Skip to main content

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் - கலைவாணி

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் -  கலைவாணி


சரஸ்வதி அந்தாதி 

அந்தாதி என்றால் ஆதி + அந்தம் , முதலும் , முடிவும் இரண்டுமானது என்று பொருள். சரஸ்வதி அந்தாதி என்றால் , முதலும் முடிவுமான சரஸ்வதி என்று பொருள். 

சிறுவயதில் பாட்டி  அபிராமி அந்தாதி சாத்திரத்திற்கு ரெண்டு மூன்று பாட்டு  சொல்லிக் கொடுக்கும்போது அந்தாதி என்றால் முடிந்த எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும் என்று சொல்லிக் கொடுத்தார். நூறு செய்யுளும் மாலை கோர்த்தது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பித்த சொல்லில் திரும்ப முடியும்.

ஆனால் இதன் குறியீட்டுப் பொருள் முதலும் முடிவுமான கடவுளை மனதில் வைத்துப் பாடுவது. கம்பர் ராமாயணம் போக இயற்றிய நூல்களுள் ஒன்று சரஸ்வதி அந்தாதி.

டூயட் படத்தில் மெட்டுப்போடு பாட்டுக்கு முன் ஒலிக்கும் , அவரது அம்மா மணி அடித்து ஆரத்தி காட்டிப் பாடும் துதிப் பாடல் கம்பர் அந்தாதியின் இரண்டு காப்புப் பாடலின் முதலாவது. 


'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 

 ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய 

 உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே 

 இருப்பள் இங்கு வாராது இடர்' 


அம்மா இரண்டாவது பாடலையும் பாடுவார்கள்.


'படிக நிறமும் பவளச் செவ்வாயும் 

கடிகமழ்பூந் தாமரை போல் கையும் - துடியிடையும் 

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் 

கல்லும் சொல்லாதோ கவி'


பெருங்காவியம் பாடிய கம்பனை எது இந்த முப்பது பாடல் அந்தாதியைப் பாட வைத்தது. படிக்கும் போதே உள்ளம் எழுச்சி கொள்ள வைக்கும் அதே ஒலி , நயம், கற்பனை எல்லாமும் கம்பனுடையது. 

கலைவாணியின் அழகைச் சொல்லி மாளவில்லை. வணங்கும் சிலைநுதல், களைத் தோளும் , புதிய நிலவெழுமேனி ,தோட்டுடனே பிணங்கும் கருந்தடக் கண்கள், அருக்கோதயத்தினும், சந்திரோதயத்தினும் அழகெறிக்கும் திருக்கோலம், மயில், மடப்பிடி ,இளமான் பிணை, குயில், பசுங்கிளி, அன்னம் இப்படி வந்து விழுந்து கொண்டே இருக்கிறது.

இரண்டு மூன்று பாடலுக்கு ஒரு முறை , உருகி மன்றாடுகிறார்.  'இயலான் நின் திரு நாமங்கள் கொண்டு ஏத்துதற்கு, முயலமையால் தடுமாறுகின்றேன்'  'வெள்ளிதழ்ப் பூஞ்சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளே' 

இதை ஏன் இப்படி மறை கழன்று எண்ணத் தோன்றுகிறது என்றால் காரணம் இருக்கிறது. கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கல்வியை மட்டுமே நம்பிப் பிழைப்பை நடத்தியிருக்கிறார். என்றும் சாஸ்வதமாய் இருக்கும் காவியம் செய்திருக்கிறார். வாழ்வெல்லாம் அதற்கே செலவிட்டிருக்கிறார். சிலநாள்கள் முன் படித்த தோல் பாவைக்கூத்து நூலில் கம்பனின் வாழ்வியல் சித்திரம் மெல்லியதாய் வருகிறது. அதுவும் கம்ப ராமாயணத்தை வாழ்வியலாய் ஏற்று இன்று வரை நம்மிடம் சேர்த்திருக்கும் ராமச்சந்திரப் புலவர் போன்றோரின் கல்வி நம்பிய பிழப்பையே அடிக்கோடிடுகிறது.  கம்பர் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள், அவர் சடையப்பரை சார்ந்து இருந்தது, புலம் பெயர்ந்து வாழ்ந்தது போன்ற தகவல்கள் வருகின்றன. எதுவும் எளிதாய் இருக்கவில்லை கம்பனுக்கும் என்பது தெரிகிறது.

இப்போது நம் பிழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும். நாலு எழுத்து படித்ததை விட வேறு ஏதாவது செய்தோமா ? இது இல்லாமல் இருந்திருந்தால் எப்படிப் பிழைத்திருப்போம்? வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதை கல்வி என்று சொல்வதா? சேகரிப்பதை அறிவு என்று சொல்வதா? அந்தாதியில் கம்பர் மீண்டும் மீண்டும்  சொல்லும் அன்னை கலைவாணியிடம் வேண்டும், இருளை ஒளியாக்கும், அந்தியில் விளக்கின் சுடர் போல் அறிவு இதன் பக்கத்தில் இருக்கிறதா? இதை வைத்து இவ்வளவு தூரம் வண்டி வந்திருப்பதை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?


"புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ

அந்தியில் தோன்றிய தீபமென் கோநல் அருமறையோர்

சந்தியில் தோன்றும் தபனனென் கோ"


ஆமாம் , இந்த அறிவின் சுடரே அவள்.


"வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்

பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்

போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்தவிந்து

நாதமும் நாதவண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே"


இதை எய்துவதே செல்வம் எய்துவது, மற்றெல்லாம் பொய்க்கும் பொருள்.


'வைக்கும் பொருளும்இல் வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்

பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்

மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்

உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே '


சேர்த்து வைக்கும் பொருளும், வாழ்கையையில் நாம் பொருளென்று கொள்ளும் பொருள்களும் , மற்ற எந்தப் பொருளும் பொய்க்கும் பொருள் அன்றி என்றும் நீளும் பொருள்கள் அல்ல. இந்த பூமியில் மெய்யான பொருளும், அழியாத பொருளும் , ஆகச் சிறந்த பொருளும் கலைவாணி உணர்த்தி நிற்கக்கூடிய மெய்ப்பொருள் ஆகும்.


'பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோ

மருளாத சொற்கலை வான்பொரு ளோபொருள் வந்துவந்தித்(து)

அருளாய் விளங்கு மவர்க்கொளி யாய்அறி யாதவருக்(கு)

இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே '


பொருளை வைத்து இருவுலகமும் வாங்கலாம் என்ற பொருள் பொருளோ? பயமில்லாத சொற்கலைவாணியின் வான் பொருள் நாவில் வந்தபின் அருளாய் விளங்கும் அறிந்தவர்க்கு; அவளை அறியாதவர்க்கு இருளாய் விளங்கும் 


'இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்

மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே

துலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே'


கலைவாணியின் திருமுகம் துலங்கும்; மெய்க்கூச்செரியும்; கண்ணில் விழிநீர் எழும்; நாவில் பழுதற்ற சொல் உண்டாகிப் பலிக்கும் ; மனம் துலங்கும்; முகத்தில் புன்முறுவல் உண்டாகும்;   சுழல் புனல் போல் மனம் கலங்கும் பொழுது , தெளிவான சொல் ஒன்று பிறக்கும்;


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...