Skip to main content

இது வேறு ஒரு சக்கரம்


2063 என்று சொல்லிப்பார்த்தால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை. இந்த நம்பரை நாட்கள் என்று எண்ணி  365 -ல் வகுத்து 5.8 வருடங்கள் என்றால் நீளம் தெரிகிறது.

2063-ஐ  ஐந்தால் பெருக்கினால் இன்றிலிருந்து வாழ்நாள் கடைசிக்கு வந்து விடும். இப்போது மீண்டும் சிறிதாகத் தோன்றுகிறது.

ஆறேழு  வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஒரு விழாப் பந்தலில், என்னையும் சேர்த்து மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்து, நாலாவது நண்பரின் விழாவில் என்ன செய்வது என்பது என்று தெரியாமல், சாப்பாடு நேரம் எப்ப வரும் என்று எதிர்பார்த்து சேரைத் தேய்த்து, கால் மாற்றி மாற்றி உட்கார்ந்து எல்லாம் செய்து, மேற்கொண்டு செய்வதறியாமல் இருக்கும் போது தான் , அருகிலிருந்த நண்பரின் கையிலிருந்த ஆப்பிள் வாட்சை முதலில் அருகில் கண்டேன்.  (அவர் அப்போது தான் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி பண்ணி கையில் கட்டி இருந்தார். அதையே இன்னும் கட்டியிருக்கிறார்...இங்கு பொருத்தம் இது தான் : அவர் பெயர் மணி , ஆனால் அவர் கை மணி மாறாதது ) .   அது இதயத் துடிப்பைக் காட்டும் என்று சொன்னார். வாங்கி கையில் கட்டிப் பார்த்தேன். அறிவியலின்படி எதையும் நீங்கள் அளக்க ஆரம்பிக்கும்போது , அளவையும் சேர்த்து இன்ப்ளூயன்ஸ் செய்ய ஆரம்பிக்கிறீர்கள்.அதாவது நீங்கள் அளப்பதாலேயே அது மாறுகிறது. நான் பார்க்கப் பார்க்க இதயத் துடிப்பு அதிகமாகியபடி சென்றது. ஒரு பத்து நிமிடம் மீண்டும் மீண்டும் செய்து பார்த்தும் நம்பர் 72-ன் பக்கம் வரவே இல்லை. பாலத்தின் இந்தப் பக்கம் 60 , அந்தப்பக்கம் 100, நடுவில் 72 என்றார் நண்பர். கவலையுடன் திருப்பிக் கொடுத்தேன். உடல், கை ,கால் வேலை என்று எதுவும் செய்யாமல் இருந்த நேரங்கள் அவை. எடை பார்க்கும் கருவி  ஒரு முறை மூன்று இலக்க எண்ணைக் காட்டியது. pedometer என்ற நடை அளக்கும் கருவியை பாக்கெட்டுக்குள் போட்டு சில நாள் செய்து பார்த்தேன். பின்னர் fitbit என்று ஒரு கடிகாரம் கட்டிப் பார்த்தேன். ஒரு சில நாட்களின் பின் உள்  உந்துதல் ஒளி குறைந்து லோ வோல்ட்டேஜ் ஆகி பியூஸாகி விடும்.



இன்னும் பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் கண் கூசும் ஒளியுடன் ஆரம்பித்து , நடுவிலே பியூஸாகிவிட்ட / விடும் நிலையில் இருக்கும்போது தான் மேலே இருக்கும் அந்த 2063 என்ற எண் முக்கியமாகிறது. 

மணி காட்டுவது, , போன் அழைப்பு, குறுஞ்செய்திகள் காட்டுவது  இன்னபிற சைடு வேலைகள் போக,  ஆப்பிள் வாட்ச்சில் மூன்று வளையங்கள் உண்டு. சிகப்பு வெளி வளையம் , பச்சைநிற நடுவளையம் , இதற்குள்ளே நீல உள் வளையம். காலையில் கையில் கட்டும் போது , மூன்றும் மூன்று புள்ளிகளாய் இருக்கும். இந்த மூன்று புள்ளிகளை  மூன்று வண்ண வளையங்களாக மாற்றுவது  நம் அன்று செய்யும் செயலைப் பொறுத்தது. 30 நிமிடம் விளையாடினால் நடுப் புள்ளி வளையமாகும். 12 மணிகளில் , மணிக்கொருமுறை ஒரு நிமிடம் நடந்தால் நீல வளையம் ஒரு வட்டமடிக்கும். இதை எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆற்றல் உடலில் செலவளிக்கிறமோ அதைப் பொறுத்து சிகப்பு வட்டம் மூடும். ஒரு நிமிடம் நடந்தால் 4 புள்ளி (kcal) ஆற்றல் செலவாகும். நாளில் 600 என்பது குறி. எல்லோருக்கும் தெரிந்தது, ஒரு சுலைமணி டீயில் 40 கலோரி உள்ளது (ஏன் , சுலைமணி என்றால் , பால் குறைவு, தண்ணி மிகுதி, டீ மிதம் ). இப்படி அந்த  நாளில் ஆற்றல் வளையம் முடித்தால் ஒரு நாள் உங்கள் கணக்கில். இப்படி 2063 நாட்கள் (அ ) 5.8 வருடங்கள் ஒவ்வொரு நாளாய் முடித்தது அந்த மேல் சொன்ன எண்.  

இதை ஏன் தொடர்ந்து இவ்வளவு நாள் செய்ய முடிந்தது என யோசிக்கிறேன். முதலில் இதில் உள்ள விளையாடத் தூண்டும் விஷயம் என்றே நினைக்கிறேன். எண்ணிலா நாட்கள் என் பிள்ளைகளுடன் சேர்ந்து இறகுப் பந்து விளையாடியிருக்கிறேன். தெருவில் பால்கனியில் நின்று 'இந்த வயசுல இப்பிடியா சின்னப் பிள்ளைங்க கூட விளையாடுவாங்க, இவர் பிள்ளை மேல விழுந்தா என்ன ஆகும் ' என்று அம்மாக்கள் நினைக்கும் அளவுக்கு , முழு போட்டி உணர்வுடன், விட்டே கொடுக்காமல் , கால் வலிக்க ஓடி சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிருக்கிறேன். ஸ்ரீயுடன் கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கும் சாக்கில் , முழுவேகத்துடன் தெருவில் பந்துகளை வீசியிருக்கிறேன், ஓடிச்சென்று பந்து பொறுக்கியிருக்கிறேன். முதல் முறை வாட்சைக் கட்டி outdoor cycle லாங் ஒர்க்  அவுட் செய்ய,   சைக்கிளை மிதித்து  எம்.ஜி ரோடு வரை வந்து ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று எண்ணி , காபி குடித்து , சைக்கிளை இங்கேயே விட்டு விடலாமா என்று எண்ணம் வந்து, கடைசியில்  , திரும்ப முடியாமல் திரும்பியது ஞாபகம் வருகிறது. கால் வலி தாங்காமல் அடுத்த இரண்டு நாட்கள் காய்ச்சல் வந்தது. பின்பு வேண்டுமென்றே சில ஸ்டார் ஹோட்டல் லாபியில் சைக்கிளில் சென்று இறங்கியிருக்கிறேன்.      



சிறுவயதில் ஓடாத நாள் இருந்திருக்காது, ஏனென்றால் விளையாடாத நாள் இருந்திருக்காது . படிப்பு முடியும் வரை உடற்பயிற்சி என்று ஒரு நாளும் செய்தது நினைவில் இல்லை. விளையாட்டு தான் உடற்பயிற்சி. ஆனால் சில வருடங்கள் முன் ஒருநாள் இனிமேல் ஓட முடியுமா என்ற சந்தேகம் வந்தது. வீட்டருகில் இருக்கும் ஏரியில் திரும்ப ஓட முயற்சித்தேன். வாட்சைக் கட்டி என்று எழுத வேண்டும், இல்லையா  (நிற்க: ஏரி  = Upper Ambalipura Lake - அருகில் இருக்கும் ராணுவ முகாம் ஆட்கள் வெறும் பொட்டலில் இருந்து பத்து வருடங்கள் முன்பு உருவாக்கியது , ஒரு சுற்று 0.8 கிமி, நடுவில் ஒரு குட்டித் தீவு, அதில் ஒரு மரம், இந்த ஓரத்தில் பல வருடங்களாய் நிற்கும் ஒரு பட்ட மரம், இருபுறமும் வரிசையாய் மரங்கள், ஓரிரு நாவல் மரங்கள்,  ஒரு வளரும் புளிய மரம் , ஒரு அரை நெல்லி , கொன்றைகள் பல, சந்தன மரங்கள் இருக்கிறது, வெட்டப்படுகிறது  என்று பேசிக்கொள்கிறார்கள் )  -  . திரும்ப ஓடுவது பற்றி , பல அடிகள் நடை, சில அடி ஓட்டம், மூச்சை வாங்கியபின்  பல அடிகள் நடை என்று ஆரம்பித்து , ஒரு சில மாதங்களில் ஒரு சுற்று , பல சுற்றுக்களாய் நிற்காமல் செய்ய முடிந்தது. 

டாம் ஹாங்க்ஸ் நடித்த Forrest Gump திரைப்படம் கேள்விப்பட்டிருப்பீர்கள் . முதலில் எனக்கு கதாநாயகன் Forrest ,சிப்பிக்குள் முத்து கமலஹாசன் என்றே தோன்றியது. (தி டெர்மினலில் வரும் டாம் ஹாங்க்ஸ் அன்பே சிவத்தில் வரும் கமலஹாசன்). முதுகெலும்பு  சீராய் இல்லாததால் இரு கால்களும் brace -ல் கட்டி  முதுகில் இணைக்கப்பட்ட  ஒரு சிறுவன் , சக மாணவர்கள் ஊனத்தைக் கேலி செய்து கல்லெறிந்து விரட்டி துரத்தும்போது , ஓட  ஆரம்பிக்கிறான்.  பயந்து தெறித்து ஓடும் ஒரு இடத்தில்  brace-ஐ உடைத்து கால்கள் தானாய் ஓட ஆரம்பிக்கின்றன (https://www.youtube.com/watch?v=bSMxl1V8FSg). பின்னர் அவருக்கு வாழ்வில் ஓடுவது என்பது ஒரு படிமமாய் (metaphor) ஆகி விடுகிறது. படம் முழுதும் அவர் ஓடிக்கொண்டே இருப்பார். எதிர்மறை எண்ணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரின் வாழ்க்கைச் சித்திரமே இப்படம். இதில் பார்க்கில் அமர்ந்து யாரென்றே தெரியாத ஒருவரிடம் சொல்லும் கதை.   அவர் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறார் என்பதற்கு அவர் சொல்லும் பதில் இது. 

"My mama always said you got to put the past behind you before you can move on. And I think that's what my running was all about". 

வேலை ஒரு நூல் இழையில்  தொங்கிய நாட்கள் உட்பட , பல சிறிய , பெரிய, அன்றாட நெருக்கடிகளைக் கடக்க இந்த ஏரியில் ஒரு சில ரௌண்டுகள் ஓடி, களைத்து ,எளிதாய் உணர்ந்திருக்கிறேன்.  என்னுடைய அப்பாவின் இறுதி சில நாட்களையும் , இறந்த பின் சில தினங்களையும் ஓடியும் , தூர நடையிலுமாய் கடக்க முயன்றிருக்கிறேன். .  ஓட்டம் என்பது பிரச்சனைகளில் இருந்து முன்னால் ஓடுவதும் தான்.

செல்லும் ஊர்களில் எல்லாம் கால் நடையாய், ஓட்டமாய் ஊர் சுற்றியிருக்கிறேன்.  வாட்ச்சில் வளையம் முடிக்க மதுரையை  தெருத் தெருவாய் காலால் நடந்திருக்கிறேன். காரை ஊருக்கு வெளியே நிறுத்தி  மனைவி பிள்ளைகளை எல்லோரையும் நடக்க வைத்திருக்கிறேன். கொரோன தொற்றின் காலங்களில் வீட்டினுள் படுக்கை அறைக்கும் , வரவேற்பறைக்குமாய் பலநாள்கள் ஓடி இருக்கிறேன், ஊரடங்கு நாட்களில் வெளியே நடந்து போலீஸ்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறேன்.

உடம்பைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன் . வாட்சில் உள்ள ஹெல்ப் பகுதிகளை ஊன்றிப் படித்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்கி வாசித்திருக்கிறேன். உடல் ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடாதது பல எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எதிர்மறை அளவைகள் (sugar , BP), கொழுப்பு போன்றவை. ஆனால் நேர்மறை அளவைகள் பலருக்குத் தெரியாது.              உடல் பெருத்த ஒரு குழந்தையை இதை அதை சாப்பிடாதே என்பது எதிர்மறை கட்டளை . விளையாடு என்று சொல்லி, தூண்டி, உடன் விளையாடுவது  நேர்மறை கட்டளை. உடலில் நேர்மறை அளவீடுகள் பல இருக்கின்றன - Resting Heart Rate , HRV , VO2Max போன்றவை  (ஒய்வுநிலை இதய துடிப்பு, இரண்டு துடிப்புகளுக்குள்ள இடைவெளி, ஒரு மூச்சில் உள் வாங்கும் ஆச்சிஜன் அளவு). இவைகள் நீண்ட நாள்  பயிற்சியின் மூலம் தானாகவே கட்டுக்குள் வரும் என்கிறார்கள் .  இது சரியே ஆகும். பொதுவில் எதை அளக்கிறோமோ , அதுவே பலனாக கையில்  கிடைக்கிறது. “Tell me how you measure me, and I will tell you how I will behave.” என்ற ஒரு கோல்ராட்டின் பிரபல வாக்கியம் உண்டு.  

பாரதம் சொல்லும் வெண்முரசின் சொல்வளர்காடு என்னும் நாவல் பாண்டவர்கள் சூதில் எல்லாம் இழந்து வனவாசம் செய்வதில் ஆரம்பிக்கிறது. உபநிடதக் காடுகள் வழியாக பயணம் செய்து தங்கி முனிவர்களிடம் யுதிஷ்டிரர், பாண்டவர்கள்  மெய்மையைக் கற்கும் கதையைச் சொல்லும் நாவல்.இவர்கள் நான்காவதாகச் செல்லும் காடு ஐத்ரேயம். இதில் பானை செய்யும் மஹிதை என்னும் குயவப்பெண், முனிவரும் சீடர்களும் பேசிக் செல்லும் தத்துவ விவாதத்தில் மறைவிலிருந்து சொல் எடுக்கிறாள். அவள் சொல்வது இது : 

“அந்தணரே, சுழற்சியினால் உருவான எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும்” என்றாள். சீடர்கள் அவளை புறத்தே விலக்கி முன் செல்லுகிறார்கள். ஆனால் முனிவர் மனதில் அந்த சொல் நின்று கேள்வியாய் எழுகிறது. மீண்டும் அவள் குடிலுக்கே தேடிச் செல்கிறார்.  

....

“முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கும் செலவு அது” என்றாள். 

அவள் குயவர் சக்கரத்தருகே சென்றமர்ந்தாள். அங்கே பாதியுருவான குடம் ஒன்றிருந்தது. சக்கரத்தை வலக்கையால் இடவலமாகச் சுற்றி விரலால் அதன் விளிம்பை தொட்டாள். அவள் கையில் மையெனக் குழைந்து சரடென இழைந்து மெல்ல அது உருக்கொண்டது.

“மெல்லிய தொடுகையை அதுவே பெருக்கிக்கொள்கிறது. ஏனென்றால் அது உருவெடுக்க விழைகிறது” என்று மகிதை சொன்னாள். “அதைவிட மெல்லிய தொடுகையை இவ்வாழிக்கு அளிக்கிறேன். அது சுழல விரும்புகிறது. ஏனென்றால் சுழற்சியே பொருள்களின் இயல்பான அசைவு. இப்புவியில் இருக்கும் அனைத்து அசைவுகளும் ஏதேனும் சுழற்சியின் பகுதிகளே. இதோ விழிநோக்கும் அனைத்துக் கிளைகளும் சுழன்றுகொண்டிருக்கிறன. காற்றிலேறும் அத்தனை தூசிப்பருக்களும் சுழல்கின்றன. இங்கு கலமென குடமென வட்டை என கும்பா என நிறைந்திருக்கும் அத்தனை பொருட்களும் அந்த சுழற்சியின் வடிவங்கள்தான்.”

அவள் தன் இடக்கையால் அந்த ஆழியை மறுதிசை நோக்கி திருப்பினாள். அவள் கை அங்கேயே இருந்தது. மெல்ல குடம் களிமண்ணாக மீண்டது. "

இது கொஞ்சம் நீளமான மேற்கோள் தான். நம் உடம்பிற்கும் இது பொருந்தும். நாம் பார்க்கும் எல்லாமும் அசையும் நிலையிலேயே இருக்கின்றன. உடலும் அசையவே விரும்புகிறது. ஏதோ ஒரு வட்டத்தின் பாதையிலேயே சுழல நினைக்கிறது. ஒரு வட்டத்தின் பாதையிலேயே சுழல நினைக்கிறது. அந்த ஏதோ ஒரு தொடுதல் மட்டும்  பானையை களிமண்ணில் இருந்து எழுப்பி விடுகிறது. குயவனின் வண்டிச்சக்கரமும் , இந்த வாட்சின் சக்கரமும் ஒன்றுதான். செல்லும் தொலைவு நீளமே , ஆனால் ஒரு ஒரு நாளாய்...  


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...