வெள்ளிவீழ்த் தாரைகள்
கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல் மாலை ஐந்தரை ஆறு மணிக்கு மழை பெய்கிறது. ஏரியைச் சுற்றி நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாய் இருப்பது போல் இருக்கிறது. பாதி சுற்றில் இருக்கும் பாலம் அருகில் நின்று பார்த்தால், மழைக்கடவுளுக்கு வயிறு கலங்குவது போல் வடமேற்கு மூலையில் கரு மேகங்கள் திரள ஆரம்பிக்கும் - வீறு அணிந்தவன் மேனி நிற மேகங்கள். தென் கிழக்கு மூலையில் இன்னும் வெள்ளை மேகங்கள் இருக்கும் - நீறு அணிந்த கடவுள் நிறத்த வான். இன்னும் கால்வாசி முன்னகரும் முன், ஒரு சில கனமான துளிகள் உடம்பில் தெறித்து விழும். கண்டிப்பாக புது வழுக்கையில் ஒரு சில துளிகள் படும். பட்டதும் காதில் ஒரு தகர ஒலி அதிர்வுகள் ஏற்பட்டு, மூக்கினுள் எதோ இறங்குவது போல் இருக்கும். நடு வழியில் இருக்கும் முதியவர்கள் 'அரே , பாப்ரே...' என்று முன்னால் போவதா , பின் வாங்குவதா என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் மழை கியரை மாற்றியபின் அங்கிருக்கும் ஒரு பத்து இருபது பேர் ஓட ஆரம்பிப்பார்கள். ஒரு நாய்க்கூட்டம் நிதானமாய் ஓட ஆரம்பிக்கும். கழுத்தில் கட்டப்பட்ட நாய்கள் சிலரை பிடித்து இழுத்தவாறு ஓட முயற்சிக்கும். பூங்கா பெண் காவலர் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து, கல் பெஞ்சில் இருந்து எழுந்து நின்றார். அடுக்கங்களில் ஒரு சில பெண்கள் பால்கனியில் வந்து எட்டிப் பார்த்து நின்றனர். நான் பின் வாசலுக்குச் செல்லும் முன் மழை வலுத்திருந்தது. மூங்கில் மரத்தின் கீழ் நின்றேன். மழைத் தாரைகள் அம்புகளென குளத்தில் விழுந்த வண்ணம் இருந்தன - சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்.
ஆனால் நேற்று சைக்கிளில் திரும்பி வரும் போது மழையில் சிக்க வேண்டியதாகி விட்டது. இது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அன்று இது நடக்க வேண்டியது போல் தோன்றியது. இரு காரணங்கள் . ஒன்று, தேடி வாங்கிய கம்பராமாயணத் தொகுப்பு. ஒரு நீண்ட முன்னுரைகளுக்குப்பின் அன்று ஆற்றுப்படலம் வாசித்து இருந்தேன். இதைப் படிப்பதை முக்கி முனக வேண்டியிருக்கும் நமக்கு, எத்தனை மொழிகளில் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது, எப்போது , யார் எழுதியது, ராமாயணக் குறிப்புகள் எங்கு, எவ்வளவு வருகின்றன (உ-ம் மஹாபாரதத்தில் 700 பாடல்களில் ராமாயணம் வருகிறது) , பால காண்டத்தின் முக்கிய பகுதிகளை யார் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு ஒப்பிடல் என்று முன்னுரை நூறு பக்கங்களுக்கு மேல் செல்கிறது. JK சொல்லியபடி சாப்பிட, சாப்பிட பசி தான், குளிக்க குளிக்க மீண்டும் அழுக்குத்தான்...நிற்க, ஆற்றுப்படலம் மழை, வெள்ளம் பற்றியது. இரண்டாவது, அன்று காலையில் செல்லும் போது சைக்கிளை கழுவி நாளாகி விட்டது என்று எண்ணிக்கொண்டேன். உள்மனது அன்று மழை வந்தால் நல்லது என்று என்னை மீறிச் சொன்னது.
பார்க்கிங்கில் வண்டியை வெளியே எடுத்து சாலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்த போதே தெரிந்து விட்டது. இப்போதா , அப்போதோ , சரி. நகர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டியது, மழை பெய்யும் போது எங்காவது கடைகளில் நிறுத்தி ஒதுங்கிக் கொள்வது, மழை ஓய்ந்தபின் செல்வது. பின்பு மனதில் நிறுத்த வேண்டியது , ஒருசில இருண்ட பகுதிகளை . மழை மறைவுப் பிரதேசம் என்பார்கள். ஆனால் சைக்கிளில் நாம் அஞ்ச வேண்டியது மழைக்கு ஓபன் லைசென்ஸ் உள்ள மழைக்கு திறந்த பிரதேசங்கள். மழையில் மாட்டுவது என்பது , ஒதுங்க இடம் இல்லாமல் , போர் நடக்கும் ஒரு சமவெளியில் , மழையில் சிக்குவது. உதாரணம் , வழியில் உள்ள மிக நீண்ட மிலிட்டரி பகுதிகள். உயர்ந்த சுற்றுச்சுவர் இருக்கும், அங்கங்கு ட்ரெஸ்ஸ்பாஸ்ஸர்ஸ் பிரசிகியூடெட் பலகை இருக்கும், நெடிய பாதை இருக்கும், சைக்கிளில் நாம் இருப்போம் , அவ்வளவுதான்.
ஆனால் சிக்கல், முதுகில் மாட்டி இருக்கும் லேப்டாப் மற்றும் முன்னால் மழைக்கு வசமாய் முகம் காட்டி, சிலுவையில் மாட்டியது போல் தொங்கும் சைக்கிள் பேட்டரி கண்ட்ரோலர். மிகச் சிறிய சதுரமான சிவப்பு விளக்குகள், அங்கங்கே மிகச் சிறிய வட்டமான ஸ்விட்ச்சுகள். நம்முடைய கை, கால் , கண்களின் நீட்சி. இது மழையில் நனைந்து ஒரு முறை வண்டி நின்று விட்டது. அப்புறம் காய்ந்த பின் திரும்ப தானே சரியாகி விட்டது. எல்லோரும் போல் பேட்டரி இல்லாமல் ஓட்டுவது அவ்வளவு ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் மனதில் தான் கோணல். ஆக மழை தூர ஆரம்பித்ததும், கண்ட்ரோல் பலகையை காக்க மேலே ஒரு கைக்குட்டையை வைத்து மூடி முடிச்சு போட வேண்டும். கைக்குட்டை காற்றில் பறக்க வாய்ப்புள்ளது. லேப்டாப் பையின் மேல் போட தனி உறை வேண்டும். பையைச் சுற்றி இறுக்கி மூடிய பின்னும் , பைக்குள் நீர் இறங்கி ,லேப்டாப் நனைந்து விட்டது. நனைந்ததை உடனே வீட்டில் வைத்து ஆன் செய்தால் உயிர் முடிந்தது. இது நமக்கு நடந்திருக்கிறது.
மழை வரப்போகிறதென்றால் எல்லோரையுமே ஒரு பதற்றம் தொற்றி விடுகிறது . சிக்னல் விழுந்ததும் காது பிளக்கும் ஹார்ன்கள், இடைவிடாத இண்டிகேட்டர் ஒலிகள், உச்ச கட்ட அசிலரேட்டர் முறுக்கல்கள், ரோட்டின் இடது ஓர மூலையில் பிதுங்கும் வண்டிகள் என. எனக்கு இருந்த நோக்கம் எல்லாம், ஒதுங்கும் இடம் இருக்கிறதா என்ற யோசனையே. மிலிட்டரி கணக்கு அலுவலகம், மிக நீண்ட மிலிட்டரி ஸ்கூல் , இவைகளைத் தாண்டி முடிக்க வேண்டும். இரண்டும் சேர்த்து 2-3 கிமீ நீளம் வரும். இடையில் இரண்டு சிக்னல். திப்பு சுல்தான் வீழ்ந்த போது ஸ்ரீரங்கபட்டணத்தில் மைசூர் மாகாண தலைநகர் இருந்தது. இவர் அங்கு இருந்துதான் அரசு புரிந்தார். அவருடைய தந்தை ஹைதர் அலி கட்ட ஆரம்பித்த அரண்மனையை தான் கட்டி முடித்து ,கோடை அரண்மனையாய் வைத்து இருந்தார். இன்று K.R மார்க்கெட் பக்கம் இருக்கும் அரண்மனை. திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடம் (வெல்லெஸ்லி பிரபு ) நான்காவது மைசூர் போரில் தோற்ற பின் ஸ்ரீரங்கபட்டணத்தில் இருந்து ஆங்கிலப் படைகளை பெங்களூருக்கு நகர்த்தினார். இது 1809-ல் நிகழ்ந்தது. 1809-ல் மைசூர் மன்னரிடம் மிலிட்டரி குவாட்டர்ஸ் அமைக்க அனுமதி பெற்று ,அல்சூர் பகுதியை தேர்ந்தேடுத்தனர். அப்புறம் அதிகாரம் மன்னரிடம் இருந்து பிரிட்டிஷ் கமிசனர் கீழ் மாறிய பின் அதிகாரபூர்வ தலைநகராக பெங்களூர் மாறியது. மிலிட்டரி மருத்துவமனை, ராணுவ குடியிருப்பு வீடுகள் அப்போது துவங்கியவை. மார்க் கப்பன் மைசூரின் மூன்றாவது கமிஷனர், மன்னரிடம் இருந்து அதிகாரத்தை குற்றம் சாட்டி மாற்றிய குழுவில் இருந்தவர். இவர் ஞாபகமாகவே கப்பன் பார்க் என்று பெயர் .
ஒரு வழியாக பாதிக்குமேல் நனையாமல் கடந்தாயிற்று. லேசாக தூர ஆரம்பித்தது . இதற்கு முன் குழந்தைகளுக்கு பிடித்த வட இந்தியர் கடையில் இரண்டு சமோசாக்கள் வாங்கிக்கொண்டேன். கதவு திறந்தவுடன் பிள்ளைகள் முதலில் கையையே பார்ப்பர் , அப்புறம் முகம். இங்கு என்ன செய்வார்களோ தெரியாது, அப்பளம் போல் சமோசா வாயில் நொறுங்கும். கையால் அதை நொறுக்கி , பின்னர் மல்லிப்பொடியும், உப்பும், மிளகும் சேர்த்து அரைத்த தண்ணியில் கொதிக்கும் பச்சைப் பட்டாணி குழம்பை , உடைத்த சமோசாவில் ஊற்றி, அதன் மேல் அதன் மேல் கொஞ்சம் ஓமப்பொடியும் , அவல் மிச்சர் கொஞ்சம் தூவி , இன்னும் மேலே உப்பிட்டு அரைக்கப்பட்ட கறிவேற்பிலை , மிளகாய், எலுமிச்சை விழுதை சிந்தி கொடுப்பார்கள். பெருங்கூட்டமாய் நின்று தின்ன வண்ணம் இருப்பார்கள். தினமும் கடையை பார்த்தபடியே கடப்பேன் , என்றாவது ஒரு நாள் பார்சல் வாங்கிச் செல்வேன். பை நிறைந்து இருந்தது. ஏற்கனவே காலையில் கொஞ்சம் கேரட் , பீட்ரூட்(ஸ்னாக்ஸ்) வாங்கியது இருந்ததும் ஒரு காரணம் . மழை ஓங்கிப் பெய்ய ஆரம்பித்து இருந்தது. வானை நோக்கிப் பார்த்தேன், மேகம் இருக்கிறதா அல்லது இருட்டி விட்டதா என்று தெரியவில்லை. வானம் முழுதும் ஒரே ஒரு மேகம் போல் , பூசி சீராய் வழித்து விடப்பட்ட கருஞ் சுவர் போல. ஒதுங்க வேண்டியதாயிற்று. ஒரு உயரமான கட்டிடத்தின் சன் க்ஷேட் அடியில் வண்டியை நிறுத்தி ஒதுங்கினேன். ஒரு சிறு திண்ணை அளவு உள்வாங்கிய உள்பகுதி. வேறு இடம் நினைத்தால் முழுதும் நனைய வேண்டும். ஸ்விக்கிக்காரர் இங்கு வண்டியை நிறுத்தி எதிர் கட்டடத்தில் நின்றிருந்தார். கை அழைத்து கூப்பிட்டார், தயங்கி அங்கேயே நின்று இருந்தேன். இரு சக்கர வாகனங்கள் முழுதும் நின்றிருந்தன. ஸ்விக்கிக்காரர்கள் மட்டும் ஒரு சிலர் சென்றனர். ஒரு சிறுவன் சத்தமிட்டுக் கூவியபடியே , ஒரு கால்பந்தை உதைத்த வண்ணம் தெருவில் ஓடினான். ஓங்கி காற்று அடிக்கும் போதெல்லாம், மழை நீர் , யானை துதிக்கை அள்ளி நீர் தெளிப்பது போல் தெளித்துச் சென்றது. வண்டி நன்றாய் கழுவப்பட்டு இருந்தது. கைக்குட்டை முழுதும் நனைந்து இருந்தது. கால்ச்சட்டை பையில் இருந்த கைபேசியில் ஒரு சில படங்கள் எடுத்தேன். லென்ஸ் ஈரம் பட்டு , படங்கள் மழைத் தெளிவில் தெரிந்தன. டச் ஸ்கிரீன் நீரால் வழுக்கியது, துடைத்த இடத்தில் இன்னும் தண்ணீர். கடைசியில் ஒருவாறு பின் பக்கம் சட்டையில் துடைத்து எடுத்தேன். மதம் கொண்ட யானைக் கூட்டம் போல் பேருந்துகள் நீரை வாரி இறைத்த வண்ணம் சென்றன. ரோடு தெரியாத வண்ணம் நீர் ஓடிக்கொண்டிருந்தது. காலி போத்தல்கள் , ஒரு பனியன், சிறு துணிகள், புகையிலை உறைகள், ஊறிய காகிதங்கள்..சிதறிய மணித்துளிகள். மண் , நீர் , இவை, எல்லாம் கலந்து காற்றில் ஒரு துவர்ப்பு மணம்.
எல்லாப் பொருட்களையும் இடம் மாற்றி விடுகிறது மழை. அன்று ஒரு இறந்த வெள்ளைப் பூனை மதிச்சுவரின் வெளியே , நடக்கும் பாதையில் , கடந்து போய்க்கொண்டிருக்கும் மழை நீரின் நடுவில் கிடந்தது. . நீர் பட்டு , தூய வெண்ணிறமாய், கால்கள் ஒறுக்கி படுத்தது போல் இருந்தது. ஒரு நிமிடம் துணுக்குற்றேன், எதிரில் ஒரு பெண் கடக்க காத்திருந்தார். அவர் இன்னும் பூனையைக் கண்டிருக்க வில்லை. கண்டதும் விரீர் என அலறினார், ஒரு சில நொடிகள் , பின் கடந்து சென்றார்.
"முல்லையைக் குறிஞ்சி ஆக்கி.
மருதத்தை முல்லை ஆக்கி.
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
அரு மருதம் ஆக்கி.
எல்லையில் பொருள்கள் எல்லாம்
இடை தடுமாறும் நீரால்.
செல்லுறு கதியின் செல்லும்வினை
என. சென்றது அன்றே." - கம்பர்
ஆற்றில் செல்லும் பொருள்கள் எல்லாம் நீரால், விதி வழிச்செல்லும் வினை போல் ஆகும் - 'செல்லுறு கதியின் செல்லும் வினைபோல் ' பொருள்கள் நீரில் மிதந்து சென்றன. இங்கு எதிர் திசை கிடையாது, வெள்ளப்போக்கே வழி என்பது .
"நீர்வழிப் படூஉம் புனைபோல். ஆருயிர்
முறைவழிப் படூஉம். " - கணியன் பூங்குன்றனார் , யாதும் ஊரே , யாவரும் கேளிர் பாடல் வரிகள்.
மழை நின்று விட்டது, இரு புறமும் ஆறு போல் நீர். இதில் போனால் சைக்கிள் அழுக்காகும்,சரி,திரும்பக் கழுவ அடுத்த மழை தான் ...





Comments
Post a Comment