Skip to main content

அறுசுவை அரசர்

அறுசுவை அரசர் 
---------------------
நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன். 

அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது.

பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர்ஸ். அது போக வந்து போனவர்கள் நிறைய உண்டு. இப்போது நினைக்கையில் பல இடங்கள் நினைவில் எழுகின்றன.

ஜீவன் பீமா நகரின் பின்பக்கம், HAL எதிரே ஒரு சிறு இட்லிக் கடையை இன்று உலகில் இல்லாத நண்பர் சுதாகர் அறிந்திருந்தார். எதையும் சத்தம் இல்லாமல் செய்வது அவர் வழக்கம். கேட்டால் மட்டுமே சொல்லுவார். சில விஷயங்கள் கேட்டாலும் சொல்ல மாட்டார். பட்டன் இட்லிக்கும், நம்மூர் பெரிய இட்லிக்கும் நடுவில் இருக்கும் , உள்ளங்கையில் பொத்தி மூடிவிடலாம் என்ற சைஸ் இட்லி. ஒரு சிறு ஸ்டூலில் வேட்டியை மடித்துக் கட்டி உட்கார்ந்து இட்லி அடுப்பை பராமரிப்பார். ஒரு பையன் கை வேலைக்கு. தெலுங்கர், நல்ல உடம்பு, எங்கு பார்த்தாலும் இட்லியாய்த் தெரிவார், சிரித்தால் உள்பட.  ஏன் இவ்வளவு விவரணை என்றால் , கடலைப் பருப்பில் அரைத்த தேங்காய்ச் சட்னி. காராமில்க் சாக்லேட் கலர், டம்ளரில் குடிக்கும் பக்குவம். போர்வை போட்டு மூட்டினாற்போல் அந்த இட்லிகளின் மேல் ஊற்றிக் கொடுப்பார்.
வாழ்வில் முதல் முறை கடலைப் சட்னி சாப்பிட்டேன். அந்த ஆவி மணமும், அரைபடாத கடலைத் துண்டுகளும் இன்றும் நினைவில்  எழுகின்றன. வேட்டியை மடித்துக் கொண்டு முதல் ஆளாய்ப் போய் விடுவார், இட்லி மட்டும் தான், வேறொன்றும் கிடைக்காது.

இன்றைய பழைய ஏர்போர்ட் ரோடில் சிட்டிபேன்க் , ஆனந்த் ஸ்வீட்ஸ் எதிரில் , ஹோட்டல் அசோகா என்று முதல் மாடியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருந்தது. வாழை இலையில் அளவில்லாத மதிய சாப்பாடு கிடைக்கும். ஆந்திர உணவு. பொடியும் நெய்யும் சோற்றில் குழைத்து ஆரம்பிக்க வேண்டும். இதுவே லூப்பில் விட்டுச் செய்வார்கள். முன்னே கண்டிராத அந்தக் பொடியின் மகத்துவம்.அப்புறம் குழைய மசித்து, பூண்டும், சோம்பும், கறிவேப்பிலையும், ,காய்ந்த மிளகாயும் , இஞ்சியும் தாளித்த , கீரை சேர்த்த ஆந்திரப் பருப்பு. மிளகாயை பிழிந்தால் வரும் எண்ணெயும் வித்தும் அலாதியாக இருக்கும். கடைசியில் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிட்டு முடிப்பார்கள். கை கழுவ கும்பாவில் நீர். எல்லாம் சேர்த்து இருபத்தைந்து ருபாய். சாப்பிட்டுத் தூங்கினால்  நான்கு மணி அளவில் எழுந்ததும்  எக்ஸிஸ்டென்ஷியல் எண்ணங்கள் வரும். இப்போது அந்த இடத்தில் ஒரு பேங்க் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

MG ரோடில் பிரிகேட் ரோடு பிரியும் இடத்தில உள்ள காவேரி எம்போரியும் ஒன்று இருக்கிறது. கீதை சொல்லும் கிருஷ்ணன், பெரிய பெரிய புத்தர் சிலைகள் ,தத்ரூபமான கிராமக் காட்சிகள் போன்ற அவர்களின் சிக்னெச்சர் மரத்தில் வரைந்த சுவரோவியங்கள் இருக்கும். வாங்கும் தகுதி இருந்ததில்லை, விலையும் அப்படி , நல்ல சந்தன வாசனை வாங்கி வரலாம். மதிய உணவுக்கு முன் இப்படி இங்கே உலாவி நேரத்தைப் போக்கினால் , பக்கத்துக் கடை ஒரு லாட்ஜுடன் சேர்ந்த மைசூர் டைப் ஹோட்டல், அடித்ததளத்தில், போய் இடம் பிடிக்கலாம். சாம்பார் , ரசம் , ஒரு பொரியல், ஒரு கூட்டு அவ்வளவே. ஆனால் இடம் கிடைக்காது. அந்த தேங்காய் அரைத்து விட்ட, கும்பளக்காய் மிதக்கும் சாம்பார் நினைவில் எழுகிறது. பின் வரும் மைசூர் ரசம். துவரம் பருப்பு , மிளகு , சீரகம், தேங்காய் சேர்த்து அரைத்து விட்டிருப்பார்கள். விசேஷம் தக்காளி. மீன்கள் போல், கடலில் சிறு படகுகள் போல் வளைந்த துண்டுகளாய் வெட்டி மிதக்கும். அவர் கரண்டியை கலக்கும்போது நீந்தி தப்பித்தவை போக, கரண்டியில் சிக்கியவை நம் கையில் கதி மோட்சம் பெறும். மாதத்தில் ஒரு சில சனிக்கிழமை போக, நண்பர்களுடன் இங்கு செல்வது வழக்கம். கொஞ்சம் தாண்டி , ஹிக்கின்போதம்ஸ் இருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். அதன் அடுத்த கட்டிடத்தில் கங்காரம்ஸ் என்று ஒரு பெரிய புத்தகக் கடை இருந்தது. இப்போது அந்த ரோட்டில் நினைத்துப் பார்க்க முடியாது. எனவே எல்லாம் பின்னால் இருக்கும் சர்ச் ஸ்ட்ரீட்டில் குடியேறிவிட்டன. சாப்பாட்டை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் , தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது.


நான் சொல்ல வந்தது பின் வரும் முக்கிய இடத்தைத்தான். இந்திராநகரில் இருந்து ESI ஆஸ்பத்திரி கடந்து அல்சூர் போகும் வழியில் அன்ன பூரணி என்று ஒரு கடை. பழைய விமான நிலைய ரோடின் கமாண்ட் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இடது புறம் இறங்கினால் வரும். அன்ன பூரணி என்பது எவ்வளவு பொருத்தமான பெயர். ஓரிரு தடவை சாப்பிட்ட பின்னர் , அது அறுசுவை அரசர் நடராஜன் அவர்களின் கடை என அறிந்தேன். மதிய உணவு மட்டுமே பிரசித்தம். அப்போது பிரசித்தம் ஆகியிருக்கவில்லை. கண் கூடாக ஆனது. டிராபிக் ஜாம் ஆகும் நெரிசலான இடம். மேலே போனால் அல்சூர் சோமேஸ்வரர் கோவில் வரும். கல்யாண சமையல் என்றால் அங்குதான். தலை வாழையில் பந்திச் சமையல். வெள்ளைப் பூசணிக்காய் அல்வா , அன்னாசிப்பழ பச்சடியும் நினைவிருக்கிறது. புளியோதரை, கணக்கில்லாத வடை , உசிலி. கடையில் பெரிய அன்னபூரணி படம் மாட்டியிருக்கும்.  வலக்கையில் அகப்பை , இடக்கையில் அன்னம். சிவபெருமான் பார்வதியிடம் உலகம் மாயை என்று வாதிட, உலகு புரக்கும் அன்னை எல்லாம் பொருள் என்று சொல்லி, புரத்தலை நிறுத்தி விட்டார். உலகம் ஸ்தம்பித்து, பயிர்கள் வாடின, வான் பொய்த்தது. பசியால் உயிர்கள் துயருற்றன. தவத்தால் அன்னை கீழிறங்கி கருணை காட்டினார். சிவ பெருமான் பிச்சைப் பாத்திரத்துடன் அன்னையிடம் உணவுக்கு கையேந்தி நிற்கும் ஒரு காட்சியும் பிரபலம். சிவ பெருமானின் கண்ணை பார்வதி விளையாட்டாக மூடி, உலகம் ஸ்தம்பிக்க , அவர் நெற்றிக்கண்ணால் மீட்டெடுத்து அன்னையை கடிந்து கொண்டார். பிராயச்சித்தமாக  பூமியில் காசியில் எழுந்தருள விதித்தாகவும், அப்போது பஞ்ச காலமாக இருந்ததால் அன்னை வற்றாத கரங்களால் எல்லோருக்கும் உணவளித்தார். அரசர் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்து , தானியங்களை கருவூலத்திற்கு கொடுக்குமாறு வேண்ட , அவர் உணவாய் மட்டுமே கொடுப்பேன் என்றார். இது காசியில் அன்னபூரணி எழுந்த இன்னொரு கதை.

பின்னர் அவர் HSR லே அவுட்டில் ஒரு கடை ஆரம்பித்தார் , அறுசுவை என்றே பெயர். ஓரிரு முறை சென்றிருக்கிறேன். ஒரு முறை அப்பாவையும் கூட்டிச் சென்ற நினைவிருக்கிறது. மேலே சொன்ன என் பையனும் பிறந்து நாக்கில் சுவை தெரிய ஆரம்பித்திருந்தது, அவரும் இருந்தார். இப்போது  கடையிலும் வெஜிடபிள் ரைஸ் மெனுவில் முளைத்திருந்தது. அதை மட்டுமே சாப்பிட்டு எழுந்தார்.  இன்னும் லேசாக இது அவருக்கு நினைவிருக்கிறது.


அறுசுவை அரசு நடராஜன் விகடனில் ஒரு தொடர் எழுதினார். அவருடைய அனுபவங்களை கதை போல் நகமும் சதையுமாய் எழுதிய அனுபவப் பதிவுகள். கல்யாணக் காட்சிகள், பெரிய இடத்து விருந்துகள், பெரிய மனிதர்களுக்கு உணவளித்த அனுபவங்கள் போன்று நிறைய எழுதியிருக்கிறார். அவருக்கு அறுசுவை அரசர் பட்டம் கொடுத்தவர் ஜனாதிபதி வி வி கிரி. அண்ணா , கக்கன் போன்றோர் ஆமோதித்து வழங்கப்பட்டது. சமையலுக்கு முன் வேண்டிய மனநிலையைப் பற்றி முக்கியமாய் பேசியிருக்கிறார்.  ரஜினிக்கு பால் பாயசம் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். அப்பா இதை விரும்பிப் படிப்பார். சில வாரங்கள் முன் வீட்டில், இதைக் கிழித்துத் தொகுத்து வைத்த பேப்பர் கிளிப் கண்ணில் மாட்டியது. அம்மா இந்த மாதிரி நிறைய தொகுத்து வைப்பார். அப்போதெல்லாம் இப்படி நிறைய வந்ததோ என்று நினைக்கிறேன்.

வார வாரம் அவர் சொல்லும் ஒரு டிஷ் பற்றிய சமையல் குறிப்பும் வரும். படித்து நாக்குச் சொட்டுவது போதும் என்றே நினைக்கிறேன். அது எல்லாம் எங்கோ ஒரு லட்சியமாய் இருக்கும் வரையில் தான் அதன் மதிப்பு. தரை இறங்கி நம் வீட்டில் சரியாய் வந்து விட்டால் , பாலிஷ் இறங்கிவிடும். வெண்முரசில் வரும் சமையல் குறிப்புகளையும் இப்படியே கடந்து செல்கிறேன். பாலைவனத்தில் கடந்து செல்லும் அர்ஜுனனும், சூதர்களும் வறுத்துப் பொடித்த அரிசியையும், கோதுமையும், வெல்லம் தனியாய் வைத்து, நடக்கும் வழியில் வேண்டும்போது நீர்விட்டு பிசைந்து உண்கிறார்கள். இதை படிப்பதில் மட்டும் தான் சுகம் இருக்கிறது. இதைப் போல, அறுசுவை அரசரின் பேப்பர் கத்தைகளை படித்து விட்டுப் போய்விட வேண்டும். வீட்டில் காட்டி கோரிக்கை வைக்க முடியாது. இறங்கி செய்யவும் முடியாது. ஆக நல்ல பசியுடன்  படிப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது.

புளியைக் கரைக்கும்போதெல்லாம் மூன்று தடவை முக்கால் முக்கால் டம்ளராய் கரைக்க வேண்டும் என்கிறார். அவருடைய ஸ்பெஷாலிட்டி ரசம் என்கிறார். செய்யும் எதிலும் ஆறு சுவையும் துளியாவது இருக்க வேண்டும் என்று சொல்கிறார். கத்தரிக்காய் வேக மூடி மாட்டி, சில முறை திறந்து மூட வேண்டும் என்கிறார். கத்தரிக்காய் ரசவாங்கி, காசி அல்வா, மிளகுக் குழம்பு, வத்தல் குழம்பு எல்லாவற்றையும் வரிசையாய் படித்தேன். திரும்ப நான் எழுதினால் நன்றாய் இருக்காது. பேப்பர் கிளிப்புகளை இங்கே கூட மாட்டியிருக்கிறேன். 

சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா என்று வாத்தியாரிடம் பேச்சுப் படாதவர் எவரும் இருக்க முடியாது. ஏன் இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது. சுவை என்பது மனதில் தான் முதலில் எழுகிறது. அதனால் தான் அவர் சமையலின் அப்பாலுள்ள  பிரியத்தை அப்படி விவரிக்கிறார். அதனால் தான் செய்முறைகளை வெளியே வைத்து எழுதியிருக்கிறார்.









Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...