Translate

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 2 - கீதை ஒரு புறவய வரலாறு



The Bhagavad Gita - A Biography என்ற தனது நூலில் கிறிஸ்டோபர் டேவிஸ் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை சொன்ன இடம் என்று ஜோதிசர் என்ற இடத்தைச் சொல்கிறார். இது இன்றைய ஹரியானா மாநிலத்தில் , குருஷேத்திரத்திற்கு நான்கு மைல் தொலைவில் உள்ளது. கீதை உபதேசம் செய்ததாக சொல்லப்படும் ஒரு ஆலமரம் இருக்கிறது. இதில் இறப்பே இல்லாத மரம் என்று எழுதப்பட்ட ஒரு போர்டு தொங்குகிறது. ஒரு இலை கூட தரையில் விழாதவாறு வலை போட்டு மரமே கட்டப்பட்டுள்ளது. மரநிழலில் ஒரு மார்பிள் பெட்டியில்  கிருஷ்ணர் திரும்பி உட்கார்ந்து பின்னால் தேரினுள் கைகூப்பி அமர்ந்திருக்கும் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். காண்டீபம் தேரின் வெளியே கீழே கிடக்கிறது. உள்ளே ஒரு கீதைப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு கோவிலிலும் எளிதாக நாம் காண்பது ஒரு அகவய வரலாறு , தல புராணம். அதைத் தொடர்ந்தே அதே பலகையில் எழுதப்பட்டிருக்கும், எந்த  அரசர் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது, எப்போது யார் எடுத்துக் காட்டினார்கள் என்ற புறவய வரலாறு. உதாரணமாக கீதையில் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றன.

"இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்கு சொன்னேன். விவஸ்வான் மனுவுக்கு சொன்னான். மனு இக்ஷ்வாகுவுக்கு கூறினான். இவ்வாறு வழிவழியாகக் கிடைத்த இதனை அரசமுனிவர் உணர்ந்திருந்தனர்  (4.1) " . இதை அப்படியே காலத்தைக் குறிப்பதாக எடுத்தால் குழப்பமே ஏற்படும். (இது போன்ற வரிகளை கவித்துவமாகவே வாசிக்க வேண்டும், இதைப்பற்றி மேலும் பின்னர் எழுதுகிறேன்)  

 மேல் உள்ளது பக்தி சார்ந்தது, பின்னால் வருவது அறிவுத்தேடல் உள்ளவர்களுக்குச் சொல்லப்படுவது. இரண்டும் மரபில் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது, இரண்டிற்கும் இடமுண்டு. கீதை என்ற நூலின் புற வய வரலாறு என்ன? அது எவ்வாறு இன்றுள்ள மதநூல் என்று பார்க்கப்படும் நிலைக்கு வந்தது? அது உண்மையில் இவ்வாறு கற்கப்பட்டதா?

கீதையின் காலத்தை மதிப்பிட மகாபாரதத்தின் காலத்தை மதிப்பிட வேண்டும். மகாபாரதத்தின் காலத்தை அளவிட  நான்கு காரணிகள் சொல்லப்படுகின்றன.

1. மகாபாரதத்தில் இரும்பு ஆயுதங்கள், ஆயுதங்கள் செய்யப்பயன்படும் உலைக்களன்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகவே  மகாபாரத காலத்தை இரும்புக்காலத்திற்கு பிந்தையது என்று வரையறை செய்கிறார்கள். இரும்புக்காலம் 4000 வருடத்திற்குப் பின் வருவது.

2. மகாபாரதம் வரலாற்றுக் காலத்திற்குப் பிந்தையது. மஹாபாரதத்தை ஒரு வரலாற்று  நூல் என்றும் சொல்லலாம். இதில் குறிப்பிடப்படும் நாடுகள் இடங்களின் பெயர்கள் இன்றும் உள்ளன. இன்றும் நம் வரைபடத்தில் பார்க்கும் இடங்களின் கோடுகள் தெளிவாக புலப்படுகின்றன. வரலாற்று எழுத்து என்பது ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு பிந்தையது என்று வரையறுக்கிறார்கள்.

3. மகாபாரதம் வணிக வழிப்பாதைகள் உருவானபின் எழுதப்பட்டது. தாமிரலிப்தி போன்ற துறைமுகங்கள், விந்திய மலை உள்ளிட்ட மலைகள் பற்றிய  குறிப்புகள் வருகின்றன. காஷ்மீரின் கீழ்ப்பகுதியில் இருந்து, காந்தாரம், காமரூபம் , கீழே மதுரை வரை நாட்புறமும் குறிக்கப்படுகிறது. நாடுகள் இடையே சுங்க வசூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

4. பேரரசின் உருவாக்கச் சித்திரம் மஹாபாரதத்தில் உள்ளது. ஜனபதங்கள் மறைந்து ஒரு வலுவான ஒன்றிய மைய அரசு உருவத்தைச் சித்தரிக்கிறது. பேரரசு உருவாதல் என்பது கிமு 3ம் நூற்றாண்டின் பின்னேயே ஏற்பட்டது.

ஹாப்கின்ஸ் அவரது The Great Epic of India: Its Character and Origins, நூலில் பாரதம் முதலில் எழுதப்பட்டு மூன்று பல்வேறு காலகட்டங்களில் விரிவு செய்யப்பட்டது என்று சொல்கிறார். ஜெய எனும் முதல் வடிவம் கிமு 4க்குப் பின் , கிருஷ்ணர் முதல் தெய்வவடிவம் (demigod) கொள்ளும் பிரதி கிமு 2-4 க்குள்.  இப்போது கிடைக்கும் வடிவம் , புராணங்கள் சேர்க்கப்பட்டு, கிருஷ்ணன் முழுமுதல் கடவுள் ஆவது, மக்கள் பதிப்பு கிபி 2-4 க்குள் நடந்தது. ஆக மொத்தம் கிமு 4க்கும் , கிபி 4க்கும் இடையில் பாரதம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள். முதல் வடிவம் 24000 பாடல்கள் கொண்டது, இப்பொழுது இருப்பது ஒரு லட்சம் பாடல்களுடையது. சாஸ்வதமாய் இருக்க வேண்டும் என்றால் ராமாயணத்திலோ , மஹாபாரதத்திலோ சேர்த்து விடுவது தவறாய்க்  கருதப்படவில்லை. ஆசிரியர் பெயர் குறிப்பிடுவது வழக்கம் இல்லை. வரலாற்றில் இது ஒரு வளர்ந்து கொண்டே வந்த காவியம் என்பதே சரி என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கீதையின் வரலாறு:

கீதை தனி நூலாக படிக்கப்பட்டு, பின் ஏதோ ஒரு கட்டத்தில் மஹாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே எல்லா அறிஞர்களும் ஒத்துக்கொள்ளும் தரப்பு. இதற்க்கு பொதுவான சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கீதை பீஷ்மபர்வத்தில் 25 வது அத்தியாயத்தில் தொடங்கி 42ம் அத்தியாயம் வரை கீதை கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு சொல்லப்படுகிறது. போரில் இறந்துபட்ட பீஷ்மரின் செய்தியை சஞ்சயன் திருதாஷ்டிரனுக்கு உரைப்பதாக உள்ளது. இந்த 18 அத்தியாயங்களையும் நீக்கினாலும் கதையில் ஒன்றும் குறைவதில்லை. பீஷ்மாபர்வத்தின் இந்த இடத்தில் தருமனே கவுரவப் படைகளைப் பார்த்து கலங்குகிறான், அர்ஜுனன் வெற்றி நமதே என்று அண்ணனைத் தேற்றுகிறார். இது அத்தியாயம் 21. இன்னும் முன்னே போனால், தருமன் துருப்புகளை அணிவகுக்க தம்பி  அர்ஜுனனைக்   கேட்கிறான். அர்ஜுனன் இந்திரன் வகுத்த வஜ்ர வியூகம் அமைக்கப்போவதாகச்  சொல்கிறான்.  இது பாடல் 19-ல்.  

கீதையின்  பதினெட்டு அத்தியாயங்களும் முடிந்த பின்னர் யுதிஷ்டிரன் போரை இடையில் நிறுத்தி , பீஷ்மர் , துரோணர் , கிருபர், சல்லியர்  முதலியோர் நின்றிருந்த எதிரணிப்பக்கம் நடந்து சென்று , ஒவ்வொருவரிடமும் அவர்ககளை போரினில் வெல்ல அனுமதி கோருகிறான். அவர்களும் ஆசி அளித்து , அவன் செய்தது சரியான முறைமை என்று சொல்கிறார்கள். "ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் போரில் இப்படி என்னிடம் நீ வராமல் இருந்திருந்தால், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ தோல்வி அடையவே நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். போரிட்டு வெற்றியை அடைவாயாக" - இது பாடல் 43 ,  பீஷ்மர் சொல்வது. இவ்வாறு கோரி அனுமதி பெறுவதே அக்கால ஆசிரியர்களை, மூத்தோர்களை போரில் எதிர்கொள்ளும் வழக்கமாய் இருந்தது. ஆக 24 வது அத்தியாயத்தில் இருந்து 43க்கு சென்றாலும் கதை குறை படாது. (Who wrote Bhagvad Gita  - Meghnad Desai) 

திருதராஷ்டிரர் சஞ்சயடனிடம் பலமுறை போரில் என்ன நடக்கிறது என்று தனக்குச் சொல்லுமாறு கேட்கிறார். மீண்டும் ஒருமுறை (மூன்றாம் முறை) கீதையின் நடுவில் கேட்பதாக வருகிறது. கீதையின் தொடக்கப் பாடலில் வரும் தர்மக்ஷேத்ரே என்ற சொல் பாரதத்தில் வேறு எங்கும் முன் பின் இல்லை. இது ஒரு தத்துவச் சொல், தனியே நிற்கிறது. 

கீதையெல்லாம் சொல்லி முடிந்து அஸ்வமேத பர்வதத்தில் கிருஷ்ணரிடம் அவர் சொல்லிக்கொடுத்த கீதை மறந்து விட்டது என்றும், திரும்பிச் சொல்லுமாறு சொல்கிறான். கீதையைப் போன்ற சிறு வடிவம் இங்கு அனுகீதை என்று உள்ளது. இதுவும் கீதையைப் பின்பற்றி பின்னர் சேர்க்கப்பட்டதே என்கிறார்கள். இதைப் போலேயே  விதுர நீதி, பீஷ்ம நீதி போன்றவையும் ஆகும்.

வியாசரைப்போல் கதையையும் , பாத்திரங்களையும் நேர்த்தியாகச் செய்யும் ஒருவர் இவ்வாறு எழுத வாய்ப்பில்லை. 

புகழ் பெற்ற கீதை உபதேச ஓவியம் எந்த ஒரு தொல்லியல் ஆய்வுகளிலும் கிடைக்கவில்லை.

கீதையின் மொழி நடை விவாதங்களின் சாயல் கொண்டது. நியாயவியல் தோன்றியபின் எழுந்தது. dialectics என்று சொல்லப்படும் ஒன்றை சொல்லி , அதை மறுத்து , சேர்த்து விவாதித்து வேறொன்றுக்கு செல்வது , இது காலத்தில் பிந்தையது. பௌத்த விவாதங்களின் தன்மை கொண்டது.

இதற்கு மேலாக, போரின் நடுவிலே நிகழும் அந்த உன்னத நாடகத் தருணம் உபநிடதங்களுக்கே உரியது. கடோபநிடதம் வேள்வியில் தன்னை அவியிடக் கோரும் மைந்தனும் , அதை மறுக்கும் தந்தையும் போன்றது இந்தப் போர்க்களம்  இந்த உன்னத நாடகத் தருணத்திற்காகவே இங்கு இணைக்கப்பட்டது.  

விவேகானந்தர் தனது Thoughts on Gita என்னும் நூலில் சங்கரரே கீதையை எழுதியிருக்கலாம் என்று சொல்கிறார்.

இதையெல்லாம் வைத்து கீதையின் காலம் கிபி இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்று கணக்கிடுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2