சிறியன செய்தல்
எப்போதும் சுற்றி இருப்பவர்கள் செய்யும் வேலையை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு.
காரணம், உடல் உழைப்பு மனதளவில் எளிதாய் தோன்ற ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன. நான் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். வேலை பார்க்கும் நால்வரில் அல்லது ஐவரில் ஒருவர் வேலையை மேற்பார்வை செய்பவர். கீழே இருப்பவர்கள் வேலையை விளக்குவது, அவர்கள் செய்வதை பிறருக்கு விளக்குவது, தம் வேலை ஊடுபாவும் இடங்களை சரியாகத் தெரிந்து, அறுபடாமல் அவற்றை இணைப்பது, முடிவில்லாத திட்டமிடல்கள், ஆயத்தங்கள் . ஆக வேலையைப் பற்றி பேசியே பெரும்பாலும் நேரம் கழிகிறது. ஒரு தளத்தில் எல்லாமே ஒன்று போல் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எழுதும் முன் , ஒரு வேலையைப் பற்றி , இரு குறுஞ்செய்திகள் , இரண்டு போன் கால், ஒரு மெயில் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இதில் இருக்கும் காலக்கெடுவும், சாதாரணமான தன்மையும் தான் நமக்குள் சலிப்பாகவும் , மனப் போராட்டமாகவும் மாறி விடுகிறது. சுந்தர ராமசாமியின் இந்த கவிதை அடிக்கடி மனதில் வந்து போகும். கொட்டி மட்டும் தான் தீர்க்க முடியும், அடுத்தநாள் ஆஜர் கொடுத்துதான் ஆக வேண்டியுள்ளது. இப்போதைக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
"வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரையேற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல் வாழ்வின் கடைசி தேசல் இப்போது
இன்னும் ஆயத்தங்களை தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர் வாழும் கானல்"
எனக்குத் தோன்றிய , அட, இப்படியும் ஒரு வேலை இருக்கிறதா(இருக்காதா :) என்று நினைக்க வைக்கும் ஒரு சில வேலைகள்.
-இப்போது நான் வேலை பார்க்கும் இடத்தில் , நாளெல்லாம் லிப்ட்-ல் கதவை திறந்து மூடும் வேலையை வயதானவர் செய்கிறார். பார்த்ததும் தெரியும் தமிழ் முகம். கொரோனா காலங்களில் மாஸ்க் இல்லாதவர்களை ரொம்ப கடிந்து கொள்வார். ஆங்கிலத்தில் பேசுவார். ஆட்கள் நுழைந்ததும் எழுந்து விடுவார். பெரும்பாலானோர் தளங்களை அவரே அறிந்திருப்பார். ஆங்கிலத்திலேயே பேசுவார், குட் மார்னிங் , குட் டே என்று என்னிடம் மறவாமல் சொல்வார். கையில் ஒரு பாக்கெட் சைஸ் புத்தகம் எந்நேரமும் இருக்கும். படித்துக்கொண்டே இருப்பார். சிலமுறை தயங்கி பின் ஒரு நாள் கேட்டேன், 'டிக்ஷனரி யா அது?'. 'இல்லை, பைபிள் ' என்று சொன்னார். கடந்த சில நாட்களாக இன்னொருவர் இருக்கிறார், ஏனோ தெரியவில்லை.
- இன்றைய அலுவலங்களில் நாற்காலியில் எப்படி அமர்வது என்று சொல்லித் தருகிறார்கள். இது என்றுமே எனக்கு பெரிய வியப்பாக உள்ளது. எர்கோனோமிக்ஸ் என்று தனிப் பிரிவு உள்ளது. ஓரிரு வருடங்களுக்கு முன், என்னை அறியாமலேயே என் சீட்டுக்குப் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். நான் நாற்காலியில் அமர்வதைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டார். பார்க்கும் திரைக்கும், நாற்காலிக்கும் இருக்க வேண்டிய கோணங்களை விளக்கினார். உடம்புக்கும் , தாங்கும் பலகைக்கும் இருக்க வேண்டிய இடைவெளி பற்றி சொன்னார். பின்னர் கையை மேஜையில் எவ்வாறு வைக்க வேண்டும், கை மொழியை மௌஸ் அழுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் சொல்லச் சொல்ல நாம் படித்ததெல்லாம் , செய்ததெல்லாம் பின் வாசல் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. உட்காருவது இவ்வளவு பெரிய விஷயமா , தெரியவில்லை. இப்போது இதைத் தட்டும் போது நாற்காலியில் குறுக்கு வசமாக உட்கார்ந்து இருக்கிறேன், கால்கள் கைகள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன. மடியில் வைத்த வண்ணம் விசைப்பலகை. அலுவலகத்தில் பலர் designer நாற்காலிகள் , மேஜைகள் வாங்குவதைப் பார்க்கிறேன் - எர்கோனோமிக்ஸ் உதவியோடு .
-நான் 11,12ம்வ குப்பு படிக்கும் காலங்களில் சில லீவுகளில் பாட்டியிடம் தனியாக இருக்க வேண்டி வரும். அந்த வயதில் பாட்டி ஒரு லைப் கோச் என்றே தோன்றும். எனக்கு எப்போதும் ஜிம்மில் பர்சனல் டிரைனர் என்றால் ஒவ்வாமை. இவர் நம் டம்ப் பெல் ஒரு வழியாக பன்னிரண்டை நினைத்து 7-ல் தாவு தீர்ந்து கொண்டிருக்கும் போது , 'சார் கமான் , லெட்ஸ் டூ 20..5 மோர் சார் ..5 மோர் ...' என்பார் . அடுத்த நாள் அவர் இல்லாத நேரம் போக வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இன்னும் ஓரிரு நாட்களில் பக்கத்தில் இருக்கிற பார்க்கில் ரெண்டு சுற்று அதிகம் கூட சுற்றலாம் என்று தோன்றும். இப்போதெல்லாம் பர்சனல் டிரைனர் தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும். இல்லையென்றால் கிட்ட வரமாட்டார்கள். நாம் செய்வதெல்லாமே தப்பு தான் என்ற மாதிரி சுற்றி சுற்றி வருவார்கள். நமக்கென்ன, காதிலும் ஏர்போட் இருக்கிறது.
பாட்டி லைப் கோச் என்றால் ? வேலைதான் .காலையில் எழுந்திருக்கும் போதே மதுரையில் வீடு சோலார் பேனல் போல் தான் இருக்கும். பாட்டி 5 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார். அப்பொழுதுதான் வெள்ளை குழல் டியூப் லைட்டுகள் வர ஆரம்பித்திருந்தன. எழுந்ததும் விளக்கை போட்டு விடுவார். ஒளி வெள்ளம் என்று சொல்வார்கள். இது என்ன என்று அறிய வேண்டுமானால் இந்த வகை டியூப் லைட்டை நேர் கண் கொண்டு பார்க்க வேண்டும் - ஒழுகும் வெள்ளருவி, எழுதரு மதியம். பின்னர் காப்பியை போட்டு வைத்துக்கொண்டு பாடிய வண்ணம் இருப்பார். பின்னர் இரண்டு மூன்று நாள் தயிர்களை ஒன்றாக கொட்டி மத்தால் கடைய ஆரம்பிப்பார். நமக்கு மத்துறு தயிர் போல் தூக்கம் கலைந்தும் , அயர்ந்தும் இருக்கும். பாடிக்கொண்டே இருப்பார். திடீரென்று அமைதி, கடையும் ஓசை மட்டும் கேட்கும். என்ன யோசித்து இருந்திருப்பாரோ ? அன்றாடம், அருகில், தொலைவில் எத்தனையோ இருந்திருக்க வேண்டும். 'எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? ' . கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் தண்ணீரில் தொடங்கும். முந்தய நாள் சில்வர் குடங்கள், செருவங்கள் கழுவி கவிழ்த்திருப்பார். இவை குடிக்க , சமைக்க, உள்ளே கையையோ, விரலையோ விட்டால், பார்த்து விட்டால்,, தண்ணீரை சிமெண்டு தொட்டியில் கொட்டி மறுபடியும் பிடித்து வர வைப்பார். கோச் அல்லவா ? முதல் இரண்டு மூன்று நடை தூங்கும் என்னை எழுப்ப மாட்டார். பின்னர் 'மணி எட்டு ஆகுது, வெள்ளை வெளிச்சம் வந்தாச்சு , போதலயா?' என்பார். அடுத்த இரண்டு குடங்களில், 'ஒரு கிழவி இப்படி உனக்கும் சேத்து சுமக்கிறாளே , எந்திக்க தோணலயா...ஒங்க ஊர்ல சரி, இங்க சரிப்படாது ' என்பார். இதற்கு மேல் தூங்கினால் சரி வராது. பாட்டி என்றால் குழாயில் விட்டு விடுவார்கள். நமக்கு வரிசை இருந்தாலும் விட மாட்டார்கள், 'தம்பி இந்த ஒரே குடம், வேலைக்கு போனும்' என்பார்கள் . பாட்டி புளோ அறுபட்டதால் திரும்பி குழாயடிக்கு வருவார். 'இப்படியா எல்லாரையும் விட்டு நிப்ப... , இப்படி இருந்தா நம்ம பொழைக்க முடியுமா...மடைய சாம்பிராணி' என்பார். மற்ற கிழவிகள் பார்ப்பார்கள். 'நான் இங்க நின்னு பிடிச்சு தாரேன்..கொண்டு போய் ஊத்திட்டு, படக்குன்னு வரணும்...' என்பார்.
நேரம் செல்லச் செல்ல நம் நிலைமை அனல் மேலே பனித்துளி போல. எப்போவாவது ரேஷன் கடைக்கு அனுப்புவார். ரேஷனில் சர்க்கரை போட்டால் கொஞ்சம் எளிது. ஜன்னல் கம்பிக்குள் கார்டு வாங்கி பதிபவர் உட்கார்ந்து இருப்பார். வரிசை வந்து கார்டை நீட்டும் போது பாட்டி சொல்லிவிட்டதை அவரிடம் சொல்லவேண்டும். எனக்கு இரண்டொருவர் முன்னால் இருக்கும்போதே கூச்சம் வந்து விடும். கேட்காமல் விட முடிவு செய்து கடைசியில் அவர் நோட்டை வாங்கி எழுதிக்கொண்டு இருக்கும் போது, 'அண்ணே ! கார்டுக்கு மேல சீனி ஒரு கிலோ பாட்டி கேட்க சொல்லுச்சு.. ' என்றேன். 'மூணு பேர் பாட்டி கார்டுக்கு ஒன்றை கிலோ தான் வரும்..போய் பாட்டிட்ட எடுத்துச் சொல்லு..எல்லாரும் இப்படிக் கேட்டா நாங்க என்னா செய்றது... '. பாட்டி சென்றதும் சொன்னதைக் கேட்டு, சாயந்திரம் திரும்ப அனுப்புவார்.
மண்ணெண்ணெய் என்றால் இன்னும் சிரமம். ஊரே ஒரு திருவிழா போல் இருக்கும். அடுத்த நாள் காலையில் தரையில் சிந்திய எண்ணெய், உருட்டி விடப்பட்ட டிரம்கள், இன்னும் நிற்கும் எண்ணெய் நிரம்பிய டிரம்கள், இன்னும் எதாவது தேறுமா என்று முயலவிருக்கும் ஒரு சில பேர். முதலில் நீங்கள் பதிந்து டோக்கன் வாங்க வேண்டும். ஜன்னலில் எண்ணிலாக் கைகள் முளைத்துத் தொங்குவது போல் இருக்கும். வரிசையில் ஒரு சில மணி நேரம் ஆகும். அப்போது நான் அனுபவத்திருந்த , இதற்கு அடுத்த கடினமான வரிசை என்றால் , எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் பதியும் வரிசை தான். இது அதை நெருங்க முடியாது. ஒரு வழியாக டோக்கன் வாங்கினால் , கேன்களை வைத்து இன்னொரு வரிசை இருக்கும். ஒருவர் உட்கார்ந்த வண்ணம் கேன்களில் ஊற்றிக் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சில பேர் ஓங்கி குரல் உசத்தி சண்டை போட்டுக் கொள்வார்கள். சரியாய் நம் வாய்ப்பு நெருங்கும் போது, டிரம் தீர்ந்து , இன்னொன்றை உருட்டி பிறட்டி எடுத்து, படுக்க வைத்து, சுத்தியல் உளி வைத்து சீல் திறந்து , ஒரு வழியாக புளோ அட்ஜஸ்ட் செய்து பின் திரும்ப உட்காருவார். பல விதமான நாழிகள் எனப்படும் குடுவைகள் தட்டில் வைத்திருப்பார். நமக்கு ஒரு லிட்டர் , அரை லிட்டர், கால் லிட்டர் எது என்று தெரியாது. வாங்கிய ஒரு வழியாக வீடு சென்றால் பாட்டி 'குறைச்சு குடுத்து ஏமாத்திட்டான்' என்பார்.
'நல்லா துணிய துவைச்சு, காயப்போட்டு, குளிச்சுட்டு , வீட்டுக்குள்ள வா' என்பார். ஒரு விடுமுறையில் துணி துவைக்க கற்றுத் தந்தார். எழுந்ததும் சர்ப் தூள் போட்டு ஊற வைக்க வேண்டும். ஒரு மணி கழித்து , கரையில் நின்றவாறு குளிக்கும் முன் துவைக்க நம்மை ட்ரில் வாங்குவார். ரெண்டு வாளி இருக்கும். காலுக்கும் கீழே தான் நீர் இருக்க வேண்டும். பிரஷ் போட்டு காலர் தேய்க்க வேண்டும். ஒரு முறை அலசிய நீரை மறுமுறை, இன்னொரு முறை மேலோட்டமாக அலச உபயோகிக்க வேண்டும். காயப்போடும் முன் சட்டையை பிழியக் கூடாது. அப்படியே போட்டால் கசங்காமல் அணியலாம், தேய்க்க வேண்டியதில்லை. உள்ளாடைகளை துவைத்து கும்மும் போது செல்லும் நுரைநீரில் போட வேண்டும். கடைசியில் துவைக்க வேண்டும்.
அம்மாவிற்கு சமையலறை மேலே உள்ளே திண்டில் நின்று , கீழிருந்து கொடுக்கும் பாத்திரத்தை கவுத்து,துணியை இழுத்து , தூசிபடாமல் போர்த்தி விட்டு கீழே இறங்க வேண்டும். 'நீ வந்து செய்யணும்னு இருந்தேன்' என்பார்கள். பின் உரித்து, காயப்போட்ட கொப்பரையை அரைத்து எண்ணெய் வாங்கி வர வேண்டும். பாலிசி தவணை கட்டுவது, வீட்டு வரி கட்டி வருவது, வங்கிக்கு செல்வது போன்ற இன்னும் சில. இப்போதெல்லாம் மூளையைக் கீறாத , திட்டமிட, யோசிக்க ஏதுமே இல்லாத, உடலே மட்டுமான இம்மாதிரி வேலைகள் தான் அணுக்கமாய் உள்ளன.
“என் நல்லாசிரியர் எனக்குச் சொன்னது ஒன்றே. நான் முற்றறியக்கூடியது ஒன்றே. என் கையை. என் கையை விரித்து நான் செய்த வலையை. அவ்வலை எனக்களிக்கும் மீன் மட்டுமே நான் அறியக்கூடும் உண்மை.”

Comments
Post a Comment