீதை வரிகளை விளக்கினார். மிக சன்னமான குரல், சொல்லும்போது அடிக்கடி இரு கண்களையும் மூடிக் கொள்வார் , கைகள் மட்டும் அசையும். இவர் காந்தியை முதலில் சந்திக்கும் போது, அவர் அதிகாலை ஆசிரமத்தில் கீதை படித்ததை நினைவு கூர்ந்தார். மீண்டும் மீண்டும் காந்தி , ரமணர், நடராஜ குரு, கார்ல் ஜுங் , சங்கரர் பெயர்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒட்டியே பேசினார். பலநாள் உணவின்றி ஒரு கோப்பை தேநீருக்கு ஏங்கி கடை முன் கேட்க மனமின்றி நின்றிருந்ததை சொன்னார். ரோட்டைக் கடக்க முயன்று முடியாமல் மயங்கி, யாரோ ஒருவர் ஊற்றிய கஞ்சியின் முதல் மடக்கு உடலுள் , வயிறெல்லாம் தீ போல் கனன்று உள்ளிறங்கியதை  நினைவு கூர்ந்தார், பசி நம்முள் இருக்கும் வைஸ்வாநரன், ஒரு துண்டு சூரியன்  என்று சொல்லி முடித்தார். 

கீதை - ஒரு புறவய வரலாறு

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...