நெடுநாள் நட்பும், ஒரு அழகிய கடற்கரையும் , முழுநிலவும் , எழு கதிரும்
'செயற்கரிய யாவுள நட்பின்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதாவது நட்பிற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது. எதுவுமில்லை. மேலே அடுத்த வரி அதைப் போல் செயல் காப்பது எதுவும் இல்லை என்பது. ஆனால் நடப்பில் அப்படி இல்லை. நட்புக்கு ஒரு பயணம் என்றால் பேச்சு அறுபட்டு டம்ளர் சொம்பு ஓசைகள் அதிகமாகும். இன்னும் நெடுநாள் நட்பு என்றால் செய்ய வேண்டிய வேலைகள் நினைவூட்டப் படும். ஆனால் இதற்கெல்லாம் வெளியே வர டெக்கினிக்குகள் இருக்கின்றன. இதை எழுதிக் குலைக்க முடியாது. வருடம் செல்லச் செல்ல தடை மீறிய பயணம் ஆகிறது.
இதைப் போல என்ன ஆனாலும் கூட்டம் கூட்டுவது என்று ஒரு சிலர் இருப்பதனால் தான் இப்படி நடைமுறைச் சிக்கல்களின் நடுவிலும் கூட்டங்கள் நடக்க முடியும். 144 போட்டால் ஐந்து பேர் மேல் கூடக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வீட்டுக்குள்ளேயே யாரும் பேச முடியாது. இன்று அபார்ட்மெண்ட்கள் பொதுவிடம் இல்லாமல் தனியிடத்தில் சேருமா.
ஆக என்ன ஆனாலும் சேர்ப்பதுவும், என்ன ஆனாலும் செல்வதுவும் சேர்ந்தால் ஒரு குறைந்த பட்சக் கூட்டம் ஆகிவிடுகிறது. எந்தக் கூட்டமும் ஒரு 'மினிமம் கமிட்மென்ட்' வைத்து தான் கூட்ட முடியும். இவர்களை கட்டம் கட்டினால் மேலே வருவது போனஸ். ஏன் இவ்வளவு விளக்க வேண்டும் என்றால் , நட்பு கூட்டுவதும் சரி, நட்பு பாராட்டுவதும் சரி, எளிதல்ல.
ஒன்றுக்கும் மேல் ஜூம் கால்கள் வேண்டியிருக்கின்றன. அன்று படித்தவர்கள் இன்று பலர் ஆசிரியர்கள், டைரக்டர் , எக்ஸெக்ஸ் ஆக இருக்கிறார்கள். நாள் நேரம் கூடி வர வேண்டும். வீட்டில் முடிவெடுக்க வேண்டிய நடைமுறை சிக்கல்களை மேலே சொல்லியிருக்கிறேன். ஆக எப்போதும் கடைசிவரை தொங்கு பாலம் போல் , பலர் முடிவுகள் வீட்டில் இழுபறியில் இருக்க வேண்டும். 'டென்டடிவ்' என்பதற்க்கு சரியான தமிழ்ச் சொல் என்னளவில் இல்லை. இதற்குள் வரநினைக்கும் டென்டடிவ் , கடைசியில் கழண்டு விழும் டென்டடிவ் என்று இரண்டும் புதைந்து கிடக்கின்றன. நீங்கள் நினைப்பது ஒன்று என்றால் நடப்பது ஒன்றாக. சில நண்பர்கள், வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள்.
படித்தது எவ்வளவுபேர் மொத்தம் என்ற கணக்கு நினைவில் இல்லை. முப்பது இருக்கலாம். ஒரு டஜன் திரும்பிச் சேர்ந்தால் அதிகம், மேல் எதிர்பார்க்கக் கூடாது. அவ்வளவே இம்முறை கணக்கும்.
இந்தக் கூட்டங்களை சுருக்கமாக கதைக் கூட்டங்கள் என்று சொல்லலாம். அன்று நடந்த இன்றும் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவில் நிற்கும் கதைகள். சொல்லிச் சொல்லி எல்லாம் மேலெழுந்து ஒன்றில் ஒன்று மோதி இன்னும் கதைகளாகக் கிளைக்கின்றன. நானே மறந்த பல கதைகள் கேட்டுப் பின் நினைவில் வந்து வேறொன்றைக் கிளறின. ஆசிரியர் பெயர்கள் ஒரு சில நினைவில் இல்லை. படித்த பேப்பர்கள் முழுதும் மறந்துவிட்டன.
நாட்டார் கதைகள் போல எடுத்து எடுத்து இவைகளை அடுக்க எங்கள் குழுவில் ஒருவர் இருக்கிறார். வரி மாறாமல் ஒருவரை எழுப்பி HOD என்ன கேள்வி கேட்டார், அதற்க்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று அவரால் சொல்ல முடியும். போட்டோவில் இருக்கிறார் , பெயரை ஊகத்திற்கு விடுகிறேன். அன்றைய நாட்டார் கதைகளில் இன்றைய ஒரு சில நடப்புகளையும் சேர்த்து அடுத்த முறை சேர்த்துச் சொல்வார் . நான் பார்க்க பட்டர் நானும் , பன்னீர் பட்டர் மசாலாவும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக விடாமல் , அதாவது பெங்களுரில் சமைக்க ஆரம்பித்த நாளில் இருந்து, இன்றுவரை விசுவாசமாய் இன்னும் சாப்பிடுகிறார். இன்னொருவர் எந்த ஒரு சொல்லையும் இழுத்து, வேறாய் ஆக்கி, இன்னொரு திசையில் அடுக்கி சிரிப்பைக் கொண்டுவருவார்.
முதலில் இங்கிருந்து அதிகாலையில் கிளம்பி சென்னை போக நினைத்தது காலையில் துவங்கும் நண்பரின் மகளின் நாட்டிய அரங்கேற்றத்துக்கு. அப்படியே அங்கிருந்து OMR நண்பர்கள் கூடுகை. இதில் எக்ஸ்பிரஸ் ஹைவே பேராசை குறுக்கிட்டதால் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. ஆண் பாவம் குவைத் போல ஆகி விட்டது. ஏறத்தாழ பாலைவனம் இறங்கி ஒரு இடம் கண்டுபிடித்து பெட்ரோல் போடவில்லை என்றால் இன்னும் சிக்கலாகி இருக்கும். விஷயம் என்னவென்றால் ஹைவே உடனே ஒரு இடத்தில் அறுந்து விட்டது. பின்னர் ரோட்டுப் பாதை, காட்டுப் பாதையாகி , பின்னர் திரும்ப ரோடாக , 4 ரோடாக , பசியெடுத்து நின்றுவிட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பின்னால் அரங்கம் அதிர்ஷ்டம். சரியாய் ஒரு மணி.கோவிலும் பார்க்கவில்லை, நடனம் யூ டூப் நேரலை பார்க்க வேண்டியதாகி விட்டது. சாப்பாடு பின் இன்னும் சிறிது பேச்சு. வீட்டில் போய் திரும்பப் பார்க்க லிங்கை தேடினேன். வேலை செய்யவில்லை. இதற்க்கு முன்னர் ஹர்ஷியின் நண்பர்கள் சிலரின் அரங்கேற்றம் பார்த்திருக்கிறேன். இதை எப்படிப் பார்ப்பது என்று தேடிப் படித்திருக்கிறேன்.
கபாலீஸ்வரர் கோவில் தெருவில் நிறைய கொலு பொம்மைகள் நின்றிருந்தன. காஞ்சிபுரம் போல் டிகிரி காப்பிக் கடைகள் இருந்தன. அருகருகே பல சபாக்கள் பார்த்தேன்.
பின்னர் OMR பக்கம் ஒரு பயணம். அன்று அங்கு தங்குவதாகத் திட்டம். பின்னர் காலை எழுந்து மாமல்லபுரம் பயணம் என்பது திட்டம்.
காருக்குள் ஏசியில் இருக்கும் வரை சதுர அடி என்ன விலை, வீடு என்ன விலை போன்ற கேள்விகள், இறங்கி ஒரு நிமிடம் சென்னை வெய்யிலில் நின்றவுடன் எரிந்து இல்லாமல் போயின. பெங்களூரை சென்னை விஞ்சும் நாள் தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன். எது சென்னை எல்லை என்பதே கேள்வியாகி விட்டது. இருபது வருடங்கள் முன் தாம்பரம் அவுட்டர் என்றார்கள். நான் வாடகை இருந்த வீட்டில் , ஓனர் அம்மா கன்று மாடுகள் வைத்து வைக்கோல் போர் வைத்திருந்தார். நான் அதிகம் பஸ்களை பார்க்க வில்லை. மெட்ரோ அந்த இடத்தைப் பிடித்து விட்டது என்றே நினைக்கிறன்.




ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருந்தார்கள். சென்றதும் ஒரு மணி நேர ஒய்வு. பின்னர் வீட்டின் பின்னால் இருந்த கடற்கரைக்கு நடந்து சென்றோம். இவை கன்னியாகுமரியின் புழக்கடை வாசலை நினைவு படுத்தின. திரும்பியதும் எதிர்பாராதபோது தீடீரென கடல் தோன்றியது.
பக்கத்தில் இருபெரும் பீச் ரெசார்ட்கள். ஒன்றில் கல்யாண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.
அன்று அடித்த வெய்யிலுக்கு தாங்காமல் சூரியனே கடலில் முங்கிக் குளித்து வெம்மை காய்ந்து கொண்டிருந்தார். கொஞ்சம் ஓய்வு எடுத்தால் தானே காலையில் வேலையை சரியாய் ஆரம்பிக்க முடியும். கடைசியில் பொன் குதிரைகள் பூட்டிய தேர் முழுதும் மறைந்து , விளக்கு அணைந்தது,சிறிது நேரத்திற்கெல்லாம் அலைகளில் இருந்து தூய சுடர் வெண்மதி வெளிவந்தது. பின்னர் சில நொடியில் நிலமே வெள்ளை சுண்ணம் பூசிய சுவர்போல் ஆனது. பின்னர் சிறிது நேரத்தில் , வானில் ஒரு முத்தென , விண்மீன்கள் நடுவே மேலேயும் ஒரு கடல்.
அப்புறம் வீடு திரும்பியதும் எல்லோர் உள்ளிருந்த சொற்கடல் வெளியே வந்தது. இருபக்கம் பிடித்து பாற்கடல் கடைவதாக , பழைய மத்துகளும் , கயிறுகளும் வந்த வண்ணம் இருந்தன. காலை எழுந்தும் கடைந்து முடியவில்லை.
மறுநாள் சூரிய உதயம் பார்க்கப் போனோம். அன்று ஏனோ ஒரு சில மழைத்துளிகள் துளிர்த்தன. சரியாய் உதிக்கும் இடத்தில மேகமும் சூரிய உதயத்தைக் காண வரிசையில் நின்றது. பார்த்ததா , விலகுமா என்றால் வழி தெரியவில்லை. முதல் நாவாய் கடல் மடியில் கண்ணில் பட்டது. பின்னர் புள்ளியாய் பல நாவாய்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்தன. ஒரு மேகத்துளியில் கங்கு பற்றியது. பின்னர் பல இடங்களில் அந்தக் கனல் பரவியது. இன்னும் பத்து நிமிடத்தில் கனல் எரிந்து கொழுந்தாய் வெண்சுடர் பற்றியது. பின்னர் மேகமும் தாக்குப் பிடிக்காமல் இடம் விட்டது. அப்புறம் அது நம் கண்களை ஊடுருவி அங்கும் வழி கேட்டது. பின்னர் இமைகள் திரை போட்டன.
குளிக்கும் இடைவெளிகளில் பிள்ளைகள் படிப்பும் , எவ்வளவு சேர்த்தால் பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கமுடியும். இப்போது இருப்பது உள்ளேயா , வெளியேயா போன்ற பேச்சுக்கள் காதில் விழுந்தது.
அடுத்து டீயைத் தேடி ஒரு நடைக்குப் பின் மாமல்லபுரம் வழியாக வீடு திரும்புவது என்று திட்டம்.
சூரியன் இந்த நிலத்தின் பசை முழுதும் உறிஞ்சுவான். இங்கு வேனிற்காலமே வேறு காலம் இல்லை என்பதால் எரிசுடர்க்கடவுளும் இந்த வெப்பத்தை நினைத்தால் அவன் இதயம் வெந்து போகும். கண்டால் கண்கள் வெந்து போகும். மாமல்லையில் சாப்பிட்டு கை கழுவும் போது சென்னை பரவாயில்லை என்று தோன்றியது, இத்திட்டத்தை நான் முன்னே ஆதரித்ததால் செயல் குன்றாமல் இருக்கும் பொறுப்பு என்னிடம் இருந்தது.
நான் ஏற்கனவே பயின்ற கோயில் கலை வகுப்பும், படித்த நாகசாமி போன்ற புத்தகங்களும் கை வசம் இருந்தன. மாமல்லைக்கும் இந்திய சிற்பக்கலைக்கும் உள்ள தொடர்பு, பல்லவர்களுக்கும் , சாளுக்கியர்களுக்கும் இருந்த சண்டைகள், நடுவில் இருந்த சிற்பக்கலை உறவு, பாதாமி குடைவரைகள் , மற்றும் மாமல்லை குடைவரைகள் வரை நினைவில் வந்தன. பஞ்ச பாண்டவர் ரதங்கள் பார்த்தோம். சுனாமியின் போது முன்னர் பார்த்தது. இவை முடிக்கப்படாமல் இருக்கும் ஒற்றைக்கல் மலைதளிகள். தர்ம ராஜ ரதம் மூன்றடுக்கு கோயில்.அர்த்தநாரி, நான்கு கைகள் கொண்ட சிவபெருமான், நான்முகன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இரண்டாவது , மூன்றாவது தளத்திற்கு வழி இருப்பதாக நாகசாமி குறிப்பிடுகிறார். ஆனால் காணக் கிடைக்கவில்லை. பீம ரதம் பெருமாளுக்கு உடையது, முடியவில்லை. அர்ச்சுன ரத்தம் சிவனுக்குரியது. சிவலிங்கம் பதித்து எடுக்கப்பட்ட தடம் உள்ளது. துவார பாலர் சிலையும், முருகன் சிற்பமும் இருக்கிறது, திரௌபதி ரதத்தில் கொற்றவை ஆலயம் உள்ளது, காலின் கீழ் வாளால் கழுத்தறுக்கும் ஒரு சிலை உள்ளது. சஹாதேவ ரதம் இந்திரனுக்கு எழுப்பப்பட்டது என்கிறார்கள்.






பகிரதன் தவம் , மஹிஷாசுர மர்த்தினி சிற்பங்கள் உள்ளம் கொள்ளை கொள்பவை. மகிஷன் வதம் ஒரு உறைந்த புகைப்படம் போல் உள்ளது.தோற்று ஓடும் மஹிஷனும், சிங்கத்தின் மேலேறி துரத்தும் அன்னையும், கீழே ஓடும் பிள்ளைகளும் மகளிரும் , எல்லாம் ஓடும் நிலையில் இருக்கின்றன. எதிரில் இருக்கும் பள்ளிகொண்ட பெருமாளும் , ஓடும் நிலையில் இருக்கும் மது கைடபர்களும் அவ்வாறே. இறுதியில் கடற்கரைக் கோயில். இதில் ராஜராஜனின் கல்வெட்டு உள்ளது. இதிலிருந்து இது பள்ளி கொண்டவர் கோயில் என்று தெரிகிறது, இதில் தார லிங்கம் இருக்கிறது, மேற்கே பார்த்து சோமாஸ்கந்த மூர்த்தி இருக்கிறார். மூன்றாவதை பார்க்க முடியாது, இது இருபுறமும் கருவறை உள்ள, மூன்று கர்ப்பகிரகம் அமைந்த கோயில். மேற்கே பார்த்து அர்த்த மண்டபம் , மஹாமண்டபங்கள் இருந்திருக்கின்றன. கிழக்கே கடல். ராஜசிம்மனால் எழுப்பப்பட்ட ஆலயம்.
எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியில் அண்ணாமலையார் கடந்ததும், காற்று குளிர்பட ஆரம்பித்தது. தலைகள் தூங்க ஆரம்பித்தன. வீடு திரும்பியதும் சரியாய் மழை பிடித்துக் கொண்டது. வீட்டிலும், வெளியிலும் !!
Comments
Post a Comment