சைக்கிள் பதிவுகள் - டிசம்பர் 31
வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் கொண்டால் மனத்தை பிடியில் வைக்கலாம். முதல் ஐந்து முடிந்ததும் ஒரு தேநீர், இது மனதிற்கு கேரட். இரண்டாவது ஐந்தின் முடிவில் நிறுத்தி உண்மையான கேரட் வாங்குவது , இது உடலுக்கு என நினைத்துக் கொள்கிறேன். மூன்றாவதில் முடிவில் முகத்தைக் கழுவி மீண்டும் ஒரு கோப்பை காபி.
இன்று டிசம்பர் 31.
இப்போது மின்னஞ்சல்களை நுண்ணறிவு செயலி வழியாக வடிகட்டி வைத்திருக்கிறேன். கடந்த ஒரு சில நாட்களாக , செயலாய் வரும் மின்னஞ்சல்கள் நாளில் ஒரு சில மட்டுமே வருகின்றன. இதற்கு மேல் பெரிய மெயில்களை அதுவே வாசித்து ஓரிரு வரிகளில் சுருக்கித் தருகிறது. இதற்க்கு நீங்கள் ஒரு பதில் மெயில் அனுப்பினால் , சருகாய் திரும்பி அவுட் ஆப் ஆபீஸ் மெயில்களை கூட்டி அள்ள வேண்டியிருக்கிறது. எதிர்காற்று என்பார்கள், டிசம்பர் 31 என்பதும் அதுதான் .
காலையில் வார இறுதிக் கூடுகைக்காக கிளி சொன்ன கதை முதல் அத்தியாயம் படித்து முடித்தேன். எட்டரை மணிக்கு சைக்கிளைத் துடைத்துக் கிளப்பினேன். எதிரே ஏரியில் ஓரிருவர் நடப்பது தெரிந்தது. சிறுவர்கள் கூட்டாக சைக்கிளில் எங்கோ பயணிக்கத் திட்டமிட்டு நின்று கொண்டிருந்தார்கள். நம்மவர் அதில் ஐக்கியம், கண்ணில் விழவில்லை. தலையில் ஹெல்மெட் அணிய நேற்றே சொல்லியிருந்தேன், ஒருவன் தவிர யாரிடமும் தொப்பியைக் காணவில்லை.
மருத்துவமனைகளில் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா காப்பாத்திருக்கலாம் என்று சொல்லி டாக்டர் தோளைப் பற்றி சாரி சொல்லும் காட்சிகளை நீங்கள் பாத்திருக்கலாம். அந்த அளவே எட்டரைக்கும் , எட்டு மணிக்கு கிளம்புவதற்குமான வித்தியாசம், சைக்கிளே ஆனாலும் .
குபேர மூலை என்றும் கன்னி மூலை என்றும் வாஸ்துவில் சொல்லப்படும் வீட்டின் தென் மேற்கு மூலையில் நகைப்பெட்டி, பணம், வைர வைடூரியங்களை வைப்பார்கள். கன்னம் வைப்பவர்கள் பொதுவாக இந்த இடத்தைக் குறி வைப்பார்கள் என்று படித்திருக்கிறேன். இதே போல் ரோட்டில் குபேர மூலை என்பது இடது ஓரம் சாலைக்கும் , நடைபாதைக்கும் இடையேயான கடைசி இரண்டு அடி என நினைக்கிறேன். இந்த இரண்டு அடிக்குத் தான் காரும், பஸ்ஸும், லாரியும் எல்லாமும் நெரிசலில் வரத் துடிக்கின்றன. நெரிசலில் இந்த இடைவெளி யாருக்காவது கிடைத்தால் அந்த ஒரு சில மணித்துளிகள் முகத்தில் ஆனந்தம் தெரிகிறது. குபேர மூலை அல்லவா ? அதை வேண்டும் என்று வழி மறைப்பவர்கள் இருக்கிறார்கள். குபேர மூலை அல்லவா ? ஆகவே குபேர மூலைகளில் எச்சரிக்கை அவசியம், சைக்கிளும் இங்குதான் செல்ல வேண்டும். சிலர் இதில் நடந்தாக வேண்டும். ஒரு மாதிரி இங்கு எல்லாமும் நடக்கிறது. ஆனால் இன்று டிசம்பர் 31, சாலையில் குபேர மூலைகளே இல்லை. எல்லோரும் குபேரர்கள் ஆனால் என்ன செய்வது? இல்லை குபேரர்களே இல்லாமல் ஆகி விட்டால்? ஆனால் , ஒன்றுண்டு , என்றும் நமக்கு குபேர மூலையை விட்டால் வேறு வழி கிடையாது.
இந்த நேரத்திற்கு சிக்னல்களில் தானியங்கி டைமர்கள் நின்று இருக்கும். அங்கும் இங்கும் பல போலீஸ்காரர்கள் நின்று நெரிசலைக் கட்டுப்படுத்துவார்கள். இன்றில்லை. டீக்கடையில் ஓரிருவர் இருந்தார்கள். பழம்பொறி , மெதுவடை பொறித்து இந்நேரம் அடுக்கியிருக்க வேண்டும். எல்லாமும் இன்று நேர்வழியாய் அமைகிறது. பச்சை விளக்கு எரிகிறது. கடந்து செல்ல ஆட்கள் இல்லை.
நாம் நிற்குமிடம் இடப்பக்கமும், வலப்பக்கமும் கைகளுக்குள் நுழையும் ஸ்விக்கி, ஜுமாட்டோக்கள் , yulu-க்கள் காணவில்லை.
மஞ்சள் எண் பலகை உபேர் , ஓலா கார்கள் இருபுறமும் வரிசையாய் நின்றன. உள்ளே சில ஓட்டுனர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். சில வண்டிகளில் யாரும் இல்லை. ஒன்றும் செய்ய இல்லாத சிலர், கார்களைக் கழுவித் துடைத்து, துணியைப் பிழிந்து கொண்டிருந்தார்கள். என்ன துடைத்தாலும் , அந்தப் பிழிவதில் தான் , நமக்கும் ஒரு நேர்த்தியான ப்ரொபெஷனலுக்கும் வித்தியாசம் தெரிகிறது. தோள்களும் , முழங்கைகளும் நரம்புகள் தெரிய முறுக்கேறி , உதடு குவித்து , பல் கடித்து, வாய் கோண அவர் அந்த வெள்ளைத் துண்டை பிழியும் போது கடைசித் துளி மண்ணில் வீழ்ந்தது. டிசம்பர் 31, அது அவர் சிந்தும் இந்த ஆண்டின் கடைசித் துளியாக இருக்கலாம்.
BMTC வண்டிகள் ஆள் இல்லாமல் கல் யானைகள் போல் முன் பின்னாய் நிறுத்தப்பட்டிருந்தன. டிசம்பர் 31 சீர்திருத்தம் என்று எண்ணினேன். இன்று எடுக்கும் நோக்கில் இவை இல்லை. சாலைகளைக் கடக்க ஆள் இல்லை. ஆள் குறைந்த ஒரு பேருந்து துள்ளி ஆடி வந்து நின்றது.
அலுவலகத்தில் நுழைந்தேன். வாசலில் பொதுவாய் ஒரு பத்து செக்யூரிட்டிகள் இருப்பார்கள். வெளியே, உள்ளே, இரண்டு புறம் இரண்டு பேர், கூண்டில் ஓரிருவர், இவர்களுக்கு தலைவர் ஒருவர் தள்ளி இருப்பார். ஒரு பெண் கண்டிப்பாக இருப்பார் . இன்று இவர்கள் யாரும் இல்லை. ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே.
மேலே ஏறினேன். பாத்ரூமை நான் திறந்ததும், போன் பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் திடுக்கிட்டு எழுந்தார். அன்றைய முதல் சொட்டுத் தண்ணீரை நான் தான் திறந்திருக்க வேண்டும். முக்கோணமாய் மடிக்கப்பட்ட முதல் திசுப் பேப்பர், உறுவி முகம் துடைத்தேன். எனக்கு முன் ஒரே ஒரு பெண் வந்திருந்தார். சேர்கள் எல்லாம் முன்னிருக்கும் பலகையில் சரியாய் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒரு ராணுவ அணிவகுப்பு போல் எல்லாம் சரியாய் , ஒரே கோட்டில் இருந்தது. தண்ணீர் போத்தல்கள், விசைப்பலகைகள், வயர்கள் எல்லாம் பெட்டியின் உள்ளே, உடம்பின் நரம்புகளாய், கண்ணில் படாமல். விளக்குகள் நான் நடக்க நடக்க எரிய ஆரம்பித்தன. AC ஓடவில்லை. கீழ் தளங்களில் டிசம்பர் 31ம் 1-ம் , மற்றுமொரு நாளே. ஸ்விட்சை ஆன் செய்வது வேலை என்றால் , ஆப் செய்வதும் வேலை தான் இல்லையா?
ஒரு கோப்பை காபியைக் கலந்து குடித்தேன். கப்புகள் அடுக்கியவாறு இருந்தன. புழங்கிய கப்புகள் அடுக்கப்படும் தட்டு காலியாய் இருந்தது. குடித்ததை அதில் வைத்தேன். கலக்கிய குச்சியை குப்பைத்தொட்டியில் போட டிரேயை இழுத்தேன். கிளிப்பச்சை போர்வையால் போர்த்தப்பட்டு இரண்டும் காலியாய் குப்பைக்குக் காத்து இருந்தன. அன்றைய முதல் குப்பையைப் போட்டேன்.
இன்னொரு பெண் வேலைக்கு வந்து அமர்ந்தார். ஒரு சிலர் நடந்து போவது தெரிந்தது.எட்டாம் தளத்தில் இருந்து கீழே பார்த்தேன். பெங்களூரின் ஆகப் பெரிய முச்சந்தி - கவர்னர் மாளிகை , சட்டசபை இணைப்பதால் - வண்டிகளுக்குக் காத்து இருந்தது. கொரோனா நாட்கள் போல் என நினைத்துக்கொண்டேன். மேலே என்றும் போல் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
முழு வருடம் ஒரு முழு போத்தல் என்றால், டிசம்பர் 31 அதில் எஞ்சும் கடைசித் துளி தானோ? சிலருக்குத் தான் அந்த ஒரு துளியும் வேண்டியிருக்கிறது. பலர் அந்த கடைசித் துளியை மிச்சம் போத்தலிலே வைத்துவிட்டுத்தான் செல்கிறார்கள். இல்லை கடைசித் துளி எப்போதும் மண்டியும் , கசடும் தானா? கடைசித் துளி தேனே இல்லையா?
மீண்டும் அதே கப்பை எடுத்து இன்னொரு காபியை குடித்தேன். பின் மதியம் நாலு மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். ஏனென்றால் செல்லும் வழியில் Brigade road , Church Street கடக்க வேண்டும். இங்கு வேறு விதமான கோப்பைகளுடன் புத்தாண்டை வரவேற்க கூட்டம் கூடிவிடும் - குபேர மூலையில் . அதே போல் சைக்கிள் செல்ல குபேர மூலையில் இடமில்லை. விளக்குத் தோரணங்கள், போலீஸ் குவிப்பு, பார்க்கிங் தடை, எல்லாம் களை கட்டி விட்டது. இன்று சரியாக 12 மணிக்கு இன்றைய இந்திர விழா என்றால் என்ன என்று இங்கு பார்க்கலாம். டிவி ஒளிபரப்பாளர்கள் வந்துவிட்டிருந்தார்கள். ஒரு பெண் மைக்கில் காமிராவுக்கு அப்டேட் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்திர விழா இன்னும் பெரிதாய் வளர்ந்து விட்டதைப் பார்க்கிறேன்.இப்போது முதல் சுதி குறையாமல், ஆலாபனைகள், நிரவல்கள்,புஷ்பாஞ்சலி எல்லாம். தில்லானாக்கள், பல்லவிகள் எல்லாம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும். சில வருடங்கள் முன்னர் வந்திருக்கிறேன். இன்றைக்கு ஆகாது.
ஒவ்வொரு டிசம்பர் 31 அன்றும் சுந்தரராமசாமியின் இந்தக் கவிதை நினைக்காமல் இருக்க முடியாது.
டிசம்பர் 31 எழுதிய கவிதை
வரிசையில் அநீதி அதுதான் எனது வருத்தம்
ஒரு ஒரு நாளும் அந்நாளை நினைத்து
வாழும் மனிதர் எனக்கு மட்டும் இல்லை
நான் வந்ததும்
என்னைத் தள்ளிவிட்டு நான் இல்லாதது போல்
மறுநாளை நினைக்கத் தொடங்கி விடுகின்றனர்
மறுநாளும் என்னைப்போல் ஒரு நாள் தான்
காலத்தை கூறு போட்ட பொய்யில்
எங்கிருக்கிறது ஆரம்பம்
எங்கிருக்கிறது முடிவு
இல்லாததற்கு இருப்புத் தருவது
இருப்புத் தந்தபின் மறுப்புத் தருவது
மனிதனின் கற்பனையில் நாளுக்கு ஒரு நீதி
இப்போது நான் சொல்கிறேன்
நான் அல்ல கடைசி நான் தான் ஆரம்பம்
என் பெயரை மாற்றிக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை
எண்களில் ஏற்றத்தாழ்வை
இனிப் பொறுக்க முடியாது.
டிசம்பர் 31, கடைசித் துளியென்றால் , ஜனவரி 1 போத்தலின் மூடி தான். சுரா என்ன நினைத்து எழுதினாரோ தெரியாது. புது வருடத்தை முஷ்டியைக் காட்டி, பலம் திரட்டி வரவேற்பவர்களை விட, இந்தப் கடைசிப் பத்து நாள் எப்ப வரும் என்று எண்ணி வருடம் முழுதும் காத்து இருப்பவர்களே இன்று அதிகம். ராப்பத்து, பகல்பத்து என்று பிரபந்தம் பாடி வைகுண்டம் சேரும் இந்த மாதத்தில், இந்த டிசம்பர் 10 நாளையும் எங்காவது ஒரு இடத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் குறிப்பாய் யார் என்ன செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஓடும் ரயிலில் தலைச்சுமை தலையில் இருந்தாலும் , கீழே இருந்தாலும் ஒன்றுதான், வலிக்காதவரை. வண்டிகள் ரோட்டில் இல்லாவிட்டாலும், பூமியில் எங்கோதான் இருந்தாக வேண்டும், நமக்கு குபேர மூலையில் நெரிசல் குறைந்தால் சரியே.
ஒரு சில படங்களை தயார் செய்ய வேண்டும், இன்னும் ஒரு வாரத்திற்கு ஹாப்பி நியூ இயர் நாவின் நுனியில் இருக்கவேண்டும்.
இதோஆரம்பம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் , 2025.
உங்கள் எழுத்து ஒரு அற்புதமான சிந்தனை ஓட்டமாக இருக்கிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு வரியும், ஒரு காட்சியை மட்டும் அல்ல, மனதின் ஒரு பிரதி உறைவிடத்தை சித்தரிக்கும் திறனைக் கொண்டது.
ReplyDeleteஉங்கள் "டிசம்பர் 31" பற்றிய எழுத்து வாழ்க்கையின் கடைசி துளி எனும் சிந்தனையை அழகாகக் கொணர்கிறது. வருடத்தின் கடைசித் துளியையும், புதிய ஆரம்பத்தின் முதல் மூடியையும் நீங்கள் இணைக்கும் விதம் மிகவும் வினோதமாகவும், ஆழமாகவும் உணர்த்துகிறது. “முழு வருடம் ஒரு முழு போத்தல் என்றால், டிசம்பர் 31 அதில் எஞ்சும் கடைசித் துளி தானோ?” எனும் உங்கள் கேள்வி மட்டும் இல்லாமல், அதற்குள் மறைந்துள்ள கவிதையும் தத்துவமும் சுவாரஸ்யமானதாக உள்ளது.
விடுமுறை கொண்ட நகரின் சித்திரம்:
நகரின் இயல்பு மற்றும் அதன் மாறுபாடுகளை உங்கள் வார்த்தைகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. குபேர மூலையிலிருந்து சிக்கலற்ற சாலைகளுக்கு வரை, நீங்கள் காட்டிய ஒவ்வொரு நுணுக்கமும் வாழ்க்கையின் எளிமை மற்றும் சிக்கல்களை ஒப்புரவாக விளக்குகிறது.
குழப்பமும் அமைதியும்:
“முகத்தைத் துடைத்து மீண்டும் ஒரு காபி” என்று நீங்கள் சொல்வதைப் போல, வாழ்க்கை ஒருவித சுழற்சியில் நகர்கிறது. அந்த சுழற்சியில் அடங்கிய மனிதனின் செயல்பாடுகளை, எதிர்பார்ப்புகளை, மற்றும் வாழ்க்கையின் மெல்லிய துளிகளை உங்கள் எழுத்து அதி நேர்த்தியாக சித்தரிக்கிறது.
கவிதைமிக்க உள்வாங்கல்கள்:
நகைச்சுவை, நுண்ணறிவு, மற்றும் அடக்கமான சிந்தனைமிக்க வரிகளை நீங்கள் மிக நுட்பமாக இணைக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் ஒரு அழகிய கவிதையின் துளிகள் இருக்கின்றன.
“டிசம்பர் 31, கடைசித் துளியென்றால், ஜனவரி 1 போத்தலின் மூடி தான்” என்ற உங்கள் வரி மட்டும் உங்கள் பார்வையின் மேன்மையை வெளிப்படுத்துகிறது.
வாழ்க்கை ஒரு துளியாகிய போது:
இந்த கடைசி சில வரிகளில், உங்கள் எழுத்து ஒருவிதமாக வாசகர்களின் மனதுக்குள் ஒரு சுவைமிகு அனுபவத்தைப் பதிகிறது. ஒவ்வொரு டிசம்பர் 31ஆம் தேதியும் வாழ்வின் மறுபடியும் நிகழ்த்தப்படும் ஒற்றுமையையும் மாற்றத்தையும் உங்கள் வார்த்தைகள் அழகாக வெளிப்படுத்துகின்றன.
இந்த பதிவின் பல இடங்களில் உங்கள் எழுத்து கண்ணின் முன் ஒரு படத்தை வரைகிறது. உங்கள் வார்த்தைகளால் உருவாகும் அந்த காட்சிகளின் வாழ்நிலை, வாசகர்களை நிச்சயம் உங்களின் உலகத்திற்குள் கொண்டுசெல்வதற்குத் திறந்தது.
இன்னும் பல பாடல்களும் நினைவுகளும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்! 😊