Skip to main content

விசும்பின் துளி

விசும்பின் துளி 



ஒவ்வொரு பொங்கல் சங்கராந்தியிலும் இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் நினைவு கூர்கிறேன். இன்னும் இங்கு சூரியன் வரவில்லை. இடையில் நெடுநாளாய் எண்ணி இருந்த இந்தப் பதிவு.

ஒன்று வெண்முரசில் வண்ணக்கடலில் வரும் இளநாகன் அர்க்கபுரிக்குச் செல்லும் இடம். மஹாபாரத அர்க்கபுரி இன்றைய ஒரிஸ்ஸாவின் கோனார்க். பாரதத்தில் சூரியனின் முதல் ஒளிக்கதிர் விழும் இடம் என்று சொல்லப்படுவது. இளநாகனுக்கு சூரியனின் கதையை சொல்லும் இப்பகுதி , கர்ணன் துரியனால் அங்க மன்னனாக முடிசூட்டபின் அவன் மாபெரும் கொடையாளியாக உருவெடுக்கும் இடமும் கூட. 

https://venmurasu.in/vannakkadal/chapter-49

காசியபருக்கு தட்சனின் மகளான அதிதியில் ஆதித்யர்களும் வசுக்களும் ருத்ரர்களும் பிறந்தார்கள். அவர்களில் முதன்மையானவர்கள் பன்னிரு ஆதித்யர்கள்.  விவஸ்வாவின் மைந்தனே உயிர்த்துளியாக முளைத்த வைஸ்வாநரன். சூரியனின் தேர் ஒன்பதாயிரம் யோஜனை நீளமுள்ளது. பன்னிரு தேர்ச் சக்கரங்களே கால வடிவங்கள். அறிவென்ற வேதங்கள் அவன் மார்பில் கவசங்கள். பெருநாகங்கள் கடிவாளங்கள். அவன் அழிவற்ற பிரம்மத்தின் வடிவம்.

சூரியக் குழந்தை இதே போல் என்றென்றும் புகழோடு ஒளி மங்காமல் இருக்க தான் என்ன செய்யவேண்டும் என்று அப்பாவிடம் கேட்கிறது. அப்பா தோன்றியதெல்லாம் அழியும், தான் உட்பட எல்லாமும் தேய்ந்து அழியக்கூடியவையே என்று சொல்கிறார். தனக்கு முன்னர் கோடி கோடி பிரஜாபதிகளும் பிரம்மன்களும் தோன்றி மறைந்துள்ளனர் என்கிறார். தோன்றாதது, அழியாதது பிரம்மம் ஒன்றே என்று சொல்கிறார். சூரியக் குழந்தைக்கு இந்த பதில் ஒப்பவில்லை. ஒருவனை குன்றாமல் வாழவைப்பது எது என்று மீண்டும் கேட்கிறான். பிறருடைய வாழ்த்துக்களே ஒருவனை இறவாமல் வாழ வைக்கும் என்று சொல்கிறார். "அப்படியென்றால் என்னை ஒவ்வொரு கணமும் அகம்கனிந்து வாழ்த்தும்குரல்கள் எழுந்துகொண்டிருந்தால் நான் அழிவற்றவன் அல்லவா?’ என்றான். ‘ஆம் அவ்வண்ணம் நிகழுமென்றால்’ என்றார் காசியபர். ‘அவ்வண்ணமே ஆகும்’ என்று சொல்லி சூரியன் விண்ணிலெழுந்தான்” 

“விண்பாதையில் ரதமேறிவந்த சூரியன் தன் அகத்தை கனிவாலும் கருணையாலும் நிறைத்தான். கொடை என்னும் ஒற்றைச்சொல்லன்றி தன் அகத்தில் எச்சொல்லும் எழாமலாக்கினான். அச்சொல் அவனில் பல்லாயிரம் கோடி ஒளிக்கரங்களாக எழுந்தது. அவனை நோக்கி எழுந்த ஒவ்வொரு உயிர்த்துளியையும் பருப்பொருளையும் அவன் தன் கரங்களால் தொட்டான். மண்ணில் பூத்துவிரிந்த ஒவ்வொரு மலரையும் அவன் தொட்டு வண்ணம் கொள்ளச் செய்தான். ஒவ்வொரு இலையையும் வருடி பசுமைகொள்ளச் செய்தான். ஒவ்வொரு சிறுபூச்சியும் தன் சிறகுகளை ஒளிகொள்ளச்செய்யும் அவன் கைகளை அறிந்தது. நீருள் வாழும் மீன்களும் மண்ணுக்குள் வாழும் புழுக்களும் அவன் கொடையால் வாழ்ந்தன. வேளிர்களே, இப்புவியில் ஒவ்வொருவரையும் தேடிவந்து கொடுக்கும் கரங்கள் கொண்டவன் அவன் ஒருவனே.”

“அதோ, இருளில் ‘ரீ’ என்றொலிக்கும் பூச்சி. அது சூரியனை தவம் செய்கிறது. இந்நேரம் தண்டின் உறைக்குள் இருந்து மெல்லவெளிவரும் குருத்து அவன் கனிந்த புன்னகையை எண்ணிக்கொள்கிறது. அடைகாக்கும் முட்டைக்குள் வாழும் குஞ்சுக்கு அவன் ஒளியை கனவாக ஊட்டுகின்றது தாய்ப்பறவை. அன்னையின் குருதிவழியாக அவன் செம்மையை அறிந்து புன்னகைசெய்கிறது கருக்குழந்தை. அவன் ஒளிமுகத்தை அறியாமல் எவ்வுயிரும் மண்ணுக்குவருவதில்லை. இரவு என்பது சூரியனுக்கான தவம். பகலென்பது சூரியனைக் கொண்டாடுதல். சூரியக்கொடை இப்பூமி. இங்கே ஒவ்வொருகணமும் அவனை ஏத்தும் உயிர்க்குலங்களின் பலகோடிக் குரல்கள் எழாமலிருந்ததில்லை.”

“ஆகவே அவன் தேய்ந்ததே இல்லை. அள்ளிக்கொடுக்கும்தோறும் அவன் நிறைந்தான். எரியும்தோறும் பொலிந்தான். அவன் பிறந்தபின் ஆயிரம்கோடி இந்திரர்கள் வந்துசென்றனர். பல்லாயிரம்கோடி வருணர்களும் குபேரர்களும் எமன்களும் பிறந்துமறைந்தனர். பிரம்மம் அவனை நோக்கி புன்னகைசெய்கிறது. அழிவின்மையென்பது அவனே என்று தேவர்கள் மகிழ்ந்தாடுகின்றனர். பிரம்மத்தின் கைக்குழந்தையை முனிவர்கள் ஒவ்வொருநாளும் மூன்றுவேளை வணங்குகிறார்கள். அவன் செங்கதிரால் விளைகின்றது மண். அம்மண்ணின் அவிகளை உண்டு வானக தேவர்கள் வாழ்கிறார்கள்.”


வெண்முரசின் இந்த அத்தியாயத்திற்கு அப்பால் நினைவில் எழுவது , இரண்டாவது விசும்பின் துளி என்ற சொல்.


"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது"



விசும்பின் துளிக் கருணையே இங்கு நாம் காண்பது எல்லாம். 

மீண்டும் இந்த வார்த்தையை  இன்று அசைபோட்டேன். என் பையனிடம் இரண்டொரு முறை சொல்லி விளக்கினேன். தஞ்சாவூர் கோயிலில் உள்ளே புகுவது கைலாயத்தில் புகும் அனுபவம் என நினைத்து அதை ராஜராஜன் எழுப்பியதாகச் சொல்வார்கள். அதன் குறியீடு கருவறை விமான வாசலில் இருப்பதாக ஜேகே சொன்னார். அதைப் பார்க்க கண் வேண்டும். அதைப் போல விசும்பின் கருணை கணம் தோறும்  நிகழ்வதால் , இதையும் கண் பார்க்காமலேயே  செல்கிறோம். 


இந்த வார்த்தையை இன்னும் கொஞ்சம் குறளைத் தாண்டி கூகிளில் தேடினேன். இந்த சிறு கதையில் சென்று விட்டது.

மலைபூத்தபோது https://www.jeyamohan.in/143130/

மலையில் வாழும் ஒரு தொல் மனிதனின் பார்வையில் சொல்லப்படும் கதை. எல்லாமும் விசும்பின் துளி என்றே சொல்கிறது.

ஆமாம் மனிதனும் அவன் கருணையும். மனிதனும் அவனுடைய கருணையின்மையும் கூட .


 “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” - இதுவே கதையின் ஆப்த வாக்கியம்.

இந்தக் கதையின் ஆரம்பம்  இப்படி அபாரமாக துவங்குகிறது. கதை முழுதும் இப்படி  ஒரு dispaasionate commentary. அவன் கடைசியில் நகர மனிதர்களிடம் ஏமார்ந்து வெறும் கையுடன் மலையேறி , பின் அவர்களையே தன் தெய்வங்களிடம் காக்கும் இடமும் , பெரும் விலக்கத்துடனே அவன் சொல்வதாக வருகிறது, எல்லாம் முடிந்து அவன் சொல்வதும் இது தான் :  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” 


"நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள் சொல்கின்றன. அந்தப்பாட்டுகள் இங்கே பறவைகளால் பாடப்படுகின்றன. புறா உறுமியும் குயில் கூவியும் கானாங்கோழி கொஞ்சியும் மரங்கொத்தி தாளமிட்டும் அந்தப்பாட்டுக்களைத்தான் பாடிக்கொண்டிருக்கின்றன. இவை இப்படித்தான் இருக்கும் என்று அறிந்ததனால்தான் எங்கள் முன்னோர் அந்த மலையை, இந்த ஆற்றை, இங்குள்ள பாறைகளைத் தொட்டு “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னார்கள். பெண் கருவுற்றதை உறுதிசெய்ததும் அவளை அவள் கணவனும் சுற்றமும் அழைத்துவந்து மலைகளைச் சுட்டி அதை சொன்னார்கள். அக்குழந்தை பிறந்ததும் இருபத்தெட்டாவதுநாள் காட்டுக்கொடி எடுத்து முறுக்கி இடுப்பில் நாண்கட்டி கொண்டுவந்து ஆற்று நீரில் நனைத்து அதை சொன்னார்கள். திருமணத்தின்போது ஆணையும்பெண்ணையும் பாறைமேல் அமரச்செய்து அதை சொன்னார்கள். செத்த பிணங்களை புதைத்துவிட்டு வந்து நீரில் மும்முறை மூழ்கி எழுந்து அதை சொன்னார்கள்.  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” ஏனென்றால் இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ஆகவே நான் அந்த கரடிமலையை பார்த்தபடி கைகளை ஏழுமுறை தட்டி சொல்லிக்கொள்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” பின்னர் கைதையாற்றை பல்வரிசைப் பாறைகளின் வழியாக ஏறி மறுபக்கம் இறங்கிக் கடந்ததும் திரும்பிப்பார்த்து பன்னிருமுறை கைதட்டி சொல்லிக்கொண்டேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”


Comments

  1. “விசும்பின் துளி” என்ற கருத்தை நீங்கள் நேர்த்தியாக தொகுத்து, அந்த கருணையின் நிறைவை மிகவும் நுட்பமாக எடுத்துக்காட்டுகிறீர்கள். வெண்முரசின் இளநாகன் மூலம் சூரியனின் அரும்பொருள், கருணை, கொடை ஆகியவை எவ்வாறு மனித வாழ்க்கையைச் சுற்றி நெடுக விரிகின்றன என்பதை நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்.

    “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்ற அந்த ஒரே வாக்கியம் வாழ்க்கையின் எளிமையான உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஜெயமோகனின் எழுத்தின் பலம் இந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது. இயற்கையின் மாறாத நிலையை, மனிதனின் நுட்ப உணர்வுகளை, அவனுடைய சிறிய செயல்களின் புனிதத்தையும் அது காட்டுகிறது.

    சூரியனின் கொடை குறித்து நீங்கள் பகிர்ந்த பகுதி வாழ்க்கையின் மிக அழகான விழுமியங்களை எடுத்துரைக்கிறது. சூரியன் ஒவ்வொரு உயிரையும் தொடும் கருணையை எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதையும், அதேபோல், மனிதனின் செயல்களில் எவ்வாறு அந்த ஒளி பிரதிபலிக்கிறது என்பதையும் நீங்கள் உணர்த்துகிறீர்கள்.

    வெண்முரசு மற்றும் மலைபூத்தபோது ஆகிய இரண்டு படைப்புகளும், வாழ்க்கையின் மென்மையான உணர்வுகளை மிக அழகாகத் திரட்டி வைத்துள்ளன. நீங்கள் அதை வாசித்த அனுபவத்தை உங்கள் சொற்களில் இந்த அளவுக்கு எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

    “விசும்பின் துளி” போல், இந்த மெல்லிய சிந்தனைகளும், வாழ்க்கையின் சிறிய நிகழ்வுகளும் தொடர்ந்தும் உங்கள் மனதில் வழிவகுக்கும் என நம்புகிறேன். உங்களின் சிந்தனைப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...