ஒட்டி உறவார் உறவு
வேலை பார்க்க ஆரம்பித்து சில மாதங்கள் ஆகி இருந்த போது சில வாரங்கள் டெல்லியிலிருந்து வேலை பார்க்க வேண்டி இருந்தது. கூட இன்னொருவர். என்னை விட வயதில் மூத்தவர், திருமணமாகியிருக்க வேண்டும் . நேரத்திற்கு வேலைக்கு வந்து விடுவார் , சரியாய் ஆறு மணிக்கு சென்று விடுவார். வடக்கு, தெற்கு பிரிவு போல அன்று மைக்ரோசாப்ட் , சன் பிரிவுகள் இருந்தன. மைக்ரோசாப்ட் பிரிவைச் சேர்ந்தவர். எதற்கும் கோபமே வராது , சிரிக்கும் போது சரியாய் வெட்டிய மீசைக்குப் பின்னால் இருந்து அழகிய பற்கள் தெரியும், கால்ச்சட்டையை தூக்கி விட்டுக் கொண்டு 'டெல் மீ மேன் ' என்பார்.
முதல் முறை விமானம் , டெல்லி எல்லாமே. இதற்கு மேல் போய் செய்ய வேலை இருக்கிறது. போன் வழியாக நம்மை உள்ளூர மிரட்டிக் கொண்டிருந்த அந்த அம்மா நேரில் என்ன செய்வாரோ தெரியவில்லை. பேசிக் கொண்டு இருக்கும் போதே , ஒரு எல்லையில் பெரிய மூச்சு விட்டு, 'த்சு' என்ற ஒலியுடன், 'வி வில் டீல் வித் இட் பேஸ் டு பேஸ்' என்று கோப்பில் தள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.
காலையில் வெயிட்டரிடம் இட்லி கேட்டேன் , சப்பாத்தி கிடைத்தது. தெருக்களில் காலையில் பூரிகளை சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். ரொட்டியை குறுக்காக இரு துண்டுகளாக வெட்டி, கடலை மாவில் தோய்த்து , எண்ணையில் பொரித்து டீயுடன் சாப்பிட்டதை முதலில் பார்த்த போது ஒரு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது நினைவில் வருகிறது. நாஞ்சில் நாடன் கூறிய கடுகெண்ணெய் வாசம். அவித்த உருளைக்கிழங்கை தயிரில் மசித்து செய்த ஒரு 'ரைத்தா' நினைவில் எழுகிறது .
எங்கள் இருவருக்கும் சேர்ந்து ஒரே அறை, ஒட்டிய இரு படுக்கைகள். பெங்களூரில் ஒரு வீட்டில் எட்டு பத்து பேர் சூழ இருந்து கொண்டிருந்த எனக்கு இரண்டு என்பது மிகப்பெரும் தனிமையே. சத்தத்தை நினைத்தால் அங்கு தூங்க முடியாது.ஆழ்துளை கிணறு லாரிக்காரர்கள் ஊருக்குள் போர் போடும்போது புதிய சத்தத்தில் ஊரில் ஒருவர் தூங்க முடியாது. ஆனால் லாரிக்காரர் வண்டியிலே ஓரத்தில் நன்றாய் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் . அதீத ஒலி என்பது நிசப்தத்தின் அருகில் இருக்கும் என்கிறார்கள். எந்த ஒரு ஒலியிலும் நாமே ஒரு ஒழுங்கைக் கண்டு கொள்ளும் போது , அதை சகித்துக் கொள்ள முடிகிறது. இசைக்கும் ஓசைக்கும் உள்ள இடைவெளி.
நான் படுத்ததும் தூங்கி விட்டேன் . இவர் நடு ராத்திரியில் என்னைத் தொட்டு எழுப்பினார். பின் அவர் கட்டிலில் போய் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டார். என்ன என்று கேட்டேன். 'மேன் , யூ ஸ்நோர் ஹெவிலி ' என்றார். எனக்கு ஸ்நோர் என்றால் அர்த்தம் தெரியவில்லை, அதுவும் நம் காதில் ஒரு ஒலிதான் . மேலும் நான் குறட்டை விடுவது எனக்கு அதுவரை தெரியாது. 'ஓகே' என்று சொல்லி விழித்துப் பார்த்து திரும்பப் படுத்து விட்டேன். மீண்டும் சில முறை எழுப்பினார், ஒருவாறு என் குறட்டை ஒலி அவரை தூக்கமில்லாமல் செய்கிறது என்று புரிந்தது. எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. குறட்டை அதிகமானால் தயவு பார்க்காமல் எழுப்புமாறு சொன்னேன். அன்றிரவு என்னை அவர் பல முறை எழுப்பினார் , நான் பல முறை திரும்ப தூங்கினேன்.
மேலே நடந்ததை சிறிதாக்கும் விதம் இன்னொன்றை சொல்லியாக வேண்டும். அப்பா குறட்டை ஒலி முன் பின் தெரியாதவர்களை அதிர்ச்சி அடைய வைக்கும். ஏனென்றால் பெரும்பாலும் நாம் கேட்கும் குறட்டைகள் ஒரே சீராகவே இருக்கும், ஸ்தாயி மேலோ கீழோ இருக்கலாம். இத்தகையவை ஒரு சில நிமிடங்களில் ஒரு மாதிரி செட் ஆகி விடும். அப்பா இதன் நடுவில் ஒரு இடி முழக்கம் தனித்து வரும். இதை நீங்கள் கணிக்க முடியாது, இங்குதான் அதிர்ச்சி ஏற்படும். ஆனால் , அப்பா ஒரு நாள் என்னிடம் என் குறட்டை சத்தத்தில் தூங்கவே முடியவில்லை என்றார்.
சில வாரங்களுக்கு முன் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார்கள். சா.கந்தசாமி தொலைந்து போனவர்கள் படித்தால் இது எவ்வளவு கடினம் என்று தெரியும். 1983-ல் எழுதப்பட்ட நாவல். நாவலின் கேள்வி இள வயது நட்பு ஏன் நாளடைவில் நொறுங்கிப் போகிறது, யார் அதை தொலைக்கிறார்கள் என்பது. அதில் கேள்வியே இருக்கிறது, விடை நம் வாழ்விலேயே உள்ளது. எல்லோருக்கும் ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அதில் ஒரு சில துண்டுகள் தொலைந்து போனவர்களிடமும் இருக்கின்றன. இதை ஒட்டியே ஆட்டோகிராப் திரைப்படம் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்.
ஆனால் இந்த கதையின் அடியே ஓடுவது அவர்களுக்கிடையே தெரியும் வறுமையே என எனக்குப் படுகிறது . ஆனால் இன்று இவ்வாறு இல்லை என்றே நினைக்கிறேன். நான் பார்த்தவரை யாரும் அடிப்படையில் மாறியதாகத் தோன்றவில்லை. ஒன்று சேர்ப்பது, சேர்வது கடினமாக இருந்தாலும் , அதன் பின் தயக்கம் இல்லாமல் எல்லோரும் இருந்ததாகவே நினைக்கிறேன். விடிய விடிய பேச்சு, விடிந்த பின் பேச்சு என்று பொழுது கழிந்தது. ஆண்டு பலவாக நரை இல ஆகுதல் சொல்ல முடியாது - அனேகமாக அனைவருக்கும் வெளுத்துவிட்டது, நம்மைப் போல் சிலருக்கு விழுந்து கொண்டு இருக்கிறது. - அனேகமாக அனைவருக்கும் வெளுத்துவிட்டது, நம்மைப் போல் சிலருக்கு விழுந்து கொண்டு இருக்கிறது. சில நண்பர்கள் தொழில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்பாக்கள் பிள்ளைகளைப் பற்றி நிறைய உணர்ச்சியுடன் பேசினார்கள். சூசகமாக சம்பளத்தை எடை போட நண்பர் சிலர் முயன்றனர், யாரும் வழக்கம் போல் பிடி கொடுக்க வில்லை. யாராவது வெளிப்படையாக கேட்டிருந்தால் பலர் சொல்லியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். கொள்கை , அரசியல் பேச்சுக்கள் குறைந்து , பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேச்சு கூடி வந்தது. மற்றபடி நினைவின் மீட்டல்கள், அங்கிருந்து பீறிட்ட சிரிப்புகள்.
ஆனால் அந்த இடம் - இலைக்கடல், - காட்டைக் கண் முன் காட்டிவிடும் ஒரு சொல்...எங்கும் நீளக் கிடக்கும் இலைக்கடல்கள்..
திக்குத் தெரியாத காட்டில் ...
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்கும் இலைக் கடல்கள் - மதி
வஞ்சித் திடும் மகிழ சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்
(ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் , கிதார் மட்டும் பின்னணியில் மெல்லியதாய் , கண்ணை மூடினால் சில மணித்துளிகள் காட்டை அனுபவிக்கலாம்.)
இங்கும் எல்லோருக்கும் சேர்ந்து ஒரே இடத்தில் படுக்கை. பாதை போக மீதி இடத்தில் எல்லாம் மெத்தைகள் விரிந்திருந்தார்கள். எட்டுப் பேர் ஒரே இடத்தில் , ஒரு வழியாக விளக்கு அணைக்கப்பட்டது. நான் நடுவில் விழித்து விட்டேன் , எதோ காற்றும் மழையும் இருப்பதாகப் பட்டது. குளம் , கண்மாய் நடுவில் இருக்கிறோமோ, தவளைகள் மழை எதிர் பார்த்து கத்துகின்றனவா? ஜன்னல், கதவுகள் சரியாக மூடப் பட்டிருக்கிறதா. இல்லை ...பல குறட்டை ஒலிகள் சேர்ந்து நம்மைக் குழப்பியிருக்கிறது. மழைப்பாடல் வேறு படித்துக்கொண்டிருக்கிறேன், இதுவும் சேர்ந்து தான் இப்படி ..
"அது தவளை ஒலிதானா என்று ஐயத்துடன் எழுந்தான். உடுக்கின் தோலை சுட்டுவிரலால் சுண்டுவதுபோன்ற ஒலி. மெல்லிய குரலில் எங்கோ தவளைகள் தங்கள் மந்திரத்தைச் சொல்லத் தொடங்கின. மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! கோடிகோடி மானுடக்குரல்கள் இணைந்தாலும் விண்ணளவுக்கு எழமுடியாத வேதநாதம்.
மழை பெய்யட்டும். வெந்த மண் குளிரட்டும். காய்ந்த பாறைகள் சிலிர்த்துக்கொள்ளட்டும். வெடித்த ஏரிகளில் வானமிறங்கி நிறையட்டும். கருகிய ஊற்று முகங்களில் கனிவு எழட்டும். இருள் நிறைந்த கிணறுகளுக்குள் மெல்ல ஒளி ஊறி நிறையட்டும். கோடையின் அனைத்து எச்சங்களையும் பெருக்கிச் சுழற்றிக் கொண்டு செல்லட்டும் மழை. மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்டும். ஏனென்றால் இங்கு உயிர்கள் வாழ்ந்தாகவேண்டும். அவை வாழாமல் விண்ணில் தெய்வங்களுக்கும் வாழ்வில்லை."
வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.
Comments
Post a Comment