https://muthuvishwanathan.blogspot.com/2022/12/blog-post_28.html
மெது ஓட்டம் பற்றி மேலே இருக்கும் முந்தய பதிவு எழுதியபின் , 2023 ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து முறை வீட்டிற்கும் கர்மேலராம் ரயில்வே பாலத்திற்கும் 10கே ஓடிப்பார்த்தேன். இது முடிவில் ஒரு மாதிரி எதிர் திசையில் முடிந்தது. விவரம் கீழே. இப்போது இன்னொரு ஒரு புதிய துவக்கம். அதன் விவரம் அதற்கும் கீழே.
Nike ஆப் கோச்சுகள் காதில் பேசிக்கொண்டே வருவார்கள். நமக்கு முதல் எட்டு எடுத்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே தெரிவதால் , அறியாமலே கால் தயங்கும். கோச் காதில் தன் குலமுறைமைகள் எல்லாம் சொல்லி, (ஒலிம்பிக் பதக்கம் உட்பட), 'முதல் அடியே வெல்லும் அடி ; வென்றவர்கள் எல்லாம் முதல் அடி எடுத்து வைத்தவர்களே' என்பார். நீங்கள் ஆப்பை ஆன் செய்து முதல் அடி எடுத்தது உங்கள் எண்ணத்தை காட்டுகிறது என்பார். நம் கால் இன்னும் நகராது. அப்புறம் நமக்குள் ஒரு பெரியவர் 'என்னப்பா இவ்வளவு சொல்றாரே..இன்னுமா விளங்கள' என்பார் . நாமே நினைக்காத ஒரு கணம் கால் நம்மை மீறிச் செல்லும். சரி ஒரு வழியாக கட்டு அவிழ்ந்தது.மெல்லிய சூடு நெற்றியில் படர ஆரம்பிக்கிறது. இதமான குளிர் அதை வாரி எடுத்துக் கொள்கிறது.அப்புறம் கால் விரல்களும், மொளிகளும், முட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மெல்லிய வலியால் வாசக்கதவை திறந்து , 'என்னப்பா ...இது என்ன இந்த நேரத்தில...எம்புட்டுதான் சொல்றது ...மள கிள பெய்யுதா...இல்ல யாரும் ... சொன்னாத்தான் கேக்கானா ....இப்ப என்ன செய்யணும் சொல்லு.. ' துண்டுகளை எடுத்துத் தோளில் போட்டுக்கொள்ளும்...வாரி முடித்து கொண்டைகளை முடித்துக்கொள்ளும்..
கோச் இப்போது ஒரு கிலோமீட்டர் தாண்டி திரும்ப வருவதாக சொல்லி மறைவார். பாடல் காற்றில் நீங்கி , எங்கோ மலையில் தவழ்ந்து. பின் செவிப்பறையில் முட்டும்.மனம் கணக்குகளை ஆரம்பிக்கும். இது முதல் பாடல். பத்து கிலோமீட்டர் என்பது பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல் தூரம். போக ஆறு பாடல், வர ஆறு, நடுவில் ஒரு தேநீர்.
இதற்க்கு மேல் அடுக்கில் மனதில் தூரக் கணக்குகள். டோட்டல் மால் வீட்டில் இருந்து 1கிமீ, விப்ரோ அலுவலகம் இரண்டாவது, அப்புறம் ஒரு சீரான மேடு வரும் அல்லவா ? என்ன பிளான்...உள்ளிருக்கும் மற்றொரு குரல், அடுத்த அடியே என் குறிக்கோள். வேறொன்றும் இல்லை , கொஞ்சம் விலகு. மனது பாட்டில் ஏறி அமரும்.
'புள்ளினங்காள்... ஓ ...புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்.. '
புள்ளினங்காள் ஓ புள்ளினங்காள்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்..'
மின்கம்பியில் மலர்ச்சரமாய் கோர்த்த புறாக்கள். ஏரியின் நடுவில் இருக்கும் பட்ட மரத்தில் சென்று அமரும் இரு கொக்குகள். திடீரென கழுத்து வெளியே காட்டி பின் கணத்தில் உள்ளிழுக்கும் , நீரின் அமைதியைக் கலைக்கும் ஓர் நீர்க்காகம். வானில் வட்டமடிக்கும் பருந்துகள். சிறகுகளை சால்வைபோல் தூக்கி உலரவைக்கும் இன்னொரு நீர்க்காகம்.. பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
தள்ளுவண்டியில் குவிந்து கிடக்கும் நாவற்பழங்கள்...குவிக்க வைக்கப்பட்டிருக்கும் கண்கள். அருகில் நட்சத்திர பழங்கள். அதன் கீழே சீத்தாபழங்கள். பழுத்துவிட்ட கல் .
ஒரு எலி சாக்கடை இடைவெளியிலிருந்து எழுந்து, மேலே வைக்கப்பட்டிருக்கும் பேக்கரி குப்பைத் தொட்டியின் உதிர்ந்த மிச்சத்தில் எதையோ எடுத்து உள்ளே ஓடி மறைந்தது. மீண்டும் கோச் காதில் வந்தார். இரண்டு கிமீ மேல் உள்ளதை ஸ்டெடி பேஸ் என்றார். உடம்பை உற்று நோக்கச்சொன்னார். மூச்சை கவனிக்கச் சொன்னார். ஓடும் உங்களை , எதிர் ஓடி வரும் நீங்கள் பார்த்தால் ரசிப்பீர்களா பரிதாபப் படுவீர்களா என்று கேட்டார். உடனே தொங்கி ஒன்றின் மேல் விழ ஆரம்பித்திருந்த சதைகள் விரைந்து எழுந்து விறைப்பாய் நின்றன. இன்னோர் குரல் இது எவ்வளவு நேரம் என்றது. கோச் அப்புறம் வருவதாக சொல்லி மறைந்தார்.
மீண்டும் காதில் படும் பாடல்
ஆடி மாசக் காத்தடிக்க ...
ஈச்சம் ஓலை பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு ...SPB க்குள் உள்ளிருந்த சண்டியரின் குரல். இதோ எதிர் பார்த்த அடுத்த வரி. வ...ளி அவரா? இதிலும் மனதிற்கு உள்கணக்குகள் உண்டு. பாட்டின் நீளம், எத்தனை பல்லவிகள் , நடுவில் வரும் இசையின் நீளம், இதோ வரும் அடுத்த சிறு மைல்கல், சிறு வெற்றி.
இப்போது சந்திப்பில் குறுக்கே வரும் மனிதர்கள் மனதில் எரிச்சல் மூட்ட ஆரம்பிப்பிப்பார்கள். ஓடும் ஒரு ஆளுக்கு வழி இல்லையா, ஒரு நொடி பொறுக்க மாட்டாரா இந்த கார்காரர் ?. ஒரு சில நொடிகள் நின்ற கால்கள் ...நடந்தால் தான் என்ன. சில்லென்று முகம் தொட்டுப்போகும் காற்று , குணதிசை மாருதம். 'கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்த மாருதம்' - வேர்வைச் சட்டையைக் கிழித்து உடலை முட்டியது. நடைபாதையின் கான்கிரீட் மேலிருக்கும் மணலில் முளைத்திருக்கும் செடியில் சிறு நீல அனிச்சமலர் ஆடி அசைந்தது.
மீண்டும் காதில் கோச். எப்படி இருக்கிறது , எவ்வளவு ஆற்றல் செலவழிகிறது. பத்தில் ஆறு பங்கு செலவழிப்பதே சரி என்றார். போக வேண்டிய தூரம் விஷயம் கிடையாது. அக்கணமே முக்கியம். எதோ ஒரு ஒரு கணத்தில் தூரம் நிகழும். சிரமமில்லாமல் ஆற்றல் செலவவிடுவதே வேண்டும். உடம்பை கூர்ந்து நோக்குங்கள். உங்களை நீங்களே பார்க்கும் வண்ணம் ஓடுங்கள். தலை முன்னிருக்கட்டும். யூ ஆர் ராக்கிங் ...பின்னர் சந்திப்போம்.
இப்போது தொலைவில் மேம்பாலம் கண்ணில் தெரிகிறது. இனி ஒன்றும் பெரிதல்ல. கண்ணில் தெரியும் இலக்கு எளிதே இல்லையா. அதன் பின் அந்தத் தேநீர். பாலில்லை , இன்று எலுமிச்சை. ஒரு வழியாய் ஒரு பக்கம் ஐந்து கிமி புரட்டியாயிற்று.
இன்னொரு பக்கத்திற்கு ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அது ஆரம்பிக்கும் போதே செய்தாகி விட்டது. அது என்னவென்றால் கையில் பணமில்லாமல் ஒரு டீ சில்லறையுடன் கிளம்பி விடுவது. வரும் வழியில் மனம் மாறி பேருந்தில் ஏற வழியில்லை. நடப்பதை விட ஓடி வருவதே மேல். நெருக்கி ஒரு மீட்டிங்கையும் அமைத்தாகிவிட்டது. பின்னர் என்ன செய்ய முடியும் இந்த மனது.
இவ்வாறு ஒரு சில தடவைகள். மதுரையில் பின்னர் ஒரு சாதாரண மெது ஓட்டம். ஊரில் எப்படியோ சின்னம்மை தொற்றியது. இதனால் ஒரு மாத இடைவெளி. பின்னர் ஓடிப் பார்க்கும் போது , மூட்டுகள் வலியெடுத்து இடையில் நிறுத்தவேண்டியதாயிற்று. கால்கள் உடற்பயிற்சியால் சரியாய் வந்தன. இப்போதெல்லாம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு தினங்கள், முப்பது நிமிடத்திற்குள்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி பதிலில் Chi ஓட்டம் பற்றி அறிந்தேன். Danny Dreyer என்பவர் கண்டறிந்த ஒரு ஓட்ட முறை. இவர் ஒரு நீண்டகால மாரத்தான் ஓட்டக்காரர். Tai - chi என்னும் சீன தற்காப்புக்கலையில் இருந்து இதை வடிவமைத்திருக்கிறார். Tai-chi அசைவுகள், உடலை ஒரு துணிபோல் , காற்றில் தவழ விட்டு, காற்றின் போக்கில் உடலைச்செலுத்துவது போல அமைந்துள்ளன.
ஓடும்போது, கம்பியில் கோர்க்கப்பட்ட பஞ்சு போல் என்பது நமது உடலாகும். கம்பி என்பது தலை, முதுகெலும்பு, மூட்டுகள், கால் சேர்ந்தது. நீங்கள் ஓடும்போது ஒரு நிலையில் தரையிலும், மற்றொரு நிலையில் காற்றிலும் இருக்கிறீர்கள். இதுவே மிக வேகமாக ஓட்டத்தில் நிகழ்கிறது. ஓட்ட நிலையில் இருக்கும் போது இந்த கம்பியே அடிப்படையில் உடலைத் தங்குகிறது. பறக்கும் நிலையில் இருக்கும் போது இவையே பஞ்சு போல் லகுவாக இருக்க வேண்டும்.
இயற்கையுடன் இசைந்து ஓடுவது என்பது மற்றொரு விதி. ஈர்ப்பு விசை நமக்கு உதவ வேண்டும். எப்போதும் நடக்கும் போதோ ஓடும்போதோ ஈர்ப்புவிசை நம்மை கீழே வீழ்த்தப் பார்க்கிறது. அதை எதிர்த்து காலின் விசை செலுத்தி நாம் ஓடுகிறோம். இதனால் தான் கால்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இருப்பதிலேயே சிறு எலும்புகள் கால்களிலும் கைகளிலுமே உள்ளன. நம் உடலை ஒரு சாய்ந்த கம்பி போல் வைத்து ஓடும்போது , நம் கீழே சிறிது விழுமாறு செல்கிறோம். இதைக் கால்கள் நிறுத்தி சரி செய்து விழாமல் முன்நகர்த்துகின்றன. இவ்வாறு செய்யும் போது ஈர்ப்பு விசையின் தாக்கம் மூட்டுகளில் குறைகிறது. ஆனால் இதற்க்கு மாறாக , நமது வலுவான வயிற்றுப்பகுதி , பலமாக இருக்க வேண்டும். இங்குதான் விசை ஏறுகிறது. தொப்பைகள் இங்கேயே இருக்கின்றன.முதலில் இதைச் சுற்றியே வலி, கால்களில் குறைந்து தெரிகிறது. வேகம் கூட்ட இன்னும் முன்னால் விழ வேண்டும். இதற்க்கு அவசியம் வயிற்று தசைகளின் பலம்.
மூன்றாவது விஷயம், நாம் ஓடும்போதோ , வேகமாக நடக்கும் போதோ, தரை அதற்க்கு ஈடான விசையை கால் வழியாக உடலில் செலுத்துகிறது. கால்களே இதை முதலில் உணர்கின்றன. இதைத் தவிர்க்க சில விதிகள் உள்ளன. கால்கள் உடலின் பின்னால் இருக்க வேண்டும். பாதங்களை வைத்து இறங்கக் கூடாது. நடுக்காலில் இறங்க வேண்டும். மூன்றாவது, கால்களை வளைத்து ஓட வேண்டும். வளைந்த கால்களில் எதிர் விசை பாயாது. ஆனால் , இதற்கு பயிற்சி அவசியம். குதிகால்களில் பலம் வேண்டும்.
புத்தகம் படித்து, ஆரம்பித்து, இரண்டு வாரங்கள் ஆகின்றன. ஒரு சில நாட்கள் ஓடுவது மறந்து விட்டது போல் இருக்கிறது. புது தசைகளில் புது வலி.


Comments
Post a Comment