Skip to main content

இரு கோடுகள்





அன்றும் என்றைக்கும் போல் வண்டி ஓட்டும் வேலை தான் என்று நினைத்துத் தான் சென்றேன். எங்கேயாவது ஒரு ஹரியானா பவன் போன்ற இடத்திற்கு தெரிந்த இடம்  வரை ஓட்டி , தெரியாத இடத்திலிருந்து மேப் போட்டு இறக்கி விட வேண்டும். பின் கண்ணால், என்ன நடக்க இருக்கிறது  ஒரு சர்வே மாதிரி செய்து விட்டு,   சரி இதுவும் தெரிந்த அச்சுக்குள் தான் என்று தெரிந்த உடன், ஒரு பேக்கரி இருக்குமா டீ குடிக்க என்று தேட ஆரம்பித்து, அப்படியே  ஒரு புளோவில் ஒன்று இரண்டு சிக்னல் தூரம் நடந்து , திரும்பி வருவதற்குள் பாதி விழா முடிந்து இருக்கும். பெரிய கூட்டமாய் இருந்தால் எங்காவது ஒரு இடத்தில் ஒதுங்கி , கை தட்டும் போது நாமும் தட்டி வோட் ஆப் தேங்க்ஸ் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். எங்காவது நம் பிள்ளை மேடையில் தோன்றும் போது நூற்றுக்கணக்கான செல் போன் மேலே கொடிபோல் அசைய , அடித்து பிடித்து நாமும் ஒரு வீடியோ எடுக்க வேண்டும். 'அப்பா எங்கப்பா இருந்த? ' என்றால் 'அங்கதான்ப்பா இருந்தேன் '  என்றால் முடிந்தது, வீடியோ சாட்சி .

ஒன்றிரண்டு வருடம் முன்னால் ரஹ்மானின்  'ஜெய் கோ' என்ற பாட்டோ , ஷங்கர் மஹாதேவன் 'ஏக தந்தாய வக்ர துண்டாய தீமஹி'  போன்ற பாட்டுக்கள் வரும். இப்போது காந்தாரா 'வராஹ ரூபம்'.  ஆகவே மேடையில் சுவாரசியம் இருப்பதில்லை.

பக்கத்தில் எதாவது பாணி பூரி ஸ்டால்கள் அமைத்திருப்பார்கள், அம்மா அப்பாக்கள் விலையை முனகிக்கொண்டே வாங்கியபடி இருப்பார்கள். 

உடைகள் அணிவதற்காகவே இவ்வகை விழாக்கள் என்று நினைக்கிறேன். நடக்கும் போது தான் உடைகள் புலப்படுகின்றன. இதை இவ்விடத்தில் உறைய வைக்க போட்டோக்கள், மீண்டும் போட்டோக்கள்.  பெரிய ஒலிப்பெட்டிகளின் வழி வரும் பாட்டுகள்,அடிக்கடி வரும் அறிவிப்பாளரின் குரல், இடையில் வரும் சிரிப்பொலிகள், யாரோ பேசும் செல்போன் பேச்சு , கடைகளில் இருந்து வரும் 'சார், மேடம்கள்', அப்பாக்களை கடைக்குள் ஓட்டும் பிள்ளைகள், ...

ஆனால் நேற்று இந்த சிறு கோவிலின் உள் சென்றதும், பொறியில் சிக்கியது போல் உணர்ந்தேன். ஒரு வயதானவர் அடுக்கப்பட்ட சேர்களில் ஒன்றைக் கழட்டி என்னை உடனே அமரவைத்தார். இவர் தான் பின்னர் மைக்கில் பேசினார். என் எதிரே ஒரு பத்தடிக்குள், ஐந்தாறு வயதுள்ள ஒரு சிறுமி, அதே வயதுள்ள ஒரு சிறுவன் நடுவில், இவனைத் தாண்டி மற்றொரு சிறுமி. பின்னால் வலது புறம் இவர்களெயெல்லாம் தாண்டி ஒரு கனத்த பத்து வயதுள்ள சிறுமி அமர்ந்திருந்தாள். இவர்கள் எல்லோரும் பாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு முன் வலதுபுறம் ஒரு பையன் தபேலா, இவன் எதிரே ஒரு பையன் ஆர்மோனியம். எல்லோரும் ஜமக்காலத்  தரையில் , வலது பக்கவாட்டில், சீதா ராமர் சன்னதி. அர்ச்சகர் ஒரு கணம் சோமயாஜுலுவை ஞாபகமூட்டினார். அமைதியே உருவான முகம். பின்னர் ஆசிர்வதிக்கும் போதும், பூக்கொடுக்கும் போதும் புன்னகை, கை நடுங்கியபடி இருந்தது. ஆனால் முகத்தில் ஆழ்ந்த அமைதி.  கடைசிவரை ஒரு சொல் பேசவில்லை. சன்னதி எதிரே ஆஞ்சநேயர் . ஆஞ்சநேயரின் பின்னால் இரண்டடி உயர உற்சவ மூர்த்தி. இதைப் பார்த்தும் , எதிரே இருந்த சிறு கூட்டத்தை நோக்கியும்  இக்குழந்தைகள் பாடிக்கொண்டிருந்தன . இவர்களுக்கு மேல் ஒரு நாற்காலியில் இவர்களின் ஆசிரியர் இருந்தார். வேட்டியும் , பழுப்பு நிற காதி ஜிப்பாவும் அணிந்து இருந்தார். ஒரு பாலக்காட்டுத்  தோற்றம் . ஜேசுதாஸ் ஆகர்சமாய் இருக்க வேண்டும். அழகான கருந்தாடி, ஊசியான முகம், சாயாமல் , நிமிர்ந்து அமர்ந்து இருந்தார். இவர் வேறு எங்கும் நோக்காமல் குழந்தைகளைப் பார்த்த வண்ணம் இருந்தார். 

நுழையும் போது குழந்தைகள் எதிரே இருந்த சிறு கூட்டத்தை பார்த்தபடி 'ராம ராம ராம ராம நாம தாரகம்'  பாடிக்கொண்டிருந்தன. என் கண்கள் சந்தித்தபோது , நொடி விழி பார்த்த பின் வேறெங்கோ பார்த்தன. ஓரக் கண்ணால் ஆசிரியரைப் பார்த்த வண்ணம் இருந்தன.  பாடல் முடிந்ததும் எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக ஆசிரியரை  நோக்கின. அவர் மெல்லிய குரலில் 'தசரத நந்தன ராம்' என்று இரு முறை சொன்னார். குழந்தைகள் மீண்டும் பாட ஆரம்பித்தன. சேர்ந்து செய்யும் எவ்வொரு செயலும் அழகு கொள்கிறது . நான் படித்த ஊர்ப்  பள்ளியில் ஒரு பள்ளிமுழுதும் சேர்ந்து வாய்ப்பாடு காலையில் சொல்ல வைப்பார்கள். நூறு இருநூறு குழந்தைகள் சேர்ந்து ஒரே கீச்சுக்  குரலாய் ஒலிப்பது ஊரையே உற்சாகம் கொள்ள செய்திருக்கும். மாலையில் ஆலமரத்தில் கூடு சேரும் பறவைகள் அதே சொல்லொணா கரைச்சல். மாடியில் இருந்து ஒரு கல்லை  ஆலமரம் நோக்கி எறிந்திருக்கிறேன். கல் பட்டதும், ஒரு சில நொடி ஆழ்ந்த நிசப்தம். பின் அந்த முதல் பறவையின் குரல் , இரண்டு, மூன்று , பலவாய்...மீண்டும் ஒன்றாய்.   

இப்போது ஆர்மோனியம் வாசிக்கும் பையன் எழுந்து பாடுவதற்கு தயாரானான். ஆர்மோனியத்தை ஆசிரியர் ஒரு ஸ்டாண்டில் பொறுத்தி வாசிக்க வாங்கிக் கொண்டார். அந்தப் பையனும் இன்னொருவனும் சேர்ந்து 'ப்ரம்மம் ஒக்கட்டே'  பாட ஆரம்பித்தனர். குரல் உடையும் வயது இருவருக்கும். மரக் கதவை மூடும் போது கடைசியில் கேட்கும் சத்தம் போல் ஒன்றிரண்டு தடவை வந்தது. இவர் கண்களும் ஆசிரியரை நோக்கியபடி இருந்தன. இப்போது இவர் ஆசிரியரின் பையனோ என நினைத்தேன் .

இப்போது மைக்கை வாங்கி ஆசிரியரே ஒரு பாடல் பாட ஆரம்பித்தார். 

'துளசி தல முலசெ  சந்தோஷுமுகா பூஜிந்து'   ...  '  

என்னுள் ஆழ்ந்த அமைதி பரவியது. யேசுதாஸ் பாடிய இதே பாடல் ருத்ர வீணாவில் இருக்கிறது, உன்னால் முடியும் தம்பி படத்தில் பின்னனியில் வரும் ஞாபகம். சுருதிப் பெட்டி மட்டும் வைத்துப் பாடினார்.

https://www.youtube.com/watch?v=0Z4DpeDONrk

'துளசி   இதழ்களினால் மகிழ்ச்சியாய்  பூஜித்து  ,  

பலமுறை தினமும், நான் இருக்கும் வரை  

துளசி   இதழ்களினால் மகிழ்ச்சியாய்  பூஜித்து'

இது தியாகராஜர் இயற்றிய பாடல். ஏன் துளசியை வைத்து பாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது.வேறு வழி இருக்கவில்லையோ என்னவோ. அவருக்கும் சங்கீதத்தைக் கட்டிக் கொண்டு இருப்பது , இருக்கையில் சிரமமாக இருந்திருக்க வேண்டும். இவரும் இந்த இடத்தில் தெரிந்து தான் பாடினாரா தெரியவில்லை. 

ஒரு முறை ஒரு வயதான  நாடோடியை கோவிலின் முன் சந்தித்தேன். தொண்ணூறு வயதிற்கு மேல் ஆவதாக சொன்னார். உடம்புக்கு ஏதாவது வந்தா ரசமும், துளஸித் தண்ணீரும் குடித்தால் போய்விடும் என்று சொன்னார். உலகியலில் ஒன்றும் இல்லாதவர்களுக்கு துளசி ஒரு கவசம்  போல் தோன்றுகிறது . 

இது ரத்தமும் , சதையுமானது என்று எண்ணிக்கொண்டேன். துடைத்துக் கழுவி, வெட்டித்தான் மேடைகளில் சேர்க்கிறார்கள்.

மங்களம் பாடி முடித்த பின், மைக்கை வாங்கி, தமிழில் பேச நினைத்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். கோவில் தர்மகர்த்தாவை சொல்லி, 'தாங் யூ ஒன் அண்ட் ஆல் , தாங் யூ அல்மைட்டி ' என்று இரு முறை சொல்லி கொஞ்சம் கலங்கி முடித்தார் என்று நினைத்தேன்.

இப்போது நாட்டியப் பள்ளியின் முறை போலிருக்கிறது. ஜமக்காலங்களை மடித்து எடுத்து விட்டு  இன்னும் சற்று பெரிய இடம் உருவாக்கினார்கள். ஒரு பெண் spotify-ஐ ஆடியோ சிஸ்டத்தில் மாட்டி சோதனை செய்து பார்த்தார். பட்டுச் சேலைகள் கட்டிய இளம்பெண்கள் சிலர் தோன்றினர். அமைப்பாளர்களிடம் ஏதோ மெல்லிய குரலில் பேசிய வண்ணம் இருந்தனர். இப்போது அவர்களின் ஆசிரியர் தோன்றினார். தன்னம்பிக்கை கொண்டவர், அடுத்து செய்வதை யாருக்கும் சொல்லத் தேவை இருக்க வில்லை. உதவியாளர் போல் ஒரு பெண் இருந்தார். ஏதோ ஒன்று இரண்டு கன்னடத்தில் பேசிக் ஒரு குழந்தை கையில் கொடுத்தார். இவர் பள்ளியின் பேர்  புகழ், கட்டியம் கூறினார். முதலமைச்சர் முன் நிகழ்ச்சி நடத்தியிருப்பதாக சொன்னார். பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளின் பெயர்களையும் அவரே சொன்னார், முன் வந்து வணக்கம் சொன்னார்கள் . பின்னர் அந்தப் பெண் உதவியாளர், நிமிர்வுடன் ஏதோ பேசி, ஆசிரியரை திரும்ப ஏற்றினார். 

ஒரு இளம்பெண் இப்போது வந்து மைக் செட் முன் உட்கார்ந்து கொண்டார். மைக் செட்காரர் சரணடைந்து பின்னால் சாய்ந்து அமர்ந்து விட்டார். இந்தப் பெண் ஒரு பெரிய பெட்டியில் இருந்து வரும் வயரை எடுத்து போனில் சொருகினார். போனின் வாயாய் ஒலிப்பெட்டி பாட ஆரம்பித்தது.

புஷ்பாஞ்சலி ஆரம்பம், கொஞ்சம் பூ கேட்டார்கள். பின் வேண்டாம் தேவை இல்லை என்றார்கள்.ஐந்து குழந்தைகள் ஒன்று சேர்ந்து கைகளை மலர் போல் குவித்து, சுற்றி வந்து இறைவன் காலில் மலர்கள் சொரிந்த வண்ணம் இருந்தார்கள். யானையாய் மாறி துதிக்கையால் பூ சொரிந்தனர். இறுதியாய் சிவ பார்வதி,  பின்னிருக்க , முருகனும், பிள்ளையாருமாய் இருவர் நின்று முடித்தனர்.

இடையில் ஒரு இடத்தில் யானை உருவம் கலைத்துக் குதிக்கும்  போது, ஏறத்தாழ நம் மேல் விழுந்துவிடுவாரோ என நினைத்தேன். ஒரு வேளை இடத்தைக் காலி பண்ணு என்கிறாரோ என்னவோ? 

இவரது பின்னலில் இருந்த ஜடை நாகம், ஒன்றொன்றாய் விழுந்து இப்பொது முழுதும் தெறித்து விழுந்தது. சட்டை செய்யாமல் ஆடிக்கொண்டிருந்தார். 

அடுத்து மஹிஷ வதம் , பிடரி மயிர் சிலிர்க்க சிங்கத்தில் அமர்ந்த துர்கா தேவி, ஒரு இடத்தில் எழுந்து, முகம் சிவக்க, முன்கால் நீட்டி, சூலாயுதம் எடுத்து  மகிஷாசுரனை  கீழே சாய்த்தாள்.

அடுத்து மஹிஷ வதம் , பிடரி மயிர் சிலிர்க்க சிங்கத்தில் அமர்ந்த துர்கா தேவி, ஒரு இடத்தில் எழுந்து, முகம் சிவக்க, முன்கால் நீட்டி, சூலாயுதம் எடுத்து  மகிஷாசுரனை  கீழே சாய்த்தாள்.

முருக கௌத்துவம்,  முருக கடவுளுக்கு விழாக்களில் ஆடுவதற்கு என்றே இயற்றப்பட்டது,

'வினையற வேல்வாங்கும் பெருமாள் அடியினை தொழுமனமே, 

கானம் மயிலேறி கைலாயம் தன்னை சுழல வரும் கைலாயம் சுற்றி வரும் இளையவனை தொழுவார்' . 

இந்த இரண்டே அடிகள் , மீதமெல்லாம் ஜதிகள் : 

ஜன்னகிட்ட - கிர்ரகிட்ட -தக்குடு -திக்குடு -தரிக்கிட்டதாம் 

தக்குடு -திக்குடு -தகத்தரிகிட்ட 

இந்த தாளத்தினுள்  மயில் துள்ளி ஓடுகிறது, தோகை விரித்து ஆடுகிறது, முருகனை சுமந்து கைலாயம் சுற்றி வருகிறது. ஒரு அடியை பலமுறை வேறு விதமாக ஆடுகிறார்கள். கைலாயத்தை ஆடிக் காண்பிப்பதற்கு நம் கற்பனை தான் எல்லை. அன்று அஜிதன் ஒரு காணொளியில்  கதகளி கலைஞர்கள் தம் கண்களால் எதிரே கைலாயம் தெரிவதை, அதன் விரிவை, யாதுமில்லா உயரத்தை  காண்பிப்பார்கள் என்று சொன்னார்.

இதற்க்கு தமிழ் தெரிய வேண்டும், இதற்க்கு மேல் கூர்ந்து பார்க்க வேண்டும்.

இப்போது  ஷங்கர் மகாதேவனின் கன்னட புகழ் 'ஏக தந்தாய, வக்ர துண்டாய தீமஹியும்' , காந்தாரா வராஹரூபமும், ஒரு கலவையாக ஐந்து நிமிடம் ஆடினார்கள்.எல்லோரும் கட்டிப் போட்டவாறு கேட்டார்கள். எல்லோரும் இப்பாடல் முடிந்ததும் இடத்தில் இருந்து  எழுந்து குழந்தைகளை கை  குலுக்கியும், சிலர் கட்டியணைத்தும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டனர். விழா இனிதே முடிந்தது.

வயதானவர்கள் இன்னும் கொஞ்சம் வெறுப்பேற கடைசியில் சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். தனியாய் இருந்தால் சாப்பிடலாம், பொது இடத்தில் , சுகர் இருக்க சாப்பிடலாமா?   இல்லை சக்கரைப் பொங்கல் இல்லாமல் கோவில் தான் இருக்க முடியுமா?

 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...