Skip to main content

கம்பராமாயணம் - 2 - புது வெள்ளம்





ஸ்ரீ குழந்தையாக, ஒரு இரண்டு மூன்று வயது இருக்கும் போது அவர் அழுவதைப் பார்ப்பது அவர் எனக்கு எப்போதுமே  அலுக்காது. வசதியாக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக கோர்த்தபடி, கழுத்தை சிறிது வான் நோக்கி உயர்த்தி , உயர்ந்த ஒரு பிரார்த்தனை போல்  அழுவான். எதோ ஒரு நிமிடத்தில் முழு மூச்சை உள் வாங்கி, பலத்தையெல்லாம் திரட்டி, கைகளை அழுத்தி, கண்ணில் உள்ளிருக்கும் தண்ணீரை எல்லாம் வெளியில் பிதுக்கி கொண்டு வருவார். சத்தமும் பெரிதாக வரும்படி செய்வார். இந்த இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நின்று பார்ப்பார். முடிவில் அந்த உயர் அலைவரிசையில் இருந்து படியில்  இறங்குவது போல சத்தமே இல்லாமல் கீழே இறங்குவார் , மலையில் நீயூட்ரலில் இறங்கும் ஒரு ஜீப் போல. பின்னர் ஒரு இடத்தில் டிரைவர் கியர் போடும் போது விம்மும் வண்டி போல் விம்மி திரும்பவும் சம தளத்தில் ஆரம்பிப்பார். மூக்கில் இருந்து வரும் நீரை பிடிக்க நாக்கை ரெடியாக வைத்தே இருப்பார். ஒன்னும் முடியாத நேரத்தில் எழுந்து நடந்தபடியே கொஞ்சம் அழுது பார்ப்பார். முடிவில் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து , ஸ்தம்பித்து , அழுகையை மறந்து விடுவார்.

போன வாரம் இதே குழுவின் ஒருவர், முதல் பிறந்த நாள். புதுசாய் என்னைப் பார்த்ததும் அழுவார் என நினைத்தேன். காற்று தடை பட்டு, புழுக்கம் அதிகரித்தது. ஆனால் , ஒரு சிறு காற்று , மழை நகர்ந்தது. மேஜையில் இருந்து ஒரு பிஸ்கட்டை நீட்டினேன். மாமாவின் தோளில் இருந்தார். வாங்க மறுத்தார். இன்னொரு முறை கொடுத்தேன். தட்டையே தூக்கி நீட்டினேன். ஒன்றைத் தானே  எடுத்துக் கொண்டார். ஒரு ஆளை சமாளித்து விட்டார். 

மங்களூர் சென்றபோது நடந்து கொண்டே இருந்தார்கள். சிறுவன் ஸ்ரீயை அப்பாவும் அம்மாவும் மாறி மாறி தூக்கியபடி வந்தார்கள். ஒரு தெரு முனையைக் கண்டதும் திடீரென்று கடலைக் காண நேர்ந்தது.இவ்வளவு பெரிய ரூம், சுவரை அவர் கண்டதில்லை. தண்ணீர் இப்படி தொடர்ந்து எழுந்தபடியே,  வெளியே துரத்தி விரட்டுவதையும் அவர் அறிந்ததில்லை. கண்ணிலாதவன் யானை தடவுவது என்று சொல்கிறார்கள். எல்லாமும் ஒரே மாதிரி இருக்கும் இந்த யானை , பார்த்தாலும் அறிய முடியாது. இறுதியில் escalate பண்ண முடிவு செய்தார். பீச் மணலில் யாராவது கால் வைத்தால் விடாமல் அழுவது, வெளியேறினால் நிறுத்திவிடுவது. அன்று முழுதும் அதை செய்து சாதித்தார். 

இங்கு  புதியவருக்கு சிறு செடிகளைப் பார்த்துப் பழக்கம் இருக்கலாம். ஓரிரு பூக்கள்,  சின்ன இலைகள் இவர் கண்ணுள் அடங்கிவிடும். திடீரென்று காட்டைக் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வது. அதுவும் ஆட்களால் மட்டுமேயான காடு. தொட்டிபோல் இருக்கும் சேர்களில் அமர்கிறார்கள், திரும்ப எழுகிறார்கள், எதோ தங்களுக்குள் பேசுகிறார்கள்.திடீரென்று நம்மிடம் நேரே வருகிறார்கள், தொடுகிறார்கள், சிரிக்கிறார்கள், கடைசியில் ஆளை பறித்துக் கொண்டுபோக முயற்சிக்கிறார்கள். மேலும், கீழே இருந்து மேலும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இவரும் கடைசிக்  காயை நகர்த்த முடிவு செய்தார்.  மேடையில் யாராவது தூக்கியபடி கால் வைத்தால் அழுவது, பின் பக்கம் சாப்பிடும் இடத்திற்கு போனால் நிறுத்தி விடுவது. 

இந்த வகை அழுகை XXL நீளம், அல்லது டெஸ்ட் மேட்ச் போல் நாள் முழுதும் விளையாடி முடித்து, அடுத்த நாளும் விளையாடுவது. நாட்களை எண்ணினால் வெல்ல முடியாது. நோக்கம் விளையாடுவது ஒன்றே.

கம்பனின் இந்தப் பாட்டுதான் நினைவில் வந்தது (கம்பன் விழா உரை 2018, ஜெ ).

'கண்களில் ஆறாக பெருகிய தண்ணீர் ,  குங்குமத்தையும் , சந்தனத்தையும் சேறாக கலக்கி கரைத்து குழம்பாக்கி, மார்பில் அணிந்த மாலையின் முத்து மாலையின் முத்துக்களை பிய்த்து சேர்த்துக்கொண்டு, மார்பில் இருந்து கீழிறங்கி  , அணிந்து இருந்த அரைஞாண் கயிறுகளின் ஊடாக கடலில் கலந்தது. '  ராமன் காடு செல்லும் போது நகரில் உள்ளவர்கள் பட்ட துயரத்தை சொல்வது.

'திடர் உடை குங்கும சேறும் சாந்தமும்

இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன

மிடை முலை குவடு ஒரீஇ மேகலை தடம்

கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ'

எல்லாம் முடிந்து எல்லோரும் ஒரு வழியாக கலைந்து சென்ற பின் , இவர் கூட்டத்தைச்  சேர்ந்த , இவருக்கு தெரிந்தவர்கள் நாலைந்து பேர் வந்தனர்.ஒரு சிறு அண்ணன் , அவர் தான் மல்லாந்து விழாமலே இவரை இரு தோள்களுக்குக் கீழ் கைகளை  கொடுத்துத்  தூக்கினார். இவர் முழித்த வண்ணம், சிரித்த வண்ணம் இருந்தார். மற்றொருவர் இவர் முதுகில் ஏறி அமர்ந்தார். கன்னம் , முடியைப் பிடித்து குலுக்கினார்கள். ஒரு சிறு அக்கா , சமநிலை குலையாமல் எப்படியோ, சைடு பையில் பேப்பர் கசக்கி சொருகுவது போல், இவரை இடுப்பில் தூக்கி வைத்தார், இவர் ஒரு சிறு நொடிகளில் வழுக்கி கீழே இறங்கினார். இவர் அப்புறம் சிரித்த வண்ணமே இருந்தார். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...