Translate

கவனித்தலின் அடிப்படைகள் : : ஒரு சுய பரீட்சை :-)

கவனித்தலின் அடிப்படைகள்: (https://www.jeyamohan.in/203824/)



இது ஒரே ஒருமுறை மேற்கண்ட காணொளியை கண்டு, அதை என்னால் கவனிக்க முடிந்ததா என்று சந்தேகத்தில்,  செய்த சுயபரிசோதனை. பதினைந்து நிமிடம் தான் ஆனாலும் சிறு முயற்சி.

எது கவனித்தல் இல்லை?

சொல்பவர் சொல்வதை கேட்டு அதிலிருந்து நாம் புரிந்துகொண்டதை சுருக்கிச் சொல்வது கவனித்தல் ஆகாது. நீங்கள் புரிந்துகொண்டது சொன்னவர் சொல் கிடையாது. அதற்க்கு அவர் பொறுப்பேற்க முடியாது. பெரும்பாலும் கவனித்தல் என்று சொல்லப்படுவது இதுவே. ஆனால் இது கவனித்தல் ஆகாது. இரண்டாயிரம் வருடங்களை வேதாந்த குருமரபுகளில் சொல்லப்படும் கவனித்தல் வேறு.

இந்தப் பிழையை சுட்டிக்காட்ட நித்யாவின் குருகுலத்தில் ஒரு முறை அசைந்து உட்காரும் போது தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை விளக்குகிறார். நித்யா ஜேயை அவர் பாடம் கவனிக்கவில்லை என்கிறார். இவர் கவனித்தேன் என்கிறார். பின்னர் சொல்லக் சொல்கிறார். இவர் அவர் சொன்னதை சுருக்கித் தான் எடுத்துக் கொண்டதைச் சொல்கிறார். குரு இதுவல்ல தான் சொன்னது என்கிறார். சாராம்சத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் அவரே சொல்லியிருக்க மாட்டாரா? தான் ஏன் இவ்வளவு சொல்ல வேண்டும் என்கிறார்? பின்னர் பிற மாணவர்களை சொல்லச் சொல்கிறார். எல்லோரும் முன்னவர் விட்ட இடங்களில் இருந்து தொடங்கி சொல்லி முடிக்கின்றனர். இது தனக்கு பெரும் திறப்பாக அன்று இருந்ததாக சொல்கிறார். இவ்வாறு நித்யாவின் மாணவர்கள் பாடம் கவனித்து, பின்னர் நினைவில் வைத்து எழுதியவையே எல்லா நூல்களும் என்று சொல்கிறார். பின்வரும் நாட்களில் தானும் கவனித்து , நித்யா உரைகளை புத்தகமாய் எழுதியதாகவும் கூறுகிறார்.

கவனித்தல் என்றால் என்ன?  

கவனித்தல் என்பது சொல்பவரின் சொற்களை அப்படியே மாறாமல் வாங்கிக் கொள்வது.

கவனித்தலின் போது  நிகழும் பிழைகள் என்ன?

1. சொல்லிக்கொண்டிருக்கும் போதே கேட்பவர் மனம் எதோ ஒன்றை சொன்னதில் இருந்து  பிரித்து எடுத்து அதன் பின்னே ஓடுதல். உதாரணமாக   வாழையடி வாழை என்பது வாழையை நினைவுபடுத்தி, பின் அப்பாவின் காரியங்களை நினைத்து, அப்பாவை நினைத்து, பின்னர் பாட்டியை நினைப்பது. இவ்வாறு வழி தவறி ஓடிய மனம் பின்னர் வேறிடத்தில் வந்து இணைந்து கொள்ளும். நடுவில் சொல்வதை தவற விடுவோம். இந்தப் பிழை முயற்சி செய்து களையப் பட வேண்டும். 

2. சொல்லிக்கொண்டிருக்கும் போதே கேட்பவர் மனம் சொல்லிக்கொண்டிருப்பதை மறுத்தல். மனம் மறுத்தபடி இருந்தால் கேட்க முடியாது.

18ம் நூற்றாண்டில் இந்தியா வளமாக இருந்தது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது , அது எப்படிப் பின் பஞ்சம் வந்தது என்று உள்ளே நினைப்பது. இடையில் ஒரே மறுத்துப் பேசுபவர்கள் கவனிக்க முடியாது.

3. paraphrasing - சொல்லிய சொல்லை ரத்து செய்து, வேறொரு சொல்லை போட்டு சொல்லுவது. அன்புதான் மனிதனை உருவாக்கும் பண்பு  பண்பு என்று ஒருவர் சொல்லும் போது , சிறிது நேரம் பின்னர், பாசம் தான் மனிதனை உருவாக்கிய பண்பு என்று சொன்னதாகச் சொல்வது. எழுத்தாளராக தான் சந்திக்கும் பெரிய பிரச்சனை இதுதான் என்கிறார். தான் சொல்லாததை வேறொரு சொல்லை வைத்து தான் சொல்வதாக சொல்வது. தான் எழுதிய பரபக்கங்களை , தன்னுடைய கருத்தாக எடுத்துக்கொள்வதும் இதில் அடங்கும். இன்றைய மீடியா பேச்சுக்களில், கட்டுரைகளில் திரித்து எழுதுவதற்கு இந்த யுக்தியே பின்பற்றப் படுகிறது.

சொல்லியவரின் சொல் மாறாமல் பரபக்கம் சொல்லியே , மறுப்பே ஆனாலும் சுபக்கம் சொல்லப்பட வேண்டும். நாத்திகம் என்பது முன்னால் வலுவான தரப்பு. நாளடைவில் நம்பிக்கையும், நிறுவனமும் இல்லாமல் காணாமல் போனது. இந்த நாத்திகத் தரப்பை தேவிபிரசாத் சட்டோபாத்யா , எம்.என்.ராய் போன்றவர்கள் வேதாந்தத்தின் பரபக்கங்களில் இருந்தே மீட்டு எடுக்க முடிந்தது. இன்று நாம் நூல்களில்  காணும் நாத்திக தரப்பு எழுத்துக்கள் இவ்வாறு சேகரிக்கப்பட்ட்டது. எதிரியே ஆனாலும் அவரும் மறுக்கமுடியாத வகையில் பரபக்கத்தைச் சொல்லி, அதை நாம் மறுக்கும் காரணங்களை பின்னர் சொல்ல வேண்டும். 

இவை இன்றைய கல்லூரிகளிலோ இல்லை வேறு எங்குமோ கற்பிக்கப் படுவதில்லை. இது வேதாந்த மரபில் மூவாயிரம் வருடமாய் நடந்து வரும் பயிற்சி. இதை மரபு 'ஸ்ரத்தா ' என்று சொல்கிறது. இதற்காக விவேகானந்தர் தனிப் புத்தகம் எழுதியிருக்கிறார். 

எழுதியபின் திரும்பப் பார்த்து எழுதியது :-)  :

வாக்கியங்கள் சொன்ன இடங்கள் வரிசை மாறியிருக்கிறது. இதையும் சுருக்கம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையாய் சொன்ன இடங்கள் விடுபட்டிருக்கிறது. 


Comments