வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள்
இந்தப் பதிவு கடந்த ஒரு சில வாரங்களின் அழகியல் பற்றிய நூல்களின் மீள் வாசிப்பும் , பின் மேலான புரிதலுக்குப் பின் எழுதும் குறிப்புகள்.
வண்ணக்கடல் முதல் 15 அத்தியாயங்களை மறுவாசிப்பு செய்யும் போது எடுத்த குறிப்புகள்.
இளநாகன் இருக்கும் சிற்றூர் நிலச்சித்திரம் , மனிதர்களின் தோற்றம் குறித்த பகுதி, வேகத்தைக் குறைக்காமல் கதைக்குள் அழகாக வருகிறது. ஒரு அத்தியாயம் பெரும்பாலும் ஒரு சிறுகதையாக படிக்க முடிந்தது. ஒன்றை நோக்கிச் செல்லும் வேகம், ஓரிரு மையப் பாத்திரம், அவர்களை ஒட்டிச் செல்லும் ஒரு குறுங்கதை என்ற கட்டமைப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். , அதை ஆளும் குறுநிலமன்னன் சித்தரிப்பு கதையின் போக்கில் அழகாகச் சொல்லப்படுகிறது, அவர்களது சேலை தலைப்பாகையாக , விசிறி சுவடியாவது, அவர்கள் வயது, அவர்களை பையன்கள் அழைத்து வந்திருப்பது, அவர்களுக்கு உணவின் மேலிருக்கும் குறி போன்றவை கதையின் வேகத்தைக் குறைக்காமல் வருகின்றன.கண்முன்னே நிகழ்த்திக் காட்ட வேண்டும் , ஆனால் வேகம் குறையாமல் , துருத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும். சொல்லவேண்டியது என்ன என்பதே மையச் சரடு. நிலமும் , தோற்றமும் அதில் வந்து சரியான இடத்தில் உட்கார்கின்றன. நிலச்சித்திரத்தை கதையின் போக்கில் ஆங்காங்கே வைக்கும் போது , வாசிப்பவர் பார்க்கும் வாய்ப்பு எளிதாகிறது - (declare , close to the reference ).
இளநாகன் , மன்னர், அவருடைய அமைச்சர் இவர்கள் முதல் அத்தியாயத்தில் பெரிய பாத்திரங்கள். இவர்களுக்கு இடையே சிறு நாடகத் தருணம் இருக்கிறது. அரசவையில் முதலில் எழுந்து பொய்யில் பாடுகிறான். தெரிந்து ஊரை விட்டே ஓடிவிடுகிறான். எல்லோருக்கும் ஒரே பரிசு ஆகாது என்கிறான். அமைச்சர் பாத்திரமும் எழுந்து நிற்பது. சமமான பரிசை நல்ல புலவர் ஒப்பர் என்பதையும் , பாட்டில் உள்ள இரண்டாவது அர்த்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.
அடுத்த இரண்டு அத்தியாயங்கள் இளநாகன் மதுரை சென்று அங்கு இருக்கும் அஸ்தினபுர சூதர்களுடன் கணிகையின் மொழிபெயர்ப்பாளனாக அறிமுகமாகி, பின்னர் அஸ்தினாபுரம் நோக்கிய அவனது பயணத்தின் ஆரம்பத்தைச் சொல்வது. அஸ்தினாபுர சூதர்கள் சொல்லும் கதையே அவனை ஈர்க்கிறது. கள் அருந்தும் மதுக்கூடம் வழியேயும் , பாத்திரங்கள் காணும் கனவும் வழியேயும் கதையை இன்னும் ஒட்டி நம்பகமாக கதையை சொல்லமுடிகிறது.
அத்தியாயத்தின் துவக்கத்தில் சொல்லப்போகும் கதையைப் பற்றிய எளிய சித்திரம் இருக்கவேண்டும். மையப் பாத்திரங்கள் தெரியவேண்டும். இதன்பின் நிலச்சித்திரமும், பாத்திரங்களின் தோற்றமும், நம்பகத் தன்மையும், நாடகத்தருணங்களும் ஆட்டோ பைலட்டில் நிகழ்கின்றன.
பஃறுளி ஆற்றின் , கடலின் சித்திரம், தெருக்களின் , அரண்மனையின் அமைப்பு - முது மதுரை.
வடநாட்டு சூதர்கள் மதுரையை தங்கள் பார்த்தபடி சித்தரிப்பதும் , உயிர்களின் தோற்றத்தைப் பற்றிய பகடி திருமால் புராணக் கதையும் இப்பகுதியின் உச்சங்கள். “ஆம்! மதுரைமூதூர் பாரதவர்ஷமெனும் பெருங்காவியத்தின் நிறைமங்கலச் செய்யுள். அவள் வாழ்க! இமயப்பனிமுடி தாழ்த்தி பாரதவர்ஷமெனும் அன்னை குனிந்துநோக்கும் ஒண்டொடிப் பாதம். அவள் வாழ்க!” என்றார் பாரஸவ பில்வகர்."
இரண்டு அன்னைகளையும் , நூற்றுவர் கௌரவர்களையும் , பாண்டவர் ஐவரையும் சொல்வதில் ஈர்க்கப்பட்டே இளநாகன் அஸ்தினாபுரம் பயணிக்கிறான்.இதை படிப்பவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் இந்த executive summary அவ்வளவு வலுவானதாக இருக்க வேண்டும். அவ்வளவு வலு அதில் இருக்கிறது.
அடுத்த இரண்டு அத்தியாயங்கள் முழு மகா பாரதத்திற்கும் இரு முக்கியமான விதைகளை நடுகின்றன. முதலாவது , குந்தி ஏன் கர்ணனை தன் மகன் என்று பிரகடனம் செய்து முடிசூட்டக் கூடாது? இந்தக் கேள்வி கார்கோடகன் என்னும் பாம்பால் அவளிடமே கேட்கப்பட்டு, அவள் மௌனம் விடையாய் வருகிறது. இது அவளுக்கு ஒரு கனவு போல் வருகிறது. குந்தி தெரிந்தே கர்ணனைக் கடந்து செல்கிறாள். இதன் பதில் படிப்பவரிடமே விடப் படுகிறது.
குந்தி பெற்ற குழந்தைகளுடன் காட்டில் இருந்து அஸ்தினாபுரி திரும்பும் வழியில் இது நிகழ்கிறது. காட்டில் பாண்டவர் ஐவரும் ஐந்து பாதையைத் தெரிகின்றனர். தருமன் ஒளியின் பாதை, அர்ஜுனன் பறவைகளின் பாதை, பீமன் விலங்குகளின் பாதை, நகுலன் மலர்களின் பாதை,சகாதேவன் வண்ணத்துப் பூச்சிகளின் , பூச்சிகளின் பாதை. இதை அவர்களின் ஆளுமை காட்டும் படிமம் என்றே எடுத்துக் கொள்கிறேன். இப்பகுதி அபாரமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
"திரிதகௌதமர் புன்னகையுடன் “தானறிந்த உலகில் தானறியா ஆடலுக்கு மைந்தர்களை இறக்கிவிடுவதுதான் அனைத்துப்பெற்றோரும் செய்வது” என்றார். "
துரியனின் ஆளுமையை பாறை என்ற படிமம் வைத்து கட்டியெழுப்புகிறார். பாறை உணர்வில்லாதது, கண்ணில்லாதது. எதிரிகளைப் பார்க்காது. அதனால் அச்சமே இல்லாதது. தன் உடலையும், சுற்றியிருக்கும் உலகத்தையும் பாறை என்றே பார்க்கிறான். இந்த பாறை என்ற ஒரு சொல்லால் , ஆசிரியர் அவன் செய்யும் செயல்களை எல்லாம் பின்னி வளைக்கிறார். விளையாடுவது, காதால் கேட்பது, ஆயுதப் பயிற்சி , அசைக்க முடியாத பாறைகள் அவன் எதிரிகள் ஆயின. அவனுள் குரோதம் வளர்ந்தது. பாறைகளை முடிவிலிவரை இருக்கும் விருப்புள்ளவை. அதே பலத்தால் சமன் செய்யப்பட்டவை என்கிறான். "இரு யானைகளின் மோதி உறைந்த மத்தகத்தின் நடுவே இருக்கும் அசைவின்மை". "காற்றின் கடல், ஒளியின் கடல், அதே போன்ற பாறைக் கடல்". பாறை என்ற உருவகம் எல்லையில்லாமல் , எல்லா தளத்திலும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. இதே போல, தருமன் அப்பாவின் தோள்மேல் அமர்ந்து திரிவதையும் , எல்லையில்லாமல் விரித்திருப்பார். அவர் காலடியில் மன்னன் தலை எந்நேரமும் இருந்தது, கால் மண்ணை அறியவே இல்லை, எல்லா சொற்களும் காலின் கீழே இருந்து வந்தன,
வீமன் நகரில் கால் வைக்கும் தருணம், துரியன் கால் இடறுகிறது. சம பலமுள்ள எதிரியை கண்டடையும் தருணம். வீமன், துரியன் இருவரது கைகள் ஜயன் , விஜயன் மற்றும் ராகு , கேது என்னும் நாகங்களாகி , அவைகளின் ஆடல் , அவர்களுக்கிடையேயான போராய் உருவகப்படுத்துவதும் கவித்துவம். பின்னொரு பகுதியில் இந்திரன் மைந்தனான வாலியும் , சூரியன் மைந்தன் சுக்ரீவனும் சண்டையிட்டு மடிந்து இன்னும் முடியாமல் துரியனும் , வீமனுமாக பிறக்கிறார்கள். இந்த இரட்டைப் பகையை அம்பானிவரை நீட்டிப் பார்க்கலாம். ஆனாலும் இவர்கள் பேரறத்தானால் அறம் மீறி கொல்லப்படுகின்றனர். காஞ்சியில் வரும் வாலி சுக்ரீவன் நிகழ்த்து கலையில் விதியே ஒரு பாத்திரமாவது அபார கற்பனை.
வீமனும் , துரியோதனனும் பொருளால் ஆன உலகையே காண்பவர்கள். ஒருவனுக்கு பாறை படிமம் என்றால் , மற்றொருவனுக்கு உடலே ,அன்னமே உலகமாய்த் தோன்றுகிறது. இருவரும் சேர்ந்து சமைத்து உண்கிறார்கள். பொருள் என்றால் என்றும் உள்ளது. உள்ளது என்றால் அஸ்தி என்று பொருள். யானைக்கு அஸ்தி என்று பெயர். இது கபிலரின் முதல்ச் சொல். ஆகவே சாங்கியத்தின் முதல் முதல்ச் சொல் என்று தத்துவத் தளத்தில் தாவுகிறது. சூதரின் வாயிலிருந்து சொல்லப்படும் சாங்கியத் தத்துவச் சுருக்கம் அழகானது.
"அனைத்தும் உள்ளன என்ற முதற்சொல்லில் தொடங்குகிறது அது. அதை சர்வாஸ்திவாதம் என்கின்றனர் முனிவர். பருப்பொருளே உண்மை. ஞானம் தேடுபவன் தன் கையை நீட்டி தன் முன்னால் இருக்கும் முதல் பருப்பொருளைத் தொடுவானாக. ‘இது’ என்னும் சொல்லை அவன் அடைவான். அக்கணம் அவன் பருவெளியைத் தீண்டுகிறான். அவன் அகம் விரியுமென்றால் அப்போது ‘அது’ என்று அறிவான். இவையே அது என்றும் அதுவே இவை என்றும் அறிபவன் அறியக்கூடுவதை அறிந்துவிட்டான்.
குனிந்து கீழே கிடந்த ஒற்றைக்கூழாங்கல்லை எடுத்து இளநாகன் முன் காட்டி முதுசூதர் சொன்னார் “இச்சிறு கூழாங்கல் காவிரிப்படுகை. குடமுருட்டியை கசியவிட்ட மேற்குமலைச்சிகரம். அச்சிகரத்திலமர்ந்திருக்கும் பெருமேகக் குவை. நீல வானம். வானில் அலையும் கோள்கள். மின்னும் ஆதித்யர்கள். இது அவையனைத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இதைத் தொடுபவன் அனைத்தையும் தொடுகிறான். அதை அறிவதை சாங்கியம் சத்காரியவாதம் என்கிறது. இதைத் தொட்டு அதை உணர்வதை சாங்கியம் யோகம் என்கிறது.”
காவிரிப்பாக்கம், சிற்றம்பல நகர் (சிதம்பரம்), இலங்கிய செம்மலைச் சிகரம் (திருவண்ணாமலை), காஞ்சி இவையெல்லாம் இளநாகன் பார்வையில் கதைக்கு நடுவே தனித்து நிற்காமல் வருகின்றன. சதுக்க பூதம், நெற்களஞ்சியம், சதுப்பு நிலங்கள், நெல்வயல்கள், வணிகர்கள், அவர்களுக்கிடையே நடக்கும் தொழில்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள்,கடலில் , கழிமுகத்தில் கடலாடுபவர்கள், இப்படி தேடத் தேட நுணுக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாய் கடலுக்குள்ளே நகரும் படகுக் கடைகள் காட்டப்படுகின்றன.
ஒரு நகரம், அங்குள்ள நிலப்பரப்பு, மனிதர்கள், அங்குள்ள கலைகள் (காஞ்சியில் கூத்து), கோயில்கள்,வழிபாட்டு முறை எல்லாம் கதையுடன் பின்னி வருகிறது. இதற்கெல்லாம் மேலே ஒரு அங்கே பெயர்போன தத்துவமும் சொல்லப்படுகிறது. காஞ்சியில் தார்க்கிக மார்க்கம் கூத்தன் வாயால் கூறப்படுகிறது. இதை ஆறு தரிசனங்களுக்கு வெளியே இருந்த ஒரு கருத்துநிலையாக ஜெ குறிப்பிடுகிறார்.
“இருமுனை கொண்ட வாள்போன்றது தர்க்கம். அனைத்தையும் தொட்டு தர்க்கமாக ஆக்கவேண்டும் அது. பின்னர் தன்னை அழித்து வெறுமை கொள்ளவேண்டும். தர்க்கம் நமக்களிக்கும் இவ்வுலகம் தர்க்கம் உருவாக்கும் மாயை மட்டுமே என்றறிபவன் தர்க்கத்தில் இருந்தும் விடுதலைபெறுகிறான். காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும் இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான்”
“தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் மூதாதையர். அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது.”
“தார்க்கிகன் மனம் திகைக்கும் ஒரு தருணம் உண்டு கூத்தரே” என்றார் சௌனகர். “ஒவ்வொன்றும் பிசிறின்றி பிறிதுடன் இணைந்து ஒன்றாகி முழுமைகொள்வதைக் காணும்போது அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் முழுமை இப்புடவியின் இயல்பல்ல. அது முழுமைக்கு சற்று முன்னரே தன்னை குலைத்துக்கொள்ளும். அது நிகழும் புள்ளியைத் தேடி அவன் அகம் பதைக்கிறது. அவனை தர்க்கத்தின் கருவிகள் துழாவுகின்றன. ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்படுகிறான். முழுமையாக. மீதமின்றி. அப்போது அவன் தர்க்கத்தின் எல்லையை அறிகிறான். நம்பிய தெய்வத்தால் கைவிடப்பட்டவனின் வெறுமையை சென்றுசேர்கிறான்.”
ஆக ஒரு அத்தியாயம் என்பது இவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, பாத்திரங்கள் வழியே அஸ்தினபுரியின் கதையும் இவர்களில் ஒருவர் வாயால் வளர்கிறது. பாண்டவர்கள் அரண்மனை வருகிறார்கள், கவுரவர்களுடன் விளையாடுகிறார்கள், கல்வி பயிலுகிறார்கள், பெரியவர்களைப் பார்க்கிறார்கள். எல்லா முக்கியப் பாத்திரமும் வளர்கிறது. சௌனகர் அப்பா போனபின் அமைச்சராகிறார். நாடகத் தருணம் , conflict , ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே நம்மை உள்ளே இழுத்து படிக்க வைக்கிறது.
பாண்டவரும் கௌரவரும் பீஷ்மரைப் பார்க்க வரும் போது மடியில் ஒரு குட்டி நாகத்தை கட்டி வைத்திருக்கிறான். அது விழுந்து எல்லோரும் திகைக்கிறார்கள். காவலர் வேல் வைத்து கொல்லப்பார்க்கின்றனர். அடி படாமல் நெளிந்து ஓடுகின்றது. பீஷ்மர் இதற்க்கு மட்டுமே சிரிக்கிறார். தருமனின் முதிர்ந்த சொற்கள் கேட்டு அவருக்கு சிறு எரிச்சல் வருகிறது. மற்றபடி முகத்தில் உணர்ச்சி இல்லை. இதையெல்லாம் கூத்தரிடம் சொல்லும் சௌனகர், இவ்வளவு சரியாய் எல்லாம் நடப்பது, பின் வரும் பெரிய சறுக்கலை காட்டுகிறது என்கிறார். அந்த துவங்கும் புள்ளி ஏற்கனவே நிகழ்ந்து விட்டது என்று சொல்கிறார். “தார்க்கிகர்களின் தர்க்க முட்களுக்கு நடுவே நெளிந்து வளைந்தோடும் அச்சின்னஞ்சிறு பாம்பின் பெயரென்ன..”‘ என்று அத்தியாயம் முடிகிறது. இந்தப் பின்னலைத்தான் மேலே சொல்கிறேன்.

Comments
Post a Comment