Translate

ஒரு தொழில்நுட்ப உரசல்

 ஒரு தொழில்நுட்ப உரசல்


தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார்.    

"காய்த்துப்போன விரலிருந்தும்

எத்தனை அழுத்தியபோதும்

செயல்படவில்லை.


இது தொடுதிரை அப்பா

மெல்ல தொட்டாலே போதும்

அழுத்தவே வேண்டியதில்லை

சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை

இதோ இப்படி


அவன் விரல்

நீரின்மேல் ஏசு போல

நடந்தது

அவன் விரும்பியபடி

செயல்பட்டன எல்லாம்


உலகம்

எனக்கு வசப்படாமலிருந்தது

இதனால்தானா?

நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? "


...

மேல்தளத்தில்

எடையில்லாமல் நகர

என்னால் இயலவில்லை

முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்

பூ விரிவதை கண்டதில்லையா

செடி அழுத்துகிறதா என்ன?

ஆனால் நான்

பழுதடைந்த மின்விசிறிபோல

ஓசையிட்டபடி மலர்ந்தேன்

நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து

என் அப்பங்களை வேகவைத்தேன்

அது ஐந்தாயிரம்பேருக்கல்ல

ஐந்துபேருக்கே போதவில்லை.

என் ஏசு

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல

தேவைக்குமேல் சிலுவையேறியவர்.


தொடுதிரை போல் இன்னும் மெல்ல அழுத்தவேண்டிய , இல்லை தொடக்கூட தேவை இல்லாத பல இடங்கள் இன்று உள்ளன. 

பத்து வருடம் முன்னால் கார்களுக்கு ரிமோட் சாவி வர ஆரம்பித்தது. இப்போது காரின் அருகே சென்று நின்றால் அதுவே திறக்கும். சாவி பைக்குள் இருக்க வேண்டும் அவ்வளவே. மூடுவதற்கு கதவில் இன்னொரு ஒரு குறிப்பிட்ட இடத்தை லேசாய்த் தொட வேண்டும். உள்ளே சென்று உட்கார்ந்து சாவியை எங்கு போடுவது என்று தேடியும் காண முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது தொடுதிரை எரிந்து இடது ஓர பிரேக்கில் கால் வைத்து,  இக்னிஷனை அழுத்துமாறு சொன்னது. விளக்குகள் அதுவாய் எரிந்தன.போனில் விட்ட இடத்தில் இருந்து தானாய் பாட்டு மீண்டும் ஒலிக்க  ஆரம்பித்தது.

ஆனால் இத்தகைய விஷயங்கள் நம்மை நாளுக்கு நாள் சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கழுத்து பிடித்து, மூச்சு திணர்கிறதோ என்று தோன்றுகிறது.இப்போதெல்லாம் கூகுளை தமிழில் தேடும் போது , ஆங்கில பக்கங்களை தமிழில் மொழி பெயர்த்து வரிசையில் வைக்கிறது. அதை தமிழில் படிப்பதற்குள் மூச்சுத் திணறுகிறது. குப்பையைக் கிளறி , நினைப்பதை, வேண்டுவதை அடைவது கொஞ்சம் சிரமம் தான். அதுபோல் தேடும் போது சினிமா தான் பூத்து முன்னால் வரும். உதாரணமாய், திரௌபதி என்று அடித்தால் முதலில் ஒரு திரைப்படமே வரும். இவையெல்லாம் கொஞ்சம் உரசி,அடிபட்டு தான் சரியாய் வரும். அதற்கு முன் நாம் செய்யக்கூடியது அதைப் புரிந்து கொள்வது ஒன்றே.

இதைப்போல் கடந்த நான்கு ஐந்து நாட்களாய் ஒரு சம்பவம். இதற்கு முன் எனது பல் கடிக்கும் பழக்கத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒரு முறை ஒரு பத்துப் பேர் இருக்கும் மீட்டிங்கில் , சென்ற பதினைந்து நிமிடங்களாய் அவ்வப்போது ஒரு மெல்லிய நட்டைத்  திருக்கும் சத்தம் வந்து கொண்டே இருப்பதாகச் சொன்னார். இல்லை நான் பல் கடிக்கும் ஒலி தான் என்றேன். பொதுவாக இது காற்றில் கலந்து விடும், வெளிக்காதுகளுக்கு மாட்டாது. இது நமக்கு பல வருடப் பழக்கம். எதையும் தீவிரமாய்ச்  செய்யும் போதோ , இல்லை யோசிக்கும்போதோ எனது மேல்தாடையும், கீழ்தாடையும் இணைந்து கொள்ளும். ஒரு வேகத்தடையில் வண்டி ஏறி இறங்குவது போல் , பக்கவாட்டில் பற்கள் முன்னும் பின்னும் ஏறி இறங்கி  , ஒரு நட்டுத் திருக்கும் சத்தம், அல்லது மேல் மாடியில் ஒரு அம்மி அரைத்தால், கீழ் மாடியில் கேட்பது போல், மெல்லிய ட்ரில்லர் ஒலி போல், நமக்கே கேட்கும். இது பொதுவாய் வெளியே கேட்பதில்லை, ஏ.சி ரூம்களில் யாரும் பேசாமல் இருக்கும்போது வெளியே கேட்கும், எலி கரும்புவது போல் கேட்கும். புதியவர்களுக்கு பிடிபடாது.  

வழக்கமாக உடற்பயிற்சியின் போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ  இயர் போன், செவிபேசி (?)..இல்லை செவி மொட்டு (earbud ? )  போட்டு, பாட்டுக் கேட்பது வழக்கம் . இங்குதான் ஒரு வில்லங்கம் ஆரம்பமாகி இருக்கிறது. சென்ற ஒரு சில நாட்களாய் பாட்டு இடையில் வேறு எங்கோ ஒலிப்பது போல் , பாதாளம் சென்று , சில வினாடிகளில் மீண்டும் பூலோகம் திரும்புகிறது. பின்னர் ஒரு சில வரிகள். மீண்டும் காற்றில் பறக்கும் , மெல்லிய காற்றில் கட்டிய, சிறு ஒலி காதில் ஒலிக்க , திரும்ப ஒரு அலையென காற்றில் வரும்.  fading என்பார்கள். எனக்கு பிடிபடவில்லை. அப்புறம் ஒரு சில நாட்களில் புரிய ஆரம்பித்தது. நான் பல் கடிப்பதை , அது எதோ பேச வருவதாக புரிந்துகொண்டு , நமக்கு வழிவிட்டு அது பின் வாங்குகிறது. ஒரு நடைச்  சுற்றுக்குள் , நான் பாடலில் இருந்து விலகி  எங்கோ சென்று , பல்லைக் கடித்து மீண்டும் ஒரு பத்து முறை திரும்பி வர வேண்டியிருக்கிறது. இப்போது இது ஒரு விளையாட்டாகி விட்டது, பல்லைக் கடித்துக் கொண்டாவது , பல்லைக் கடிக்காமல் இருக்க வேண்டியிருக்கிறது.   

இதே போல் நாம் பாடல் வரியில் கரைந்து வாய் திறந்து கூட பாட ஆரம்பிக்கும் போது , அது பாடுவதை நிறுத்தி விடுகிறது. ஒரு வேளை சுருதி சுத்தமாக நாம் பாடும் போது அதுவும் கூடப் பாடுமோ, அதுவரை விடுவதாய் இல்லை ? இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாய் , தப்பு விழும்போது , தலையில் ஒரு அடியோ , இல்லை காதை எதாவது திருகிவிடுமா ? இன்னும் கொஞ்ச நாளில் , ஒலி பிறக்கும் முன்னே கண்டுபிடித்து விடுமா? இந்த மெல்லிய ஒலிக்கும், எண்ணத்திற்கும் இடைவெளிதான் எவ்வளவோ? 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2