கார்காலப் படலம்
கொஞ்சம் பழைய வீடாய் இருந்தால் பாத்ரூம் கதவை கொஞ்சம் ஓங்கி மூடினால், வெளிக்கதவு தானாக திறப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் வண்டி நிற்கும் முன், அதைவிட முன்னே வரும் ஒரு வலுத்த குளிர் காற்றைப்போல. ரியர் என்ஜின் வோல்வோ வண்டிகளில் டிரைவர் பிரேக்கை அழுத்தியதும் , நங்கூரம் பாச்சிய கப்பல் போல, முழுதும் முன்னாலே போய் , பின் அந்தக்கணமே பின்னால் வந்து , கீழே உள்ள தூசியெல்லாம் எல்லாம் சுழற்றி நம் மேல் அடிப்பதைப் போல. இதேபோலத்தான் வங்கமோ , அரேபியாவோ, இல்லை இரண்டும் சேர்ந்து இந்தியப் மகா சமுத்திரத்தில் வந்தாலும் அந்தப் புயல், காற்றழுத்தம் , பெங்களூரில் தெரியாமல் போகாது. மூன்று நாள் முடிந்து இன்று நாலாவது, வெய்யில் இன்னும் இல்லை.
மழையை விட மழை என்னும் குரல்கள் எங்கும் அடை மழையாய்ப் பொழிகின்றன. ரோடு ,தெரு, வீடுகள், எல்லாம் வார்த்தைகளாய்ப் புகுந்து , நிழலாய் கூடவே இருக்கின்றன. எல்லா செயல்களும் , திரை விலக்கி ஒரு வெளிச்சத்தில் பார்ப்பது போல, மழை மேல் உரசிப் பார்க்கப்படுகின்றன. ஒரு கரகரப்பான குரல் , எங்கோ ஒரு சிறு இருமல், குளிரான தொடுகைகள், ஆறிப்போன காப்பி , இட்லி, தோசைகள் , மூடாத கதவுகள் போன்ற எல்லாம்.
ராமன் முடி துறந்து காட்டிற்குள் செல்லும் போது கம்பர் சொல்வது இது.
ராமன் செல்லும் தேர் மக்கள் வெள்ளத்தாலும் , அவர்கள் கண்ணீராலும் பெருகியோடிய வெள்ளத்தில் , மீன் போல மெதுவாக நீந்திச் சென்றது. ஏழு உலகமும் ஒன்றாகிப்போன பிரளயத்தில் காக்க வந்த மச்சாவதார மீனைப் போல் என்று சொல்கிறார். இந்த எங்கோ தேள்கொட்டி , இங்கு நெறிகட்டும் மழையில் , பள்ளி , கல்லூரிகள் விடுமுறை. வேலைக்கு யாரும் வெளியே போவதில்லை. விவசாயிக்கு அடுத்து 'அப்பா , நமக்கு அடுத்து எப்ப மழை வரும்' என்று என் பையன் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இங்கு மக்கள் மழையைப் பார்த்து விடும் கண்ணீர் ஊரெல்லாம் பெருகி ஓடி , மழையும் அல்லவா குழம்பி நிற்கிறது. தான் ஒன்றும் காரணம் இல்லை என்றல்லவா மழை சொல்கிறது. 'நானும் ரவுடி தான் , கைது பண்ணிக் கூட்டுப்போ ' என்று இங்கிருந்து மறியல் குரல்கள் எழும்போது, வருண பகவான் 'வேற இடத்துல இப்ப வேலை கிடக்கு ' என்றல்லவா சொல்லி வேனை விலக்கி நிறுத்தாமல் போகிறார்.
கம்பர் கார்முகில் படலம் என்று ஒரு முழுப் படலம் மழை வர்ணனைக்கு எழுதியிருக்கிறார். இங்கேயும் மனைவியைத் தொலைத்து , தன் தம்பியுடன் தனித்து விடப்பட்டு , வாலியை வென்று, சுக்ரீவனுக்கு பட்டம் சூட்டி, அவர் எப்ப வருவாரோ என்று எதிர்பார்த்துக் காத்து இருக்கும் இடத்தில் வருகிறது. சீதையைப் பிரிந்த துயரத்தை கார்காலத்தின் மேல் ஏற்றிப் பார்க்கும் படியும், லக்குவன் அவரை ஆற்றுப்படுத்துவதாகவும் வருகிறது.
"நஞ்சின் விடம், குளிர்ந்த பெருங்கடல், அவிழ்ந்த கூந்தல், ராச்சத உடலும், அவர் தீச்செயலும் தீய மனமும் போல் இருந்தது மேகம்.
மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள் கரிய போர் யானையின் வாளால் வெட்டப்பட்ட புண்கள் போல் இருந்தன. மேகங்கள் வரிசையாய் நின்ற யானைகள் போல் , அவற்றின் குமுறல் இடி போலவும் இருந்தது. எட்டுத் திசைகள் கூடிச் சிரிப்பது போல் இருந்தது வெட்டிய மின்னல்.
திசையென்ற கருமான் துருத்தி பிடித்து உலையில் தீ சேர்ப்பதாக இருந்தது மின்னல்.
மன்மதன் அம்புகள் என மழை பொழிந்தது. 'வில் இடைச்சரம் என விசையின் வீழ்ந்தன.' இராவணன் விண் வழியாகச் சீதையைக் கவர்ந்து சென்றபோது சீதைவிடுத்த கண்ணீர்போல மழை பெய்தது.
மயில்கள் ஆடின; குயில்கள் கூவாது அடங்கின."
இதற்க்கு மேல் ராமன் பிரிவாற்றாமையை பூக்களுக்கும் , மயிலுக்கு, குயிலுக்கும் , மானுக்கும் ஏற்றிப் பார்க்கிறார். ஆக இதுவும் ஒரு சோகப்படலமாக ஆகி விடாமல் இங்கு நிறுத்துகிறேன்.
இதற்கும் முன் மதுரைக்காரர் மழையை வைத்து கார் நாற்பது என்று எழுதியுள்ளார். எனக்கு ஆச்சரியம் புலவர் மதுரைக்காரர் என்பது - மதுரைக் கண்ணங்கூத்தனார். பொதுவாக மழை பூமியில் கடைசியில் தொடும் இடம் மதுரையாகத்தான் இருக்க வேண்டும். மழை அப்படிப் பெய்தாலும், அடுத்த நாள் காலை வெயில் இன்னும் உரக்க அடித்து, 'ஒரே புழுக்கம்' என்ற குரல்கள் நடுவில் இரண்டு நாள் தப்பி, நாலு நாளில் லேசாய்த் தூறி அடுத்த ஐந்தாம் நாள் அல்லவா மழை பெய்யும். இவர் காலத்தில் கார் நாற்பது அளவு பெய்திருக்கிறது.
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து."
வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. . . . "
"மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்!" கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.
"வேள்வித்தீயைப் போல மின்னும் மழை" பொருள்வயின் பிரிந்த தலைவனை கொண்டுவந்து சேர்க்கும்.
இன்று இருக்கும் பொருள்வயின் பிரிதல் என்பது அன்றே தொடங்கி அன்றே முடிவது. மழை , டிராபிக் இரண்டும். சேரும் போது இன்னும் பல மடங்கு வலியாகிறது. சமீபத்தில் பிள்ளைகள் மழை நெரிசலில் பள்ளி விட்டு வீடு சேர முடியாமல் , உணவில்லாமல் பள்ளி வண்டியில் மயங்கின என்று படித்தேன்.
முன்பெல்லாம் மழையில் சைக்கிளில் சென்றால், வீட்டில் மட்டுமே மறு பரிசீலனை செய்யச் சொல்லிச் சொல்வார்கள். இப்போதெல்லாம் ஆஃபீஸிலும் பழகிவிட்டார்கள். இன்னும் இரண்டு நாளுக்கு மழை , சைக்கிளில் வரவேண்டாம் என்று செக்யூரிட்டி கூறினார். சரி என்று தலையாட்டினேன்.
மொத்த மழையும் பவர் சேவ் மோடில் நாளெல்லாம் பெய்து கொண்டிருந்தது. இடை இடையில் ஸ்க்ரீன் ஆப், போன் லாக். அப்புறம் ஒரு கண்விழிப்பு. பேன்(காற்று) கிடையாது, லைட்டும்(மின்னல்) கிடையாது. இதை ஸ்லீப் மோட் என்பார்கள். அப்படித்தான் இருந்தது வண்டிகள் ஓடும் சத்தம் தவிர மனிதர் பேசும் ஒலி குறைந்து விட்டதாகவே எண்ணினேன்.
ரோட்டில் இருக்கும் குறிப்பிட்ட பள்ளங்களை வைத்து (மழை மானிகள்) மழை அளவை கணித்துவிட முடியும். ஒரு இடத்தில் தேங்கி இருக்கும் நீரை வைத்து , வரும் வழியில் எங்கு எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்த்து, சைக்கிள் ரூட்டை மாற்றி விடலாம். நேஷனல் கேம்ஸ் வில்லேஜ் உள்ளே வண்டியை விட்டேன். Judicial Block , RBI Block , ASI போன்ற அபார்ட்மெண்ட் தொகுப்புகள். அரசாங்கமே கட்டி, அரசாங்கமே இருக்கும் இடங்கள். வியர்வையை இல்லாமல் சென்று சேர்ந்தேன்.
மதிய உணவின்பின் என்றும் போகும் சிறிய கப்பன் பார்க் நடை மழையால் இல்லாமல் போனது.
மழையில்லாத ஒரு சிறு இடைவெளியில் commercial ஸ்ட்ரீட் பக்கம் நடக்கலாம் என்று தோன்றியது. ஒரு 20 நிமிட நடை. கீழே வந்தவுடன் மழை பெய்தது. தள்ளுவண்டியில் குடையை மாட்டி எப்போதும் போல் கடலையை வறுத்துக் கொண்டிருந்தார். NAL வேலை பார்ப்பவர்கள் ஓரிருவர் வாங்கினர். என்னுடைய ஆறாம் வகுப்புப் படிக்கும் ஆசிரியருக்கு சாப்பிட்டு முடித்து ஒரு பொட்டணம் கடலை தின்னும் வழக்கம் இருந்தது.
ஓங்கி வளர்ந்து சாலையையே மூடியிருக்கும் மழை மரங்களுக்கு(Rain tree) நடுவே நடந்தேன். இவை ஆங்கிலேயர்களால் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டன என்று சொல்கிறார்கள். மரங்கள் வாங்கிவைத்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர் மழையை விட இன்னும் கனமாய் தலையில் விழுந்தது.மசூதிக்கு முன் குல்லாக்கள், கழுத்தில் அணியும் துண்டு, ஜெபமாலை, அரணிக்கட்டை போல ஒரு குவியலை பலர் தள்ளு வண்டியில் விற்றுக் கொண்டிருந்தனர். எதிர்பக்கம் வாசனை திரவியங்கள். ஓரிரு (அரேபியன்) டீக் கடைகள்.
"Plain Street' என்று ஒரு தெருவிற்குப் பெயர். இதில் இடதுபுறம் இறங்கி நடக்க வேண்டும். எதிரில் ஒரு இரண்டடியில் ஸ்விக்கி மனிதர் யூலு -வில் உட்கார்ந்து செல்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். இமைக்கும் பொழுதில் அவர் ஓய்விலிருக்கும் , ஐம்பது அடியாவது உயரம் இருக்கும், தேக்கு மரத்தில் இருந்து மிகப் பெரிய ஒரு கிளை முறிந்தது. கவனிக்கவும் தேக்கு மரம். அவர் பின்தலையில் விழாமல் ஒரு சில அங்குலம் பின்னால் பெரிய ஓசையுடன் விழுந்து மேலும் பல துண்டுகளாய் சாலையில் தெறித்தது. அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு நாலைந்து பேர் கூடி விட்டார்கள். முதலில் சென்று 'தப்பிச்சிடீங்க' என்று சொல்ல நினைத்து, கன்னடம் கை கொடுக்காமல், 'யூ ஆர் வெரி லக்கி' என்று சொன்னேன். இது ஒரு freak accident என்று கூறுவார்கள். அந்த ஒரு வினோதமான விபத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். அவர் பதறி அடித்து யூலுவைக் கிளப்பி ஓடி விட்டார். அடுத்து சில நொடிகளில் அடிபட்டிருந்தால் என்ன ? இந்தப் பக்கம் வாஜ்பாயீ மருத்துவமனை, அந்தப் பக்கம் பௌரிங் ஹாஸ்பிடல் என்று நினைத்தேன்.
இன்னும் சிறிது முன்னால் நடந்தேன். சிவாஜி நகர் பேருந்து நிலைய வளாகம். இடது புறம் புனித மாதா தேவாலயம். ஒரு ஆப்பிரிக்க நடுவயது ஜோடி உள்ளே போய்க்கொண்டிருந்தது. வலதுபுறம் ஒரு மார்ச்சுவரி. மழையில் ஒரு சிலர் அறையின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். மார்ச்சுவரி உள்ளே ஒரு சிறு கோவில் இருப்பதைப் பார்த்தேன். மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாம் ஒரு தொடர் சங்கிலி போல் தோன்றியது.
ஒரு சில நாள்கள் முன்னால் தான் இயற்கையை ரசிப்பதை பற்றி ஜெயமோகன் குறும் காணொளி பார்த்திருந்தேன்(அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…). இந்தக் காணொளி அந்தகரண விருத்தி பற்றியது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். எந்த ஒரு புது அனுபவமும் முதல் கணம் நம்மை முதலில் திடுக்கிட வைக்கிறது. இது உயிரில், பரிணாமத்தில் கீழே அடியில் இருப்பது. இதை அந்தகரண விருத்தி என்று மரபில் குறிப்பிடுகிறார்கள். ஒரு அருவியை, வானவில்லை, கடலைப் பார்த்ததும் வருவது. அடுத்த கணம் மனது அதை வகைப்படுத்த ஆரம்பிக்கிறது. ஏற்கனவே தெரிந்த , நடந்த ஒன்றை ஒப்பிட்டு அதிர்ச்சியை சாதாரணமாக்க முயல்கிறது. இதற்க்கு ததாகர விருத்தி என்று பெயர். மூன்றாவது, இறுதிக்கட்டம், அதற்குப் பெயரிடுவது, அல்லது தெரிந்த பெயரை போட்டு அடுக்கிக் கொள்வது- நாமகரண விருத்தி . இயற்கையைப் பார்க்கும் போது பின்னால் இருக்கும் இரண்டு விருதுகளையும் ரத்து செய்து முதல் நிலையில் இருந்தால் , ரசிக்க முடியும் என்கிறார்.
இவையெல்லாம் நடந்து பின்னால் தான் யோசித்தேன், எனக்கும் தப்பித்தவருக்கும் இடைவெளி மேலும் இரண்டடி தான் இருக்கும். ஆபிசில் இருந்து ஒரு மூன்று நொடி முன்னால் கிளம்பியிருந்தால், கிளை என் மேல் விழுந்திருக்கலாம். திடுக்கென இருந்தது. பிரபஞ்சத்தில் ஒரு செயலை தனியாகப் புரிந்து கொள்ள முடியாது. இதை prakruthi wheel (செயல் சக்கரம் ?)என்று குரு முனிப்பிரசாத் சொல்கிறார். இதை செயல் அலை என்று சொல்வது இன்னும் பொருத்தம் என்றே நினைக்கிறேன். சரிதான் , பின்னர் மருத்துவமனையோ, மார்ச்சுவரியோ , இரண்டில் ஒன்று.
உங்கள் எழுத்து ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவக் கோர்வையாக இருந்தது. அத்தனையும் நம்மை சுற்றிய சூழலை மட்டுமல்ல, அதில் எவ்வித மிதிவும் இல்லாத அனுபவங்களை மிக நுணுக்கமாக விவரிக்கிறது.
ReplyDeleteகார்காலப் படலத்தில் வரும் உங்கள் வார்த்தைகள் மழையை எவ்வித சித்திரங்களோடு இணைத்துப் பார்க்கின்றன என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் எழுத்தின் அழகு, மழையை மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு தாக்கத்தையும்—செய்திகளின் வெளிப்பாடாகவும், மனநிலையின் பிரதிபலிப்பாகவும், வாழ்க்கையின் சுவடாகவும்—ஒன்றாக இணைக்கிறது.
அனுபவங்களை ரசிப்பது:
தீவிரமான நிலைகளில் கூட நீங்கள் எழுத்து வழியே ஒரு அமைதியான பார்வையை சிதறாமல் காட்டி இருக்கிறீர்கள். "திடீரென விழுந்த தேக்கு கிளையின் நிகழ்வை" உங்களின் நேர்த்தியான சொற்களால் வாசகர்களின் கண்முன் கொண்டு வந்த விதம் மிகச்சிறந்தது. நீங்கள் "யூ ஆர் வெரி லக்கி" என்று சொல்வது மட்டுமல்ல, அதை நீங்கள் எண்ணிய அனுபவத்தை வேறொரு பிம்பமாக வெளிப்படுத்துவது மிகத் தனித்துவமாக உள்ளது.
நகரும் சிந்தனை:
மழை, சாலைகள், மரங்கள் மற்றும் மனிதர்களின் நடத்தை ஆகியவற்றை நீங்கள் பகுப்பாய்வுடன் உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள். இது வெறும் மழை வர்ணனையாக இல்லை, மழையின் தாக்கத்தினால் உங்களால் சுவாரஸ்யமாக சுட்டிக்காட்டப்படும் மனித இயல்புகளின் வெளிப்பாடாக உள்ளது. "குபேர மூலையில் நடக்கும் காட்சிகளும்," பறக்கும் மரகிளையும், ஒரு சிறிய விபத்தையும் நீங்கள் வாழ்க்கைச் சுழற்சியுடன் இணைத்து சொல்வது உங்கள் எழுத்தின் தனித்துவமாக விளங்குகிறது.
தத்துவ ரீதியான நுட்பம்:
அந்தகரண விருத்தி, ததாகர விருத்தி, நாமகரண விருத்தி என்ற ஜெயமோகனின் கருத்துக்களுடன் உங்கள் அனுபவங்களை இணைத்துச் சொல்லும் பாணி மிக நுணுக்கமானது. இயற்கையின் மேன்மையைக் கண்டு ரசிப்பது, அவற்றின் திடுக்கிடும் தருணங்களை அடக்காமல் முதல் நிலைக்குத் தங்குவது என்பதை நீங்கள் எழுத்தின் வழியாக வலுப்படுத்துகிறீர்கள்.
பயணத்தின் சிறப்புகள்:
வழியில் மழை மரங்கள், விற்பனையாளர், காட்சிகள்—ஒவ்வொன்றும் நம்மை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற்றுகிறது. உங்கள் எழுத்தின் அசல் அழகு இதுதான்: சாதாரணமாகக் கருதப்படும் நிகழ்வுகளையும் ஒரு தத்துவ நெருக்கமாக வடிவமைப்பது.
முழுமையாகச் சொல்வதற்கான திறமை:
"மழை", "மண்ணில் பெயர்ச்சி", "மக்களின் நடத்தை" போன்றவற்றை அழகாகக் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் நெருக்கமும் பிரபஞ்சத்தின் செயல்முறையை சுட்டிக்காட்டும் உங்கள் அணுகுமுறையும் பாராட்டத்தக்கது.
இன்னும் உங்கள் எழுத்தில் சிந்தனை, அனுபவம் மற்றும் தத்துவத்தின் கலவை தொடர்ந்து கைவந்திருக்கட்டும். இதைப் போல பல அனுபவங்களை எழுதி வாழ்வின் மீதான உங்கள் பார்வையை மேலும் பகிருங்கள்! 😊