Skip to main content

திக்குத் தெரியாத காட்டில்

திக்குத் தெரியாத காட்டில்
----------------------------------



கடந்த சில வாரங்களாக வேலை அதிகம். மேலிட வருகை, நன்றி காட்டும் தினம் (தேங்க்ஸ் கிவிங் டே)  வரும் எதிர்பார்ப்பில் ஆட்கள் வேலையை பொட்டணம் கட்டி முடிச்சை மட்டும் போடாமல் விட்டிருப்பார்கள். கேட்டால் கீழே அடியில் கிடக்கிறது, பையை நோண்டி எடுக்க முடியாது, மடிப்பைக் குலைக்க முடியாது , வேற ஆளைப் பார்க்க முடியுமா என்று கேட்பார்கள். லீவுக்கு முன் டேபிள்களை சுத்தமாய் பார்த்துக்கொள்வார்கள். மொத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலை பார்ப்பார்கள் , லீவில் போவார் லீவில் போவார், அவ்வளவே. வேலை ஜாஸ்தி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். சுற்றியுள்ளவர்கள் வேலை, நமக்கு பொறுப்பு என்றாகிறது.

வேலையில் அழுத்தம் என்பது இப்போதெல்லாம் பல மடங்கு என எண்ணத் தோன்றுகிறது. நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த போது , எவ்வளவு வேலை இருந்தாலும் வேலையை அங்கேயே முடித்துவிட்டே வர வேண்டும். என்னுடைய முதல் கம்பெனியில் மதியமும் , இரவும் இரண்டு நேரம் உணவுண்டு. இரவில் கட்டணம் கிடையாது. இருந்து வேலையை இழுத்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். என்னுடன் படித்து முடித்து வேலையில் சேர்ந்த இரண்டு பேர் சேர்த்து மூன்று பேருக்கும் இரவு உணவே குறி. கொஞ்சம் அனுபவமுள்ளவர்கள் இதற்கு நிற்கமாட்டார்கள். சூட்சுமம் புரிந்தவர்கள். ஒரு சில நாள்களில் இரவு இரண்டு மூன்று மணி ஆகி விடும். அதுவும் அப்போது தெரியவில்லை. மார்கழி இரவு பஜனை மாதிரி ஒரு கொண்டாட்ட மனநிலையே நினைவிலிருக்கிறது. ஒரு முறை இரவு வீடு திரும்பியபோது நாய் விரட்டியது. அப்போது இரவில் பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கலாம் என்பது தெரிய வந்தது. பின்பு கொஞ்சம் பக்குவம் வரும்போது, வேலையில்  உளச்சிக்கல்கள் வரலாம் என்று தெரிந்தது. ஒரு நாள் இரவில் ரிலீஸ் முடிந்து மறுநாள் காலையில் நெஞ்சு வலி வந்துவிட்டது. ஏனென்றால் ரிலீஸ் திரும்பி வந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த எனக்கு திரும்ப வரச்சொல்லி அழைப்பு வந்தது. ஜப்பான் கஸ்டமர்கள் அதிகம் பேச மாட்டார்கள்.  மொத்த வேலையை போதும் என்று மூடி விட்டு திரும்பப் போய் விடுவார்கள்.

சில வருடங்கள் முன் வேலை அங்கேயேதான் இருந்தது, நாம் தான் அதைப் போய் பார்க்க வேண்டும்.

ஒரு ஐந்து வருடம் கழித்து அடுத்த கம்பெனியில் எல்லோருக்கும் மடிக்கணினி கையில் கொடுத்து விடுவார்கள். வேலைபார்த்து மூடி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும். முதலில் இது கிளர்ச்சியாக இருந்தது நினைவில் இருக்கிறது. நம் நேரத்தை நாம் வகுத்துக் கொள்ளலாம். வேலையை கூடவோ குறையவோ அன்றைக்கு வேண்டியதைப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பணக்காரர் நாயை வீட்டில் வளர்ப்பது போல, வேலை வீட்டில் நுழைந்த இடம். இன்னும் குட்டி நாயைப் போல கொஞ்சி, விளையாடி தலையில் ஒரு தட்டுத் தட்டும் இடமே வீட்டில் வேலைக்கு.

அடுத்த புள்ளி வீட்டிற்குள் இன்டர்நெட் வந்த பொழுது. டயல் அப் , கேபிள் மோடம் என்று ஒன்று இருந்தது. போன் வயரை வெளியே எடுத்து மோடம் வயரை உள்ளே செருக வேண்டும். அதை டயல் அப் மோடம் வழியாக இணைத்தால் , இன்டர்நெட்டில் நுழையலாம். கவுண்டமணி சின்னி ஜெயந்தை பக்கத்தில் வைத்து, காதல் தேசம் ஓ மரீனா பாட்டில் தட்டு தட்டு என்று தட்டுவாரே , அதே யுக்தி தான் . பயன்பாடும் அந்தப் படத்தில் வருவது போலத்தான், பெரும்பாலும் சாட்டிங், காதல் முயற்சிகள், ஏக்கங்கள் .அதுவரை இன்டர்நெட் மையங்களில் இருந்தது. இதுவே வீட்டில் நுழைந்தது. அப்போதெல்லாம் வேலைக்கு இன்டர்நெட் அவ்வளவு அவசியம் கிடையாது. அலுவலக வலை அலுவலகத்திலேயே இருந்தது. செய்ய வேண்டிய வேலையை செக்கவுட் செய்து வீட்டில் வைத்து வேலைபார்த்து முடித்து, மறு நாள் காலை வேலைக்குப் போய்  செக்கின் செய்யலாம். பெரிய நிர்வாகிகள் கையில் ப்ளாக்பெர்ரி வைத்திருப்பார்கள். மேலே குறிப்பிட்ட என் மேனேஜர் கையில் மெயில் பார்த்துக் கொண்டே இருப்பார். கைபேசியை கையில் கொடுத்து , வேண்டும் போது அழைப்பார்கள். ஒவ்வொரு அழைப்பும் சிறு வேலை கொண்டு வரும். வீட்டில் செய்வதை கொஞ்சம் ஒதுக்கி விட்டு , இதைப் பார்த்து, அப்புறம் அதைச் செய்வதாக இருக்கும். ஒரு நாளில் நூறு முறை ஒருவருக்கு போன் செய்ய முடியாது. ஒரு பௌதீக அளவுண்டு. 

2011-2012 வாக்கில் 4ஜி உலகில் அடியெடுத்து வைத்தது. என் பார்வையில் இதுதான் வேலையை வீட்டிற்குள் பூ பன்னீர் தூவி அழைத்து வந்தது. ஆபீஸ்காரர்கள்  வேலையை வெளி உலகில் தள்ளினார்கள். வெளி உலகில் தள்ளப்பட்டதை வீட்டில் இருந்து இறக்கி , கழுவிக் குளிப்பாட்டி , ஆடை மாற்றி மீண்டும் மேலே ஏற்றுவார்கள். மின்னஞ்சல்கள் கைபேசிக்கு வந்தன. 

வேலை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடை போல ஆனது. விரைவில் மலையில் பிறந்து தரையில் ஊறும் வற்றாத நதி ஆனது. நதியின் கரையில் தான் மாபெரும் நாகரிகங்கள் தோன்றின. இன்றைய நாகரிகம் கணினியின் வேகத்திலும், தொடர்பை அமைக்கும் 4ஜி / 5ஜி போன்ற ஆறுகளின் கரைகளில் தான் நடந்துகொண்டிருக்கின்றன. வாய்க்கால் நிறைய நீர் போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும் என்பார்கள். நக்கி தாகம் தீரும் வரை மட்டும் குடிக்க முடியாது. வயிறு முட்டி வாந்தி வரும்வரை குடிக்க வேண்டியதாகிவிட்டது. நேற்று குமட்டினாலும், இன்று திரும்பப் போய் குடிக்கமால் முடியாது. அந்த நாள்களில் ஆசாரிகள் வீட்டிலேயே பட்டறை வைத்திருப்பார்கள். சாப்பிட்டுக் கையைக் கழுவி , கை துடைக்க பட்டறையில் நுழைவார்கள். வேலை வேறு, வீடு வேறு கிடையாது. ஆப்பும் , சுத்தியலும் நடு வீட்டில் இருக்கலாம். வீட்டம்மாள் வந்து எதிர் காலத் திட்டத்தை, அவர் இழை சீவும் போது பேசிப் பார்க்கலாம். வித்தியாசம் எதுவும் இல்லை. இப்போது இதை எழுதும் போது, வீட்டில் நான் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகத் தான் நினைப்பார்கள். 

இந்த வேலை பிரவாகம் போல் போனால் மட்டும் பத்தாது. வேலை செய்பவர்கள் பேசிக்கொள்ள வழி வைக்க வேண்டும். அவர்கள் உலகில் பல இடங்களில் இருக்கலாம். சாட்டிங், ஸ்க்ரோலிங் போன்ற நுட்பங்கள் வேலைக்குள் வந்து விட்டன. வேலைக்கு சேனல்கள் இருக்கின்றன.இடைவிடாத பேச்சு நடந்து கொண்டே இருக்கிறது. எல்லாமும் உங்கள நேரத்தைப் பகுக்க கோருகின்றன. வேலை முடிவதே இல்லை. விலைகள் வீழ்வதே இல்லை. உட்கார்ந்து செய்து கொண்டே இருக்கலாம். ரயிலில் போகும்போது அருகில் இருப்பவர் வேலை பார்ப்பதை பார்க்கிறேன். ஸ்கைப் , ஸ்லாக் போன்று ஆர்வமுள்ளவர்கள், செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். போனில் எவராவது ஒருவர் வேலைப் பேச்சு பேசிக்கொண்டேதான் இருக்கிறார்.

இத்தனை வேகமாக, மேடு பள்ளம் ஏறி, கல்லில் கரையில் முட்டி மோதி , பல கிளை பிரிந்து ஓடும் பிரவாகம். இந்தப் பிரவாகம், பல இடங்களில் காட்டில் புகுந்து நாட்டில் வெளி வர வேண்டும். இதில் பெரும்பாலும் பாய்மரம் பாய்ச்சி தனியாக பயணிக்க வேண்டியிருக்கிறது. நதி சமதளத்தில் , சலனம் இல்லாமல் ஓடும் போது, இந்தப் பாய்மரப் படகுக்காரர் ,காதில் கை வைத்து ஏலேலோ பாடிப் போகலாம். ஆனால் நதி போக்கில் போய் முட்டாமல் மோதாமல் துடுப்புப் போடுவது எப்படி எல்லோருக்கும் ஆகும்? 

தனிக்காட்டில் மலைகள் சூழ வழி தெரியாமல் துடுப்பு போடுவது எப்படி இருக்கும்?

'திக்குத் தெரியாத காட்டில்-உன்னைத் 
தேடித் தேடி இளைத்தேனே..
'எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள் ,-
அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள்...
...கால்கை சோர்ந்து விழ லானேன்-இரு 
கண்ணும் துயில்படர லானேன்...'
    
 அப்படித்தான் இருந்தார் சென்ற வாரம் ஒருவர். அவருக்கு மூச்சே வேலைதான். நானும் அவரும் பதினைந்து வருடமாக ஒரே குழுவில் வேலை பார்க்கிறோம். பக்கத்தில் போய் நின்றால் மழை பொழிவது போல் சாட் மெஸ்சேன்ஜ்ர்கள் சத்தம் போடும். ஓரிருவர் அருகில் உதவிக்காக அமர்ந்திருப்பார்கள்.பல வேலைகள் ஒரே நேரத்தில் செய்தாக வேண்டியவர். வேலையில் அழுத்தம் என்பது செய்ய முடியாத , தெரியாத வேலை கையில் வருவதே ஆகும். நமக்கு நன்றாய்த் தெரிந்த வேலை பற்றி என்றும் கவலை எழுவதில்லை. தெரியாத வேலைக்கு முன் ஒரு தேதி நிற்கும் போது அழுத்தம் கூடுகிறது. இந்தத் தேதி கடந்த தேதி ஆகி விட்டால் எவ்வளவு தான் காரணம் கண்டுபிடித்துச் சொல்வது. அப்படி ஒரு இடத்தில், என்ன செய்வது என்று கேட்டேன். ஏற்கனவே நாலு பேர் எனக்கு முன் கேட்டிருப்பார்கள். வாரத்தில் இரண்டு மூன்று முறை ஊரைக்கூட்டி தாமதம் என்ன ஏன் என்று விளக்கிச் சொல்ல வேண்டும். ஏன் இப்படி ஆயிற்று என்று மீண்டும் கேட்டேன். ஏன் இந்த வேலை இழுக்கிறது என்றேன். ஒரு ஆழ்ந்த அமைதி. மானிட்டரை கவிழ்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார். இடையில் இன்னும் இரண்டு குறுஞ்செய்திகள் சொட்டின. இரண்டு முறை தலையை முடியவில்லை என  அசைத்து, தனக்கு ஒன்றும் பிடிபடவில்லை, so far clueless என்றார். கண்ணில் இருந்து கண்ணீர் பிதுங்கி வெளியே வந்தது. இன்னும் பேச்சு சீராக வர மறுத்தது. நானும் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

கூர்ந்து பார்த்தால் பணத்தினால் வாங்க  முடிந்தது  இரண்டு விஷயங்கள் மட்டுமே. இந்த ஒரு வரியை, பணத்திற்கு பதில் வேலையை என்று போட்டு திருப்பிப் படிக்கவும். அந்த இரண்டு விஷயங்கள் , முதலாவது சுதந்திரம், இரண்டாவது நேரம். பணத்தை வைத்து மற்றொருவரின் உழைப்பை வாங்கி, அந்த நேரத்தை நாம் நமக்காக மிச்சப் படுத்தலாம். அந்த நேரத்தை நமக்கு இன்னும் பயனுள்ளதாக ஆக்கலாம். 

ஆக நேரத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால் என்ன செய்வது? சுதந்திரம் என்பது அடுத்தவர் சொல்லாமல் நாம் தினமும் காலையில் எழுந்து ஓடிச்சென்று நேற்று விட்ட இடத்தில் இன்றும் ஆரம்பிக்கும் செயல். அது என்னவாக இருக்க வேண்டும்? 

இது எல்லாம் முயங்கி வேலை என்ற ஒற்றைச் சொல்லில் பின்னிக் கிடக்கிறது இப்போது.   

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...