Skip to main content

கம்பராமாயணம் - 3 - மாபெரும் கால்களின் கீழே

 



டி.கே .சி எழுதிய கம்பர் தரும் ராமாயணம் மேல் நோக்கி கிளை விரித்து சென்ற வண்ணம் இருக்கிறது. கம்பராமாயணத்தில் வரும் பாடல்களை இடைச்செருகல் என்று பல பாடல்களை நிராகரிக்கிறார். இவர் மேலும் தொகுத்து எழுதியது இப்புத்தகம். எனவே சொல்ல வேண்டியதில்லை, பொறுக்கி எடுத்து இருக்கிறார் , நயம் சொல்லி விரித்து எழுதி இருக்கிறார்..  கம்ப நாடகமும், கம்ப சித்திரமுமே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது என நினைக்கிறேன்(டி.கே .சி). நாடகத்தை விட கம்பர் காட்டும் சித்திரமே எனக்கு உவப்பாய் இருக்கிறது.  

சித்திர கூட படலத்தில் லட்சுமணன் காட்டில் குடிசை அமைக்கும் காட்சி வருகிறது. வளைவில்லாத, நேரான பக்கவாட்டு மூங்கில்களை நிறுத்தி, மேலாக குறுக்குக்கழிகளை தாளாமல் சேர்த்துக் கட்டி முடிந்தான். மேலே கூரையில் தேக்கின் இலைகளை பரப்பி, அதன் மேல் பூத்த நாணல் புற்களை வெய்து, கீழே நிறுத்திய கழிகளுக்கு இடையில் மண்ணை அடித்து , சுவர் எழுப்பி அதில் நீர் பூசி மெழுகினான்.    

நெடுங் கழை குறுந்தறி

    நிறுவி, மேல் நிரைத்து,

ஒடுங்கல் இல் நெடுமுகடு

    ஒழுக்கி, ஊழ் உற

இடுங்கல் இல் கை விசித்து

    ஏற்றி, எங்கணும்

முடங்கல் இல் வரிச்சு மேல்

    விரிச்சு மூட்டியே.


  தேக்கு அடைப் படலையின்

    செறிவு செய்து, பின்,   

பூக் கிளர் நாணலின்.      

    புல்லு வேய்ந்து, கீழ்த்

தூக்கிய வேய்களில்.         

    சுவரும் சுற்றுறப்

போக்கி, மண் எறிந்து,        

    அவை புனலில் தீற்றியே.

கம்பனின் அம்பறாத்தூணி (அம்பு+அறா +தூணி) என்று நாஞ்சில் நாடன் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். அவர் தூணியில் சொல் அலை போல் வந்துகொண்டே இருக்கிறது.  மேலே மூங்கில் என்று பொருள்படும் இரண்டு சொற்கள் உள்ளன.

எதோ ஒரு கணத்தில் கம்பர் சொல்லும் சுந்தர காண்டம் படிக்க வேண்டும் என்று தோன்றியது.  

கம்பர் கடல் தாவு படலம் என்று முதல் படலத்திற்குப் பெயர் இட்டிருக்கிறார். அனுமன் மஹேந்திர மலையில் இருந்து இலங்கையில் இருக்கும் பவள மலையை  அடைவதை சொல்லும் படலம். இரு மலைகளுக்கு நடுவே இருப்பது கடல். செய்ய வேண்டிய பெரிய செயல்கள் முன்னால் நிற்கும் போது சுந்தர காண்டம் எடுத்துப் படிப்பார்கள். அனுமன் செய்த செயலைப் பார்க்கும் போது , நமக்கு ஒரு வேகம் வரலாம் என்ற நோக்கத்தில் ஆகலாம் . 

என்னை இப்பாடல்கள் கவரக் காரணம் இதிலுள்ள கற்பனையும் , lateral thinking -மே ஆகும் . இல்லாத, பார்த்திராத ஒரு விஷயத்தை எப்படிப்  பிறருக்கு கடத்துவது. ஒரு தலை சிறந்த புகைப்பட நிபுணர் ஷாட்களை அடுக்கிச் செல்வது போல் சொற்களால் காட்சிகளை அடுக்கிச் செல்கிறார் கம்பர். 

முதல் இரு பாடல்கள் அவர் விஸ்வரூபம் எடுப்பதைக் காட்டுகிறது. 

1) மகேந்திரகிரி மீது பேருருவோடு நிற்கிறார், சுவர்க்கம் தெரிகிறது. இதை கடலால் சூழப்பட்ட இலங்கை தானோ என நினைக்கிறார். பின்பு மேலோகம் என்று உண்மை  புரிந்துகொண்டு, அங்கு தான் காண வேண்டிய சீதை இல்லை என்பதையும் குறித்துக் கொள்கிறார். அடுத்த பாடலில் கம்பர் அவர் பேருருவை நம் கண்முன்னே மீண்டும் காட்ட  முனைகிறார். 2) எழுந்து நின்று நோக்கியவுடன் ஒரு satellite வியூவில் மொத்த இலங்கையும் அனுமன் பார்க்கிறார். வட்டமான கோட்டையையும்,   பொன் முகடுள்ள அம்பெய்யும் புழையையும் , மதிலையும், அதன் காவல் மாடங்களையும் ,  வெள்ளைச் சுண்ணம் பூசப்பட்ட மாட வீதிகளையும் பார்க்கிறார். உடனே எட்டுத் திக்கும் கேட்கும் வண்ணம் தோள் தட்டி ஆர்ப்பரித்தார்.

கண்டனன்,இலங்கை மூதூர்க் 
     கடிபொழில்கனக நாஞ்சில்
மண்டல மதிலும்,கொற்ற         
     வாயிலும், மணியின் செய்த
வெண்தளக் களபமாட              
     வீதியும்,பிறவும் எல்லாம்;
அண்டமும்திசைகள் எட்டும்.       
     அதிர,தோள் கொட்டி ஆர்த்தான்

பின்வரும் பத்துப் பாடல்களில் அனுமன் இலங்கையைக் கண்டு , விண்ணில் பறக்க எண்ணி, பறக்கும் முன் நிகழ்பவை பற்றிச் சொல்கிறார். இவர் on your mark, get set  எடுக்கும் போது ஒரு பெரிய பிரளயமே நிகழுமென்றால்... கம்பர் இந்த பத்துப் பாடல்களில் ஒரு பிரளயத்தை நம் கண்முன்னில் நிறுத்துகிறார்.

சில நாட்கள் முன் பூங்காவில் சரிந்த சிறு மரக்  கிளையை ஒரு கம்பி போட்டுக் இழுத்து நிமிர்த்தி இருந்ததை கண்டேன். கம்பியின் மறுபுறம் சுவரில்  கட்டப் பட்டிருந்தது. மெல்லிய கருப்பு இரும்புக் கம்பி, நான்கைந்து மீட்டர் நீளம் இருக்கலாம் . கூர்ந்து பார்க்கையில் நூற்றுக்கணக்கில் எறும்புகள் கம்பியின் மேல் ஊர்ந்து கொண்டு இருப்பதைக் கண்டேன். மனித அளவுகோலில் இது இரு பெரும்  நகரங்களை இணைக்கும் பாலம் போல் என எண்ணிக்கொண்டேன். இரு புறமும் வழியை விட்டுக் கொண்டும் , தேடிக்கொண்டும் , கம்பியின்  மேலும் , கீழுமாக  சென்ற வண்ணம் இருந்தன. இவ்வளவு பெரிய பூங்காவில் எவ்வாறு இந்த சிறு கம்பி இவைகளுக்கு பாதையாகப்  புலப் பட்டது என்பது என்னை ஆச்சரியப் பட வைத்தது. ஒரு வேளை காலில் மிதிபடாமல் இருக்க இவ்வாறு அந்தரத்தில் பயணிக்கின்றனவோ ?

இப்போது காலை நான் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சில எறும்புகள் கொல்லப் படலாம். இல்லை என் கால் அடியில் சில உயிருடன் இருக்கலாம். சில சமயங்களில் காலின் அடியில் சிக்கிய எறும்பு , கல் அடிபட்ட ஒரு நாய் போல் சிலிர்த்து எழுந்து, ஓரிருமுறை தடுமாறி விழுந்து, எழுந்து , பின் உயிர் கொண்டு ஓடுவதைப்  பார்த்திருக்கிறேன்.  

இருப்பது என்னவென்றால் இங்குள்ள எல்லாமே எதன் மேலாவது ஏறி நின்று தான் ஆக வேண்டியுள்ளது. பெரும்பாலும் நாம் பிறர் மேல் நிற்பதை உணர்வதில்லை. ஆனால்  யாராவது நம் மேல் எப்போதும் அமர்ந்து தான் இருக்கிறார்கள். இதை நாம் உணர்கிறோமா இல்லையா  என்பது வலியைப் பொறுத்தது. அல்லது அமர்ந்திருப்பவரின் ஆகிருதியைப் பொறுத்தது. சில வருடங்களுக்கு முன் நான் பார்க்கும் ப்ராஜெக்ட் வேலையை முகேஷ் அம்பானி மாதம் ஒருமுறை ஆய்வு செய்கிறார் என்றார்கள். தீபாவளிக்குள் ரிலீஸ் ஆக வேண்டும் என்றார்கள். நம் பக்கம் இது என்ன முட்டினாலும் ஆகாது என்று தெரிகிறது. பிதுங்கி வெளி வரும் வரை அவர்கள் நெறுக்குவார்கள், இவர்கள் கடைசி நூல் வரை முடியாது என்று சொல்ல மாட்டார்கள். பல கோடிகள்  வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சொல்வார்கள். இவர்கள் முதல் ஆர்டர் , PO கேட்பார்கள், எல்லாம் சரியாக நடக்கும் என்பார்கள். இடையில் சிக்கும் நம் போன்றவர்களுக்கு நம் கழுத்தில் யாரோ கால் வைத்து சுவரில் நெருக்கும் படி நிலைமை. கடைசியில் ஒரு வழியாக  நம் பக்கம் வெளியே தெரித்தது. பின்னர் அவர்கள் பக்கம் பல தீபாவளிகள் வந்து சென்றன. அந்த எறும்பு போல் , பிழைத்து வெளியேறி , தட்டுத் தடுமாறி  அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான். இது போக மன வலிக்கு மார்க்கெட்டில் நிவாரணங்கள் இருக்கின்றன, அடித்து வேலை வாங்காமல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. முகேஷ் அம்பானி வயர்லெஸ்-ல் எழுந்து நிற்க முயன்ற போது , நானும் அந்த விஸ்வரூபதிற்கு அருகில் இருந்திருக்கிறேன்.

அனுமன் பேருரு எடுத்து இலங்கையை நோக்கியபின் , பறக்க  முன் நிகழ்வது இது.

1. அனுமன் தன் கால்களை வன்மையாக மஹேந்திரகிரி மலை மேல் பதிக்கையில் , மலை அழுந்தப் பெற்று அதன் வயிறு கீறி குடல் வெளி வருவது போல்,  குகைகளின் வெளியே தீயை உமிழும் , நஞ்சுள்ள  நாகங்கள் உராய்ந்து புரண்டு வெளியே சென்றன.

வன்‌ தந்த வரிகொள்‌ நாகம்‌ வயங்கு அழல்‌ உமிழும்‌ வாய

பொன்‌ தந்த முழைகள்‌ தோறும்‌ புறத்து உராய்ப்‌ புரண்டு பேர்வ,

நின்று, அந்தம்‌ இல்லான்‌, ஊன்ற, நெரிந்து கீழ்‌அழுந்தும்‌ நீலக்‌ 

குன்றம்‌ தன்‌ வயிறு கீறிப்‌ பிதுங்கின குடர்கள்‌ மான

(வன்‌ தந்த வரிகொள்‌ நாக-மவ்ல‌ிய பற்களையும்‌ (உடம்பில்‌) கோடு களையும்‌ உடைய பாம்பு. அழல்‌ -நெருப்பு. முழை-குகை. புறதீது உராய்‌ - முதுகின்கண்‌ உராயப்பெற்று, பேர்வ - வெளிப்படுவனவாயின. அந்தம்‌: இல்லான்‌- இறப்பில்லாதவன்‌ அநுமன்‌ )

2. அனுமன் கால் பதிந்து மலைகள் அழுந்தியதால் குகைகளின் உள்ளே துயிலில் இருந்த சிங்கங்கள், சினந்து எழுந்து , வரிசையாக ரத்தம் கக்கி நெரிந்தன. பறவைகள் எல்லாம் அஞ்சி கடலொலி நாண கத்தி விண்ணோக்கி பறந்ததால் சூரியன் மறைந்து வானம் இருண்டது.  

புகல்‌அரும்‌ முழையுள்‌ துஞ்சும்‌ பொங்கு உளைச்‌ சிங்கம்‌ பொங்கி, 

உகல்‌அருங்‌ குருதி கக்கி, உள்உற நெரிந்த; ஊழின்‌

அகல்‌அரும்‌ பரவை நாண அரற்றுறு குரல ஆகிப்‌

பகல்‌ ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம்‌.


(புகல்‌ அரும்‌ -புகுதற்கரிய துஞ்சும்‌ -உறங்குகின்ற பொங்கு - மிக்க. உளை - பிடரிமயிர்‌.ஊழின்‌ -வரிசைவரிசையாக, உற நெரிந்த -மிகவும்‌ நெரிந்தன. அகல்‌ அரும்‌ பரவை - அகன்ற கடத்தற்கரிய கடல்‌, அரற்றுறு குரல ஆகி - கூவிளியுடையனவாய்‌. பகல்‌ -சூரியன்‌. கரப்ப- மறைய.)

3. அனுமன் கால் பதிந்து மலைகள் அழுந்தியதால், வலிமையான யானைகள் செவிகள் தாழ்த்தி, முதுகைக் குறுக்கி , தள்ளாடிய கால்களுடன், வானத்தை நோக்கி எழுந்த வால்களுடன், மேகம் போன்ற உடல்களுடன் , அருகே நின்ற பெண்  யானைகளுடன் மரங்கள் சுற்றி அச்சத்தால் பிளிறின.  

மொய்‌ உறு செவிகள்‌ தாழ்ந்து முதுகுஉற, முறை கால்‌ தள்ள, 
மை உறு விசும்பின்‌ ஊடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்‌
மெய்‌ உறத்‌ தழீஇய மெல்‌என்‌ பிடியொடும்‌, வெருவ லோடும்‌,
கை உற மரங்கள்‌ சுற்றிப்‌ பிளிறின களிநல்‌ யானை !

(ொய்‌- வலிமை. .மஞ்சின்மெய்-மேகம் போன்ற உடல்  .தழீஇய-அருகில்.பிடி -பெண்யானை. )

4. அனுமன் கால் பதிந்து, கீழே இருந்த மலைச் சிகரம் அதன் முதுகில் பொடி பட நொறுங்கிய வேளையில், உடலில் மயிர் முளைக்காத, கண்கள் திறவாத தன் குட்டிகளைத் வாயில் கவ்வியவாறு புலிகள் ஓடின.  

பொன்பிறழ்‌ சிமையக்‌ கோடூ பொடி உறப்‌, பொறியும்‌ சிந்த, 

மின்பிறழ்‌ குடுமிக்‌ குன்றம்‌ வெரிந்‌ உற நெரியும்‌ வேலை,

புன்புற மயிரும்‌ பூவா, கண்புலம்‌ புறத்து நாறா, 

வன்பறழ்‌ வாயில்‌ கெளவி, வல்லியம்‌ இரிந்த மாதோ !

(சிமையக்கோடு - சிகரமாகிய உச்சி. குடுமி - உசீசி. வெரிந்‌ - முதுகு, பறழ்-குட்டி. வல்லியம்-புலி.)


5. அனுமன் கால் பதிந்து, நட்சத்திரம், சூரிய சந்திரர்கள், மேகம் தவிர எல்லாம் உள்ளே அழுந்தின. மலை பிளந்து உள்ளே செல்வதும் , அதன் மேல் அனுமன் நிற்பதும், குமிழி பொங்கும் கடலில் மூழ்கும் பாய்மரக் கப்பல் போல் இருந்தது. அனுமன் பாய்மரக் கொடி போல் நொறுங்கும் மலை மேலிருந்தான்.

தாரகை, சுடர்கள்‌, மேகம்‌, என்று இவை தவிரத்‌ தாழ்ந்து, 

பாரிடை அழுந்து கின்ற படர்‌ நெடும்‌ பனி மாக்‌ குன்றம்‌, 

கூர்‌ உகிர்க்‌ குவவுத்‌ தோளான்‌ கூம்பு எனக்‌, குமிழி பொங்க, 

ஆர்கலி அழுவத்து ஆழும்‌ கலம்‌ எனல்‌ ஆயிற்று அன்றே! 

(தாரகை-நட்சத்திரம். கூம்பு-பாய்மரம். கலம்-கப்பல் . )

இதில் தெரிக்கும் உவமைகளே நம் முன் இந்தக் காட்சியைக் கொண்டு வந்து காட்டுகின்றன. உவமை என்பது படைப்பின் மிகப் பெரிய ஆயுதம் என நினைக்கிறேன். மாபெரும் படைப்பாளிகள் நாம் சிந்தித்திராத உவமைகளைத் தெறித்த வண்ணம் இருப்பார்கள்.

அனுமன் இங்கு இவ்வளவு விளைவுகளின் பின் பறந்துவிடுகிறார். கண நேரத்தை கம்பர் விரித்து சொல்லி இருக்கிறார்.ஆனால் அனுமன்  அப்படியே புறப்பட யோசித்து,  நின்று கொண்டே இருந்தால் என்னவாகும்.  இப்படி ஒருவர் இப்போது நம் மேல் நிற்கிறார், என்ன செய்வது...


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...