விண்ணில் ஒரு பறவை
நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது.
அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார்.
சாரு அவர்கள் ஜப்பானைச் சான்றாக காட்டி , வாழ்வின் வெறுமை தற்கொலையிலேயே முடியும் என்றார். யாரும் படிப்பதில்லை என்றார். மூன்று கவிதைகளை வாசித்துக் காட்டினார். பரவசமே தேவதேவன் கவிதைகள் என்றார். உண்மையில் கீழ்வரும் இரு கவிதைகளும் பரவசமே.
நெகிழிச் சுருள் :
தன் பணி முடிந்து
தவிப்புடனும் கொண்டாட்டத்துடனும்
அழகாய்த் தொங்கி
ஆடிக் கொண்டிருந்தது நெகிழி
எங்காவது சென்றமர்ந்து - அது
தன் இறுதி இலக்கை அடையட்டும்.
அவன் நெருங்கி வந்து உதவிப்
பறக்கவிட்டபோதும்
அது அழகாய்த்தான் ஆடிப்
பறந்து கொண்டிருந்தது வானில்
எங்காவது சென்றமர்ந்து - அது
தன் இறுதி இலக்கை அடையட்டும்.
எத்தகைய ஒரு அரிய செயல் :
அவன் தன் நடைவழியில்
பசிய இலைகளுக்கு நடுவே
சிக்கிக் கொண்டிருந்த ஒரு உதிர்சருகை
அணைத்தெடுத்து நிலத்தில் விட்டான்
எத்தகைய ஒரு அரிய செயல்
இவ்வுலகெலாம் மகிழ்ந்து நிரைகொள்ள !!
நேற்று காலை ஊருக்கு வெளியே இருக்கும் 400 வருட ஆல மரத்தை பார்க்கச் சென்றிருந்தோம். NICE நெடுஞ்சாலை முடிந்து , உள்ளே சென்றதும் சட்டென்று நிலவெளி மாறியது. யாரும் அதிகம் இல்லை, ஒரு ஏழு எட்டு கீமீ தொலைவிற்கு. வழிநெடுக தோட்டங்கள், நர்சரிகள்.பாக்கெட்களில் , தொட்டிகளில் வண்ணப் பூக்கள். பசி அடக்க ஒரு டீ தேடிக்கொண்டிருந்தேன். அழகாய் பெயர் எழுதப் பட்டிருந்த கடைகள், ஆனால் பூட்டப் பட்டிருந்தன. மீண்டும் திறக்குமா தெரியவில்லை, ஏன் மூடினார்கள் தெரியவில்லை . ஒரு இடத்தில் நிறுத்தினேன். இதுவும் புதுக்கடை தான். தரை ஓடுகள் மிதிபடாமல் பளபளத்தன. திறந்த வெளிக்காற்றை மீறி ஒரு மெல்லிய பெயிண்ட் வாசனை இன்னும் வந்தது . தேநீர் பற்றிய வசனங்கள் சுவரெங்கும் இருந்தன - ' கப் ஆப் டீ இஸ் கப் ஆப் பீஸ் ' . ஒரு 30 வயதிற்கு உள்ளிருக்கும் இளைஞர் , சிவப்பாய், உயரமாய் மிக அழகாய்த் தெரிந்தார். சதுரமாய் தெரிந்த அடுமனைக்குள் இரு பெரும் பாத்திரங்களில் , ஒன்றில் இருந்து பால் எடுத்து தூள் சேர்த்து , இஞ்சி தேடி இடிக்க ஆரம்பித்தார். அதற்குள் அந்த சிறிய அறையில் , அவர் இளம் மனைவி அடுப்பு வரை சென்று மறைந்தார். இந்த இடத்தில் இந்த அண்டா பால் போணியாய் முடியுமா தெரியவில்லை. இதற்குள் டீ வந்தது. டீயில் சக்கரை போட மறந்து விட்டார். டீக்கும் பிஸ்கட்டுக்கும் சேர்த்து 100 ரூபாய் கொடுத்தேன். சில்லறை தேடி பக்கத்துக்கு பாங்குக்கு செல்வதாக சொன்னார். அப்புறம் 50 ரூபாய் தேடிக் கொடுத்தேன்.மீதம் சில்லறை 5 ரூபாய் குறைந்தது . வீட்டுக்காரர் டீ 10 ரூபாய் என்று சொல்லியிருந்தார் , மனைவி 15 ரூபாய், அவர் தவறாகச் சொல்லியிருக்கிறார் என்றார். இவர் எல்லாம் சரி செய்து விடுவார், மேலும் கடவுள் காப்பார் என்று நினைத்தேன். இங்கு இன்று டீ குடிக்க நிறுத்தியது இறைவன் செயல் என நினைத்துக்கொண்டேன். மேலே சொன்ன கவிதையை சாயங்காலம் கேட்டபோதும் அப்படித்தான் தோன்றியது.
பின்னர் தேவதேவன் பேசினார். இவர் பேச்சைக் கேட்கவே நான் சென்றிருந்தேன். ஜெயமோகன் இவரை மஹாகவி என்று எழுதியுள்ளார். விழாக்களில் ஒரு சிலமுறை பார்த்திருக்கிறேன். மற்றவர் பேசும்போது, எவ்வித முகச்சலனமும் இல்லாமலே, கேட்டவாறு அமர்ந்திருந்தார். கவிதை என்றால் என்ன என்று கேட்டுக்கொண்டார். கலையின் உச்சம் கவிதை என்று சொன்னார். எந்தவித உச்சகட்ட அழகையும் கவிதை மாதிரி என்று சொல்வதை உதாரணம் கூறினார். தண்ணீர் இல்லாமல் கூட இருந்து விடலாம், கவிதை இல்லாமல் வாழ முடியாது என்றார். தற்கொலையின் விளிம்பில் இருக்கும் ஒருவன், ஒலிக்கும் போனை எடுத்ததும், எதிர்முனை 'எப்படி இருக்கீங்க' என்றதும் அவர் 'நல்லா இருக்கேன்' என்று சொன்னது ஒரு கவிதைத் தருணம். கவிஞன் என்பவன் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது அவன் எழுதுவது கவிதையாகும் என்று பேசினார். பலமுறை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். அவர்போல் ஒரு பண்பட்ட நிலத்தில் இருந்து எழும் எந்த விதையும் மரமே ஆகும். மண் பண்பட மழை , காற்று , நெருப்பு , கால் மிதி உள்பட எல்லாம் பட வேண்டும். அதிலிருந்து மேலே எழ வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலே கவிதை இருக்கிறது என்றார். வாழத் தெரியவில்லை என்றால் கவிதையும் எழுத முடியாது என்றார். ஒரு இடத்தில் அடுத்து வரி வராமல் பேச்சு நின்றது. மிக மிக இயல்பாய், கோர்வை மறந்து பேச்சு எங்கோ சென்று விட்டது, இப்போது நினைவில் இல்லை என்று சொல்லி, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டதாக கூறிச் சென்று அமர்ந்தார்.
வாங்கிய நடை மண்டலம் என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள பின்வரும் இக்கவிதை பரவசம் கொள்ளச் செய்தது.
இப்போது வேலை பார்க்கும் அலுவலகத்தின் எட்டாம் தளத்தில் இருந்து Cubbon பார்க் ஒரு மாபெரும் காடு போல் தெரியும். காலையில் புறாக்கள் மணிக்கணக்கில் கூட்டமாய் உள்ளே பறந்து வெளியே வருவதுமாய் ஸ்டார்லிங்ஸ் செய்யும். அடிக்கடி கேட்கும் இந்த பாரதியார் பாடல் நினைவு வரும். ஆம் வானவளையம்...
https://www.youtube.com/watch?v=WSfMPIkhBsw
"மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
...
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
...
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்....
விண்ணில் ஒரு பறவை :
உச்சிவானில்
சிறகடிக்கும் தேவையின்றி
வட்டமிட்டுக் கொண்டிருந்தது
ஒரு பறவை,
உள்வானின் சிறகடிப்பில்
வட்டம் கண்டுகொண்டதால் !
அசையாது நீந்திக்கொண்டிருந்த அது
அண்டத்தின் ரகசியங்கள் அத்தனையும் அறிந்ததுவாய் !
உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்குமான இடத்தை
அத்துணை சிறிதே எடுத்தபடி! உயிர்வாழ்தல் தவிர
தன மய்யம் வளர்க்கும்
அத்தனை தீமைகளையும் விலக்கியபடி !
சிறு முடிச்சுடன் தொங்கும்நீள் நெடுங் கருங்கூந்தல் :
ஒரு பணியும் செய்யாதிருந்துகொண்டேஎத்துணை அழகாக இருக்கிறது !பணி செய்யாமலே பணியோடுபிரியாமல் இணைந்திருப்பதின் அழகு !


Comments
Post a Comment