ஒரு சனிக்கிழமை காலை
இப்போதெல்லாம் சனிக்கிழமை காலை, வாரநாட்களைவிட இன்னும் முன் எழ வேண்டியிருக்கிறது. வேறு என்ன, ஸ்ரீக்கு கால்பந்து பயிற்சி. ஐந்தே முக்காலுக்கு பள்ளியில் இருக்க வேண்டும். எலீட் கோச்சிங் என்று சொல்கிறார்கள். கிளம்புவதற்கு முன் கோச் நரம்பு புடைக்க 15 நிமிடங்கள் நின்றபடி பேசிக்கொண்டு இருந்தார். கீழே பையன்கள் பெரும்பாலும் கைகள் முட்டியை கட்டியபடி படி இருந்தனர். சிலர் நெளித்துக் கொடுத்து, அடுத்து படுக்க வழி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வண்டியில் திரும்பி வரும்போது,
'கோச்சு ரொம்ப நேரமா பேசினாரே , என்னப்பா சொன்னாரு ?"
'அது தியரிப்பா '
'அதான்ப்பா என்ன சொன்னாரு ?'
'டி பிரீபிங் ப்பா'
'...'
'என்ன நல்லா நடந்துச்சு , என்ன ட்ரபாக்ன்னு டிஸ்கஸ் பண்ணனும்...நான் போன மேட்சுல எல்லாரும் உயரமா ஒருத்தன பாத்து பயந்தோம்ன்னு சொன்னேன்..அதான் தோத்தோம்ன்னு சொன்னேன்...கோச் ஆமான்னு சொன்னாரு '
'பேச்சு சரி ...நல்லா ஓடி விளையாடணும்ப்பா...இடுப்புல கை வைச்சு நடுவுல நின்னுக்கிட்டே இருக்கக் கூடாது... '
'ஆமப்பா ...தியரிய விட ப்ராக்டிகல் தான் ப்பா எனக்கு பிடிக்கும்.'
மூன்று நான்கு வயது குழந்தைகளுக்கு டென்னிஸ் சொல்லிக்கொடுக்கிறார்கள். அன்று ஒரு அபார்ட்மெண்டில் தியரி நடந்து கொண்டிருந்தது. நான் அவன் வயதில் இருக்கும் போது எங்கும் வெட்ட வெளியே. எல்லாம் மைதானமே. இப்போது நகரங்களில் எங்குமே இட நெருக்கடி. எங்கும் வண்டிகள், கார்கள், நடுவில் விளையாட்டு. அன்று தெற்கு வெளிவீதியில் தீபாவளி தினம் சேட்டு வீட்டுப் பிள்ளைகள் நடுரோட்டில் குதூகலமாய் பிளாஸ்டிக் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்தேன். இன்று இருக்கும் பள்ளி மைதானமும் அவ்வளவே. மொத்தப் பள்ளியும் நான் படித்த பள்ளியின் மைதானத்திற்கு ஈடாகாது. ஆனால், இன்று இருக்கும் குழந்தைகளுக்கு இது பெரிதாய் இருக்கிறது. இன்றும் விளையாடிய வண்ணமே இருக்கிறார்கள்.
ஸ்ரீயை பள்ளியில் விட்டு , இடையில் இருக்கும் இரண்டு மணி நேரம் காலைப்பொழுதை வேடிக்கை பார்ப்பது ஒரு இனிய அனுபவமாய் இருக்கிறது.
'கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்; கனவிருள் அகன்றது காலையம்பொழுதாய்'. இரண்டும் இன்று இல்லை. இருங்களீற்றமும் , பிடியோடு முரசும் என வானம் இன்னும் கருமேகங்களாய் திரண்டிருந்தது.இருட்டில் சிலர் அங்கங்கே ஓடிப் பயின்று கொண்டிருந்தனர்.. ஒரு இளைய மாணவி , குதிரைவால் பின்னலுடன் வண்டிகளின் நடுவே அழகாய் ஒடிக்கடந்தார். சில சைக்கிள் குழுக்கள் , ஒரே மாதிரி உடுப்புடன் ஓட்டியபடி சென்றனர். கார்கள் , இருசக்கர வாகனங்கள் எதிர்பக்கத்தில் சில வந்து கொண்டு இருந்தன. கிரிக்கெட் கிட்டுகளை மாட்டியபடி வெள்ளை உடையுடன் சிலர் கடந்து சென்றனர். ஆறு மணி என்பது பெங்களூரில் மூணு மணி போல. ஒரு கடை இருக்காது. ஏழு மணிக்கு மேல்தான் டீக்கடைகள் திறப்பார்கள். ஆக இருக்கும் ஒரு சில கடைகள் பிஸியாய் இருக்கும். பொதுவாய் இவர்கள் முதல் புகை பிடிக்க வருவார்கள். ஆனால் ஒரு நாயர் பேக்கரி பள்ளிக்கு பின்புறம் விதிவிலக்கு. இவர் ஏனோ டீ கேட்டால் , முதலில் கையில் கிளவுஸ் மாட்டிக்கொள்வார். பின்னர் அடுப்பை பத்த வைப்பார்.
அங்கிருந்து இன்னும் கிழக்கே செல்வது வழக்கம். கிருபாநிதி கல்லூரி வழியே ஒயிட்பீல்டு செல்லும் வழி. என்னுடைய பழைய அலுவலகப் பாதை. முன்பு இவ்வழியில் ஒரு பெரிய நீரோடை. அதன் மேலே ஒரு வண்டிப்பாதைபோல் ரோடு. ஒரு சில இடங்களில் எதிரே லாரி வந்தால் சிக்கலாகி விடும். அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடமாய் இருந்தது. இப்போது எப்படியோ சரி செய்திருக்கிறார்கள். இன்னும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகவே இருக்கிறது. இங்கு ஒரு இடத்தில், கூட்டமாய் பருந்துகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஒன்று அமரும், பின்னர் அதே கணம் மற்றொன்று அம்பாய்ப் புறப்படும். பின்னர் இரு அம்புகள் வானில் சந்திக்கும் என எண்ணுகையில் , விட்டு விலகிப் பின்னர் கிளை வந்து அமரும். காகங்கள் சில பருந்துகளை துரத்தி விரட்டும். மிக அருகில் பார்க்கையில் , பருந்து இறக்கை முளைத்த மீனோ என தோன்றும். அதன் உடல் நடுப்பகுதி மீனைப் போலவே இருக்கும். வானில் நீந்தும் மீன்தான் அது. இங்கிருந்து சூரியன் உதிப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
அட லொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே
இன்னும் சற்றுத் தள்ளி ஒரு மைதானம் இருக்கிறது. இது ஒரு பொது மைதானம். பொதுவாய் கிரிக்கெட் மட்டுமே நடக்கும். அங்கங்கே பிட்சுக்கள் , ஒருமாதிரியாக பல குழுக்கள் விளையாடும். பல பேர் பும்ரா மாதிரி பந்து வீச முயல்வார்கள். பலர் ஒன்றிரண்டு பந்துகளுக்கு ஒருமுறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முனைவார்கள். அல்லது ஸ்கூப் செய்வார்கள். சேர்ந்து விளையாடிப் பார்க்கலாம் என நினைப்பேன். இப்போதெல்லாம் வயதை எண்ணத் தோன்றுகிறது. ஒரு வயதானவர் எல்லோரும் பார்க்க யோகம் செய்வார். ஓம் என்று சொல்லியவண்ணம் இருப்பார்.
ஆனால் இன்று வேறுவிதமாய் நடந்தது. வடிவேலு சொன்னது போல் எங்க இங்கிருந்த கிணறைக் காணோம் என்று ஆகி விட்டது.
நடு மைதானத்தில் வடக்கு நோக்கி பெரிய மேடை இருந்தது. பின்னால் பெரிய தட்டியில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் சிரித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெரிய செயற்கை அரங்கம் எழுப்பப்பட்டிருந்தது.கம்பிகளால் ஆன பார்வையாளர் பகுதி. சுற்றிலும் நாற்காலிகள் இடப்பட்டிருந்தன. நான் செல்லும்போது அநேகமாய் எவரும் இல்லை. ஒரு பெரிய உணவுக்கூடம், மறைக்கப்பட்டு உள்ளே வெங்காய மூட்டைகள் தென்பட்டன. உள்ளே ஒருவர் நிற்க, மற்றவர்கள் போய் வந்தார்கள், சிலர் தரையில் அமர்ந்திருந்தது தெரிந்தது. ஒரு ஓரமாய் இரவு உண்ட கமுகுப்பாளை உணவுத் தட்டுகள், முட்டைத் தொலிகள், பெங்களூரின் தேசிய உணவாம் புலாவ் சிந்தப்பட்டிருந்தது. கைகழுவி நீர் வழிந்தோடி , காய்ந்த தடம் இருந்தது.
எல்லாம் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் முன்னே சென்று ஒரு தட்டியை வாசித்து மாநில அளவிலான சப் - ஜூனியர் கோ - கோ போட்டி நடக்கிறது என்று அறிந்து கொண்டேன். ஒரு பத்து நிமிடங்களில் வண்டி வண்டியாய் படிக்கும் பிள்ளைகள் வந்து இறங்கினார்கள். மைதானமே நிரம்பி விட்டது. பெரும்பாலும் பெங்களூர் இல்லாத பிற ஊர்க்குழந்தைகள். பக்கத்தில் எங்கோ பள்ளியில் தங்கியிருக்க வேண்டும். ஒரு சிலர் இறங்கியவுடன் உணவுக்கூடம் சென்று எட்டிப் பார்த்தனர். ஆசிரியர்கள் சிறு சிறு பயிற்சி இடங்களை அங்கங்கு ஒருங்கிணைத்தனர். வரிசையாய் ஓட ஆரம்பித்தனர். நிறைய குழந்தைகள் செருப்பு இல்லாமலே வந்திருந்தன . செருப்புமட்டும் அணிந்தவை, கழற்றிவிட்டு ஓடின. சிலர் ஷூக்கள் அணிந்து ஓடினர். சிரித்த வண்ணம் இருந்தனர். ஒரு பெண் குழந்தை எல்லோரும் பார்க்க முதலில் இரு சிறு கற்களை ஏர் பிடிக்கும் வண்ணம் இரண்டு கைகளில் பிடித்து, கைகளால் ஓடிக்கொண்டே கோடுகள் வரைந்தது.
கோகோ உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் . இரண்டு கம்பிகள் , இரண்டு அணிகள், அணிக்கு ஒன்பது பேர். எட்டு பேர் இரு கம்பிகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாய் உட்கார்ந்தே இருக்க வேண்டும். மற்றும் ஒருவர் துரத்துபவர். எதிர் அணியின் மூவர் துரத்தப் படுபவர். எளிதாகப் பார்த்தால் , ஒரே ஒரு விதி தான் , துரத்துபவர் நேர் திசையில் மட்டுமே செல்ல வேண்டும். குறுக்காக, பின்னோக்கி ஓடக்கூடாது. ஆனால் தன் அணியில் அத்திசையில் அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பி ஓட வைக்கலாம். ஒருவர் துரத்தி, மூவர் பிடிக்கப் பட வேண்டும்.
எல்லோரும் பயிற்சியில் ஈடுபட்டனர். சிறு சிறு மைதானங்கள் தோன்றின. பயிற்சிப் போட்டியாதலால் , ஓடுவதற்கு சிலர் சண்டை பிடித்தார்கள். எல்லாம் மிக எளிய முகங்கள். அநேகமாக எவரிடமும் அலைபேசி இல்லை. ஒரு நீல ட்ரம்மில் குடிநீர் வைத்து இருந்தார்கள். எல்லாப் பிள்ளைகளும் அதிலிருந்தே போத்தலால் நீர் அருந்தினர். அங்கங்கே கோச்சுகள் வட்டம் அமைத்து பேசிய வண்ணம் இருந்தனர். பிள்ளைகள் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.இங்கும் தியரி தானா ... அர்ஜுனனுக்கும் , அஸ்வத்தாமனுக்கும் , துரோணர், தான் கங்கையில் தினமும் குளிக்கும் வழியில் சொன்ன பாடங்களை , ஏகலைவன் கண்ணில் படாமல் கேட்டே படித்தான் என்று கதை படித்திருக்கிறேன். சொல் தவிர வேறு தான் உலகில் உண்டா , தெரியவில்லை. நிகழ்கணம் தவிர மற்றெல்லாம் சொல் தான் அல்லவா ?







Comments
Post a Comment