இது ஒரு anti-thesis. ஆகவே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளக் கூடாதது, குறிப்பாக கடைபிடிக்கக் கூடாதது.
அதிகாரத்தை அடைய 48 வழிகள் - ராபர்ட் க்ரீன் போன்ற ஒரு முயற்சி(https://www.oberlo.com/blog/48-laws-of-power-robert-greene-summary).
பெரிய அளவில் வெளியே சொல்லப்படாதது, எழுதப்படாதது. ஆனால் எல்லா தியரிகளை மீறி மீண்டும் மீண்டும் உலகில் நடப்பது அதுவே.
எடுத்துக்காட்டு, இதில் உள்ள விதி 7 : "அடுத்தவர்களை வேலையைச் செய்ய வை, நற்பெயரை நீ எடுத்துக்கொள்" . அல்லது விதி 45 : "நிறைய மாற்றம் தேவை என்று சொல்லிக்கொண்டே இருங்கள்; ஆனால் சீக்கிரமாய் நிறைய மாற்ற முயலாதீர்கள்; ". புதிதாய் ஒரு குழுவில் அதிகாரத்திற்கு வரும் ஒருவர் , தன்னை முழுதாய் பெரும்பாலோனோர் ஏற்கும் வரை ஏற்கனவே இருக்கும் பிழைகளைக் காட்டி இருப்பவர்களை பணிய வைக்கிறார். அவர்கள் பணிந்தபின் எல்லாம் சரிதான் , கொஞ்சம், கொஞ்சமாய் செய்யலாம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். குனிந்தவர்கள் நிமிர ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுப்பார்.
டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நெப்போலியனின் ருஷ்யப் படையெடுப்பைப் பற்றிச் சொல்லும் நாவல். (இன்னும் கால் வாசி முடிந்ததும், தொகுத்து எழுதுகிறேன்). இந்த ருஷ்யப் போரே நெப்போலியனின் வீழ்ச்சியின் ஆரம்பம். போரில் நேரிடையாக பங்கெடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டும், வரலாற்றில் எழுதியதை எழுதியதை வைத்தும் டால்ஸ்டாய் இந்த மிகப் பெரிய நாவலை(~2300 ப) எழுதி இருக்கிறார். பிரான்ஸ் தலைமையில் ஏழு லட்சம் பேர், ருஷ்யப் படையில் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் சண்டையில் பங்கேற்கிறார்கள். நெப்போலியன் தலைமையில் இத்தனை பெரிய படை, இரண்டாயிரத்தி ஐநூறு கி.மீ தூரத்தை கடும் வெப்பத்திலும் , கடுமையான குளிரிலும் பெரும்பாலும் நடந்தே கடந்திருக்கிறது. நெப்போலியன் போர் 6 மாத காலம், படை நடுவே இருக்கிறார். பிரான்ஸ் ஆறு மாதம் கழித்துப் பின் வாங்கும் பொது 12ல் ஒருவரே எஞ்சுகிறார். போர்களை உண்டாக்கும் அரசியலின் மேல்வர்க்கப் பிரபுக்களின் பார்வையிலிருந்தும், அதற்குள் காய்களாய் நகரும் படைவீரர்களும், அவர்களின் அம்மாக்களும் , அப்பாக்களும், மனைவிகளும், காதலிகளுமாய் இவர்களுக்குள் ஒரு போர் எப்படி ஒரு காற்றாய் , நீராய் , நெருப்பாய், நகர்கிறது என்று சொல்லும் கதை. ஒரு போரை அருகில் இருந்து உணரவைக்கும் கதை. போர்களை பார்த்திராத நம் போன்றவர்கள் , பெரும் போரினூடே வாழ்ந்த அனுபவம் கிடைக்கிறது. இப்புத்தகத்தின் தரிசனமும், இருப்பதை மறுத்து புரட்டிப் போடும் ஒன்றுதான். மகத்தான எழுத்துக்கள் எல்லாமும் இதையே செய்கின்றன.
இதில் மூன்று மிக முக்கிய விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார்.
1. மூடிய அறைகளில் வகுக்கப்படும் போர் வியூகங்கள் , 'உண்மையான' போர் நடக்கும் நேரத்தில், மரணத்தின் முன் , நீர்த்து ஒன்றும் இல்லாமல் போகின்றன. இந்த மயிர் பிளக்கும் திட்டமிடல்களுக்கும் , கடைசியில் மரணம் அருகில் நின்று தோன்றும் போது நடப்பதற்கும் தொடர்பே இல்லை . கடைசியில் நடப்பது கடைசி படைவீரனின் உள்ளத்தில் இருப்பது ஒன்றே. தோற்கும் பக்கம் இருக்கும் ஒருவர் ,உயிர் ஒன்றே மிச்சமிருக்கையில் இழப்பதற்கு ஏதுமின்றி , எழுச்சி கொண்டு தாக்கி மொத்தப் படையையும் உணர்ச்சிமயமாக்கி வெல்வதைக் காட்டுகிறார். அதே உயிர் பயத்தால் பின் வாங்கும் ஒரு சிலர், மொத்தப் படையையும் பின் வாங்கச் செய்கின்றனர்.
2.நாம் அறிந்த எழுதப்பட்ட வரலாறு என்பது கேள்விக்குரியது.
நமக்குத் தெரிந்த வரலாறு என்பதை இரு வகையில் அடக்கலாம்.
அ )வரலாற்றில் அங்கங்கு நிகழும் முக்கியமான சம்பவங்களை பொறுக்கி ஒரு நூலில் கோர்க்கப்பட்டது.
ஆ ) ஒரு தனி மனிதரை தேர்ந்தேடுத்து அவர் செய்ததை ஆராய்வது.
இந்த இரண்டிலும் பெரிதும் விடுபட்டுப் போவது, வரலாறு என்பது அப்போது வாழ்ந்த எண்ணிலா மனிதர்களின் விருப்பங்களின் கூட்டுத் தொகை. இந்த விருப்பத்தினால் நிகழும் செயல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை (dynamic) . ஒரு செயலை இதில் இருந்து துண்டித்துப் பார்க்க முடியாது. அதைப் போல் ஒரு தனி மனிதர் எல்லா மனித மனங்களையும் பிரதிபலிக்க முடியாது. ஆகவே உண்மையான வரலாறு என்பது தலைகீழானது. ஜெனெரல்கள், கமாண்டர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டு தனி வீரர்களின் மனநிலையைப் படிக்க ஆரம்பிப்பது. இவர்களுக்கிடையேயான பொது வழியைப் பார்த்துப் பின் அவர்களின் மேல்கட்டுமானத்திற்கு செல்வது. நெப்போலியனை மேல் இருந்து கீழே பார்க்கும் சேனாதிபதியாகவும், ரஷ்யாவின் தளபதி குட்டூஜோவை தரையில் இருந்து சிறிது சிறிதாக(ஹீயூரிஸ்டிக்) கீழிருந்து மேலாக முடிவுகளை நோக்கி நகர்பவராகவும் காட்டுகிறார். இவர் திட்டமிடல் மீட்டிங்குகளில் தூங்கி விடுவார். இவரே போருக்கு முன்தினம் , மரணத்தின் மிக அருகில் , எதிரே வந்த அன்னை மாதா தேரை வீரர்கள் பார்த்து , பின் தோள் கொடுத்து தூக்க ஆரம்பிக்க அது ஒரு பெரு உணர்வு அலையாக மாறுகிறது. எங்கிருந்தோ கேள்விப்பட்டு வரும் இவர் அதில் முழுதும் பங்கெடுத்து, மண்டியிட்டு மாதாவின் முன் அழ ஆரம்பிக்கிறார். எல்லோருக்கும் வெல்லும் உணர்வு மேலோங்குகிறது. இவர் இதை திட்டமிட்டே செய்கிறார். உணர்வுகளுக்கு பெரிய இடம் தருகிறார்.
இங்கு வரலாறு என்பதை எந்த ஒரு துறையின் வரலாறு அல்லது எழுதப்பட்ட விதிகள் எனலாம். திட்டமிடல் என்பதற்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி அனைவருக்குமுள்ள அன்றாடப் பிரச்சனை.
3. போர் என்பதும் எல்லா செயல்களையும் போலவே ஒரு தற்செயல். நாம் தான் அதற்க்கு நடந்த பின் பார்த்து, நமக்கு ஏற்றவாறு ஒரு காரணத் தொடர்பைக் கண்டடைகிறோம். நியூட்டன் ஆப்பிள் அந்த தருணத்தில் கீழே விழ, எண்ணற்ற செயல்கள் கூடி வர வேண்டும். கனிந்த பழம் , காம்பு காய்ந்து, பின்னர் அந்த நேரத்தில் ஒரு காற்று வீசி அதை அசைக்க வேண்டும். காற்று வீசுவதற்கு இன்னும் பெரிய விசைகள் கூடி வர வேண்டும். ஒரு உளுத்த மரத்தை கடைசிக் கோடரி அடியால் பிளப்பபவர், அவர் மட்டுமா அதை செய்தார்? பிரான்ஸ் ரஷ்யப் போரில் முக்கியமான திருப்பம் நடந்த , பிரான்ஸை தோல்வியின் பாதையில் இட்டுச் சென்ற, போராடினோ போர் அன்று நெப்போலியனுக்கு ஜலதோஷம் பிடித்து விடுகிறது. ஆறு மாத காலம் ஒவ்வொரு நாளும் படையின் நடுவே இருந்தவர் அன்று லீவு எடுக்க வேண்டி ஆகிறது. இதை தற்செயல் என்றால் ஒட்டு மொத்த போரையும் என்ன சொல்வது?
இந்த மூன்று முடிவுகளும் போருக்கு மட்டுமல்லாமல் எந்த ஒரு நிறுவனத்துக்கும் பொருந்தும். இவையும் ஒரு anti-thesis தான் என் பார்வையில்.
காலையில் எழுந்ததும் எழுதாத , குறுக்கு வழி தேடியே வண்டியை விட வேண்டியிருக்கிறது. இப்போது நாம் எல்லோரும் குறுக்கு வழி நாடுவதால், குறுக்கு வழியே நேர் என்றாகி , நேர்வழி குறுக்கென்றாகி விட்டால் ?.
இதைப்போல் எவ்வாறு அவையத்து முந்தியிருப்பது, குறிப்பாக வேலை பார்க்குமிடத்தில் ? உதாரணமாக நம்மில் பலர் சாதாரணமாக :
-மூன்று பேர் உக்காரும் சோபாவில் எப்போதும் தனியே, நடுவில், உட்கார்கிறோம்
-காரில் எப்போதும் முன் சீட்டில் அமர்கிறோம்
-ரோட்டில் ஒரு காரின் பின்னால் சிறிது நேரம் செல்லமுடியாது, முந்தினால் தான் திருப்தி .
-காரிலோ , பைக்கிலோ செல்லும் போது அடுத்தவர் நம் முன் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பு வருகிறது . (அ-து), தாம் கார் செல்லமுடியாத போது பைக் போகும் வழியை மறிக்கிறோம்.
-சாப்பாட்டு மேஜையில் முக்கியமானவருக்கு எதிரே அமர்வதெற்க்கென்று வாய்ப்பை எண்ணி மனம் செல்கிறது
-குழந்தைகளுக்கு A-ல் தொடங்கும் பெயர் வைக்கிறோம்.
இவை எல்லாம் ஒரு மென்மையான முந்துதலே என நினைக்க தோன்றுகிறது. வெளிப்படையாக அன்றாடம் பார்க்கக் கூடியவை. இன்னும் அபார்ட்மெண்ட்களில் ப்ரெசிடெண்ட்/செகிரேட்டரிகளும் , whatsapp அட்மின்களும் , அவர்களின் மெசேஜ் ரூல்களும் ஒரு வகையான முந்துதலே ஆகும்.
அலுவலகங்களில் இவை வேறு மாதிரி நடக்கின்றன.
#1 வேலை செய்வதும் முன்னேறுவதும் இரு வேறு விஷயங்கள். மேல்மட்டத்தில் இருப்பவர்கள், அதிகாரத்திற்கு அருகே இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பது இயல்பாய் நடக்கிறது. மேலே கண்ட குணம் உள்ளவர்கள் இயல்பாய் இதை காரில் , வீட்டில் செய்வது போல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
#2 விரும்பாவிட்டாலும் முன்னேற்றம் இல்லாமல் நீண்ட காலம் தள்ள முடியாது. ஒன்று தலை தட்டி விடும், இல்லை தடுக்கி விழுந்து , மேலே ஏறிச் சென்று விடுவார்கள். ஓரமாய் இருக்க முடியாது, பச்சை விளக்கு விழும்போது நின்று விடுபவர் கதிதான்.
இந்தப் புள்ளியை சமாளிக்க சில வழிகள் பொதுவாக கையாளப் படுகின்றன.
2.1 வளர்ச்சி என்பதை வேறு விதமாக வரையறை செய்ய முயற்சிக்கலாம். இதை முதலில் தன் வளர்ச்சி அல்லது நாம் இருக்கும் குழுவின் வளர்ச்சி என்று குறுக்கலாம். ஆக குழு பெரிதாக நாமும் பெரிதாகாலம்.
2.2 ஒரு குழு எவ்வாறு பெரிதாக முடியும்?
2.2.1 மேலே சொன்ன கரைகளை உடைக்கும் போது, வரப்புகளை மீறி ஆக்கிரமிப்பு செய்யும் போது,அடுத்தவர் நிர்வாகம் பிழை என்று கோர்ட்டில் இழுக்கும் போது...இவ்வாறு ஒரு அண்டை நாடு போல் கனலிலேயே இருப்பது. இதைக் கண்டறிவது எளிதல்ல. வெளியில் தெரிந்தாலும் சட்டம் பாயும். ஆயுர்வேத கிளி ஒத்தடம் போல் செய்ய வேண்டும். தோசைக்கல் சூடு, ஆனால் நல்லது. வைப்பவரைப் பொறுத்தே சூடு. மேலும் யார் வரப்பு எங்கு முடிகிறது, எங்கு வறட்சி, எங்கு நீர் பாய்கிறது, எங்கு வேலைக்கு வல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் வைத்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்.
2.2.2 இன்னும் ஒரு உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கை காட்டலாம். இலட்சியங்கள் உருவாவதும் எளிதல்ல, அடைவது அதற்க்கு மேல்.ஆனால் இலட்சியத்தை மறு விளக்கம் செய்ய முடியும். நீங்கள் அன்றாடம் செய்வதை லட்சியம் என நம்ப வைக்கலாம். உடற்பயிற்சி, அதிகாலையில் எழுவது, automation , machine learning போன்றவை. இவை காலத்திற்கேற்ப மாறலாம், ஆனால் கொள்கை நினைவில் நிற்க வேண்டும்.
2.2.3 எதுவும் இல்லையென்றால் நடந்த தவறுகளை நாமே முன் வைத்து , அதை இந்த வருஷம் சரி பண்ண உறுதி எடுக்கலாம். இது கத்தி முனை, ஒரு பாவமும் செய்யாதவர் எவருமில்லை, நினைவிருக்கட்டும். பிடிபட்டவர் பாவம் செய்தவராகிறார்.
2.3 தன் வளர்ச்சி இப்போது எவ்வாறு நடப்பது ?
2.3.1 நேரத்தைக் குடுத்து, அந்த நேரத்தில் உழைப்பைக் கொடுத்து, ஊதியம் பெறுகிறோம். நேரம் என்பதை மழுங்க வைக்கலாம். மேகமூட்டமாக இருக்கும் போது , நேரம் கண்டுபிடிப்பது கடினம். மேகம் கூடி இருக்கும் போது மழையை எதிர்பார்ப்பவர்கள் , நல்ல ஒளியை விரும்புபவர் இருவரும் இருப்பார்கள். திரை நம் கையில், இழுப்பதோ , மூடுவதோ, கூட்டத்தைப் பொறுத்தது. சில அர்ச்சகர்கள், நல்ல கூட்டம் இருக்கும் போதே திரை போடுவார்கள். சாமியின் அருமை, காத்திருப்பதில் தான் உள்ளது. ஆனால் VIP வரும்போது திரை போடக் கூடாது.
2.3.2 வேகம் என்பதை உங்களுக்கு ஏற்றவாறு மறு வரையறை செய்யலாம். எல்லோரும் வட்டப் பாதையில் இருப்பதால், ஆரம்பம்,முடிவு இரண்டும் கிடையாது. கார் பைக் , வேகமாக போகலாம். சைக்கிள் செல்ல முடியாது. இல்லை நீங்கள் எப்போதும் ஓடுவதாகச் சொல்லலாம். ஓடுவதற்கோ, சைக்கிளிற்க்கோ இடம் உள்ளது. வேறு வார்த்தையில் நீங்கள் செய்யும் வேலை மிக கடினம், அல்லது பார்வைக்கு கடினமாக மாற்றுங்கள். அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாததை கடினம் என்பது செல்லும்.
2.3.3 அடுத்தவர்கள் வளராத போது , நீங்கள் தானாக வளர்கிறீர்கள். இதை விளக்க வேண்டியதில்லை. நாம் தேவைப் படும் போது நேரம் இல்லாமல் செய்வது, இடம் பார்த்து மட்டம் தட்டுவது போன்றவை.
2.3.4 மேலே சொன்ன குழு முயற்சிகளில் துணை புரிவது. வரப்பு வாய்க்கால் பிரச்சனைகளில் வக்கீலாக இருப்பது. இந்த தேசத்தின் சக்தியுள்ள மனிதர்கள் வக்கீல்களே.
இந்த நாவலில் வரும் பியர் என்னும் மைய பாத்திரம் உண்மையில் டால்ஸ்டாய் என்று சொல்கிறார்கள். அவர் வாழ்க்கைத் தேடலே இக்கதை எனலாம். பிரபு குடும்பத்தில் பிறந்து, பெரும் பணக்காரராய் எல்லா சொத்திற்கும் அதிபதி ஆகிறார். மனைவியால் நாள் தோறும் ஏமாற்றப் படுகிறார். பெரும் பணத்தைக் கொண்டு வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தொழிலாளர் சங்கத்தை முன்னெடுத்து , அடிமைகளை முன்னேற்ற நினைக்கிறார்.போகத்தில் திளைக்கிறார். அனைத்தையும் விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்து போரின் நடுவே செல்கிறார். அதிர்ஷ்டமாய் உயிர் பிழைக்கிறார். பின் நெப்போலியனே அனைத்திற்கும் காரணம் , அவரை கொன்றால் என்ன என்று தோன்றுகிறது. நடுவிலே வேறொரு தகராறில் பிரெஞ்சு ராணுவத்தால் பிணைக் கைதியாக பிடிக்கப்படுகிறார். நாள் முழுதும் உடல் உழைப்பு செய்ய வைக்கிறார்கள். நாள் இறுதியில் ஒரு துண்டு ரொட்டியும், மாமிசமும் கிடைக்கிறது. நன்கு தூங்கி மறுநாள் எழுகிறார். இவ்வளவுதான் வாழ்க்கை என்ற திறப்பு வருகிறது. "யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்" தாயுமானவர் [ஜெ , டால்ஸ்டாய் வீடியோ நன்றி]. பின்பு இந்த தெளிவில் வாழ்க்கையில் நுழைந்து மறுபிறப்பை ஆரம்பிக்கிறார். ஒருவர் வாழ்வில் ஏழு முறை செத்துப் பிழைப்பதாக யுதிஷ்டிரர் சொல்வதாக வருகிறது. இழிவான தருணங்களே இறக்கும் தருணங்களாகின்றன, யுதிஷ்டிரர் அளவுக்கு தாங்குமா தெரியவில்லை.

Comments
Post a Comment