கவிதை ஒரு சுய புரிதல்
மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன்.
கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்றால் சரியாக இருக்காது. எழுச்சி என்று அழைக்கலாம் என்று தோன்றவில்லை. நல்ல கவிதை கொடுப்பது என் அளவில் மனத்தில் ஒரு புதிர் விடுபடும் சித்திரமே. சதுரங்க விளையாட்டில் எதிர் பாராமல் , நம்மிடம் ராணி உள்பட எல்லாக் காய்களும் கைவசம் இருக்கும்போது எதிரில் விளையாடுபவரிடம் இருந்து ஒரு 'செக் மேட்' நிகழ்வதைப் போல. குறைந்த அளவில் ஒரு 'செக்' ஆவது நல்ல கவிதையில் நிகழ்கிறது என்றே நினைக்கிறேன். நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிராகவோ , வேறொரு பக்கக் கோணத்திலோ நிகழ்வது. இது உரைநடையில் நல்ல இலக்கியங்களில் உச்சம் என்று சொல்வார்கள், இலக்கியத் தருணம் என்று சொல்வார்கள்.
நல்ல கவிதை என்பது மிக நுண்ணிய விஷயங்களிலும் இருக்கும் உன்னதத்தை , மகத்துவத்தைப் பற்றிப் பேசுவது. பொதுவில் கலைகளின் உச்சம் கவிதை என்பது நாம் அறிந்த ஒன்று. யாரும் பாராட்டுவதற்கு சொல்லில்லாமல் போகும்போது கவிதை என்று சொல்லி முடிக்கிறார்கள்.கவிஞனை விண்ணில் பறக்கும் பறவைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். பெருங்கவியின் பார்வை எப்போதும் விண்ணை நோக்கியே இருக்கிறது.அதுவே உன்னதம் , என்றும் இருப்பது.
கவிதை பற்றி என்று தேவதேவன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இது ஒரு கேள்வி பதில் வடிவில் உள்ள புத்தகம். ஆனால் மிக ஆழமான புத்தகம். கவிதை வாசிப்பவன், எழுதுபவன் கட்டாயம் படிக்க வேண்டும். நான் கவிதைப் புத்தகங்கள் படித்து , மனத்திற்குப் பிடித்துப்போய், எழுதினால் என்ன என்று தோன்றி, எளிதல்ல என்று அறிந்து பின்னர் , கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள மீண்டும் கொஞ்சம் படித்து , கடைசியில் இதிலே தான் புரிந்து கொண்டேன். இறுதியில் அடக்கம் அவசியம் என்றும் அறிந்து கொண்டேன். மேலே படிக்கவும்.
எல்லாக் கலைகளிலும் உன்னத ரூபம் கவிதை என்று சொல்கிறார். இதை நம் அன்றாடம் பார்க்கலாம். என்னுடைய சிறுவயதில் தீபாவளிக்கு எல்லோரும் கடையில் வெடியை வாங்கி திரியைக் கொளுத்தி வெடிக்கும் சத்தத்தில் சந்தோஷம் கொள்பவர்களின் மத்தியில் , மூன்றாவது வீட்டு அக்காவை கல்யாணம் முடித்து வந்த கேரள புது மாப்பிள்ளை , வீட்டின் பின்னால் இருந்த மூங்கிலை நாளெல்லாம் உட்கார்ந்து குழாய் போல் அறுத்து, உள்ளே குடைந்து , எங்கிருந்தோ கொணர்ந்த வெடி மருந்தை வைத்து அடைத்து நாளின் முடிவில் கையால் செய்த ஒரு மூங்கில் வெடியை வெடிக்க வைத்தார். இதை என்னவென்று சொல்வது , படைப்பூக்கம் என்று சொல்லவேண்டும். வேலை பார்க்கும் இடத்திலும் இப்படிப் பட்டவர்களை பார்க்க முடியும். செய்யும் வேலையைத் தியானம் போல் எண்ணி எண்ணிச் செய்பவர்கள் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த பிரபஞ்ச தத்துவத்தையும் செய்யும் அந்த வேலையில் காண்கிறார்கள். புகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி போல. குப்பையில் முளைத்த ஒரு நெல் பயிர் அவரை ஒரு தத்துவ ஞானி என்னும் இடத்தில் இறுதியில் கொண்டு சேர்க்கிறது, இந்த இடத்தைத்தான் தேவதேவன் கவிதை என்கிறார். இங்கிருந்து வெளியாவதே கவிதை. உன்னத நிலைக்கான முயற்சியில் ஒரு கலைப் படைப்பு உயரும்போது , பறவைபோல் விண்ணில் பறக்க ஆரம்பிக்கிறது. பொருள்களை எல்லாம் ஒன்றொன்றாய் உதிர்த்தபடி மேலே பறக்கிறது. . உலகாயதம் ஒன்றொன்றாய் கீழே உதிர்கிறது. பெருவெளியையும் , பேருணர்வையும் சுட்டி நிற்கிறது.
கவிதை வாழ்வின் உன்னதத்தை தான் பாடுகிறது. ஆனால் அதன் பயணம் என்பது வேறாக இருக்க வேண்டும். இழிவு, கீழ் பொருள் எல்லாம் பாடியே அந்த உன்னதத்தைச் சுட்ட முடியும். சப்தமும் மௌனமும் முயங்கியே நிற்கின்றன. காட்டின் பேரமைதியை எங்கிருந்தோ கிளம்பி வரும் ஒரு குயில் சத்தம் மட்டுமே உணர்த்த முடியும். இடைவிடா வண்டி நெரிசல்களைக் , ஹாரன் ஒலிகளை கேட்ட காதுகள் மட்டுமே மௌனத்தை உணர முடியும்.
கவிதைக்கு கச்சாப் பொருள் சொல். இசைக்குக் கருவி சப்தம் என்பது போல. பாடுபவன் சொல்லைப் பொருட்படுத்துவதில்லை. அதை ராகத்தில் பொருத்துவதையும், ஒலியை வைத்து உணர்வைத் தொடுவதிலுமேயே பாடுபவனின் கவனம் இருக்கிறது. இதனாலேயே நம்மால் மொழி இல்லாமல் இசையை உணர முடிகிறது. சந்தோஷமும், துயரமும் எல்லா ஆழ்மனங்களும் உணரக் கூடியவை. அதை ஒலியால் தொடமுடிவது நல்ல உன்னத இசை என்றாகிறது.
இங்கு அவர் சொல்லும் உன்னத நிலை என்றால் என்ன ? இது வாழ்வின் உன்னத நிலை. வாழ்வின் பேரழகையும், சத்தியத்தையும், முழுமையும் பாடுவது. வடமொழியில் கவிஞன் என்றால் தெய்விக்ஞன் என்று பொருள். அதாவது தெய்வ ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை, வாழ்வின் ரகசியங்களை அறிந்தவன். தூய இதயத்தினால் வாழ்வை அறிய முற்படுபவன் , அறிந்தவன். அந்தக்கால சாமியாடிகள் , மருத்துவர்கள் போல. சத்யம், சிவம் ,சுந்தரம் ஆகியவை பிரபஞ்ச மொழிகள் என்று அறிந்தவன்.
சரி, கவிதை எப்படி எழுதப் படுகிறது? எழுதியதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?.
இதற்கு சொல் என்றால் என்ன என்று அறிய வேண்டும். சொல் என்பது எப்போதும் பின்னால் ஒரு 'பொருளைக்' குறிப்பது. ஒரு அனுபவத்தைக் குறிப்பது. மேஜை என்ற சொல் நாலு கால் வைத்து மேலே ஒரு பலகை வைத்து அடித்து நிறுத்தப் பட்ட பொருள். மேஜையின் அனுபவத்தை நம்முள்ளே எழுப்புகிறது. மொழி என்பது பொது வழக்கில் லௌகீகத்தைக் குறிப்பது. உலகத்தில் நாம் புழங்குவதற்கானது. நம்முடைய பரிவர்த்தனைக்கானது. இந்த மொழியை அறிந்த நாம் கவிதை என்றால் என்ன என்று கேட்கிறோம். கவிதையின் தேவை என்ன என்று கேட்கிறோம். இதிலிருக்கும் சிக்கல் என்பது லௌகீக மொழியை வைத்து வாழ்வின் பேரழகை, ஒழுங்கைச் சொல்ல வேண்டியிருப்பது. அன்றாட வாழ்விற்கும் , கவிதைக்கும் மூலப்பொருள் சொல் ஒன்று தான். இதை வைத்துக்கொண்டே உன்னதத்தையும் சொல்லியாக வேண்டும். மொழி என்னும் குறியீட்டின் மேலே எழுதப்படும் இன்னொரு அடுக்கு குறியீட்டு மொழி கவிதை என்பது. கணிப்பொறி வழக்கில் 'ஸ்டாண்டர்ட் லைப்ரரி' என்று ஒன்று உண்டு. அதன் மேல் இன்னும் வேறு நிரல் மொழிகள், அதன் மேல் API என்றெல்லாம் பிரத்யேக மொழிகள் இருப்பதைப் போல.
உதாரணமாக மரம் என்ற சொல் அன்றாடப் புழக்கத்தில் மேலோட்டமானது. ஆனால் கவிதையில் அந்தச் சொல் அனுபவத்தை ஆழமாகக் சொல்ல முயல்கிறது. அதன் உயரத்தையும், அழகையும், வியப்பையும், வேர்ப்பற்றையும், வேர்களை பூமியின் கீழ் கிளைகளாயும், இலைகளைப் பறவையாயும் என்று வேறு ஒரு அனுபவத்தை உணர்த்த முயல்கிறது. கவிஞன் இந்த அனுபவத்தை இந்தச் சொல்லின் மூலம் கடத்த முயல்கிறான். இதுவே கவிதைக்கும் அன்றாட மொழிக்குமான வேறுபாடு. இரண்டுக்கும் மொழி ஒன்றுதான், ஆனால் அனுபவ தளம் வேறு. கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அனுபவத்தை உள்வாங்கியே அந்த மொழியைப் புரிந்து கொள்ள முடியும். வேறு வழிகள் கிடையாது.
நம்முடைய அன்றாட மொழியில் ஒரே சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன. நூல் என்பதற்கு இருவேறு பொருள்கள் இல்லையா? இது சொல்லவேண்டியதன் விரிவையும் , மொழியின் போதாமையும் குறிக்கிறது. ஒட்டு மொத்த வாழ்வையும், பேரழகையும் , பிரபஞ்சத்தையும் சொல்ல வேண்டியிருக்கும் போது கவிதைக்கு இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாகிறது. இந்தக் குறியீட்டு மொழி இன்னும் தேவையாகிறது. மொழிக்குள் மொழி என்பதே கவிதை.
வாழ்வு என்பது அகவயமானது. எழுச்சி, அன்பு, அறம் , உக்கிரம் போன்றவை அதன் விழுமியங்கள். வாழ்க்கையை பொருள் என்று வைத்துக்கொண்டால் , இவை இரண்டும் முட்டி மோதி, முயங்கி வெளிப்படுவது கவிதையின் மொழி. இந்த வழியில் சொல்லும்போதே கவிதையில் மரம் என்ற சொல் படிமம் என்றாகிறது. என்றும் மாறாத வாழ்வின் குணங்களை குறியீட்டு மொழியில், படிம மொழியில் சொல்வது கவிதை.
கவிஞனுக்கு என்று லட்சியம் கிடையாது. வாழ்வை முழுமையாக வாழ்வதே அவன் லட்சியம். 'வாழ்வின் லட்சியம் வாழுதல் மட்டுமே' . எந்த அமைப்பிலும் சேராதவன். கட்சி கட்டாதவன், பின்னால் செல்லாதவன், வாழ்வே அனுபவம் என்றானவன் , தார்மீகமானவன். முக்கியமாக தன்னுணர்வில்லாதவன், பிரபஞ்ச மனிதன்.
கவிதையின் மொழி பிரபஞ்ச மொழி. பிரபஞ்ச பாஷை என்பது அன்பு, சுதந்திரம், நீதி, அழகு. இவை தன்மயம் அற்றவை. என்றும் இருப்பவை. இதைத் தொட்டுக் காட்டுவதே கவிதை. கவிஞன் இதை அனுபவித்தே சொல்லில் கொண்டுவர வேண்டும். இதற்கு அவன் தன் முனைப்பிலாத பிரபஞ்ச நோக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும். ஒரு வலியவன் எளியவனை தாக்கும் போது நமக்குள் ஏற்படும் துணுக்குரல் போல, ஒரு குழந்தையைப் பார்த்ததும் வரும் சிரிப்பைப் போல, அழகிய பூவைப் பார்த்ததும் தோன்றும் அழகுணர்ச்சியைப் போல என்றும் இருக்கும் பிரபஞ்ச விசையின் சூழலைப் பார்த்துக் கொண்டிருப்பதே கவிமனம். இதுவே கவிதையைத் தர வல்லது. இதைத்தான் கவிதானுபவம் என்று சொல்கிறோம்.
இந்த உன்னத வாழ்வனுபவம் என்பது தன்னை மறந்த நிலையிலேயே சாத்தியம். 'வாழ்வு ஸ்பரிசமாவதையே அனுபவம் என்கிறோம், கவிஞன் தன்னை இழந்த, அதாவது தனது மனப் பதிவுகளை இழந்த தருணத்தில்தானே அனுபவம் தோன்றுகிறது. அனுபவ ஸ்பரிசமே மனவெழுச்சி தோன்றுகிற வேளையுமாகும். அனுபவத்தின் குணமே அது எனலாம்.'
கவிதை என்பது மனவெழுச்சி நிலையில் எழுதப்பட்ட ஒரு உயிர்ப்பொருள். நகமும் சதையுமான ஜீவன். நல்ல கவிதையில் உயிர்ப்பற்ற ஒரு சொல் இருக்காது. குழந்தைத் தன்மை இருக்கும், வியப்பு இருக்கும், அன்பு இருக்கும், துணுக்குரல் இருக்கும்.
சோப்புக் கட்டி
என் சோப்புக் கட்டிக்கு
மாம்சமானவைகளையெல்லாம் தொட்டு
மயங்கிச் சோர்கிற ஆசையே கிடையாதாம்
'அட என் அழுக்குப் போக்குடா'ன்னு
பிடித்து வைத்து வேலை வாங்கினா
தன் ஜோலியே பெரிசா
வழுக்கி வழுக்கிப் போகிறதே
தண்ணியையே பார்த்து (தேவதேவன்)
கீழிருக்கும் மேற்கோள் எஸ்ரா பவுண்ட் சொன்னது. மிகுந்த அர்த்தம் அடைக்கப்பட்ட மொழியே இலக்கியம் என்பது.
What is literature, what is language, etc.??
Literature is language charged with meaning.
‘Great literature is simply language charged with meaning to the utmost possible degree’
(E. P. in How to Read).
எதுவெல்லாம் கவிதை இல்லை. மொழி விளையாட்டு மட்டும் கவிதை இல்லை, வெறும் மொழி கவிதையை மணலில் குண்டூசிபோல் மூழ்கடித்து விடுகிறது.
"திருகலான வெறும்மொழி கவிதை அல்ல; நீதிபோதனைகளோ, அறிவுரைகளோ கவிதை அல்ல; வாழ்க்கையின் அடிப்படையை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தொடுவதற்குச் சாத்தியமற்றது கவிதை அல்ல."
கவிதை குறித்து ஒரு கவிதை.
கவிதை வாசிப்பவர்களும் கவிஞர்களும் - ஆர், ராஜகோபாலன்
மாலை அமிழ்ந்திடும் நேரம் அழகான வேளை
எந்தவிதக் காரணமுமின்றி கடற்கரைப் புல்வெளியில்
சற்றே உட்கார்ந்திருந்தேன் யாரேனும் நண்பர்கள்
வரக்கூடும் என்கிற பின் யோசனையுடன்
அதுவரை படிக்கலாம் என்று
நடைபாதையில் வாங்கிட்ட
கவிதைத் தொகுதியைப் பிரிந்தேன்
மங்கலான வெளிச்சம் சிறிதே விழ
திடிரெனப் பக்கங்களின் மேல்
மெல்லியதாய் மழைத்துளிகள் ஒவ்வொன்றாய்
புத்தகத்தை மூடி மரத்தடியில் நின்று கொண்டேன்
பக்கத்தில் பையுடன் ஒரு மனிதர்
மழை பலமாகப் பெய்யுமா என்றார்
அதுதான் பெய்யவில்லையே என்றேன்
பின் வேட்டியை மடித்துக்கட்டி
வேகமாய்ப் பிரிந்து போனார்
மழைத்துளியை மறைக்க
இயலா மர இலைகள் என
பக்கமாயிருந்த சிறிய மரத்தினுள்
ஓடிப்போய் நின்று கொண்டேன்
சிறிய மரம் விரிந்து
எனைக் காத்துக் கொண்டது
சுற்றிலும் அழகுக்காய்
கத்தாழைச் செடிகள்
எப்படி எதற்கு இந்த வேளையில்
வீட்டை விட்டு நான் வரவேண்டும்
அதுவும் சிறிய மரத்தடியில்
ஒரு நனைந்து உடல் சிலிர்க்கும் குருவியைப் போல
புத்தகத்தில் படித்தவரி நினைவுக்கு வந்தது
கவிதை வாசிப்பவருக்கும் கவிஞருக்கும்
நிச்சயமாய் கொஞ்சமேனும் மூளை
பிசகியிருக்க வேண்டும் என்று
நிமிர்ந்து பார்த்தேன் அடர்ந்த
பெரிய இலைகளின் நடுவில்
எனக்குத் துணையாய் கைக்கெட்டும்
தூரத்தில் மஞ்சள் நிறமாய் ஒரு பூவாசம் பூ
ஆத்மாநாம் / ஞானக்கூத்தன், ஆசிரியர். ழ: முழுத்தொகுப்பு (Tamil Edition) . Kindle Edition.
இது நான் போன வாரம் எழுதியுது, மேலே சொன்ன கவிதையைப் படிப்பதற்கு முன்.
கருணை
=======
பத்து நாள் காய்ச்சலில் விழுந்து
பல நாள் விட்டு யார் தடுத்தும் கேளாமல்
தூரத்து பூங்காவில் ஒரு நீண்ட
மாலை நடை போனால் என்ன என்றெண்ணி
ஏரிக்கரை ஒட்டி
எண்ணற்ற கால்களின் நடுவில்
மட்டற்ற மகிழ்ச்சிகளின் நடுவில்
மெல்லிய கிசுகிசுப்புகளின் நடுவில்
நீரில் நிற்கும் மரங்களின் நடுவில்
அதன் மேல் நிற்கும் பறவைக் கீச்சொலிகளின் நடுவே
ஒரு நீண்ட நடை முடித்து
ரயில்வே கிராஸ்ஸிங்கில் கேட்டில் நிற்கையில் முதல் துளி
ரயில் கடக்கையில் காற்று இழுத்தது போக மேலும் சில துளிகள்
இடைப்பட்ட அத்துவானத்தில்
எங்கும் படரும் மழையின் அடர்ந்த மௌனம்
பின்னர் சரியாய் எனக்காய் காத்திருந்து
நான் அந்தக் கூரைக் கடையில் நுழைந்ததும்
இடி இடித்து மழை கொட்டித் தீர்த்தது
"புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி."
இது பெரியாழ்வார் திருமொழி, பிரபந்தப் பாடல். கண்ணனை பிள்ளையாக , தன்னையே தாயாக எண்ணிப் பாடியது. ஊரெல்லாம் திரிந்து விளையாடி , உடம்பெல்லாம் புழுதியாய் , அழுக்காய் , வேர்வையும் , புழுதியும் கலந்து திட்டாய் ஆகி , வீட்டினுள் புகுந்து அதை தன் மேல் அப்புவான் என்கிறார். பட்டிக்கன்று என்று சொல்கிறார். உடனே என்னுடைய விளையாடிய எப்போதும் புளுதியேறி திட்டாய் இருக்கும் கால்களும், கையை உரசினால் புழுக்கள் போல் நெளியும் அழுக்கும் நினைவில் வந்தது. என்னுடைய பையயன் கால்களும் விதி விலக்கல்ல. காலுறையின் நூல்களும், புழுதியும் சேர்ந்து, நகமெல்லாம் புகுந்து எப்போதும் இருக்கும் மேகக் கருப்பு அது. எல்லாப் பிள்ளைகளும் பட்டிக்கன்று தான்.
Comments
Post a Comment