கம்பராமாயணம் - 1 - காடு
சமீபத்தில் படித்த ஜெயமோகனின் காடு நாவல் தான் என்னை கம்பரைப் பற்றி எண்ணச் செய்தது. கதை முழுதும் கிரி என்பவனைச் சுற்றியே நடக்கிறது. முழுக்கதையும் காட்டிலேயே நடக்கிறது. வீட்டிலிருந்து பிழைப்பு தேடி மாமாவுடன் கால்வாய் (கல்வெர்ட்), ரோடு போடும் கான்ட்ராக்ட் வேலைக்கு மேற்பார்வையாளராகச் செல்கிறான். இதைப் படித்தபின் அருகில் இருக்கும் பெண்களில் எப்போது நீலி தோன்றுகிறாள் என்று தெரிகிறது. இவரையோ இன்னொரு நீலி காட்டிற்குள் கட்டிப்போட்டு விடுகிறாள். ஒரு பெண் அன்பால் நீலியாய், பித்தனாய் ஆக்கினாள். இதன் மறுமுனை மனைவி இயலாமையின், வெறுப்பின் உச்சத்தில் நீலியாகிறாள். மாமா இறந்து போய் பின் தொழில் சரிந்து , சாப்பிட வழியில்லாமல் , சரிவிலே வீட்டிலே இருக்க முடியாமல், இவர் தினமும் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து, சும்மா இருந்து பொழுது கழிக்கிறார். ஒரு நாள் காலையில் கோவிலுக்கு புறப்பட்டு போகும்போது மனைவி பேசுவது குத்தி விடுகிறது. பீஸ் கட்டணும் என்கிறாள் . இவன் கேட்காமல் செல்கிறான். ஒரு தாசியா போகவும் வழி இல்லயே என்கிறாள். இத்தனை நாள் குத்தல் பேச்சை கேட்டவர் , அன்று செருப்பால் அடித்து விடுகிறார். அவர் கத்தி ஊரைக்கூட்டி , கடைசியில் தீக்குளித்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறார். இவர் தொழிலை எல்லாம் யார் முடக்கி, தான் ஏறி ஜெயித்தாரோ அவரிடம் 1000 ரூபாய் வாங்கி மனைவியை பிழைக்க வைக்கிறார். அவர் பார்க்க ஆளில்லாமல் உடல் முடங்கி வீட்டில் இருக்கிறார். இந்த மாதிரி மனிதர்களும், தருணங்களும் வாழ்வில் வந்தபடியே இருக்கின்றன.
கிரி தேடிச்செல்லும் ஒருவராக என்ஜினீயர் அய்யர் வருகிறார். இவரையும் காடு இழுத்துக் கொண்டு விடுகிறது. கிரியைப் போலவே இவராலும் மலையிலிருந்து கீழே இறங்கவே முடியவில்லை. கபிலனிலும் , கம்பனிலும் திளைக்கிறார். இவருக்கு சங்க இலக்கியம் காட்டை நோக்கும் கண்ணாடியாகிறது. கபிலர் குறுந்தொகை பாடல்களை பேச்சோடு சொல்லிக்கொண்டே இருக்கிறார். பின்னர் இவர் வயதாகி வாழும்போது தேவசகாயம் நாடார் எதிர்வீட்டில் இருக்கிறார், கம்ப ராமாயணம் படித்தபடியும் , சொல்லிக்கொண்டும் இருக்கிறார்.
காமம் எல்லோருக்கும் வாழ்வின் ஒரு இடத்தில் இதமான தென்றல் போலவோ , இல்லை வேரோடு வீசி எறியும் புயல் போலவோ, இல்லை நாள் பூராமும் வீசியபடி இருக்கும் சூறைக்காற்றை போலவோ வீசித்தான் முடிகிறது. இது தென்றலா , புயலா , சூறையா என்பது நம் கையில் இல்லை என்றே நினைக்கிறேன். கிரி வாழ்வில் இது சூறையாய், இல்லை புயலோ தான் என நினைக்கிறேன். பல வருடங்கள் கழித்து மடத்தில் ஏறத்தாழ சாமியாராய் இருக்கும் அய்யரை சந்தித்து தனக்கு நடந்தது என்ன என்று கேட்கிறான். பதிலையும் இந்த சங்கப்பாடலின் முதல் வரியைக் காட்டி அவனே சொல்கிறான். மிளைப்பெருங்கந்தன் இயற்றிய குறுந்தொகை பாடல் அது.
'காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.'
பொருள்:
பெரிய தோளுடையவனே!
காமம் காமம் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
காமம் மோகினிப் பேயும் அல்ல
நோயும் அல்ல
மேட்டு நிலத்தில் முளைத்த முற்றாத இளம்புல்லை
கிழப்பசு சப்பிப் பார்பதைபோல'
(நன்றி : சங்கச் சித்திரங்கள்)
ஆனால் இதே கவிஞர் கீழே வரும் இன்னொரு பாடல் இயற்றியுள்ளார்,
'காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்றாள் மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.'
பெரிய தோளுடையவனே!
காமம் காமம் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
காமம் மோகினிப் பேயும் அல்ல
நோயும் அல்ல
நுண்ணியதாவதும் அல்ல
வெம்மையாவதோ தணிவதோ அல்ல
தழையை மென்ற யானையின் மதம் போல
காண்பவரைப் பெற்றால் வெளிப்படும் '
காமம் இங்கு மதம் என்று ஆகிறது. ஒரு மதம் கொண்ட வேழம் போல் தான் காடெல்லாம் திரிகிறான் என்று நினைக்கிறேன். கீரைக்காதன் என்றொரு யானை கதை முழுதும் ஒரு படிமமாக வந்து கொண்டே இருக்கிறது. இவனுடைய உக்கிரம் எற எற அதனுள்ளும் மதம் ஏறியபடி வருகிறது. பெரிய மழையில் இரண்டு அறுகளால் துண்டிக்கப்பட்டு நிலத்தில் மதத்தின் விளிம்பில் நிற்கிறது. 'ஒத்தையா போச்சு..கூட்டத்தில் சேரலிங்கில் அதுக்கும் கஷ்டம்...நமக்கும் கஷ்டம் என்று குட்டப்பன் சொல்கிறான். இதே இரவில் தான் அவன் நீலியுடன் அடைமழையில் , உச்சியில் இருக்கும் குறிஞ்சிப் பூவைக் காணச்செல்கிறான். யானைக்கு மதம் பிடித்து வெறி கொள்வதற்கு பல நாள் பிடிக்கும் என்று படித்திருக்கிறேன். ஆனால் வெடித்து மாதமாகும் தருணம் ஒன்று உண்டு. இந்த யானையும் கதையில் வரும் ஒரு சிறந்த படிமம் என்றே நினைக்கிறேன். யானை பாறையாகவும் , இருட்டாகவும், சங்கப்பாடல்கள் வழியாக கதையில் வந்த வண்ணம் இருக்கிறது.
கிரி ஐயரைச் சந்திக்கும் முன் நினைவு கொள்ளும் மூன்று கம்ப ராமாயணப் பாடல்களும் மிக மிக ஆழ்ந்த படிமங்களாய் அந்த இடத்தில் அமைகின்றன.
'பஞ்சு எரி, உற்றது என்ன
அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல,
விளிந்ததே மீண்டது இல்லை;
அஞ்சினேன் அஞ்சினேன்; அச்
சீதை என்று அமிழ்தால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன்
நாளை இத்தகையன் அன்றோ? ‘
இந்தப் பாடல் ராமாயண யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் மண்டோதரி தன் இறந்து பட்ட மகனை வைத்து சொன்னது.
பஞ்சுப் பொதியில் பற்றிய நெருப்பு போல் படையெல்லாம் அழிந்தது. இருவரின் கோபத்தினால் எல்லோரும் மாண்டனர், பிழைக்கவில்லை. மண்டோதரி அமிழ்தால் செய்த நஞ்சு என்று சீதையைச் சொல்கிறாள். இந்த நஞ்சு ராவணனையும் கொல்லும் என்று முன்பே நினைத்ததாக சொல்கிறாள். இந்த இனிய நஞ்சு தான் கிரியையும் பற்றி எரிய வைத்தது என நினைக்கிறேன்.
இப்பாடலின் முந்தைய நிமிடம் 'கெட்டது கொடிநகர்' என்ற கம்பன் பாடல் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
யுத்த காண்டத்தில் அனுமன் வாலினால் இட்ட தீயினால் இலங்கையை எரி மயமாக்கியபின் , மந்திரி சபையில் ராவணன் எண்ணுவதாக வரும் பாடல். 'ஒரு குரங்கு வைத்த தீயினால் , நகரும் , உற்றார் , உறவினர் அனைவரும் கெட்டனர். என் உடல் மட்டும் அரியணையில் இருக்கிறது'. இந்த குரங்கு எது, ஏன் அவன் மனதில் இப்பாடல் ஓடியது?
'சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
இட்டது இவ்அரியணை இருந்தது என்உடல்'
அதற்கு சற்று முன் , 'நீர்க்கோல வாழ்வை நச்சி' என்ற கம்பன் வரி மனதில் ஓடுகிறது. இது கும்பகர்ணன் போரின் முனையில் இருக்கும் போது , விபீஷணனை பார்த்துச் சொன்னது. நீ இந்தப் பக்கம் வந்து விடு என்கிறான். அதற்கு கும்பன் சொல்லும் பதில் இது. நீரில் இட்ட கோலம் போல இந்த வாழ்க்கை, இதில் என்னை நெடுநாள் வளர்த்து கடைசியில் போருக்கு போர்க்கோலம் போட வைத்த அண்ணனுக்கு உயிர் கொடாது போக மாட்டேன். என் துன்பத்தை நீ போக்க வேண்டுமானால் ராமனிடமே இரு என்று சொல்கிறான். வாழ்வை நீரில் இட்ட கோலம் என்கிறான். இது ஏன் கிரியின் மனதில் ஓட வேண்டும், எல்லாம் முடிந்து நீர்க்கோலம் என்றே அவனுக்கு படுகிறது.
'நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி'
குறுந்தொகையும் கபிலர் பாடல்களும் கதை முழுதும் தெறித்த வண்ணம் உள்ளன.
'கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே !' -
'எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'
கொடிகள் மலர்ந்த , வெப்பம் தணிந்த பகலை கடல் என்றாலும் ஒருவாறு நீந்திக் கடந்து விடலாம். இரவு கடலினும் பெரிது, எவ்வாறு நீந்திக் கடப்பது. ஒரு சில நாட்கள் இரவில் தூக்கம் வருவதில்லை, இரவை கடலினும் பெரிது எனும் போது இன்னும் மலைப்பாய் ஆகி விடுகிறது. இவ்வாறு இரவில் முழித்து எழுதியபின் தூக்கம் வராது, எங்காவது கதவு திறக்கும் சத்தம், நாய் குரைக்கும் சத்தம் , என்று எதிர் பார்த்தபடி இருந்தால் விடியும்.


Comments
Post a Comment