Skip to main content

சைக்கிள் பதிவுகள் -6 - இருகால் புரவி



அன்று மாலையில் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன் , அன்றே கிளம்பி ஊர்ப்பக்கம் செல்வதாகத் திட்டம். நம் சைக்கிளைப் பற்றி நமக்கு எப்பவுமே உயர்ந்த எண்ணம் தான். அவ்வப்போது பிரேக்கை முறுக்கி விட்டுக் கொண்டால் போதும். காற்று கூட இரண்டு மாதம் ஒரு முறை அடித்தால் போதும். ஆனால் இந்த மெக்கானிக்குகளிடம் இருந்து வண்டியைப் பாதுகாக்க வேண்டும். சென்ற முறை, சர்வீஸ் செய்யலாம் என்று போனேன். பொதுவாக கழுவிக்கொடுப்பார்கள். முதல் இரண்டு நாள் லகுவாக செல்வது போல் தோன்றும், அப்புறம் நினைப்பு சரியாகி விடும்.  ஆனால் அம்முறை  அவர் மின்கலத்தை நீரில் தோய்த்து , காயும் முன் சார்ஜ் செய்திருக்கிறார். உள்ளிருந்த அமிலக் கரைசல்  வெல்லமாய் வெளியே வந்து  ஒட்டி இருந்தது.  பழியை நம்மேல் மாற்றி, மின்கலத்தை மாற்றிகொள்ளுமாறும்,  அடுத்த முறை சர்வீஸ் ஓசியில் தருவதாகச் சொன்னார்.  வேறுவழி இருக்கவில்லை, தமிழ்நாட்டுக்காரர், ஒரு சண்டை, இறுதியில் இருவரும் பாதி வழி இறங்கி வந்து முடிந்தது. மெக்கானிக்கை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகச் சொல்லி, என் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்தினார். 

பக்கத்தில் ஒரு இந்திக்காரர் சைக்கிள் பழுது பார்க்கிறார். ஒரு 2 x 3 x  8 பெட்டியில் முழுக்கடை இருக்கிறது. நடுவயது, உயரமாய் ஓங்கு தாங்காய் இருப்பார். ஜீன்ஸ் பாண்ட், முழுக்கை சட்டைதான் போட்டிருப்பார். காலையிலே  வாயில் பாண் ஊறிக்கொண்டிருக்கும்.     இவருடன் உரையாடுவது நமக்கு ஒரு பெரிய சவால். ரெண்டு ஆங்கில வார்த்தை, கடைசியில் 'கரோ/கர்தோ  பையா '. 'பிரேக் டைட் கரோ  பையா', 'தோடா ஆயில் கர்தோ '.   பிரேக் பாதி பிடிக்கும் போதே , இதற்கு மேல் முடியாது என்று சொல்லி விடுவார். இதற்கு மேல் நம் இந்தி வார்த்தைகளும் டைட் ஆகி விடும். அன்று அவரிடம் ஓங்கி அழுத்தும் போது, 'தடக்' என்ற ஒலியுடன் சங்கிலி தடம் புரள்கிறது என்று சொல்லிச்  சரி செய்ய வேண்டும். 'செயின் சே டக்  சவுண்ட் ஆத்தாகே' என்றேன். பின் சக்கரத்தை தரையில் இருந்து தூக்கிவிட்டு ஓரிரண்டு முறை பெடலை கையால் சுற்றினார்.  'சவுண்ட் நஹி ஆத்தாகே' என்றார். நிறுத்தியபின் ஓங்கி அழுத்தும் போது சத்தம் வருகிறது என்று அடுத்து சொல்ல வேண்டும். தரை தட்டி ' ரோட் சே ட்ரை கர்தோ, ஆத்தாகே '  என்றேன். வண்டியில் ஏறி சில அடி முன் சென்று பின் வந்தார். பின்பு செயின் மாற்ற வேண்டும் என்று கூறினார். எப்போதும் போல் முழு சர்வீஸ் செய்யச் சொன்னார், லேபர் உள்பட 950 ரூபாய் , பார்ட்ஸ் தனி என்றார். ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொல்லி , அன்று வெளியே வந்தேன். பின் இன்னொரு கடையில் 7வது கியர் பல் தேய்ந்து விட்டது, 6வது கியரில் ஓட்டிப் பார்க்கச் சொன்னார். ஓடிக்கொண்டிருக்கிறது. எதிலும் தீர விசாரிப்பதே ...

விவேக் நகர் என்பது நம்மூர் வெளி வீதி , மாடவீதி போல் இருக்கும். இந்த பகுதியில் சுமை ( இரும்புக்கம்பிகள் ) ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகள் பார்க்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவில் நடந்த ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் இப்பகுதியில்தான் உள்ளது. வீடுகளாக்கி விற்று விட்டார்கள்.  மிகக் குறுகலாய் ஒரு ரோடு , இரண்டு பக்கத்தையும்  பிரிக்கும் ஒரு சிறு கல் சுவர்  தடுப்பு. குறுக்கே கடக்கும் தெருக்கள், நடுவே சாலை. சாலையின் இருபுறமும் இருக்கும் தெருவுகளுக்கும் நேர்கோடு போட முடியாது. எறும்புகள் போல் நெறுக்கி வந்து இடிக்காமல், வளைய முடியும் வரை வளைந்து கொடுத்து , விலகி சென்று கொண்டே இருப்பார்கள். முடியாத இடத்தில் நின்று, அடுத்தவர் கடக்கும் வரை அங்குலம் அங்குலமாய்  நெருக்கிய வண்ணம் இறுக்க வேண்டும். உடைபடும் போது பீறிட்டுக கடக்க வேண்டும். கடக்கும்  பஸ் , கார் , பைக் எல்லாமே இப்படித்தான். சைக்கிள் பிரேக் இந்த இடத்தில் சவால் சந்திக்கும். நான்  நிற்கும் பேருந்தைக் கடந்து, செல்லும்முன் பிரேக்கை பிடித்து உடனே திருப்பி , இடதுபுறம் பேருந்தை ஒட்டியபடி செல்ல வேண்டும். ஏனென்றால், பேருந்தை எல்லோரும் வேகமாய்க்  கடக்க முயல்வார்கள். அது ஒரு மாமலைபோல் அந்த இடத்தில் நின்று இருக்கும். ஒரு மிதியில் அழுத்திவிட்டு, பிரேக்கை பிடித்தேன். இரண்டு பிரேக்கும் ஹாண்ட் பாரில் முட்டியது. இது போல் முன்பு ஆனதில்லை. வண்டி கட்டுப்படாமல் போய்க்கொண்டிருந்தது. அந்த நாட்களில் சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, பிரேக் சரியாய் பிடிக்காது என்று சொல்லியே கடைக்காரர் கொடுப்பார். மோதாமல் நிற்காது என்று தெரியும். மதம் கொண்ட யானை... அந்த வயதில் சீட்டில் இருந்து குதித்து, திமில் பிடித்து மாட்டை அடக்குவது போல் தோளின் கீழ்  சீட்டைக் கொடுத்து அடக்கி நிறுத்துவார்கள். இந்த வயதில் இறங்கமுடியாது, இறங்கினாலும் அடுத்த வண்டியில் தான் இறங்க வேண்டும். ஒரு வழியாய் பக்கத்து காரில் சிறிது இடித்து நின்றது. நடுவயது மனிதர், குழந்தை மனைவி பார்க்க கையை விரித்து என்ன இதெல்லாம் என்றார். ஆக கடவுள் இருக்கிறார், இதோடு நின்றது. அப்புறம் சரியாக பிரேக் பிடிக்க முடிந்தது. ஒரு முறை , ஒரே ஒரு முறை...(இன்றும் ஒரு முறை, அதனால் தான் இன்று  எழுதுகிறேன்). அன்று வீட்டில் சொல்லி இருந்தால் ஊருக்கு சகுனத் தடையாக மாறி இருக்கலாம், பின்னர் எழுதுவது நல்லது.

சோனி சிக்னல் கடந்து , ஒரு தேனீர் பருகி திரும்ப வண்டி எடுத்தேன். அவர் அணிந்திருந்த சட்டை டெலிவரி பாய் என்று சொல்லியது. சைக்கிள் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் அப்பா தாத்தா ஒட்டிய சைக்கிள் , ஊரில் இருந்து கொண்டு வந்து இருப்பார் என நினைத்தேன்.   அன்றுதான் சைக்கிள் இரண்டாய் உடைவதைப் பார்க்கிறேன். அதுவும் ஒட்டிக் கொண்டிருக்கும்போதே முன் பாதி சைக்கிள் முறிந்து தனியாய் விழுந்தது. பின் சக்கரம், ஹாண்டில் பார் தனியானது. இவர் வலது கால் அடியில் சிக்கி நசுக்கப் பட்டது. அவரால் திரும்பி  எழுந்ந்திருக்க முடியவில்லை. நான் வண்டியை  நிறுத்திச்  செல்வதற்குள் மற்றொருவர் சைக்கிளை ஓரமாய் இழுத்து, அவரையும் கைத்தாங்கலாக பார்க் செய்யப்பட்ட வண்டிக்கு முன் நிறுத்தினார், பின் சென்று விட்டார். நான் மருத்துவமனை செல்ல வேண்டுமா, ஆட்டோ வேண்டுமா என்று கேட்டேன். வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு எனது கன்னடம் புரியவில்லை. இப்போது எங்கள் இருவரையும் நெருங்கி பரதேசி போல ஒருவர் வந்தார். குப்பையில் இருந்து பிளாஸ்டிக் போத்தல்களை சாக்கில் சேகரிக்கும் வேலை செய்பவர் . தோளில் பெரிய அழுக்குச்  சாக்கு. நீள தாடி, முதியவர், அறுபதுக்கு மேல் இருக்க வேண்டும்.   கீழே விழுந்தவரைப் பார்த்து , 'ஏனப்பா , இது ஒந்து சைக்கிளா, நினு இதண்ணு ரஸ்தாயிலே ஹெகே ஓடிசுத்திரி'. என்னைப் பார்த்து 'அவனென்னு ஆஸ்பத்திரிக்கே கற்கொண்டு ஓகி...ஒள்ளெய வைத்தியரு முந்தின ரஸ்தாயெல்ல இதாரே..' என்றார். விழுந்து கிடப்பவருக்கு அவர் ஏதோ வைகிறார் என்று தெரிந்து இருக்க வேண்டும். எனக்கு நேர்ந்தது சிறியதாக பட்டது இப்போது. 

ஹிந்தி முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். 'டீகே பையா ?...கடே ஹோ சக்தே ஹெய்ன் '   என்றேன். 'தொடா டைம் லெஹெகா...' என்றார். 

'கர் கிதர் ஹெ'  என்று கேட்டேன்.

'அகலே ரஸ்தே மே' முனகினார்.

சைக்கிளை எடுத்து மீண்டும் ஓட்ட ஆரம்பித்தேன். அடுத்த சிக்கினலில் நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். அவர் அங்கேயே தான் உட்கார்ந்து இருந்தார். சைக்கிளை ஒட்ட வைக்க உட்கார்ந்த படி முயற்சி செய்து கொண்டிருந்தார்.           


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...