உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1
மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத் தொடங்கியவர். தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்' - Do Nothing Farming என்ற ஒன்றை முன்னெடுக்கிறார், வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்தார், பல நாடுகளில் சென்று செய்து காண்பித்தார். இந்தியாவும் இதில் அடங்கும். நிலத்தை உழுவது அவசியமில்லை, களையெடுப்பது தேவையில்லை, உரம், NPK , கிருமி நாசினிகள் வேண்டியதில்லை. கம்போஸ்ட் தேவையில்லை. இது அன்று நடந்து கொண்டிருந்த அறிவியல் புரட்சியின் நேர் எதிர்முனை.
இதைப் போலவே நாம் காந்தியையும் புரட்சியாளர்களில் ஒரு சார்வாகர் எனலாம். வன்முறை இல்லாமல் சுதந்திரம் என்பது அப்போது நடந்து கொண்டிருந்த விடுதலை முயற்சிகளுக்கு நேர் எதிர். நேர் எதிர் சிந்தனை எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். எல்லாரும் சேர்ந்து எதையோ கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் போது, மறுபக்கம் கொத்தி ஓட்டை போடும் ஒரு சிலர். ஓயாமல் கேள்வி எழுப்பும் ஒரு சிலர்.இது எங்கு செல்லாமல் ஆகும் என்று நோக்கும் சிலர். ஆனால் இவர்கள் இல்லாமல் எந்தத் துறையும் வலுவாக மேல் செல்லமுடியாது. இவர்கள் இல்லாமல் ஒரு துறையை முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது.
இவ்வாறு மருத்துவத்தில் ஒரு சிலரைப் படித்திருக்கிறேன். ஒருவர் இவான் இல்லிச், மற்றொருவர் டாக்டர் பி.எம். ஹெக்டே இவரது எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்த்த டாக்டர் ஜீவானந்தம். பின்னர் இவர்கள் கை காட்டும் மற்றவர்கள்.
இன்று உடலைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்றே நினைக்கிறேன். நாம் ஒரு வாடிக்கையாளர் நிலையில் நின்று, வாங்குவது என்ன என்று தெரியாமல் வாங்குவது இங்குதான் பெரிதும் நடக்கிறது. புலம்பல் முற்றும்.
உடலியலில் இன்று மிக முக்கிய அனுமானம் (crtical assumption) இதயம் ஒரு மோட்டார் (பம்ப்) என்பது. எப்படி ஒரு வயலின் கிணற்று மோட்டார் , ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சி , வெளியே பச்சை வயலில் பாய்ச்சுகிறதோ , அதே வேலையே இதயம் உடலுக்குள் செய்கிறது. மோட்டார் எந்த அளவுக்கு வலுவாக இருக்குமோ, அந்த அளவு ஆழத்தில் உள்ள நீரை அது உறிய முடியும். வெளிவரும் நீரின் விசை அவ்வாறு பலமாக இருக்கும். அப்புறம் என்ன ...'வரப்புயர நீருயரும்/ நீருயர நெல்லுயரும் /நெல்லுயரக் குடியுயரும் /குடியுயரக் கோலுயரும் /கோலுயரக் கோனுயர்வான்'
இப்படியும் சொல்லலாம் : 'நீர் ஓடும் வரப்பெல்லாம் முத்துக்கள், மடையெல்லாம் சங்குகள் , கரையெல்லாம் செம்பொன் , நீரில் அன்னங்கள் , மேதிகள் , மலர்கள், ள், வெளி நிலமெல்லாம் செந்தேன்...சோலையெல்லாம் தேன் உண்ட களிவண்டுகள் '.
இதயம் ஒரு பம்ப் என்பது இன்று ஒரு பைபிள் , உபநிடத வார்த்தை போல் உண்மையாகி விட்டது . இதைச்சுற்றி பெரிய மதங்கள் , நிறுவனங்கள், மனிதர்கள், வழிபடல்கள் என்றாகி விட்டது.
ஆனால் யாரோ ஒரு சிலர் இதயம் மோட்டார் இல்லை பம்ப் என்றால் என்ன செய்வது.
மேல் உடலை ஒரு நாற்கரம் எனக்கொண்டால் , மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் அதன் நான்கு புள்ளிகள். இவற்றின் எப்பகுதியை சென்றடையும் நாளங்கள் பாதிக்கப்பட்டாலும் பெரிய நோய்கள் வரும் என்கிறார்கள். முழுக் குழாய் அடைப்புகளுக்கு பைபாஸ் போன்ற சிகிச்சைகள் இருக்கின்றன. அடைப்பு கொஞ்சம் குறைய இருந்தால் அஞ்சியோபிளாஸ்ட எனும் ஸ்டண்ட் வைத்தியங்கள் செய்யப்படுகின்றன. இவற்றை அளவிட ஆன்ஜியோக்ராம் போன்ற சோதனைகள் உள்ளன.
இந்த அடைப்புகளுக்கு காரணம் நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் என்கிறார்கள். கொழுப்பு நீரில் (ரத்தத்தில்) கரையாது. ஆகவே இவற்றை வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்கு லிப்போ புரதங்கள் அவசியம். கொழுப்பின் அடர்த்தியைப் பொறுத்து புரதங்களை LDL , HDL , VLDL என்ற மூன்று பிரிவுகள் உண்டு. அதிக LDL பரிசோதனைகளில் சிக்கலை உண்டாக்கும். கொழுப்பு உண்வு அதெரோசெலெரோசிஸ்(atheroscelorosis) என்னும் கொழுப்பு படிவுகளை ரத்த நாளத்தில் உண்டாக்கி , அடைப்பை ஏற்படுத்திக்கின்றன. இதை நிவர்த்தி செய்யவே மேலே சொன்ன சிகிச்சைகள். இது போக உடம்பில் கொழுப்பு உற்பத்தியை குறைக்கும் , தடை செய்யும் ஸ்டாடின் போன்ற மாத்திரைகள் இருக்கின்றன. இவை நோய்த்தடுப்பு சிகிச்சையாய் , இந்த மாத்திரைகள் வாழ்நாள் முழுதும் உண்ண வேண்டியவை.
ரத்தக்கொதிப்பு என்ற ஒரு நோய் சொல்லப்படுகிறது. இதயம் சுருங்கும் நிலையில் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்திற்கு சிஸ்டாலிக் பிரஷர் என்று பெயர். சுருங்கி விரிந்த நிலையில் டிஸ்டோலிக் பிரஷர்.- 80/120ல் உள்ள 120. உடல் நெருக்கடியில் ரத்தத்தின் வேகத்தை ஏற்றி இறக்குவது அவசியம். மூச்சு விடுதல் போல இது அனிச்சைச் செயல் ஆகும். உடலில் அவசிய நிலை ஏற்படும்போது சிறுநீரகத்தில் ரெனின் என்ற ஒரு ஹார்மோன் சுரக்கிறது. இதுவே ரத்தத்தில் வேகத்தை கூட்ட முதல் படி. இது ஏற்கனவே உள்ள ACE என்சைம் வழியாக ரத்த அளவை கூட்டுகிறது. ரத்த நாளங்களை இறுக்கி வேகத்தை அதிகரிக்கிறது. உப்பை உடலில் நிறுத்தி , அதனால் நீரை வெளியே விடாமல் , அழுத்தத்தை இன்னும் கூட்டுகிறது. பின்னர் சில வினாடிகளில், நிமிடங்களில் ரத்தம் உறுப்புகளை அடைந்தவுடன் , அழுத்தத்தை மீண்டும் குறைக்கிறது. இதயத்திற்கு செல்லும் நாளங்களில் அடைப்புள்ளபோது, அதிக அழுத்த ரத்த ஓட்டம் மாரடைப்புகளை ஏற்படுத்துகிறது.
ACE ஹார்மோன் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் சாதாரணமாக ரத்த அழுத்தத்திற்கு உலகெங்கும் உட்கொள்ளப்படுகின்றன. பீட்டா பிளாக்கர்ஸ் என்னும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உள்ளன. இவை நெருக்கடி நிலையில் சுரக்கும் சுரப்பிகளை கட்டுப்படுத்தி வேலை செய்கின்றன.
ஆனால் யாரோ ஒருவர் இதயம் பம்ப் இல்லை என்றால் என்ன செய்வது? கொஞ்சம் ஓரமாய் வண்டியை நிறுத்தி கூகிள் மேப்பை மறுபடி பார்த்து அப்புறம் ...
அண்மையில் ஸ்டீபன் ஹஸ்ஸி என்பவர் எழுதிய Understanding The Heart என்னும் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதற்கு முன் தாமஸ் கோவன் என்னும் மருத்துவர் எழுதிய Human Heart Cosmic Heart என்னும் புத்தகம் பற்றி அறிந்திருக்கிறேன். இவர் ஒரு அமெரிக்க மருத்துவர், இவருடைய இப்புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் இவரின் மருத்துவ அங்கீகாரத்தை பறிப்பதில் முடிந்தன. ஆனால் பாரபட்சம் இல்லாமல் படிக்கும் போது மறுப்பதற்கு எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.
மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பற்றி முதலில் விளக்கியவர் வில்லியம் ஹார்வே எனும் மருத்துவர். இவர் 1628-ல் டச்சு மொழியில் எழுதிய புத்தகம் (de Motu Cordis) தான் இதயத்தையும் ரத்த ஓட்டத்தையும் விளக்கிய முதல் புத்தகம். இவர் இதயம் ரத்தத்தை உறுப்புகளுக்கு கடத்துகிறது என்பதை ஏற்க முடியாமல் தவிக்கிறார். ரத்தத்திற்கு பிரத்தியேகமான ஓடும் தன்மை இருப்பதும் தெரியவில்லை என்கிறார்.
நவீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிலரும் இதை கேள்வி கேட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதயத் தசைகள் ஒரு பம்ப்புக்கு உள்ள விதத்தில் முழு விசையில் இயங்குகின்றனவா என்று சோதித்த ஒரு குழுவினர் , அது 30% திறனுடன் தான் வேலை பார்ப்பதாக கண்டறிந்தனர். பரிணாமத்தில் ஒரு முக்கியமான உறுப்பு ஏன் 30% செயல் திறனுடன் வேலை செய்யும்?
1940களில் ஏற்கனவே இறந்த ஒரு நாயின் உடலில் வெண்டிலேட்டர் உதவியுடன் , இதயத்தின் துணையே இல்லாமல் , ஒரு பின்தொடரும் கருவியை (tracker) , நுரையீரல் இயக்க உதவியுடன் , உடலின் பல பாகங்களுக்கு நகட்டியிருக்கிறார்கள். ஆச்சிஜன் அளவும் ஏறியிருக்கிறது. ஆக தெரிவது, இதயம் இல்லாமலே ரத்த ஓட்டம் நடக்கலாம் என்பது. இதே பரிசோதனையை இன்னொருவர் வெண்டிலேட்டர் இல்லாமல், எனவே நுரையீரல் சுருங்கி விரிதல் இல்லலாமல் , காற்றை ஊடுருவிச் செலுத்தி செய்து காட்டினார். இறுதியாக ஒருவர் , ஆச்சிஜன் செலுத்தாமலே , பின் தொடரும் கருவி இரண்டு மணி நேரம் வரையில் நாயின் உடலில் நகர்வதைக் கண்டறிந்தார். கவனிக்க வேண்டும், இதயத் துடிப்பு , நுரையீரல் இயக்கம் ஏதும் இல்லாமலேயே .
இன்னும் நம்புவது கடினம் என்றால், நீங்கள் அருகில் உள்ள மரத்தைப் பார்க்க வேண்டும். நூறடி வரை வளர்ந்து நிற்கும் இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு , வேர் வழியாக வரும் நீர் எவ்வாறு உச்சியிலிருக்கும் கடைசி இலை வரை கடந்து செல்கிறது?
இதற்கெல்லாம் தான் முக்கிய அனுமானம் பிழைத்தல் என்று பெயர். இப்போது, முன் கட்டிய மூட்டைகளை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. இதற்க்கு முதலில் சரியான மூட்டையை தேட வேண்டியிருக்கிறது. அதன் பின் கையை மட்டும் விட்டு கண்ணில்லாமல் துளாவ வேண்டியிருக்கிறது. ..இல்லையா ?
ரத்தம் என்பது 99% நீராலானது. நம் உடம்பில் பெரும்பாலும் நீர்தான். நீருக்கே நாம் அறியாத ஒரு குணம் இருக்க முடியுமா?
(மேலும் )

Comments
Post a Comment