ஒரு நேர்முகம் (புனைவு)
கார் ஓட்டுவது எனக்கு மிகப் பிடித்த விஷயம். நெடுந்தூர பயணம் என்றால் ஏறியவுடன் FM ஆன் செய்து விடுவேன்.
ஓட்டியபடியே கூர்ந்து கேட்டுச் செல்வது எனக்கு சுகானுபவம். மிக சாதாரணமாணவர்கள், எளிய மனிதர்கள், ஏன் இந்த FM -ஐ அழைக்க வேண்டும், பேச வேண்டும். ஒருவர் சந்திரசேகர் என்பவர், ஏன் ஒவ்வொரு முறையும் அவர் குரல் கேட்கிறேன், தெரியவில்லை.
எல்லா ஸ்டேஷன்களும் அல்ல , சேணம் கட்டப்பட்ட ஸ்டேஷன்களை கேட்பதுதான் எனக்குப் பிடிக்கும். சூரியன் FM போன்றவை சுவாரசியம் இல்லாதவை, TV , youtube போல் காதுக்கும் எதாவது செய்கின்றன. காலையில் ஒரு கோவில் மணி அடித்து திருக்குறள் எதாவது கேட்கலாம். இல்லை மாலை ஒரு ஏழு மணியானதும் கரகரப்பான(ஹஸ்கி) குரல் உள்ள ஒரு பெண்ணை பேச வைக்கின்றனர். இவை நமக்குப் புதிது அல்ல. பின் எல்லாம் டிவி தான் , ஆனால் கண் தேவை இல்லை.
இப்போது ரேடியோ வேண்டும் என்றால், நீங்கள் அரசாங்கம் நடத்தும் சேனல்களை கேட்க வேண்டும். இவர்கள் தான் சற்று இன்னும் உறைந்து, திகைத்து இருக்கிறார்கள். இங்குதான் எதோ ஒன்று நீங்கள் ஜன்னலைத் திறந்ததும் பார்க்கும் சூரியன் இல்லை காற்று போல் பளீரிடுகின்றது. இல்லை வீட்டிற்குள் ஏதோ வேண்டாததை மிதித்தது போல் எதோ ஒன்று நிகழ்கிறது , அல்லது எதோ ஒன்று ராணுவ ஒழுங்குடன் (பொய்) சொல்லப்படுகிறது .
அன்று ஒருவர் புதிர் போட்டார், அழைத்தபடி இருந்தார்கள், அறிவிப்பாளர் ஒவ்வொருவருக்கும் துப்புக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வந்து , டீ முடிந்தது. எனக்கு நிறுத்தி google செய்யத் தோன்றியது. அவரே சொன்னார் google-ல் வராது. 2007-ல் நடிப்பை நிறுத்தியவர், ஜெயலலிதாவுடன் நடித்தவர், 500 படங்கள் நடித்தவர் (மனோரமா ? இல்லை ), ஆண், ஆந்திராவைச் சேர்ந்தவர், ...இப்படிப் போகும் . கடைசியில் விடை சொன்னார், இப்போது எனக்கு அந்தப் பெயர் ஞாபகம் இல்லை.
இன்று நான் கார் ஒட்டிச் செல்லும்போது நிகழ்ந்த ஒரு நேர்முகம். இதை ஒரு பொழிப்புரையாகத் தருகிறேன்.
'நேயர்களே , அனைவருக்கும் வணக்கம் . இன்று நாம் " உழைப்போம் , உயர்வோம் " நிகழ்ச்சியில் உரையாட இருப்பது காவேரி அவர்களுடன். இவர் ஒரு உழைப்பாளி, கூழ் காய்ச்சி விற்பதை தொழிலாகச் செய்கிறார். இவரைச் சந்திப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி, உங்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன். வணக்கம் அம்மா '
'வணக்கம் பா '
'நேயர்களே , இவருடன் நாம் பேச ஆரம்பிக்கும் முன், நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை #மாரிமுத்து என்ற இன்ஸ்டா ஹாண்டிலிலும் , facebook பேஜ்-லும் தவறாமல் பதிவு செய்யவும். நேயர்களே, கோடை நம் மிக அருகில் வந்து கொண்டு இருக்கிறது. இப்போதெல்லாம் கோடை முன் போலில்லை. ஏனென்றால் நாம் செய்யும் எதுவும் முன் போலில்லை. இப்போது காலையில் எழுந்ததும், கோக்கை தேடுகிறோம். முன்பெல்லாம் கூழ் தான் தமிழரின் காலை உணவாக இருந்தது. இப்போது கூழை என்ன என்று விளக்கும் நிலையில் இருக்கிறோம். முன்பெல்லாம், ஊரே கூடி கூழ் காய்ச்சுவார்கள். பள்ளியில் விடுமுறை விடுவார்கள். அது ஒரு காலம். இப்போது நிகழ்ச்சிக்குள் நுழையலாம். வணக்கம் மா . நல்லா இருக்கீங்களா ?. '
'நல்லா இருக்கோம்ப்பா'
'அம்மா, உங்க பேர்?'
'காவேரி'
'அது என்ன காவேரின்னு பேரு. யாரு வச்சாங்க?. பெரிய நதி பேராச்சே தெரிஞ்சுதான் வச்சாங்களா ?'
'தெரியல தம்பி, அப்பதான் வச்சாரு. அப்பாக்கு என் பேர்னா புடிக்கும்'
'அம்மா உங்க வயசு எவ்வளவு'
'அம்பது அறுபது இருக்கும், இதெல்லாம் யாருக்கு தெரியும்/
'புரியுது சரிங்கம்மா.காவேரி தெரியும்ல உங்களுக்கு'
'ஆமா தம்பி, மேட்டூர் அந்தாண்ட ஓடுது'
'ஆமா . சொல்லுங்கம்மா, எத்தன வருஷமா இந்த தொழிலுல இருக்கீங்க'
'ஒரு பத்து வருஷம் மேலாச்சு தம்பி'
விளம்பர இடைவேளை.
'நேயர்களே, மீண்டும் உங்களை, 'உழைப்போம் , உயர்வோம்' நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.
' சொல்லுங்கம்மா , நீங்க மட்டும் தானா , இல்ல வேற யாரும் துணைக்கு உண்டா?'
'வூட்டுக்காரர்,மகன், மருமக,பேரன், பேத்தி எல்லாம் சேந்து செஞ்சாதான் உண்டு'
'சொல்லுங்கம்மா, எப்படி போய்கிட்டிருக்கு'
'எதோ உருண்டுக்கிட்டு இருக்கு தம்பி'
'சொல்லுங்கம்மா, எப்படி இந்த வயசில கூல் காய்ச்சி விக்கனும்னு யோசனை வந்தது உங்களுக்கு' '
'ஆமா தம்பி, நமக்கும் வயசு ஆகினே இருக்குது, நமக்கு மேல வீட்டுக்காரரு வேற. முன்னாடி கை காலு நல்லா இருந்திச்சு. இப்போ உடம்பு சுலோ ஆவுது ..சரி ஆனாலும் எம்மா நேரன்தான் சும்மாவே கீறது. '
' புரியுது, சரிங்க அம்மா. சொல்லுங்க அம்மா, கூழு எப்ப எப்படி காச்சுவீங்க ?'
'காலையில மூணு மணிக்கு எந்திரிப்பேன் தம்பி.. .'
'மூணு மணியா?'
'ஆமா தம்பி, அப்பதான் வெள்ளணம் காப்பி குடிக்க வார ஆளுகளுக்கு விக்க முடியும். '
'எந்திச்சு அடுப்ப பத்த வைக்கணும்..விறகு அடுப்புல காச்சுனாதான் அடில கட்டி ஆவாது... கம்ப மொதநாளே ஒன்னு ரெண்டா ஒரல்ல பொடிச்சுக்கிடனும்... மெஷின்ல அரைச்சா டேஸ்டு நல்லா இருக்காது...நாக்குல வழு வழு ன்னு ஆவுது ...ஜனங்க விரும்பறதுல்ல... விக்காது....பொடிச்சுதான் தம்பி ஆவணும்...நமக்கு ஒடம்பு ஆவுறதில்ல...பேர புள்ளைங்கதான் செய்யும்....சும்மா செய்யுமா...எதாவது அப்ப அப்ப துட்டு கொடுத்தா சொல்றத செய்யும்...நல்லா தண்ணி கொதிச்சி வரச்சே மாவை போட்டு நல்லா கொஞ்ச நேரம் தொழாவனும்..அப்ப தான் கட்டி கட்டாது...நம்ம காச்சி வச்சாக்க வூட்டுக்காரரு, பேர புள்ளைக எடுத்து கடைக்கி கொண்டு போவும்...'
'நல்லதும்மா... சட்டினி எதாவது செய்வீங்களா ?'
'சட்டினிக்கோசன்தான் குடிக்க வருவாங்க தம்பி ...வெங்காயம், பச்சமிளகா, இஞ்சி,தேங்காய்,உப்பு,கருவப்புல எல்லாம் போட்டு அரைச்ச சட்டினியும் செய்யணும்...'
'இது என்ன தேங்கா சட்டினியா, வெங்காய சட்டினியா?'
'ஆமா , ரெண்டையும் போட்டு அரைக்கிறது தம்பி'
'ஒரு நாளைக்கி எவ்வளவு காச்சிவீங்கம்மா?'
'ஒரு கிலோ போடுவோம் தம்பி...ஒரு சில நாள் விக்கும் , சில நாள் மிஞ்சிரும் ...மிஞ்சுனா மாட்டுக்கு ஊத்துவோம் தம்பி...ஞாயித்திக்கிழமை வித்துரும் தம்பி..'
'மிஞ்சுனா அடுத்த நாள் சேத்து காச்சுவீங்களா...'
'இல்ல தம்பி, அப்புறம் ஆளுக திரும்பி வராது...'
'ஒரு சொம்பு எவ்வளவு விக்கிறீங்க'
'பத்து ரூவா தம்பி'
'வெளியூர்ல ஜாஸ்தி விக்கிறாங்களே'
'நம்மூர்ல விக்காது தம்பி'
'ஒரு நாளைக்கி எவ்ளோ சொம்பு விப்பீங்க'
'நூத்தம்பது ரூவா விக்கும்...சில நாள் இரநூறு..'
'ஆவுற செலவெல்லாம் சேத்தா'
'அது தனி தம்பி...ஐயாயிரம் கட்டி மாவுக்கு எடுக்கணும்...சங்கம் இருக்கு...கிலோ முப்பது ரூவா ஆவும்..'
'எல்லாம் போக கையில எவ்ளோ நிக்கும்'
'நூறு ரூவா நிக்கும் தம்பி...பையன் இருக்கான்...அப்ப அப்ப லாரிக்கு போவான்...வூட்டுக்காரருக்கு சுகரு , ப்ரெஸ்ஸரு...நமக்கும் சுகரு , ப்ரெஸ்ஸரு இருக்குது...ரெண்டு பேரும் சேந்து தான் ஆஸ்பத்திரிக்கு போறது...ஏதோ உருட்டறதுக்கு ஆவுது...இதுக்கு மேலயும் நமக்கு ஆவுறதில்ல தம்பி...'
'புரியுதுங்கம்மா...நேயர்களே, இன்று நாம் உழைப்போம் உயர்வோம் நிகழ்ச்சியில் தர்மபுரியைச் சேர்ந்த காவேரி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம்...இப்போது ஆல் இந்தியா ரேடியோவின் நண்பகல் 12 மணிக்கான செய்திகள் ஒலி பரப்பாகும்..நிகழ்ச்சி அதன் பின் தொடரும்... நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துகளை #மாரிமுத்து என்ற இன்ஸ்டா ஹாண்டிலிலும் , facebook பேஜ்-லும் பதிவிட மறக்காதீர்கள்..ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்வோம்.'

Comments
Post a Comment