Skip to main content

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2

 

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2

பெங்களூரில் நிறைய கேட்கநேரும் ஒரு பெயர் கெம்பே கவுடா என்பது. மைய பேருந்து நிலையத்தின் , விமான நிலையத்தின், ரயில் நிலையத்தின் பெயர் எல்லாமே ஒன்றே தான் . வீட்டை விட்டு வெளியேறி இவர் சிலையை பார்க்காமல் வீட்டிற்குள் உள்ளே வர முடியாது. சட்டசபையின் முன்னே வாள்பிடித்து , நடக்கும் குதிரையில் அவர் அமர்ந்து செல்லும் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது. புரவி நிலம் பார்த்து வல முன்கால் ஊன்றி , பின்னங்கால் அழுத்தி உயர்ந்தும், இடமுன்கால் காற்றில் எழுந்து, இடப்புற பின் கால் நன்றாய் ஊன்றி , ஒரு அபாரமான ஸ்னாப் ஷாட், சிலையில் வடித்தது. அவர் முகமும் கண்களும் எங்கோ வெளியைப் பார்த்து இருக்கும். கையில் தாளப் பிடித்த வாள் . சாந்த மூர்த்தம் என்று தான் சொல்ல வேண்டும்.  



பெங்களூருக்கு இரண்டு தலபுராணங்கள். 

 முதலாவது, ஹொய்சாள வம்சத்தை துவக்கிய வீரவல்லாளர் வேட்டையின் போது களைப்பாகி இன்றைய எலகங்கா வேளாண்மைக் கல்லூரி உள்ள இடத்தில் உணவு தேடி தனியாக ஒரு குடிசையில் நுழைந்தார். ஒரு வயதான பாட்டி வீட்டில் ஏதும் இல்லாமல் அவித்த வேர்க்கடலையை அரசனுக்கு அளித்தார். பசிக்  கொடுமையாக இருந்திருக்க வேண்டும். ஏதும் இல்லாத வனாந்திரத்தில் , ஒரே ஆளிடம் கிடைத்த வேர்க்கடலையின் நினைவாக இந்த ஊருக்கு 'பெங்கால் (பீன்ஸ்/கடலை)  ஊரு ' என்று வீரவல்லாளர் பெயரிட்டார். இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்திருக்க வேண்டும்.

இரண்டாவது , இந்த நகரை நிர்மாணித்த கெம்பெகௌடா , ஒரு நாள் வேட்டைக்கு வரும் போது முயல் நாயைத் துரத்தி ஓடுவதைக் கண்டார். இதை வீர பூமி என்று நினைத்து, இன்று நகரில் இருக்கும் கோட்டைக்கு அடிக்கல் நாட்டினார்.  ஏற்கனவே மக்கள் மனதில் இருந்த இருந்த பெங்களூரின் பெயரை மேலும் வலுவாக்கினார். 

கெம்பெகௌடா அப்பாவின் பெயர் கெம்பதேவராஜர். மெட்ராஸ் கெசட்டின் படி கிருஷ்ணதேவராயர் தெற்கு நோக்கி படையெடுத்து உம்மத்தூர் (இன்றைய சாமராஜநகர் அருகில்) கங்க அரசரை வென்று காவிரியில் மூழ்க வைத்து கொன்றார். பின்னர் ஸ்ரீரங்கபட்டணத்தை வென்று திருமலை தேவியை மணந்தார், தோற்ற அரசரின் மகள் . இவர் புலவர், பட்டத்தரசியாய் இருந்தார். ராயர் அப்பா வீரப்பகௌடாவிடம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒப்படைத்தார். 

இதே கதை கிருஷ்ணதேவராயர் தம்பி அச்சுதராயருக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. இவரும் உம்மத்தூர் கங்க அரசரை காவிரியில் மூழ்கடித்துக் கொன்றார் என்றுள்ளது. இவர் அப்பா கெம்பதேவராஜர் போரில் உதவினார் ஆகையால் அவரை எலகங்கா மன்னராக்கினார். இது நடந்தது 1532. 

இன்னொரு புறம் , அச்சுதராயரில் இருந்து விஜயநகர வீழ்ச்சி ஆரம்பம். கிருஷ்ணதேவராயருக்கு ஆண் வாரிசு இருக்கவில்லை. பிறந்த ஒரு ஆண் குழந்தையும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுவிடுகிறது. இவர் 1529-ல் இறந்தபின் தம்பி அரியணை ஏறுகிறார்.  இவருக்கு பிரச்சனை தேவராயரின் மருமகன் ராமராயர். நிர்வாகத்தில் ஓயாமல் தலையிடுகிறார். பாமினி சுல்தான்களுடன் உள்கூட்டு வைக்கிறார்.  அருகிலிருந்தே இவரை அழித்து விடுகிறார். ராய்ச்சூர் இழந்திருந்த அதில்ஷா திரும்ப படையெடுக்கிறார். ரெய்ச்சூர் விஜயநகர கைகளில் இருந்து நழுவுகிறது. அதில்ஷாவை அண்ணன் கிருஷ்ணதேவராயர் வென்ற போது , ஷா வெள்ளைக் கொடி காட்டினார். அவரே வந்து செருப்பை முத்தமிட்டால் நிலத்தைத் திருப்பித் தருவதாக சொன்னார். இவ்வாறு பாமினி சுல்தான்கள் வடக்கிலிருந்து பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது வருமானத்திற்கு அச்சுதராயர் தெற்கு நோக்கி செல்ல வேண்டியதானது. ஏற்கனவே மதுரை நாயக்கர்கள் விஜயநகர ஆளுகைக்கு உட்பட்டே இருந்தார்கள். தெற்கே மீதி இருந்த இடங்களில் தான் வென்று ஒரு வலுவான அரசை உருவாக்க கெம்பதேவராஜரையும் அவர் மகன் கெம்பெகௌடாவையும் பணித்தார்.  இது தசரஹள்ளி பதிவேட்டில் உள்ளது. இதுதான் நவீன பெங்களூரின் தொடக்கப்புள்ளி .

இது தசரஹள்ளி பதிவேட்டில் உள்ளது.

இது எல்லாம் நடக்கும் போது கெம்பெகௌடாவின் வயது 22.இவர் எலகங்கா வம்சாவளியில் மிகச்சிறந்த வீரர். 46 ஆண்டுகள் அரசாண்டார். வடக்கே சிவகங்கையை வென்றார். கீழே சோழர்களிடமிருந்த டொமலூரை ஜெயித்தார். பின்னர் அல்சூர் மற்றும் ஹெசரகட்டா பகுதிகளை வசமாக்கினார். வென்ற பகுதிகளை ஏரிகள் வெட்டி , விவசாயத்திற்கு உள்ளாக்கினார். ஏறத்தாழ எதிரிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. இது 1513 க்கும் 1537க்கும் இடையில்.

விஜய நகர பாளையக்காரராக இருப்பது  சவரக்கத்தி முனையில் நடப்பது போன்றது. லட்சுமண ரேகைகள் அதிகம் உண்டு. விஜய நகருக்கு பாமினி சுல்தான்கள் ஒரு புறம், அவர்கள் பின்  டெல்லி சுல்தான்கள். இவர்கள் புகுந்து செய்யும் சதி செயல்களால் உடையக் காத்திருக்கும் விஜயநகரம். பாளையக்காரர்கள் எந்தப்பக்கமும் சாயத் தயாராய் இருந்தார்கள். 

இவர் தந்தையுடன் விஜயநகருக்காக போர்கள் செய்திருக்கிறார். ஹம்பி இவரது கனவு நகரம். விஜயநகரம் போல் ஒரு சாம்ராஜ்யம் இவரது கனவாக இருந்திருக்க வேண்டும்.  

எலகங்கா பாளையக்காரர்களான இவர்கள் ராயர் ஆசியுடன்  ஒரு புதிய நகரை அமைக்க நினைக்கிறார்கள். விஜயநகருக்கு உட்பட்ட அரசுகள் கல் கோட்டை அமைக்க முடியாது. மண் கோட்டைக்கே மேலிட அனுமதி. வாஸ்து பிரகாரம் நான்கு ஏர் பூட்டிய காளைகளை நாலாபுறமும் ஓட விட்டு , அவை நின்ற இடத்தில் நான்கு கோட்டைகளைக்  கட்டினார். பழைய படையெடுப்பின் வழியாக இவருக்கு இடத்தின் புவியியல் நன்றாய் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் பெங்களூரை நோக்கி வரும்போது நாட்புறமும் மேலே ஏறியே உள்ளே  நுழைய முடியும். கடல்மட்டத்தில் இருந்து  ஊட்டி இரண்டாயிரம் மீட்டர் உயரம், சென்னை ஆறு மீட்டர், பெங்களூர் ஆயிரம் மீட்டர். அன்று முழுதும் காடுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். மூன்று பக்கம் நதிகள், சுற்றியும் ஏரிகள். மேற்கே ரிஷபாவதி நதி, இன்றைய காடு மல்லேஸ்வர கோவில் மலையருகே உற்பத்தியாகி , நகர் வழியாகப் பாய்ந்து பிடதி அணைக்கட்டில் முடிகிறது. இப்போது  மைசூர் ரோடு மெட்ரோ ஸ்டேஷன் அருகே ஓடும் சாக்கடை ஆகி இருக்கிறது. இந்நதி பாயும் வழிகளில் இன்றுள்ள பல கோயில்கள் அமைந்திருக்கின்றன. பசவனகுடி காளையர் கோவில், காவி கங்காதரர் கோவில், காடு மல்லேஸ்வரர் கோவில். இக்கோவில்கள் எல்லாம் ஒரு குன்றின் மேல் இருப்பதை கவனிக்க வேண்டும். கோவில்களைச் சுற்றி நதி ஓடியதாகத் தெரிகிறது. இதை ஒட்டி அமைந்த குடியிருப்புகளே மல்லேஸ்வரம், பசவனகுடி, காவிபுரம் போன்றவையே பெங்களூரின் பழைய குடியிருப்புகள் ஆகும்.  


வடக்கே அரக்கவாதி ஆறு, நந்தி ஹில்ஸில் உற்பத்தியாகி , ராமநகரம் வழியே காவிரியில் கலந்து இருக்கிறது. கூகிளில் தேடினால் பிளாட்டுகள் , லே அவுட்டுகள் சிக்கும் . நதியின் பாதை தேடி டிடெக்ட்டிவ் குறிப்புகள் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார்கள். அப்புறம் தெற்கே பண்ணாறு  என்று அழைக்கப்படும் தென்பெண்ணை, ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. 

நாட்புறமும் செம்மண் கோட்டைகள் , குறுக்கு வெட்டாக இரு பெரும் சாலைகள். அல்சூர் - சோண்டேகுப்பா   (இன்றைய நெலமங்களா ) மற்றும் எலகங்கா - ஆனேக்கல் சாலைகள்.  மற்ற எல்லா சாலைகளும் இவ்விரு சாலைக்குள் இணைந்தன. இன்றும் நகரின் அமைப்பு பெரும்பாலும் இதற்குள்ளேயே  இருக்கிறது. நகரின் உள்ளேயே பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. சம்பங்கி ஏரி (இன்றைய கண்டீரவா ஸ்டேடியம்),  சுலேகெரே (இன்றைய KR மார்க்கெட் ), கெம்பபூதி ஏரி (இன்றைய மெஜஸ்டிக்).   இரு பெரும் வணிக வீதிகள் - சிக்க பேட், டொட்பேட். இதைச் சுற்றி இன்னும் பல பேட்டைகள் இன்றும் உள்ளன - அக்கிபேட் (அரிசி), உப்பர பேட் (உப்பு), கனிகர பேட் (எண்ணெய் ).

ஏறத்தாழ பெங்களூரின் எல்லாப்  பகுதிகளும் அவர் ஆளுகைக்குள் இருந்தன.

ஒரு சமயத்தில் ஹம்பியில் ஐந்து லட்சம் மக்கள் வாழ்ந்ததாக சொல்கிறார்கள். டொமிங்கோ பயஸ் 1536-37ல் எழுதியதாகக் கூறப்படும் குறிப்புகள் இந்நகரம் ரோமைப் போல் இருந்தததாகவும், உலகத்திலேயே வசதி நிறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். தான் பார்த்த ஒரு ஏரியை இருபதினாயிரம் பேர் எறும்பு போல் வேலை பார்த்து கட்டிக்கொண்டிருந்தாக எழுதுகிறார். தசரா விருந்தை வியந்து இவர் எழுதிய ஜர்னல்  (எ) ரன்னிங் கமென்டரி மிக நுணுக்கமான சித்திரத்தை அளிப்பது . இப்படியான ஒரு நகரையே கெம்பெகௌடா கனவுக்கண்டிருக்க வேண்டும்.

ஆனால் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். ஒரு கட்டத்தில் அவரே அடித்த நாணயத்தை தன் நாட்டில் புழக்கத்தில் விடுகிறார். இது கல்கோட்டை கட்டுவதை விட பெரிய குற்றம். நாணயம் ஒரு அரசரின் மீதுள்ள குடிகளின்  நம்பிக்கையின் அடையாளமே ஆகும் . இது அவரை அவர் நாட்டினுள் இன்னும் ஸ்திரப்படுத்தி இருக்கலாம். ஆனால் மேலிடப் பார்வையில் கோட்டை கட்டுவதை விட பெரிது. சென்னபட்டண பாளையக்காரர் கோள் மூட்டி , மேலிடம் இவரை தலைநகருக்கு அழைக்கிறது. இது எப்போது நடந்தது என தெரியவில்லை, 1950 களில் என்று சொல்கிறார்கள். அப்போது அவருக்கு நாற்பது வயதுக்கு மேல். மேலிடம் பேச்சுக்கு அழைத்து , ஐந்து வருடம் ஆனைகுந்தியில் சிறை வைக்கப் படுகிறார். சிலர் பெனுகொண்டா என்கிறார்கள், இங்கு இன்னும் விஜயநகர சிறை இருக்கிறது.   

சிறைவாசம் இவரை இந்து மதத்தைக் கற்கவும் , சிவபக்தராகவும்  மாற்றிவிடுகிறது. சிறையில் இருந்து விடுபட்டால் சிவனுக்கு கோவில் கட்டுவதாக வேண்டிக் கட்டியது தான் காவி கங்காதாரேஸ்வரர் கோவில்.  பீஜப்பூர், அஹமதுநகர், கோல்கொண்டா சுல்தான்கள் ஒன்று திரண்டு விஜயநகரத்தை தாக்கத் திட்டம் போடுகிறார்கள். படைதிரட்ட பணம் வேண்டி ராமராயர் , பணத்தை வாங்கிக்கொண்டு கெம்பெகௌடாவை விடுவிக்கிறார். அவர் பெங்களூர் நோக்கி வரும் வழியெல்லாம் கிடைத்த மக்கள் வரவேற்பை மிகப் பெரிதாகச் சொல்கிறார்கள்.  

காவிபுரத்தில் இருக்கும் காவி (குகை)  கங்காதாரேஸ்வரர் கோவில் நகரில் இருக்கும் அழகான குகைக்கோயில். இது இவர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஒரு அழகான சிறு குன்றின் மேல் இந்த கோவில் உள்ளது. பார்த்ததும் நம்மை வியக்கச் செய்வது கொடிமரத்தைச் சுற்றி இருக்கும் நான்கு கல் தூண்கள். ஒரே கல்லாலான  திரிசூலம், அதன் பின்னிருக்கும் டமரம்.

எதிர் எதிர் பார்த்து நிற்கும் சூர்ய பானா , சந்திர பானா எனப்படும் இரு உச்சியில் தட்டையான கற்கள். இவை இரண்டும் கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. விசித்திரமாக  இக்கோவில் தென்மேற்காக உள்ளது. மகர சங்கராந்தி அன்று சூரியன் மறையும் முன் , பொன் போன்ற சூரிய  கிரணங்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுகின்றன. மாலை ஐந்து மணிக்கு மேல் , ஒரு பத்துநிமிடங்கள் நீடிக்கும் இதை விசேஷமாக கொண்டாடுகிறார்கள்.  இதே நேரத்தில் இந்த தூண்களின் நிழலும் ஒன்றின் மேல் ஒன்றாய் முழுதும் நிரப்பி விழுவதாகச் சொல்கிறார்கள்.

தலை குனிந்தே குகைக்கு உள்ளே செல்ல முடியும் , பிரகாரம் சுற்றி வரும்போது ஏறத்தாழ தவழ்ந்தே வெளியே வரவேண்டும் . உள்ளே எங்கிருந்தோ நீர் கசிந்த வண்ணம் உள்ளது. வெளியே உள்ள கோட்ட தெய்வங்கள் பின்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  

பசவன்குடி காளையர் கோவில் , நுழைவாயிலில் இருக்கும் பிள்ளையார் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது



பசவன்குடி காளையர் கோவில் , நுழைவாயிலில் இருக்கும் பிள்ளையார் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி. தஞ்சாவூர் நந்தியைவிட பெரியது எனவே நினைக்கிறேன். நந்திக்கு தனிக்கோவில் வேறு எங்கும் இருக்கிறதா தெரியவில்லை. தலையின் மேல் ஒரு திரிசூலம் வான்பார்த்து நிற்கிறது. இது சிவனே வைத்ததாக ஒரு கதை இருக்கிறது. இதைச் சுற்றி நிறைய கடலைக் காடுகள் இருந்ததாகவும் , ஒரு மாடு காட்டை மேய்ந்து அழித்ததாகவும், கோபமடைந்த ஒரு விவசாயி கம்பால் அடித்ததால், கல்லாய் மாறி இங்கு அமர்ந்ததாக தொன்மக்கதை சொல்லப்படுகிறது. இந்தக்கல் நாளுக்கு நாள் பெரியதாய் ஆவதைக் கண்டு விவசாயிகள் சிவனிடம் முறையிட, சிவன் திரிசூலத்தை தலையில் சூடி வளர்வதை நிறுத்தினார். ஆனால் இக்கோவிலைச் சுற்றி இன்றும் கார்த்திகை மாதம் கடலைக்காய் பரிஷே  (திருவிழா) நடைபெறுகிறது. இது கெம்பெகௌடா தொடங்கி வைத்தது. கோவில் கோபுரம் விஜய நகர காலத்தது என்பது பார்த்தவுடன் தெரிவது.   



இவர் ஆட்சியின் போது அல்சூரில் இருக்கும் சோமேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இது சோழர் படையெடுப்பின் போது கட்டப்பட்டதாகவும் , இவர் விரிவாக்கிக் கட்டியதாகவும் சொல்கிறார்கள். கற்பகிரஹத்தையும், அர்த்தமண்டபம் மற்றும் மஹாமண்டபத்தையும், குறிப்பாக தூண்கள் , சோழர் காலத்தது என்று சிறப்ங்களை வைத்து மதிப்பிடுகிறார்கள். இராவணன் கைலாயம் தூக்கும் சிற்பம் , மகிஷ வதம் ,  அர்ஜுனன் பாசுபதம் பெறுவது போன்ற சிற்பங்கள் மிக அழகானவை. கோவில் கோபுரம் நாயக்கர் காலத்தது. 








இவரும் தந்தையைப் போலவே இன்னும் அரசை விரிவாக்கினார். ஆனால் இவர் காலத்தில் விஜயநகர் வலுவிழந்தபடியே வந்தது. ஷாஜஹான் டெல்லியில் அரசரானார். இவர் மைந்தர் அவுரங்கசீப் தக்காண பீடபூமியின் முகலாய வைசிராய் ஆனார். முஹலாயர்களுக்கும்  ஷாஹி முஸ்லிம்களுக்கும் ஆகாது. இவர் அவர்களை வென்று , பெரிய அளவில் பணம் பெற்று அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். இப்போது நிம்மதியான அதில்ஷா தென் பக்கம் பார்வையைத் திருப்பினார். இங்கிருக்கும் பாளையக்காரர்கள் வரிசையாக அவரிடம் நியாயம் கேட்டு தூது போனார்கள். இந்த உள்குத்தை க்ரிஷ்ணதேவராயரின் மருமகன் ராமராயரே செய்தார். விஜயநகருக்கு எதிராக அவரே படை திரட்டக் காரணமானார். பீஜப்பூர் படைக்கு தலைமை வகித்தவர்கள் இருவர். ஒருவர் ரணதுல்லா கான் , மற்றொருவர் ஷாஹஜி போஸ்லே. இவரே சிவாஜியின் அப்பா. இவர் சுல்தான் படைகளுக்கு ஆள்திரட்டி சண்டையிட்டவர். பெரிய வீரர், குறிப்பாக பெங்களூர் வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். இதை கருப்பு வெள்ளையாக இன்று பிரிப்பது மிக கடினம். வரலாறு என்றுமே கருப்பு வெள்ளையாய் இருந்ததில்லை. முகாலய அரசுகள் பல பிரிவாய் இருந்ததும், தேவை வரும்போது இந்திய அரசர்களுடன் கைகோர்ப்பதும், நம்மவர்கள் அவர்கள் நட்புக்கரம் நாடி, நம்மவர்களை மடக்குவதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது.  இதைப் போன்ற பாளையக்காரர்களின் உள்குத்தாலேயே, கெம்பெகௌடா பெரும்படை கொண்டுவந்த பீஜப்பூர் சுல்தான்களிடமும் , ஷாஜியிடமும், பெங்களூரை இழந்து மகாதியை மட்டும் மீட்டு வெளியேறினார். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...