சில வருடங்களுக்கு முன் ஏனோ எங்காவது மஹாளயம் என்ற வார்த்தை கேட்டால் , எனக்கு உடனே பிரளயம் என்ற சொல் மனதில் ஓடும். ஜெயகாந்தன் பிரளயம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். 'சென்னையில் ஒருமுறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, 'கொடைவள்ளல்'களின் மான வெட்கமற்ற தற் பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்தது' என்று அவரே சொல்கிறார். ஆரம்பமே அம்மாசிக் கிழவனுடைய வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முதலாளியின் பையன். மாப்பிள்ளை சின்னான் அவர் வீட்டில் பிரைவேட் ரிக்சா ஓட்டுபவன். 20 ரூபாய் பணம் , ரெண்டு நாள் லீவு , அடுத்த நாள் கல்யாணம். அம்மாசிக் கிழவன் இந்தச் சேரியில் விதி விலக்கு, மனிதர்களுடன் ஒட்டவில்லை. குழந்தைகளுடன் தான் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனாலும் அவன் செல்லும் வழியெல்லாம் மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குழாயடியில் , பாயை விரித்து படுக்கும் இடத்தில் ,பாயை கையில் எடுத்து படுக்கப் போகும் வழியில் மனிதர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோரிடமும் பெரியவர் பேசியபடியே செல்கிறார், கடைசியில் அவர்களின் அந்தக் கீழான இடத்தை லேசாகத் தொடுகிறார். இவர் காலி டப்பா அதனால் யாரும் ஒன்றும் சொல்ல முடிவதில்லை. நீதி சொல்வதற்கு அங்கு ஒன்றும் இல்லை. கீழே அவர் பேசும் சில பகுதிகள்.
"சீச்சீ! அவளெ நீ கெடுத்தேன்னு சொல்லிட்டா, உன்னைக் கெடுத்தது ஆருன்னு நான் சொல்றது?"
“இங்கே பொம்பளைன்னா, அதுவும் பெண்டாட்டின்னா அவ நாயி!... அடிமை... பிச்சைக்காரி!.... இவ அப்படிப்பட்ட பொண்ணில்லே. சரி, உனக்கெல்லாம் தெரியும். தெரிஞ்சவரைக்கும் போதும்”
"ஓஹோ! நீங்க இப்ப அரசியல் பேசறீங்களா?”
"ஆமாங்க... நீங்க ஆம்பிளை இல்லீங்களா!"
இவர் தான் கதைக்குள் வரும் ஜெ கெ. 'நியாயமென்பது முத்திரை இடப்பட்ட ஒரே மாதிரியான அளவுகோலல்ல. அது மனிதருக்கு மனிதர் காலத்தால் மாறுபடுகின்றது; ஆத்மாவுக்கு ஆத்மா சூழ்நிலைகளால் வேறுபடுகின்றது. அந்த வேறுபாடுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் மதிப்பளிக்காமல் நியாயமென்று நாம் நினைப்பதன் பேரால் ஒரே முத்திரையை இடுவதன் மூலம் நியாயமே அநியாயமாகி விடுகிறது.' இழிவையும் மேன்மையையும் காட்டியபடியே செல்கிறார்.
கல்யாண நாள் இரவு வெள்ளமும், பிரளயமும் சேர்ந்தே வருகிறது. பூமியையே தலைக்குமேல் அண்ணாந்து பார்க்குமளவுக்கு அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த மனித ராசிகளை - எங்கே இருக்கிறோமென்று உணர முடியாத அறியாமை இருளில் இருளில் ஆழ்ந்து, அங்கேயே சுகம் பெற்று, சோபனங்களில் லயித்து, உயரவேண்டுமென்ற சுய முயற்சியை இழந்து, சேற்றில் நத்தை போலும், புழுதியில் புழுக்கள் போலும் உழல்கிற அந்த மனிதக் கூட்டத்தை - இயற்கை கொடுத்த அந்தத் தாக்குதல், வேறு வழியின்றி வேறு இடங்களை நாடி ஏகச் செய்தது.' செல்வந்தர்கள் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க வருகிறார்கள்.
'மழை நாட்களில் மட்டுமில்லாமல் எல்லா நாட்களிலுமே அந்தப் பிரபலஸ்தரின் வீட்டில் - பொட்டணமாயில்லாமல், தட்டிலே தெண்டச்சோறு தின்னும் பேர்வழி ஒருவன் கூட்டத்தைக் கண்டதும் தன்னை மறந்து உணர்ச்சி வயப்பட்டு வண்டியின் முகட்டில் ஏறி நின்று கொண்டு, தனது எஜமானன் மீது கொண்ட 'நன்றி' உணர்ச்சியோடு வானத்தை நோக்கி வாய் பிளந்து, அந்தப் பிரபல மனிதனின் பெயரை முழக்கினான்.'
'தெண்டச் சோறு' இந்தப் பொட்டலச் சோற்றைக் காட்டி ஏக ஜபர்தஸ்துகளோடு "ஆம்பிளைங்க ஒரு பக்கம், பொம்பளைங்க ஒருபக்கம் வரிசையா நில்லுங்க.... இந்தாம்மா, அந்தப் பக்கம் போ!... யார்ரா அவன்? அறிவு கெட்டவன். அந்தப் பக்கம் போ!.... அவசரப் படாதீங்க; எல்லாருக்கும் உண்டு. இல்லேன்னா பின்னாலேயே இன் னொரு வண்டி கொண்டு வர்ரோம்! சத்தம் போடாமெ வரிசையாக நில்லுங்க. சத்தம் போட்டீங்கன்னா யாருக்கும் சோறு கெடையாது!" என்று கையிலொரு பிரம்பை எடுத்துக் கொண்டு சட்டாம் பிள்ளைத்தனம் புரிந்து...'
சத்தம் போட்டால், வாய் திறந்து பேசி மௌனம் கலைந்தால் அந்தச் சோற்றுப் பொட்டணங்களை விநியோகிக்காமல் அவனே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விடுவானோ என்ற அச்சத்தால், அவர்கள் அனை வருமே தத்தம் பக்கத்திலிருப்பவர்களைக் கட்டுப்பாட்டோடு இருக்கச் செய்யும் சட்டாம் பிள்ளைகளாக மாறினர். "ஐய்யய்ய, கம்னு இருங்கம்மே .....சீ! .... நீங்கள்ளாம் ஒரு பொம்பளை ஜன்மமா?" "அப்பிடியே அவளெ தலையிலே ஒண்ணு போடு சாமி!” "பேசாம இரேண்டா; இப்ப உன்னாலே எல்லாருக்கும் சோறு கெடைக்காம போவப் போவுது." “இந்தாப்பா... எங்க நைனா காச்சல்ல படுத்துக்கினு கீறாரு; அவுருக்கும் சேர்ந்து எங்கையிலேயே குடுக்கிறியா? இன்னாப்பா, மெய்யாத்தான்.... கொரலு குடேன் நைனா?" "தருமதொரை...."
கிழவனுக்குச் சாதாரணமாகவே இந்த எளிய மனிதர்கள் தங்கள் கண்களில் பசித்தீ கனன்று எரிய அலங்கோலமாய், அவசரமாய், ஆத்திரமாய், ஆவேசமாய், அள்ளிப் புசித்து வயிற்றை அடைத்துக் கொள்ளும் காட்சியைக்காண நேரும்போதெல்லாம் அவனது அடிவயிற்றில் என்னவோ ஒரு சோக உணர்ச்சி மூண்டு, நெஞ்சுவரை நிறைந்து கனக்கும்.. அதி உன்னதமான மகத்தான மனித ஜீவன் கடவுளின் அமிசத்தில் சைத்தான் பிரசன்னமானதுபோல் தன் உள்ளேயே மூண்டுவிட்ட பசி என்னும் கொடிய மிருகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், 'அது தன்னையேதின்று விடுமோ' என்று அஞ்சி அதன் வெறியைத் தணித்து அதனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவன் தவிக்கும் தவிப்பு… ஓ!
அம்மாசி நான்கு ஐந்து நாட்கள் சாப்பாட்டு பொட்டலங்களை மறுத்து டீ பன்னுடன் பொழுதைக் கழிக்கிறான். பிரளயம் பார்த்து அயர்ந்து போய் தர்மராஜன் சபையில் கொடை வாங்க வரும் கீரி அவன் தர்மத்தில் குறை கண்ட கதையை குழந்தைகளுக்குச் சொல்கிறான். தருமம்னா வாழ்க்கையிலே ஒவ்வொரு மனுசனும் கடைப்புடிக்க வேண்டிய ஒயுங்கு; கருமம்னா ஒவ்வொரு மனுசனும் செஞ்சே தீரவேண்டிய கடமை! இங்கே இவனுங்களுக்கு ஒயுங்கிருக்குதா? கடமை இருக்குதா? 'சோறு குடுக்கறானே, இது தருமம் இல்லி யா'ன்னு நீ கேட்பே... தருமம், - கருமத்தையோ கருமம் தருமத்தையோ கெடுக்கக் கூடாது. உண்மையான தருமம் இன்றது இன்னா தெரியுமா? நீயும் பசியோட இருக்கறே நானும் பசியோட இருக்கறேன்னு வெச்சிக்கோ... உனக்கே அரைவயிறு சோறுதான் கெடச்சிருக்குது; அதிலே கால் வயிறு எனக்குக் குடுத்தினா அதுக்குப் பேருதான் தருமம்... ஒயுங்கா வேலைக்குப் போறவங்களையும் பிச்சைச் சோறு குடுத்து உருப்படாம அடிக்கிறாங்களே... யாரு மேலேயும் குத்தமில்லே... அதுதான் தருமம்னு நெனச்சிகிட்டா அப்பிடி தான் நடக்கும்...'
ஆக இந்த ஐந்து ஆறு நாட்கள் கிழவனுக்கு மஹாளயம் தான் , இல்லையா?
கதை எங்கோ போய் விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் முதலில் மஹாளயம் பற்றிய் போர்வேர்டுகள்வர ஆரம்பித்தன. பொதுவாக என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆகாது போன்ற நீண்ட நெடிய குறிப்புகள், 25 காய்கள் ஒதுக்க வேண்டியது, 20 சேர்க்க வேண்டியது மற்றும் பல. இஞ்சி எப்போது காய்கறியில் விழுந்தது என்று தெரியவில்லை. மற்றும் சில தர்ப்பண விளக்கங்கள். எல்லாம் இருக்கும் நம்பிக்கைகளை சொல்பவை. மேலும் அதிகமாக இதில் நம் நம்பிக்கையை கோருபவை. ஆனால் வீட்டில் வெளியே எல்லாம் சேர்ந்து ஒரு பில்ட் அப் ஆகி வருவதை உணர முடிந்தது.
எனக்கு இந்த உபாசனைகளில் எல்லாம் நம்பிக்கை இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும் ஆனாலும் இந்த சொற்கள் கனல் போல் சில தெறிக்கின்றன, பின் எரிந்து மடிகின்றன. நீத்தார் கடன் செய்யும் ஒரு அரை மணி நேரம் உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கின்றன. நேற்றும் அப்பாவின் முகமும் , நினைவும், சொல்லும் மந்திரத்தின் நடுவில் வந்து நின்றது. ஊரில் எங்கள் வீட்டை மேற்கே ஒட்டி, இரண்டு வீடுகள் தள்ளி, தெற்கு நோக்கி ஒரு முடுக்கு வழி இருக்கும். வழியின் முடிவில் பிள்ளையார் கோவில், அதன் எதிரில் பஸ் ஸ்டாப். அப்பா இரவு வேலை முடித்து எட்டே முக்கால் மணி வண்டியில் இறங்கி நடந்து அந்த வழி தான் வருவார். ஒரு கையில் நீண்ட, மிக மெல்லிய பட்டைகளிலான டார்ச் லைட் இருக்கும். அறு கோண கண்ணாடி முகம், உள்ளே நடுவில் தெரியும் சிறிய நெற்றிக்கண், சிறு பூனை போல் தோன்றும். கீழே பார்த்த வண்ணமே பெரும்பாலும் அப்பா நடப்பார். என்ன தான் யோசித்து இருப்பாரோ தெரியவில்லை. ரோட்டில் இந்தக் கடைசியில் நிற்கும் என்னை கடைசியில் சில அடிகள் இருக்கும் போதே நிமிர்ந்தே பார்ப்பார். 'என்ன' என்பார், 'ஒன்னும் இல்லை' என்று சொல்லி, கையில் என்ன பொட்டலம் என்று நோட்டம் பார்த்து ஓடியது நினைவில் வந்தது.
மீண்டும் மந்திரம் காதில் விழுந்தது, கோத்திரம் சொல்ல வேண்டிய இடத்தில் நின்றது.
'அஸ்மது பிதரம் ...ஸ்வாதநமஸ் ..'
திரும்ப, அப்பா எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து இருப்பது போல், நான் செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது. பின் உடல் நலம் இல்லாத ஒரு இரவில் , அருகிலேயே படுத்துத் தூங்க சொல்லியது நினைவில் எழுந்தது. நான் இப்போது அமர்ந்து இருக்கும் இடமும் அது தான் என்று ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்று நினைப்பு வந்தது.
பின் 'ருத்ர ரூபம்' என்ற சொல்லில் மீண்டும் விழித்துக் கொண்டது. கடந்த மாதம் அம்மாவுடன் சுந்தரேஸ்வரர் சன்னதியில் வரிசையில் நிற்கும் போது, எதிரே வடக்கில் இருந்த நடராஜரைப் பார்த்து ஒரு பெண் 'காஸ்மிக் டான்ஸ்' என்று சொன்னது ஞாபகம் வந்தது. ஆம் ஆனந்தத் தாண்டவம் தான் அவர் ஆடுவது. அப்படியா ? வலதுகை உடுக்கை , இடது கை அகல் நெருப்பு அல்லவா ? எப்போதும் நிறையாத குடம் ? இல்லை , கீழே ஓட்டை உள்ள குடம் ...வற்றாத அனலும் , அதில் விழுந்து கொண்டே இருக்கும் நீரும்... நீரில் நெருப்பு என்று மனது சொல்லியது.
மறுபடி விழிப்பு 'ஹிரண்ய கர்ப ..கர்பஸ்தம்.'... பிரளயத்தின் பின் முளைத்த சுயம்பு...ராஜ ராஜ சோழன் தன் மனைவியருடன் துலாபாரம், ஹிரண்ய கர்பம் செய்தான் என்று கல்வெட்டு பற்றி படித்தது நினைவில் வந்தது. பிறப்பு முடியும் என தோன்றும் போது பசுவின் வயிற்றில் மறுபடி பிறந்து வெளியே வருவது போல் செய்யும் ஒரு சடங்கு, பின்னர் அரசர்கள் இறுதியில் வென்றதை தானம் செய்தார்கள் என்று கல்வெட்டுகளில் இருக்கிறது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு பிரளயம் என்றாகிறதா ?
ஒரு மாதிரி காரியங்களை முடித்து வண்டியை எடுத்து இன்னும் இரண்டு பேருக்கு தானம் பாக்கி கொடுக்க கோவில் செல்ல வேண்டும். வண்டியை எடுத்து பார்க்கிங் வளைவில் திருப்பினேன். ஒரு நீண்ட யானை போல், மிக மெல்லிய அசைவுடன் சென்று கொண்டிருந்த கம்பளிப்பூச்சியை என் கண்கள் நன்றாய் கவனித்து இருந்தன. கண்களின் கீழ் தான் அது போய்க் கொண்டு இருந்தது. மின்னற் பொழுதே தூரம்..பின் சக்கரத்தில் பாதி உடல் அடிபட்டு , ஒரு கருக்குழந்தை போல் உடலைச் சுருக்கி விழுந்தது. தள்ளி நின்று ஒரு சில கணங்கள் பார்த்தேன். அதனுடைய மின்னற்பொழுது அது, ஒன்றும் செய்வதற்கில்லை.
கோவிலுக்குள் பையுடன் சென்றேன். தானம் வாங்க வேண்டிய ஒருவர் பூணல் தொலைந்து விட்டது. பெரியவர் எங்கே என்று கேட்டார். அவர் உயிர்மெய் எனப்படும் தன் உடம்பெல்லாம் தேடினார் , கிடைக்கவில்லை. கடைசியில் என்னைப் பார்த்து பின் திரும்பி வேட்டியை அவிழ்த்தும் தேடினார். பெரியவர் அடக்க முடியாமல் பின்முதுகைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.

Comments
Post a Comment