Skip to main content

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம். 

ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலமாகவே இருந்துள்ளது. இடைவிடாத பெரும் படையெடுப்புகளின் வழியாகவோ, அல்லது  படையெடுப்புகளில் இருந்து காக்கும் கோட்டையாகவோ பெரும்பகுதி வரலாற்றில் பெங்களூரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அன்றைய காவேரி , துங்கபத்திரா, கிருஷ்ணா நதி நகரங்களை  இணைக்கும் வழியாகவே இருந்திருக்கிறது. 

ஓரிரு வருடங்களுக்குள், நமக்கே நாம் இங்குதான் இருந்தோமா என்று எண்ணத்தக்க அளவு மாறிவிடும் இங்கு, வரலாற்றைத் தேடுவது என்பது துப்பறியும் முயற்சி தான். 

சொல்ல வேண்டியதில்லை, வரலாற்றுத் தேடல் என்பது இன்று எஞ்சியிருக்கும் கோவில்களின் வழியே தான் முடியும்.

சில்க் போர்டு மேம்பால அடியில் உள்ளே வரும்போது ,  இடதுபுறம் பிரியும் சாலை பேகுர் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் சென்றால் 4 கீமீ தொலைவில் வரும் ஊருக்கு பேகுர் என்று பெயர். எனக்கெல்லாம் பெங்களூர் என்பது முன்பு ஒன்றே, இருக்கும் எல்லா இடமும் பெங்களூர்தான். அப்புறம் ஒரு ஒரு பத்து இருபது ஊர் சேர்ந்தது என்று நினைத்துக் கொள்வதுண்டு. மேலும் கடைகளில் தொங்கும் போர்டுகளை கண்டுகொள்ளாவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான், இல்லையா ?. 

பேகுர் கோவில் தான் இங்கிருக்கும் கோவில்களில் பழமையானது. இங்கிருக்கும் கோவில் கல்வெட்டுகளில்தான் பெங்களூர் என்னும் பெயர் முதலில் வந்திருக்கிறது. ஒரு நடுகல்லில் 'பட்டணச்செட்டி, நாகத்தரின் படையில், பெங்களூர் போரில் இறந்ததாகப்'  பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில் நாகத்தரின் வீரமும், கொடையும் சொல்லப்படுகிறது. கர்ணனைப் போல் உண்மையானவன் என்கிறது. இவர் தான் இந்த சோமநாதர் கோவிலைக் காட்டினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஊரில் ஒரு சமண பாசதி உள்ளது.

இவர் ஒரு மேற்கு கங்கர்கள் வழி வந்த சிற்றரசர். மேற்கு கங்கர்கள் முதலில் கோலாரையும் , பின்னர் தலைக்காட்டையும் தலைநகராகக் கொண்டு காவேரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்கள். 

மைசூர் மாகாணம் என்று அறியப்பட்ட இப்பகுதியின் மிகப் பிந்திய வரலாறு குப்தர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. சந்திரகுப்த மௌரியர் அலெக்சாண்டர் இந்திய  படையெடுப்பின்போது அவர் படையில் பணியாற்றியிருக்கிறார். இது கி . மு மூன்றாம் நூற்றாண்டு. அவருடன் ஏற்பட்ட பிணக்கத்தின் காரணமாக தன் கூட்டாளிகளோடு வெளியேறி மகதத்தை நிறுவுகிறார். இன்றைய பீகார் பாட்னா  , பாடலிபுத்திரம் தலைநகர். அலெக்சாண்டர் இறந்தபின் அலெக்சாண்டர் வென்ற இந்தியப்பகுதிகள், செலூகஸ் நிகேதர் கீழ் வருகின்றன. இவர் இன்றைய சிரிய (பாபிலோனிய) அரசர். இவர் இந்தியாவில் மறுமுறை படை கொண்டு வரும்போது சந்திரகுப்தரிடம் தோற்று சமரசம் செய்து கொள்கிறார். கிரேக்கர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறார்கள். சமரச சமன்பாட்டில், செலூகஸ் நிகேதர் 500 யானைகள்,  சந்திரகுப்தரின் தன் மகளை கொடுத்துத்  திரும்பி செல்கிறார். மெகஸ்தனிஸ் சந்திரகுப்தர் அவையில் தூதுவராக அமர்கிறார். இவர் இந்தியாவைச் சுற்றி அலைந்து , அனுபவங்களை எழுதியிருக்கிறார்.   சந்திரகுப்தர் மகதத்தை இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்.

இறுதியில் தன் மகன் பிந்துசாரரரிடம் பொறுப்பை விட்டு , ஆசிரியர் பத்ராபாஹு சொல்படி உஜ்ஜைனியில் இருந்து தென்னோக்கி மக்களுடன் கிளம்புகிறார். காரணம், பத்ராபாஹு முன்கூட்டியே கணிக்கும் பஞ்சம். தாள முடியாத , பன்னிரண்டு ஆண்டுகள் நீடிக்கும் பஞ்சம் வருவதாகச் சொல்லி சீடருடன், வெளியேறுகிறார். மிக நீண்ட பயணம். பத்ராபாஹு வாழ்வின் இறுதியில் இருப்பதாகச் சொல்லி , பயணம் இனி முடியாது, வடக்கிருந்து உயிர் மாய்துகொள்வது என்று முடிவெடுக்கிறார். இவர் சந்திரகுப்தருடன் நின்ற இடம் சிரவண பெலகொலா. இதுவே சந்திரகிரி என்று அழைக்கப்படுகிறது. 60 அடி உயரமுள்ள கோமதேஸ்வரர்  ஒரே கல்  சிலை உள்ளது. பாஹுபலி என்று சொல்கிறார்கள். பல மைல்களுக்கு, எங்கு திரும்பினாலும் , நம்மையே கண்களால் தொடர்ந்து கொண்டு இருப்பது போல் எண்ண வைக்கும். இக்கோவிலை முதலில் கட்டியவர் மவுரிய வழி வந்த அசோகர் என்கிறார்கள். இன்றிருக்கும் சிலை கங்க மன்னர்களால் நிறுவப்பட்டது. சமண தீர்த்தங்கரரான ரிஷப தேவர் என்பவரின் மகன் பாஹுபலி. இவருக்கு பரதன் என்றொரு அண்ணன். அண்ணன் தம்பிக்கு நாட்டை பங்கிட்டு , அப்பா காடேகி துறவியாகிறார். அண்ணன் , தம்பியின் நாட்டை அபகரிக்க நினைக்கிறான். தம்பி பலசாலி, பல பேர் போரில் செத்தொழிவதைவிட இருவரும் மற்போரிடலாம் என்கிறான். மற்போரின் முடிவில் வென்றவர், தோற்றவரை மிச்சமில்லாமல் கொல்ல வேண்டும். அண்ணனை வென்று கொல்லும் தருவாயில் மயிரை கிள்ளி கீழே எறிந்து , நாட்டை அண்ணனுக்கு அளிக்கிறான். ரிஷப தேவரை நாடி துறவியாகிறான். அவர் நின்று தவம் செய்து முக்தி அடைந்த இடமே இது என்று படித்திருக்கிறேன். சிலையில் அவர் கால்களை மூடி வளர்ந்திருக்கும் புற்றுக்களும், பின்னி ஓடும் பாம்புகளும், என்னை ஒரு கணம் துணுக்குறச் செய்தது ஞாபகம் வருகிறது.      

இவர் நெடுங்காலம் நின்று தவம் செய்து முக்தி கிட்டாமல் இருந்ததை எண்ணி கவலை கொண்ட அவர் தங்கையர் ஆதி  நாதரிடம் வேண்டினர். அண்ணன் யானை மீதேறி ஏன் தவம் செய்கிறார் என்று கனவில் ஆதிநாதர் கேட்கிறார். கீழிறங்கினால் முக்திகொள்வார் என்று சொல்கிறார். இவர்கள் அண்ணனிடம் சென்று சொல்கிறார்கள். கடும் தவம் செய்கிறோம் என்ற அகந்தையே முக்தி வழியை அடைக்கிறது , என்று உணர்ந்து பின் முக்தியடைந்தார் என்று படித்திருக்கிறேன். 

இந்த மலைக்கு களப்ரபா என்றொரு பெயர் குறிப்பிடப்படுகிறது. 

கங்க மன்னர் ரசமல்லரின் அமைச்சராக இருந்த சவுண்டராய என்பவரால் கட்டப் பட்டது. ஏறத்தாழ பேகுர் கோவிலும் இக்காலத்திற்குட்பட்டது. கங்க மன்னரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரரசரால் எழுப்பப்பட்டது. 3-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை கங்கர்கள் காலம் வரையறுக்கப் படுகிறது. முதலில் கோலாரையும் பின் தலைக்காட்டையும் தலைநகராய் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். சமண மதத்தை ஆதரித்தவர்கள். இவர்கள்தான் தமிழகப்பகுதிகளை ஆண்ட களப்பிரர்களா என்பது ஆய்வுக்கு உரியது என்கிறார் ஜெயமோகன்.







மீண்டும் பேகுர் . இக்கோவிலில் உள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு , கீழே பக்கவாட்டில் எதிரெதிரே கை கூப்பியவாறு , ஒரு சோழ மன்னரின் சிலையும் , எதிர்புறம் ராணியின் சிலையும் உள்ளன. இது முதலாம் குலோத்துங்கனின் சிலை என்கிறார்கள். ராஜேந்திர சோழனே சாளுக்கியர்களை வென்று இப்பகுதிகளை முழுவதுமாக தன் ஆளுகைக்கு உள்ளாக்கியவர். முதலாம் குலோத்துங்கன் 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர். இவர் ராஜராஜ சோழனின் மகள் குந்தவையின் வழி வந்த கீழைச் சாளுக்கிய மண உறவில் பிறந்தவர். மேலைச்சாளுக்கியர்களுடன் இவர் போரிட்டுக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. முதலில் வென்றாலும் , பின்னர் சிறுகச் சிறுக சாளுக்கியர்களுக்கும் , ஹொய்சளர்களுக்கும் கங்காவதியை இவர் இழக்க வேண்டியதாயிற்று.

இக்கோவில் தூண்கள் ஒரு சில நம் பக்கம் காணக்கிடைக்கும் நான்கோன . அறுகோண  பட்டைத் தூண்களாகவும் , மற்றும் சில ஹொய்சாள உருளைத்தூண்கள். பழமையான கல் வேலைப்பாடுகள். மிகத் தாழ்ந்த கூரை, மிகப்பெரிய கற்களால் ஆனது. ஹொய்சாள திரிகூடாசல அமைப்பில் மூன்று விமானங்கள் இணைந்த கோவில். இப்போது வெளிப்பிரகாரத்தில் இன்னும் இரண்டு சன்னதிகள் காணக்கிடைக்கின்றன. விமானங்கள் இரண்டு திராவிடபாணி, ஒன்று வேசரம், யாவும் ஒரே தளம். பஞ்சலிங்கேஸ்வரர் என்று இக்கோவில் இப்போது சொல்லப்படுகிறது. வெளியே பரந்துபட்ட  அழகான ஏரி , தென்னை மரங்கள் ஒன்றிரண்டு. கோவிலில் யாரும் அதிகமில்லை.இன்னும் இரு  பக்க வாயில்களிலும் கோபுரங்கள் கட்டிக்கொண்ண்டிருக்கிறார்கள். 

மலைபோல் வண்ண  மலர்கள் குவித்து, ஓரிருவர் நீள ஊசியில் கோர்த்து மாலையாய் ஆக்கி கொண்டிருந்தார்கள். மாலை மறுபுறம் பதுங்கி படமெடுக்கும் நாகம் போல் தோன்றியது. ஊசியில் பூவைக் கோர்ப்பவரின் கை ஒவ்வொருமுறையும் , ஓரிருமுறை தயங்கி, முனை விஷம் தவிர்த்து , ஒரு பூவைக் கோர்த்தது. ஒரு கொத்தை உள்ளே நுழைத்ததும் , மொத்த மாலையும்  , நாகம் போல் ஒருமுறை எழுந்து அடங்கியது.

வெளியே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிரசாதம் முடிந்திருந்தது. திரும்பி உள்ளே சென்று தேடிப்பார்த்தேன். எல்லோரும் கூடிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கொடுக்க யாரும் இருக்கவில்லை. ஒரு கோவில் பணியாளர், குருக்களுக்கு ஓயாமல் கத்தி வழி அமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். 

ஒரு பத்து கிலோமீட்டருக்குள் சட்டென்று மாறும் முகங்கள், ஒரு கால் மடிக்கப்பட்ட கால்ச்சட்டைகள் , கழுத்தில் மாலையாய் போடப்பட்டிருக்கும்  துண்டுகள், ரிப்பன் அணிந்த சடைகள், ஓயாமல் கடக்கும் டிவிஎஸ் 50கள்.   நதிபோல் சாலை, வீடு வரும் வரை மீண்டும் மாறும் மாறிக்கொண்டே வரும் முகங்கள்.









Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...