ஒரு செடியின் கல்லறை
--------------------------
நான் வேலைக்குச் செல்லும் போது தினமும் பார்க்கும் காட்சி , அடுத்த வீட்டு ஓனரின் அப்பா ஒரு ஹோஸ் பைப்பை கையில் வைத்து தெருவெல்லாம் தண்ணீர் ஒட வைப்பார். அது போல் எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு அம்மாவோ, பாட்டியோ செடிக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார் . இங்கு எல்லார் வீட்டு வாசலிலும் பூச்செடிகள் இருக்கின்றன. விரித்த பசும்புல் பாயில் இடையில் செடிகள் அமர்ந்திருக்கும். சில நின்றபடி இருக்கும். சில செடிகள் தவழ்ந்தபடி இருக்கும் . சில நீராய் வழி தேடி தரையில் ஓடியபடி இருக்கும். சில கொடியாய் , மேகமாய் , பறவையாய் வானில் வழி கேட்டு நிற்கும். இதற்கெல்லாம் இடையில் சிலையாய் ஒரு மரம். ஆனால் எல்லாவற்றிலும் தலையில் பூக்கள். ரோஜாவும், கேந்தியும் , செம்பருத்தியும், குல்மோகர், குறிப்பாய் ஆப்ரிக்கன் துலிப். இந்த ஊரின் செங்காந்தள். மரமே கனன்று எரிவது போல் இருக்கும். அப்புறம் அந்த யானைக் காதுகள் போல் இலைகளை மெலிதாய் ஆட்டியபடி இருக்கும் அந்தச் செடி.
கட்டிப் போட்ட நாயாய் , கைப்பிள்ளையாய் சிறிய, பெரிய தொட்டிகளில் வளரும் செடிகள். தலையிலும் இடுப்பிலும் ஏறி நிற்கும் பூச்செடிகள்.
ட்ராக்டர்களில் பூச்செடிகள் வந்து இறங்குகின்றன. சனி ஞாயிறுகளில் தோட்ட ஆட்கள் வேலை பார்க்க முதலாளி அம்மாக்கள் நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்து யோஜனை சொல்வார்கள்.
இந்த இருக்கும் இடம் சுற்றி நிறைய நர்சரிகள். செடிகளுக்கு சூப்பர் மார்க்கெட் போல என்று நினைத்துக் கொள்கிறேன். கையகல தொட்டியில் இருந்து , சொம்பு , சட்டி, பானை , அண்டா என்று எல்லா அளவிலும் சொருகி வைக்கப்பட்ட செடிகள். தொங்கும் பைகளுக்குள் செடிகள். ஒரு ஆயா , தள்ளுவண்டியில் தள்ளியபடி செடிகளை வசதியுள்ள பெண்கள் அள்ளிப் போட்டபடி உள்ளே சுற்றி வருவார்கள்.
இதை ஏன் வாங்கி வீட்டில் வளர்க்க வேண்டும் என்று எனக்கு பிடிபட வில்லை. இப்படி ஒரு நடை சென்று கடையில் சும்மா பார்த்தால் போதாதா? போகும் வழியில் மனது பறக்காமல் இருந்தால், எண்ணற்ற மரம், செடி , கொடிகள் கண்ணில் விழுகின்றன. செடிகளை குழந்தை போல் எண்ணி வாங்குகிறோம் என்று நினைக்கிறேன். கூண்டில் வைத்து பறவையை வளர்ப்பது, மீன் தொட்டிகள் எல்லாம் இப்படித்தானா? இவைகளை வாங்கி வளர்த்து உயிருக்கு ஏதேனும் நடந்தால் என்று நினைத்து பலர் இதில் தீவிரம் இறங்குவதில்லை. ஆனால் செடிகள் முன் அந்த எண்ணம் தோன்றுவதில்லை.
மனிதன் செடிகள் வளர்த்து தான் செடிகள் வளர்கின்றனவா ? மனிதன் இல்லாமல் செடிகளை கடவுள் பிறப்பித்துக் காக்க மாட்டாரா? மனிதன் கால் வைக்காத காடு , மலைகள் தான் இல்லையா? ஏன் இவ்வளவு மெனக்கெடல் ?
இந்த மாதிரி நினைப்புகளுடன் வீட்டில் செடிகள் வாங்கலாம் , வைக்கலாம் என்றால் அரை மனதுடன் மட்டுமே என்றும் சென்றிருக்கிறேன்.அவர்கள் சொல்லும் விலையும் அப்படி. மற்றொன்று அவைகள் அந்த ஜாடியிலே பிறந்து , ஜாடியிலேயே மடிகின்றன என்ற நினைப்பு. ஆனாலும் எல்லாமும் இந்த பூமியிலே, இந்த நிலத்திலேயே நிற்க முடியும் இல்லையா?
வீட்டில் ஒரு பக்கம் செடிகள் வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது, ஊரெல்லாம் பூ. வாங்கி வைத்தால் தான் உண்டா? வழியில் இருக்கும் செடியைப் பறித்து வைத்தால் என்ன? மாற்றான் தோட்டமா , இல்லையே , இது இறைவனின் தோட்டம். திட்டத்தை மனதில் பதித்து வைத்துக் கொள்வது என முடிவு செய்தேன். வீட்டு வாசல் எல்லாம் பூக்கள் பூத்திருக்க , மலர்களில் உரசிய வண்ணம் வீட்டுக்குள் புகுவதாக ஒரு படம் உள்ளே தோன்றி மறைந்தது. இவ்வளவுதானா?
வண்டியில் போகும்போது இந்த எண்ணம் தோன்றும். தோன்றும் போது வெட்ட வெளியில் வண்டி போய்க்கொண்டிருக்கும். அல்லது பெரிய மரங்கள் இருக்கும். இல்லை பாழாய்ப்போன நர்சரி இருக்கும். அப்படி என்றால் இவை எல்லாம் மனிதன் வளர்த்தால் தானா? இன்னொரு சிக்கல் வேலைக்குப் போகும் பொழுது கையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆகையினால் , பார்த்து வைத்துக் கொள்வது, சாயங்காலம் வரும் பொழுது பறித்துக் கொண்டுபோய் வீட்டில் வைப்பது என்று திட்டம்.
இந்த வழிப்பறி எண்ணம் மனதில் இல்லாத போது பூக்கள் தப்பித்த பூக்கள் ஏராளமாய் இருந்திருக்க வேண்டும். இந்தக் கடத்தல் திட்டம் தெரிந்து , காலிருந்தால் தப்பி ஓடியிருக்கும். இன்று தெரு நாய்கள் உக்கிரமாய் ஆகியிருப்பது சுப்ரீம் கோர்ட் நாய்களை அடைத்துப்போடும் தீர்ப்புக்குப் பின்னர் தானோ என்று தோன்றும். ஒரு வேளை மனிதர்கள் பேச்சைக் கேட்டு, புரிந்து கொண்டு விட்டனவோ?
அன்று ஒரு நாள் நினைப்பு ஒன்று கூடி வரும் போது சரியாய் ஒரு சிறிய கேந்தித் தோட்டம் அந்த ரோட்டின் மறு முனையில். பார்த்து குறித்து வைத்துக் கொண்டேன். சரியாய் திரும்பி வரும் போது பறித்துக் கொண்டு போக வேண்டும். ஒரு இரண்டு நாள் கழித்து லீவு நாளில், மெனெக்கெட்டுப் போய் பூக்களுடன் இருந்த அந்த செடியை பிடுங்கி வந்தேன். ஒரு பத்து நிமிடத்திற்குள் குழி போட்டு பதித்து , எதிரில் இருந்த மணல் மேட்டில் இருந்து செம்மண் பெயர்த்து வைத்து , நீர் விட்டுப் பூசி நிற்க வைத்தேன். வானைப் பார்த்து பெருமூச்சு விடுகிறதா, இல்லை, அப்பா இப்ப கொஞ்சம் நிம்மதி என்று சொல்கிறதா தெரியவில்லை.
எனக்கு ஏனோ ICU வும் , வென்டிலேட்டரும் நினைவில் வந்தது. இரவில் மழை பெய்தது. சாளரக் கண்ணாடி அவ்வ்வப்போது எட்டிப்பார்ப்பேன். எங்கிருந்தோ ஒரு காற்று அதில் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தும். மனது ஆசுவாசப்படும். இரண்டாம் நாள் காலையில் எழுந்தவுடன் நேரே கீழே செண்டு திரை விலக்கிப் பார்த்தேன். ஒரே தண்டு நிலத்தில் நம்பிக்கையுடன் நின்றிருந்தது. அதன் செதில் போன்ற இலைகள் எல்லாம் சேர்ந்து , ஒரு சிறு டால்பின் உடல் வளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. கண்கள் போன்ற அதன் இரு தளிர் இலைகள் என்னை நோக்கின. ஏன் செய்தாய் என்று கேட்பது போல் இருந்தது. டால்பின்கள் எல்லாம் சேர்ந்து காற்றில் கூட்டமாய் நீந்தி , ஒரு கணம் அதிர்ந்து நீரில் வெளியே தலை காட்டி , மீண்டும் நீந்துவது போல் தோன்றியது. பூக்களும் அப்படியே இருந்தன.
அவளிடம் 'இது பிழைக்குமா' என்று கேட்டேன். '
கேந்தி , பூவ உதுத்து போட்டாலே மொளச்சு வந்திரும்' - பதில்.
'இடம் மாத்தி வக்கிறது தப்பு...அது அங்கேயே இருந்திருக்கலாம். இனிமே இந்த வேலை பாக்கக் கூடாது . தேவையில்லாத பொறுப்பு '
என் சிறு கவலை அவளையும் தொற்றிக்கொண்டது.
அதன் சோதனை காலம் மழையும் வெய்யிலும் மாறி மாறி செய்த வண்ணம் இருந்தன.
செய்தது சரியா என்று தேடிப்பார்த்தேன். பறித்து வரும் போது , அதன் வேர் மண்ணையும் சேர்த்து எடுத்து வர வேண்டும் என்று தெரிந்தது, அடடா, அந்த மண் இப்போது அதற்குப் புரியுமா , போய் எடுத்து வரலாமா என்று யோசித்தேன். கொஞ்சம் நீர் அவசியம், வெய்யில் ஆகாது. அவ்வப்போது பெரு மழை பெய்தது. வெய்யிலும் காய்ந்தது. நம் கையில் ஒன்றும் இல்லை. ஹர்ஷியை அழைத்து விவரம் விளக்கி , பிரத்யேகமாக நீர் ஊற்றி பார்த்துக் கொள்ளச் சொன்னேன். அவளுக்கும் சிக்கல் புரிந்து விட்டது.
'தண்ணீர் விட்டா வளர்த்தோம் ,சர்வேசா . இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ '
எண்ணமெல்லாம் நெய்யாக , என்னுயிருள் வளர்ந்த வண்ண விளக்கிது ...' இந்த ரீதியில் இல்லை என்றாலும் அவ்வப்போது மனதில் ஒரு கீற்றாய் வந்து போனது,
அன்று காலை வந்து பார்த்தேன். தண்டு சிறிது சாய்வது போல் நினைத்தேன். நூறு சதவிகிதம் சரியாய் தெரியவில்லை. ஒரு வேளை தோற்றப்பிழை. சரிவு என்ற சொல் தான் எத்தனை பெரிது. எல்லாவற்றையும் நிலம் கீழே ஓயாமல் இழுத்துக் கொண்டேதான் இருக்கிறது.
மறுநாள் பூக்கள் ஒரு டிகிரி வாடியதோ என்று தோன்றியது. இல்லை , செடியில் பூ வாடுவதும் , உதிர்வதும் இல்லாததா என்றாள்.
மறு நாள் ஓரத்தில் இருந்த ஒரு சிறு டால்பின் இறந்து நீரில் மிதந்தது. மற்றவை எல்லாம் பச்சையாய் துள்ளி விளையாடுகின்றன என்று நினைத்துக்கொண்டேன். பூக்கள் கூம்பி உள்வாங்கின. எஞ்சியதை சிறு சிறு பொன் கம்பிகளாய் மண்ணில் விட்டன.
இரண்டொரு நாளில் பெரும்பாலான டால்பின்கள் இறந்து காற்றில் மிதந்தன.
தோல் சுருங்கி உள்வாங்கியது. எடையில்லாமல் போனது. இப்போது காற்று அதை ஒன்றும் செய்வதற்கில்லை. மழையும் ஒன்றும் செய்யவில்லை. எல்லாமும் உதிர்த்து வான் பார்த்து கேள்விக் குறியாய் அந்தத் தண்டு மட்டும் சற்று வளைந்து நின்றது.
மறு நாள் , அதன் கல்லறையில் ஒரு செம்பருத்திச் செடி நடப் பட்டிருந்தது. தலையில் பட்டாம் பூச்சியாய் என்றும் பறப்பது போல் , உறைந்த சிற்பமாய் ஒரு செம்பருத்திப் பூ. இதன் பொறுப்பு அவளைச் சேரும்.
பூக்கும் மரங்களின் ரகசியம் - தேவதேவன்
நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.
Comments
Post a Comment