வீட்டிற்குள் ஒரு அழுத்தம்
ஒன்றைக் கேட்பது என்பதும் ஒரு கலை தான். கேட்பது என்பது எப்போதும் எனக்கு ஒரு சிக்கல். ஆனால் நமக்கில்லாததை ஒருவாறு கேட்க முடிகிறது. குழந்தைகளுக்கு இந்தத் தடை இருப்பதில்லை. குழந்தைகளில் கொஞ்சம் நாசுக்காக கேட்பது என்பதை பார்ப்பது அரிது. ஸ்ரீ இதை எல்லாம் தாண்டியிருக்கிறார் இப்போது. ஒரு ஆறு ஏழு வயது வரை எதுவுமே கேட்க மாட்டார். இவரது அக்காவை வைத்துப் பார்க்கும் போது , இது எங்கிருந்து வந்தது என்று தோன்றும். ஏதாவது புத்தர் , ரமணர் தோன்றியிருக்கிறாரா என்று நினைத்ததுண்டு. இவருக்கு ரமணர் என்று ரெண்டாவது பெயர் (என்னால் ) போடப்பட்டுள்ளது என்னை மேலும் சிந்திக்க வைத்ததுண்டு. ஆசையெல்லாம் விட்டுவிட்டு பூமியில் இறங்கியிருக்கிறாரோ என்று தோன்றும். எவ்வளவு பெரிய கடைக்குள் சென்றாலும், பொம்மைகள், கார்களின் நடுவே நின்று கொண்டு ' எனக்கு எதும் வேண்டாம்ப்பா ' என்று சொல்லிவிடுவார். ஓட்டலில் யார் என்ன சாப்பிட்டாலும் இவர் இரண்டு இட்டிலி மட்டும் உண்பார். அந்த இனிக்கும் சாம்பார்க்ககவே உண்பார். பூச்சிகள் நழுவி தேனில் விழுந்து இறப்பது போல் , இட்டிலியெல்லாம் சாம்பார் கிண்ணத்தில் மரணம் தழுவும். பின்னர் இவருக்கு இட்டிலி புளிப்பது பிடிபட ஆரம்பித்தது. அவர் அம்மா செய்யும் மிளகாய்ப் பொடி கிடைப்பதில்லை. பின்னர் நெடு நாட்கள் பிளைன் தோசை மட்டுமே சாப்பிடுவார். குறைந்தது இரண்டு பேர் இல்லாமல் இவரால் அந்த தோசையை இன்றும் சாப்பிட முடியாது. ஒரு மலையாள ஒட்டு வீட்டு சாயலில் வந்து நிற்கும் அந்த கூம்பான தோசையை என்ன செய்வது என்பது தெரியாது. உடனே நம்மை அண்ணாந்து பார்ப்பார். நாம் அதைக் கழுத்தை பிடித்து காலை வாரி படுக்க வைத்ததும், 'தேங்க்ஸ் ,சரி விட்டுருப்பா' என்பார்.
இவர் கால்கள் சரிவர நிலத்தில் ஊன்றும் முன்னரே கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்து விட்டார். இவரை வகுப்பில் சேர்க்கும் பொழுது தவழ்ந்து முடித்தவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. சனி ஞாயிறு ஒரு கிரிக்கெட் கிட்டுடன் கிளம்பி விடுவார். வாரம் பூராமும் நினைவூட்டிக்கொண்டே இருப்பார் . பையை நீளவாக்கில் நிற்க வைத்தால் அந்தப் பக்கம் அவர் நிற்பது தெரியாது. பேடும் ஹெல்மட்டும் மாட்டிவிட்டால் , பேட்டை ஊன்றி நிதானமாகவே நடக்க முடியும். தினமும் பந்தை உயரத்தில் மட்டையால் அடித்து பிடிக்கச் சொல்லித் தருவார்கள். பிடிப்பதில் இருக்கும் அவ்வளவு சிக்கல் எனக்கு அப்போது தான் புரிந்தது. எனக்கு எங்கு இவர் முகவட்டையில் நேராய் பந்தை வாங்கி விடுவாரோ என்ற நினைப்பு. எல்லாம் ஆண்டவன் செயல் என வேறு பக்கம் சென்று விடுவேன். பின்னர் ஒரு நாள் , பந்தை மட்டும் கண்ணை வைத்துப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தேன். கைகளை பந்தில் படுமாறு செய்யச் சொன்னேன். பின்னர் அவனே கொஞ்சம் கொஞ்சமாய் பிடித்தான். எந்த நேரமும் பந்தில் இருந்து கண்ணை எடுக்கக்கூடாது என்று சொன்னேன். வீட்டில் விளையாடுவோம். இந்த மாதிரி ரகசியங்களை கூறும்போது நாமே வியக்கும் வண்ணம் கேட்பார். அவராய் செய்து பார்ப்பார். சுவற்றில் பந்தை நாளெல்லாம் எரிந்து கொண்டே இருப்பார். விளையாடி முடித்ததும் ஒரு நாள் சமோசா வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ' அப்பா , இந்த வாரம் கிளாஸ் உண்டு, அப்படியே வரும்போது சமோசா, அக்காக்கு ஒரு பார்சல் ' என்று சொல்ல ஆரம்பித்தார். பின்னர் அடுத்த கடை சமோசா சரியில்லை என்று சொல்ல ஆரம்பித்தார். ஒரு புது கோரிக்கை வந்தது, ' ஒரு வாழைப்பழம் , இல்லேன்னா கொஞ்சம் சிப்ஸ் பைக்குள்ள வேணும். விளையாடம்போதே நடுவில பசிக்குது ' என்பார். ஒரு நாள் நான் சென்று பார்க்கும் போது கோச் வாழைப்பழமும் சிப்ஸும் தின்று கொண்டிருந்தார். 'எல்லாரும் கொடுப்பங்கப்பா...கொடுத்தா பேட்டிங் சான்ஸ் கிடைக்கும் ...லெதர் பால் ப்ரோமோஷன் கிடைக்கும்..அவருக்கு சிப்ஸ்னா ரொம்ப பிடிக்கும் ' என்றார்.
பின்னர் அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் பெரிய பையன்களை பார்த்து , அவர்கள் பைக்குள் வைத்திருக்கும் சாமான்களை கேட்பார். அப்டொமென் கார்ட் , arm கார்ட் போன்ற விஷயங்கள். இவர் கேட்கும் விதம் தனி. கைகேயி தசரதனிடம் கேட்ட வரங்கள் ஒரே பாடலில் முடிந்து விடுகிறது. கைகேயி கொஞ்சம் பொறுத்திருக்கவோ, இரண்டில் ஒன்றை வாங்கி மேலேறி மற்றொன்றை பின்னர் சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலோ ராமாயணம் வேறு விதமாய் ஆகி இருக்கும். தசரதன் இரண்டில் ஒன்றைக் கொடுத்துவிட்டார், இரண்டாவதை பேரம் பேசுகிறார். அம்மா விடுவதாக இல்லை. ஆனால் இவர் விட்டுவிடுவார். இரண்டில் ஒன்றைப் பெற்றுக்கொள்வார். மற்றதை புக்மார்க்கில் ஏற்றி விடுவார். அதிலிருந்து டாப் 3 பொருக்கி எடுத்து , அதற்க்கு நேரே நாம் சொன்ன வழியையும் குறித்துக் கொள்வார். ' அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் பார்க்கலாம்...பிறந்த நாள் அப்ப வாங்குவோம் ...போன்ற வழிகள். நடுவில் பலமுறை பாலோ அப் செய்வார். மிக நயமாக இருக்கும். 'அடுத்த சம்பளம் என்னிக்கிப்பா...கைல கொடுப்பங்களா..பேங்குலயா...கடைசியில் 'இந்த மாசம் முடியுமாப்பா' என்பார். நான் வழக்கமாய் 'பாப்போம்ப்பா' என்பேன். ஒரு மாதம் போய் கூடவே காத்திருப்பார் ஆனால் பைல் என்ட்ரியை அழிக்கவே மாட்டார். அப்டொமென் கார்ட் கடையில் விசாரித்தேன், 'இந்த சைசெல்லாம் வராது சார்...ஒரு ஜட்டிக்கு ரெண்டாப் போட்டு விடுங்க...தம்பி லெதர் பால் விளையாடும் போது வந்து வாங்கிக்க...அப்பாவ தொந்தரவு பண்ணக் கூடாது ' என்று சொன்னார்.
இப்போது இரண்டு மாதமாக விநோதமாய் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கருத்துலகில் காலூன்ற ஆசை வந்துள்ளது. சனி ஞாயிறு சூரியோதயம் முன் தாமாகவே எழுந்து செல்லும், ஒரு நாளில் மூன்று ஆட்டங்கள் ஆனாலும் ,தோற்றாலும் , ஜெயித்தாலும், அவர் அம்மாவின் குமட்டுக் குத்தல்களுக்கும் நடுவே என்றாலும் , தான் சென்று விளையாடிய புட்பால் மேட்சுகளைப் பற்றியும், பெற்ற மேன் ஆப் தி மேட்ச் பற்றி நான் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாய் எழுத அமரும்போதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார். வேறு என்ன செய்வது சொல்லுங்கள்...
பின்சேர்க்கை:
மேல் எழுதியதை அவரே கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியால் படித்தார். கேட்டல் என்பதை கூகிள் listening என்று மொழிபெயர்த்தது. குழம்பி விட்டார். குழம்பிய இடங்களை கேட்டறிந்து அவரே படித்தார். சாப்பாட்டின் நடுவே, பொய்யில்லை, எல்லாம் உண்மை, என்றார்.


Comments
Post a Comment