வெண்முரசு நீர்க்கோலம் படித்துக்கொண்டிருக்கிறேன். பாண்டவர்களின் விராட பருவமும் , நள தமயந்தி கதையும் பிணைந்து சென்று கொண்டிருக்கிறது. நளனை பீமன் பாதி , தருமன் பாதி என்று எண்ணிக்கொண்டேன். எவ்வாறு பிறர் அறியாமல் மாறுவேடம் பூணுவது என்றபோது , தமனர் அவர் முனிநிலையில் பாண்டவர்க்கு சொல்லும் சொற்கள் மிக ஆழமானவை. மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவர முடியுமா? உள்ளம் மாறாமல் உடல் மட்டும் மாறினால் ஆகுமா? நம் ஒவ்வொருவரிலும் பல ஆளுமைகள் குடிகொண்டுள்ளன. நாம் நாமாகவே ஒன்றை மட்டும் எழுப்பி முன்னதாக வைக்கிறோம். மற்றவைகளின் மேல் அது ஏறி அமர்ந்து கொள்கிறது. நம் உடலும் உள்ளமும் அதுவாகவே ஆகிறது. எனவே , மாறுவேடம் பூண வேண்டியபோது, நமக்குள் பின்னால் இருக்கும் ஆளுமையை முன்னால் எழச்செய்தால் நடிக்க வேண்டியதில்லை. அது உள்ளே இருப்பதால் பயிலவும் வேண்டியதில்லை. இன்னும் மேலே சென்று , அடுத்தவரை தனக்குள் கீழே ஆழத்தில் புதைபட்டுக்கிடக்கும் ஆளுமையை வாயால் சொல்ல வைக்கிறார். பீமன் விராடபுரியில் அரண்மனைத் அடுமனைத் தலைவனாகிறான். திரௌபதி தருமனை சகுனி என்கிறாள் . தருமன் அவளைச் சேடி என்கிறான். நகுலனை பீமன் சாணி மணம் எழும் குதிரைச் சூதன் என்கிறான். நகுலன் பீமனை அடுமடையன் என்கிறான். ஒவ்வொருவருக்கும் பிறர் சொல்லியபின், காறித்துப்பவேண்டும் போல் ஒவ்வாமை வருகிறது, மறுகணம் ஆம் என்று தோன்றுகிறது. முடிவில் எல்லோரும் அவ்வாறே ஆகின்றனர்.
அந்த ஒரு வருடத்தில் அவர்கள் ஒவ்வொருவரிலும் ,அந்த கீழிருந்த ஆளுமை இயல்பாக மேலெழுந்து வருவது அபாரமாக சொல்லப்பட்டிருக்கிறது. பீமன் வலவன் என்னும் அடுமனையாளனாகிறான். நளன் கதை ஊடுபாவாக சொல்லப்படுகிறது. பெரிய புரவியலான், சமையற்கலைஞன். அவர் இவை இரண்டைப் பற்றி எழுதியிருக்கும் நூல்கள் இன்றைக்கும் உள்ளன என்று அறிகிறேன். அவன் பெயர் சொன்னதுமே ,ஊர் மக்களுக்கு நாவில் நீர் ஊறுகிறது. அநேக இடங்களில் அக்கால உணவு வந்து கொண்டே இருக்கிறது. தன்னிடம் சொல்லாமல் , தம்பி கலிங்கத்து இளவரசியை கல்யாணம் செய்து கொண்டு வரும்போது , வரவேற்று சிற்றரசனாக்கி , தானே சமைத்து விருந்து வைக்கிறான். தருமனும் , பீமனும் கலந்த கலவைதான் நளன் என நினைக்கிறேன். உணவின் இடையில் கலகம் செய்து எல்லோரையும் எழ வைக்கும் குலமூத்தவரை வெட்டிச் சாய்க்கிறான் . இந்த இடத்தில் அவன் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது.
ஆனால் வெண்முரசில் வரும் இந்த மெனுக்களையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று படிக்கும் போதெல்லாம் தோன்றுகிறது. சாம்பிளுக்கு ஒன்று இன்று.
"வலவன் "ஓரு புளியுப்புக் கரைசல் காய்ச்சு” என்றான். “இதோ…” என்றான் சம்பவன். “புளிக்காய்களும் உப்பும் அங்குள்ளன.” சம்பவனின் கைகள் பரபரத்தன. சில கணங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிபோல அங்குமிங்கும் உடல் பரபரத்தது. பின்னர் பாய்ந்து சென்று உப்பை எடுத்தான். திகைத்து அதை போட்டுவிட்டு மூச்சிரைத்தான்.
தன்னை திரட்டிக்கொண்டான். சில கணங்கள் விழிமூடி அத்தருணத்தில் தன்னை குவித்து பின் திறந்தபோது உடல் அமைதிகொண்டிருந்தது. உள்ளம் அந்த அமைதியை வாங்கி அலையவிந்தது. சிறிய மண்கலத்தில் புளிக்காய்களை எடுத்து உடைத்து உப்பும் மிளகும் சேர்த்து நீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்தான். கலம் சூடாகி புளியின் பச்சைமணம் எழுந்தது. மெல்ல ஓசை எழுந்து புளி வேகும் மணம் வந்தபோது எடுத்து இறக்கிவைத்து ஒரு கரண்டி நல்லெண்ணையை அதில் ஊற்றி மூடிவைத்தான். அடுப்புநெருப்பை அணைத்துவிட்டு “நோக்குக, ஆசிரியரே” என்றான்."
இன்று பையனுடைய பள்ளியில் PTM. அம்மா உள்ளே, அப்பா வெளியே. ஒரே கூட்டம், ஐந்து , ஆறு வயது பிள்ளைகள் எல்லாம் ரொம்ப பவ்யமாய் அம்மாக்களின் கை பிடித்து , இறுகிய முகங்களுடன் காரில் ஏறி, இறங்கிய வண்ணம் இருந்தனர். இரண்டு அர்ச்சகர்கள் வெளியே இருக்கும் கல்விக்கடவுள் காயத்ரி சிலைக்கு , 5 நிமிடத்தில் அபிஷேகம் , அலங்காரம் செய்து , மணியடித்து மந்திரம் சொல்லி பூஜை செய்து, கற்பூரம் காட்டினர். முதல் அய்யர் கொடுத்தார், அதுவரை போன் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது அய்யர் கண்ணில் ஒற்றிக்கொண்டார். எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர், யாரும் கண்டுகொள்ளவில்லை. தயங்கி போய் நின்றேன், செருப்பைக் கழட்டிவிட்டு வரச்சொன்னார்.
பார்க்கிங் எதிரே ஒரு NTR சிலை. ரொம்ப நாளை அம்பேத்கரோ என நினைத்தேன். புத்தகம் இல்லாததால் , மறு கேள்வி எழுந்து பின் NTR என்று அறிந்தேன். அதற்கு அடுத்தாற்போல் இந்தப் புளியமரம். அடுத்த அரைமணி புளியங்காய் பறித்துக்கொண்டிருந்தேன்.
மேல்கண்ட சமையல் குறிப்பை, செய்து பார்த்தோம். எல்லாம் சரியாக இருந்தது , புளி கொஞ்சம் ஸ்டராங். சிறிது வெல்லம் , ஓரிரு வற்றல் தேவை இருந்தது ...இப்போது எல்லாம் சமம்.
“சமையல் என்பது கலவை” என்றார் காலகர். உப்பு, புளி, காரம் என்னும் மூன்று. மாவு, ஊன், நெய் எனும் மூன்று. மூன்றும் நிகரமைகையில் உருவாகின்றது சுவை. ஒவ்வொன்றிலும் அந்த நிகர்ப்புள்ளி ஒவ்வொன்று. அப்புள்ளியில் மிகச்சரியாக அடுசெயல் நின்றால் சுவை.” பீமன் உரக்க நகைத்து கருணைக்கிழங்கு கூட்டை மரப்பிடியிட்ட சட்டுவத்தால் கிண்டியபடி “ஒருகணம் முன்னால் நின்றுவிட்டால் எழாச்சுவை. ஒருகணம் கடந்துசென்றால் மறைந்த சுவை. சுவையற்ற உணவென ஏதுமில்லை” என்றான். காலகர் வெண்டைக்காய் பொரியலை இளக்கியபடி “ஆம், சமையலறிந்தவருக்கு சுவை ஒரு பொருட்டல்ல” என்றார். “சுவை என்பது நாவறிவது. உணவிலிருப்பது சுவைக்கான ஒரு வாய்ப்புமட்டுமே” என்றான் பீமன்.
Comments
Post a Comment