தமிழில் கீதையைப் பாடலாக மொழி பெயர்த்தவர் ஆயன் பட்டனார் என்பவர் கிபி 12-ம் நூற்றாண்டில் என்கிறார்கள். இது இப்போது கூகிளிலும் சிக்கவில்லை. ஒரு விக்கிபீடியா பக்கம் இவர் பெயரில் இருக்கிறது அவ்வளவே. அடுத்த தமிழ் மொழிபெயர்ப்புக்கு பாரதியார் பிறந்தாக வேண்டும். இவர் பாண்டிச்சேரியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தலைமறைவாய் இருந்தபொழுது, அரவிந்தர் போன்றோரின் உந்துதலால் எழுதியிருக்க வேண்டும். 1912-ல் எழுதி முடித்திருக்கிறார். இரண்டுக்கும் இடையில் 700 வருடங்கள் இருக்கின்றன.
1885-ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்தபோது , சார்லஸ் வில்கின்ஸ் என்பவரை கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பணிக்கிறார். இதுவே முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதையே காந்தி லண்டனில் பாரிஸ்டர் பயிலும் போது படிக்க நேர்கிறது. இதுவே அவருக்கு கீதையின் நேரடி அறிமுகம், 1890 வாக்கில் , இது ஆங்கிலம் வழியே என்பதை கவனிக்க வேண்டும். (இந்த கீதை என்கவுண்டர் நடக்கும் போது காந்திக்கு 20 வயது, பாரதிக்கு 30, மொழி பெயர்த்து முடித்து விட்டார்). இதன் பின்னர் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த ஆங்கிலப் பதிப்புக்களின் வழியே இந்திய மறுமலர்ச்சி காலத்தில் கீதை மீண்டும் பெரும்பாலான இந்தியர்களால் வாசிக்கப்படுகிறது. மறுமலர்ச்சி காலத்திலேயே கீதை பைபிளைப் போன்ற ஒரு அச்சில் வார்க்கப்பட்டது. இதற்க்கு முன் நான்கு வேதங்கள், ஆறு மதங்கள் , ஆறு தரிசனங்கள் மற்றும் பிரஸ்தானாதிராயங்களின் ஒரு பகுதியாகவே கீதை மரபில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பிரஸ்தானாதிராயங்கள் என்பவை மூன்று. அவை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை. இதுவே கறாரான வரிசை. யோக மீமாம்சம், உத்தர மீமாம்சம் வரிசையில் கீதை கற்பிக்கப்பட்டது.
இந்திய மறுமலர்ச்சிக் காலத்தில் கீதையை பைபிள் போன்ற ஒரு மூல நூல் சட்டத்தில் வார்க்க முயன்றதில் வரும் சிக்கல்கள் பற்றி பல ஞானிகள் விரிவாக எழுதியுள்ளனர். சித்பவானந்தர் முன்னுரையில் பல பக்கங்கள் அவர் இந்தக் கேள்விகளை எழுப்பி பதில் சொல்கிறார்.சிலவற்றை இங்கு சொல்ல வேண்டும். இது இந்துமத மூலநூல் இல்லை. கொலை நூல் இல்லை. கிருஷ்ணன் ஒரே கடவுள் இல்லை.
இந்த இடத்திலேயே கீதை மறை நூல் என்னும் இடத்தில் இருந்து , எல்லோரும் படிக்கக் கூடிய பொது நூல் என்னும் வெளிக்கு வருகிறது. இதற்க்கு முன் இந்திய மெய்யியலில் ஒரு மறைநூலாகவே எப்போதும் இருந்திருக்கிறது. சங்கரர் , மத்துவர் , ராமானுஜர் எழுதிய கீதை உரைகளின் காலம் முக்கியமானது. ஒரு யுக சந்தியின் தேவையின் போது , கீதை மீண்டும் முளைத்து எழுந்துள்ளது. சங்கரர் பௌத்தத்திற்கு எதிரான வாதமாக கீதையைக் கையாண்டார். ராமானுஜர் வைதீகம் கண்மூடித்தனமாக வேள்வியை முன் வைத்தபோது கீதையை கையில் எடுத்தார். கண்ணனும் ஒரு யுகசந்தியே. போரின் நடுவில் நிற்கும் அந்தத் தேர் இரண்டு யுகங்களின் நடுவில் நிற்பதையே குறிக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் மேல் நிற்கும் க்ஷத்திரிய அரசர்களும், மறுபுறம் அதே அதிகாரத்தை எட்ட முனையும் மேய்ச்சல் குடி மக்களின் பிரதிநிதியாகவே கண்ணன் நிற்கிறான்,.
வெண்முரசின் நீலம் நாவல் கண்ணனைப் பற்றியது. மதுராபுரியின் அரசன் கம்சனின் கட்டளைக்கேற்ப அங்கிரஸ் என்னும் மாபெரும் வேள்வி ஏற்பாடாகிறது. ஆனால் கீழே காட்டில் கண்ணனின் குழலோசை கேட்டு மாடுகள் மாறி மாறி ஓங்காரம் இடுகின்றன. அதைக் கேட்டு பறவைகள் குரலிடுகின்றன. தலைமை வைதீகர் ஓசையை நிறுத்தி ஆயர்களை அப்பால் போகச் செல்ல ஆள் அனுப்புகிறார்.
“யாரங்கே? அந்த ஆநிரை மேய்க்கும் அறியாச்சிறுவனிடம் அப்பால் விலகிச் செல்ல ஆணையிடுங்கள். தேவர்கள் வானெழுந்து செவிகூரும் வேதம் இது என்று சொல்லி அவனை துரத்திவாருங்கள்” என்றார்.
மலைச்சாரல் சென்று மீண்டுவந்த இளவைதிகன் “எந்தையே, அங்குள்ளோன் ஓர் ஆயன். கன்னங்கரியோன். கல்வியறிந்தோன். தேவர்களெல்லாம் அங்கே ஆநிரை குரல்கேட்க வந்திருப்பதாகச் சொன்னான். ஆநிரைவேதம் அனைத்திலும் தூயதென்று சொல்லும்படி என்னை ஏவினான்” என்றான். ...
வேள்வித்தலைவர் அவன் பசுக்கள் அழிய தீச்சான்றாக பழிச்சொல் இடுகிறார்.
ஆனால் ஹோமம் இன்னும் தீ பற்றவில்லை. இப்போது தன் தோழர்களை எப்போது அவிசு முடியும், அப்போது உணவு கிடைக்கும் என்று சொல்லி சாப்பிட அனுப்புகிறான்.
“இழிபிறப்பாளர் இங்கு எவ்வண்ணம் நுழைந்தார்? மன்னன் கோல் அகன்றதோ? கோட்டை கொடிதாழ்ந்ததோ? வேதச் சொல் வலுவிழந்ததோ?” என்று கூச்சலிட்டனர்.
கண் திகைத்து கால் தளர பின்னகர்ந்து “கண்ணன் சொல் கேட்டு வந்தோம்” என்றான் அம்சன். “ஆநிரைகள் மேய்த்தும் வானிழியும் ஒளியறிந்தும் கைக்குழலில் இசைசேர்த்தும் கானகத்தின் எழில்கண்டும் வாழ்பவர் நாம், வேதப்பொருளுண்ணும் தேவர்களும் நாமும் நிகரே என்றான். அதை நம்பி இங்கு வந்தோம். பிழையெல்லாம் பொறுத்தருள்க!” என்று கைகூப்பி ஸ்ரீதமன் பின்னகர்ந்தான். ஓடுகையில் சுபலன் “ஆயர் உண்ணும் உணவெல்லாம் அனலுண்ணும் அவியாகும் என்றால் இங்குள்ள வேதமறிந்தோர் பொருளறிவார் என்றான்.
ஜெயகாந்தன் எழுதிய யுகசந்தி என்ற ஒரு சிறுகதை நினைவில் வருகிறது. பதினைந்து வயதில் விதவையாகிவிடும் ஒரு பிரமாணப் பாட்டி பஸ்சில் இறங்கி வீட்டுக்கு நடக்கும் இடத்தில் கதை தொடங்கும். வழியில் தனக்கு மாதா மாதம் தலை மழிக்கும் நாவிதனை நலம் விசாரித்து , புதிதாய் பிறந்த பையனை படிக்க வை, காலம் மாறிப் போச்சு என்று சொல்வார். இவர் போய் வந்த ஊர் நெய்வேலி, இளம் விதவைப் பேத்தி வேலை பார்க்கும் ஊர். இவரே பையனிடம் பேசி வேலைக்கு அனுப்புகிறார். தன்னைப் போல் தலை மழிக்க மறுக்கிறார். கடைசியில் அவரே வீட்டில் எல்லோரும் மறுமணத்திற்கு எதிர்ப்பு சொல்லும்போது, தான் வீட்டை விட்டு வெளியேறி பேத்தியிடமே செல்கிறார்.
"அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....
வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?"
ஒரு யுகசந்தி இவ்வாறே , அன்றளவு இருக்கும் கோட்பாடுகளை , தத்துவங்களை மறுவரையறை செய்வார்.
சொல்வளர்காடு பாண்டவர்கள் நாட்டை இழந்து காடுகளில் மறைந்து வாழ்வதைச் சித்தரிக்கும் கதை. இது வேத மெய்ப்பொருள் சொல்லித்தரப்படும் உபநிடதக் காடுகள் வழியே பாண்டவர்கள் கற்கும் வண்ணம் அமைந்துள்ளது. கௌஷீதகம் , சௌனகம், துவைதம், ஐதரேயம், தைத்திரியம், ப்ருஹதாரண்யகம், சாந்திபனி என்ற ஒவ்வொரு காட்டிலும் உள்ள குருநிலையில் ஒரு வகையான மெய்யறிவு சொல்லப்படுகிறது.
கௌஷீதகம் அதர்வ வேதக்காடு. " விண்ணிலிருந்து இங்கு வந்தது சொல்லே. மண்ணில் உருவானதே பொருள்.அறியும் தோறும் வளர்வதால் அது மாறக்கூடியது. அறியப்பட வேண்டியதால் சொல் மாறுவதில்லை'. சொல் என்ற இடத்தில் வேதம் என்று போட்டுப் பார்க்கலாம். 'மணற் பருவால் மண் அறிவென்றாகிறது. பிற அனைத்தும் சொல் மாறுபாடுகளே. மண்ணே மெய்...ஒரு துளிப் பொன்னால் அணிகள் அனைத்தும் அறியப்படுகின்றன'.
சௌனகம் ரிக் வேதக் காடே ஆகும். இதன் பின் வரும் துவைதம் வேத மறுப்புக் குருநிலை. சார்வாகர் , பிரகஸ்பதி என்று வைசேஷிகம் வரை தொடரும் மரபு. காரண காரிய வலை, இப்புடவி ஒரு முடிவில்லா நிகழ்வு. தன்னைத் தானே பின்னி விரிந்துகொண்டே செல்வது பற்றி சொல்கிறது.
ஐத்ரேய குருநிலை, கிருஷ்ணர் இங்கே தான் கல்வி பயில்கிறார். கருத்து ஒவ்வாமல் ஆசிரியரை எதிர்த்து வெளியேறுகிறார்.
"ஆறுமாதகாலம் அவன் எங்களுடன் இருந்தான். இங்குளோர் ஓராண்டில் கற்பதை அவன் ஒருவாரத்தில் கற்றான். பிறிதெவரிடமும் ஒரு சொல்லும் அவன் பரிமாறிக்கொண்டதில்லை. வேதமெய் பேசிய அவைகளில் அன்றி அவனை எங்கும் பார்த்ததுமில்லை. அவன் இங்கே ஆபுரப்போனாக தன்னை அமைத்துக்கொண்டான். பசுக்களும் கன்றுகளும் அவனைக் கண்டதுமே அறிந்துகொண்டன. சொல்லாமலேயே அவன் விழைந்ததை செய்தன. பகலெல்லாம் அவற்றை காட்டில் மேயவிட்டு மரத்தடியில் அமர்ந்து விழிசொக்கி குழலிசைத்துக்கொண்டிருந்தான். குழல்கேட்கும் தொலைவில் செவிகூர்ந்தபடி அவை மேய்ந்தன. குழல்நின்றதும் வந்து அவனருகே கூடின. அவன் நடந்து மீள்கையில் அந்திக்கருக்கலில் விழிகள் மின்ன உடன் வந்தன.
ஐதரேயமெய்மை அனைத்தையும் அவன் கற்றுத் தேர்ந்தான். பன்னிரண்டாவது ஆரண்யகம் நிறைவுற்று ஆசிரியர் ஆற்றிய உரைக்குப்பின் அவன் எழுந்து உரத்த குரலில் கேட்டான் “ஆசிரியரே, அரசனுக்கு மண்ணில் இறைவனுக்குரிய இடத்தை அளிப்பது எது?” அவன் அதை கேட்பான் என்று நான் முன்னரே உணர்ந்திருந்தேன். மதுராவில் கம்சனின் குழவிக்கொலையையும் தாய்மாமன் நெஞ்சுபிளந்து குருதி அணிந்த மருகனின் மறத்தையும் அறியாதவர் எவரும் அங்கிருக்கவில்லை. “இளையோனே, ஒலிகளில் முதன்மையானது அ என்பதுபோல் உலகியலில் அமைந்த மானுடரில் அரசன். விண்ணுக்கு இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே அரசுக்கு அவன். அதை வகுத்தளிப்பது வேதம். வேதகாவலனை வேதமே காக்கும்” என்றார்.
“அவ்வண்ணமென்றால் என் நகரில் சொல்திருந்தும் முன்னரே வாள்போழ்ந்து வீசப்பட்ட குழவியருக்கு வேதம் பொறுப்பேற்கிறதா? அங்கே விழுந்த அன்னையரின் விழிநீருக்கு வேதமே அடிப்படையா?” என்றான். அவன் உடல் அவைநடுவே நின்று பதறுவதைக் கண்டேன். ஆசிரியர் வாயெடுப்பதற்குள் அவன் கைநீட்டி கூவினான் “ஆம், அதுவே உண்மை. மண்புரக்கும் நெறிகளை அமைத்தது வேதம். மானுடரில் இந்திரர்களை உருவாக்கியது. இன்று பாரதமெங்கும் குருதிப்பழி சுமந்து நின்றிருக்கிறது.”
“மைந்தரைக் கொன்றவனின் அவைநின்று வேதமோத அந்தணருக்கு தயக்கமிருக்கவில்லை. முனிவரே, அவர்களின் கையிலிருந்த கங்கைநீரே அங்கு தந்தையரின் வாள்களை கட்டுண்டு நிற்கச்செய்தது. அன்னையரின் தீச்சொல் எழுந்து அந்நகர் எரிபடாமல் காத்தது. அனைத்து மறத்துக்கும் வேதமே துணை என்றால் அவ்வேதத்தை மிதித்து மேலேறிச்சென்று அறத்தை அடையவேண்டிய காலம் வந்தணைந்துள்ளது” என்று அவன் சொன்னான்
“வேதத்தின் ஒவ்வொரு ஒலியும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காற்றில் உருத்திரண்டன என்கின்றன பிராமணங்கள். ஒலிகள் கூடிச் சொல்லானது மேலும் ஆயிரமாயிரம் வருடங்களில். அச்சொற்களில் பொருள்சென்றுகூடியது மேலும் பல்லாயிரம் ஆண்டுகளில். இளையோனே, ஒரு சந்தம் உருவாகி வர மானுடம் எத்தனை தவம் செய்திருக்கவேண்டும் என்று அறிவாயா? ஒரு சடங்கு வகுக்கப்பட எத்தனை போர்கள் நிகழ்ந்திருக்குமென உணர்ந்திருக்கிறாயா? ஒரு நெறியை நாம் அனைவரும் ஏற்க எத்தனை விழிநீர் சிந்தப்பட்டிருக்கவேண்டும் என எண்ணிப்பார்! மெல்ல நெகிழ்ந்து வழிவிட்டது மண்ணைப் போர்த்தியிருந்த ஆசுரம். வேதமுளை ஈரிலை விட்டெழுந்தது.”
“ஆசிரியரே, ஒங்கி உயர்ந்த கோபுரத்தை அடியில் இருந்து இடிப்பவன் தானுமழிவான் என நானும் அறிவேன். ஆனால் அதை இடிப்பவன் அதை நன்கறிந்த சிற்பி என்றால் அது அவன் கையில் களிப்பாவை. இடிப்பது அதன் கற்களைக் கொண்டு பிறிதொன்றைக் கட்டி எழுப்ப. இங்கு எழுக புதியவேதம்! மேலும் மானுடர் அறிவது. மேலும் அழகியது. மேலும் தெய்வங்கள் குடிகொள்வது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றான். பின்பு அந்த அவையிலிருந்தே இறங்கி வெளியே சென்று இருளுக்குள் மறைந்தான். அவன் ஆசிரியரின் நற்சொல் பெறவில்லை. விடைகொள்ளவுமில்லை.
சாந்திபனியில் கிருஷ்ணனின் கல்வி தொடர்கிறது. அங்கிருந்தும் கற்று மறுத்து வெளியேறுகிறான்.
“இப்புடவியின் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன” என்றார் சாந்தீபனி முனிவர். “இங்குள்ள ஒரு சிறுபுழு அழியும் என்றால் அதை உண்ணும் ஒரு பறவை அழியும். அப்பறவையை நம்பியிருக்கும் ஒரு விலங்கு அழியும்… கோடானுகோடி உயிர்கள் ஒன்றுடன் ஒன்று முழுமையாக தொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உப்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. உப்புகளுடன் உயிர்கள் பின்னப்பட்டுள்ளன. அரசே, ஒன்றை ஒன்று சார்ந்தே இங்குள்ள அனைத்தும் செயல்படுகின்றன. தனித்திருக்கும் பெரும்பாறைகூட மழையிலும் வெயிலிலும் கரைந்து தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறது.”
அவ்வாறென்றால் மெய்மை மட்டும் எப்படி தனித்தமைய முடியும்? இங்குள்ள எந்த மெய்யறிதலும் பொய் அல்ல. பயனற்றதும் அல்ல. அது எதனுடன் இணையவேண்டியது என்பது மட்டுமே நாம் அறியவேண்டிய வினா. ஒவ்வொரு உண்மையும் தனக்கு இணையும் எதிரும் ஆன பிற பல்லாயிரம் உண்மைகளுடன் இணைந்தே பொருள்கொள்கிறது. உயிர்களைப்போல உப்புகளைப்போல உண்மைகளும் பெருநடனமொன்றின் சிறுதுளியசைவுகள் மட்டுமே. அதையே லீலை என்கிறார் எங்கள் முதலாசிரியர்.
பிருஹதாரண்யக மரபை நோக்குங்கள். நேதி நேதி என மறுத்துமறுத்துச் சென்று எஞ்சுவதே இறுதியுண்மை என்று அது எண்ணுகிறது. அது மறுத்துச் சென்ற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து ஒற்றைப் பேருருவாக அவர்களை சூழ்கின்றன. பின்னர் அவர்கள் நிகழ்த்துவது அந்த இறுதியுண்மையை படைக்கலமாகக் கொண்டு முடிவிலியுடன் ஒரு போர். பொருளில்லாத பெருநடனமே அதுவும். அரசே, இங்குள்ள அனைத்தும் பொருளின்மையின் பேரழகு கொண்டவை. கோடானுகோடி இணைவுகளும் பிரிவுகளும் விரிவுகளும் ஒடுங்கல்களுமாக நிகழும் இந்த விளையாட்டை உணர்ந்துகொண்டவன் விடுதலை கொள்கிறான்."
கீதை மீண்டும் முளைப்பதற்கான விதைகள் இது போன்ற இடத்திலேயே இருக்கின்றன.
Comments
Post a Comment