Skip to main content

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம் 


சைக்கிள் மிதித்துச் செல்லும் போது காதில் எதாவது ஓடிக்கொண்டே இருந்தால் தூரம் தெரியாது. ஏதவாது போட்காஸ்ட் அல்லது பாடல்கள். ஒரு சில நாள்களில் வெறும் வேடிக்கை அல்லது அன்றைய யோசனை. பாடல் என்றால் ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல்களுக்குள் இடம் வந்துவிடும். பொதுவாக ஒரு தேடல் போட்டு, வேறு யாரோ ஒருவர் பதிவிட்ட பிளே லிஸ்டை சீரற்ற வரிசையில் கேட்பது என் வழக்கம்கே. எதோ ஒரு பாடல் அல்லது ஒரு வரி நாளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.  

அன்று டி.எல். மகாராஜன் பாடிய காதல் யோகி யோகி என்ற பாடல் வந்தது (https://www.youtube.com/watch?v=mwIS_fZ2mRc). பரணில் ஏறி ஏதாவது எடுக்கும் போது , வேறு எதாவது தட்டுப்பட்டு நினைவுகளை இன்னும் பின் தள்ளுவது போல. தாளம் (taal ) 1999-ல் வெளிவந்தது. முதலில் ஹிந்தியில் , பின்னர் தமிழ் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு வெளி வந்தது. ரஹ்மானின் இசையில் பாடல்களுக்காவே பிரபலமானது. தமிழ் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்ப்பை பெற்றன. நான் கல்லூரி  படிக்கும் நேரத்தில் ஒன்று இதை விசிடி (திருட்டு) அல்லது ஊபர் கட்டிய ஒலிப்பெட்டிகளிலோ கூடிக் கேட்பார்கள். மேலும் இது ஒரு முக்கோண காதல் கதை. கல்லூரிக் காலங்களில் முக்கோணம், , அறுகோணம் எல்லாம் தாண்டி, பல முனைக் காதல் தாக்குதல்களில் பலர் இருந்தனர். இதில் வரும் பாடல்களை, சிமெண்ட் பெஞ்சுகளிலோ  , தாழ்வார சுவர்களிலோ மல்லாந்து , அவரவர் ஐஸ்வர்யா ராய்களை அந்த இடத்தில் பொருத்தி மிதந்த படி இருப்பார்கள்.

ஆனால் இந்தப் பாடல் டி.எல். மகாராஜன் பாடியது ஏன் என்று தெரியாது. திரையில் பாடுபவர் அனில் கபூர்.  நாயகன் குடித்துவிட்டு ஞானம் வருவது போல் பாடுவது.  இதில் ஒரு ஒற்றுமை இருக்கிறதென்றே இருக்கிறேன். இது தற்செயல் போல் எனக்கு தோன்றவில்லை, ஏதோ  ஊழ்  என்றுதான் தோன்றியது. தமிழ்த் திரையின் இன்னொரு முனையில் மற்றொரு பாடல் உள்ளது. 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற பாடல். ( https://www.youtube.com/watch?v=D7viX51_6CM)மனோகர் குடித்துவிட்டுப் பாடுவது. இப்பாடலைப் பாடியவர் திருச்சி லோகநாதன்,  டி.எல். மகாராஜனின் அப்பா. இந்தப் பாடலை பதிவு செய்து முடித்து வீடு சென்றவுடன் , வீட்டுக்கு வெளியில் கிணறு இருந்தால் , இரைத்து , தலை குளித்துவிட்டே உள்ளே சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். யேசுதாஸ்  'மாசி  மாசம் ஆளான ...' என்று ஒரு பாடல் ரஜினிக்கு பாடியிருக்கிறார். இதை பக்தி பாடல் போலவே பாடியிருப்பார். ஜானகி அடுத்த பத்தி பாடும்போது பக்தி கலைபடும். இதே பாடலை Alex in wonderland -ல் ஒரு பக்தி பாடல் மெட்டாக பாடிக் காட்டுவார் - https://www.youtube.com/watch?v=GOIBjZ5YyBI&t=320s. ஸ்வாமி சரணம் அய்யப்ப சரணம் ...சரணம் அய்யப்ப ஸ்வாமி என்று போகும். என்ன சொல்லவருகிறேன் என்றால் யேசுதாஸ் அய்யன் அய்யப்பனால் தேர்வு செய்து அய்யப்ப சரணம் பாட  பூமிக்கு அனுப்பப்பட்டவர் என்றால் , திருச்சி லோகநாதன்,  டி.எல். மகாராஜன் போன்றவர்கள் வேறு தேவ தூதர்கள், அவ்வளவே . 

அடிக்கிற கைதான் அணைக்கும் பாடும் போது , இடையில் தொண்டை  விக்கி விக்கி பாடினால் குடித்திருப்பவர் போல் ஒலிக்கும் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை. இவர் பாடல் நெடுக விக்கும் போது , நமக்கே ஒரு சொம்பு தண்ணீர் குடித்தால் தேவலை என்று ஆகிவிடுகிறது. மனோகர் அவர்கள் ஆபீஸில் டை கோட்டு போட்டு வேலை பார்த்து முடித்துவிட்டு, சாயங்காலமாய் வந்து இதை நடித்துக் கொடுத்தாரோ தெரியவில்லை. மீசையை மட்டும் நீவிக் கொடுக்கவில்லை என்றால் , கையில் அந்த கரும்பட்டை இல்லை என்றால் , கதாநாயகியின் கண்களில் கண்ணீர் இல்லை என்றால் ...வேறு என்ன சொல்வது , சுற்றி இருக்கும் பாறை, தென்னை மரம் செட் போல ஆகி இருக்கும். மனோகர் மன்னராகவே நடிக்கப் பிறந்தவர் இல்லையா? டி.எல். மகாராஜன் புல் மீல்ஸ் சாப்பிட்டு , வெத்தலைப் பொட்டி  எங்கப்பா என்று கேட்டு வாங்கி , நிதானமாய் நாலு வெற்றிலை மடித்து வாயில் போட்டு பின்  , பாதி வெளியில் காறிவிட்டு , ஒரு சிறு பகுதியை வாய்  உள் வைத்துப் பாடுவதைப் போலவே என் மனது ஏனோ நினைக்கிறது. காதல் யோகி ..யோகி என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது ஒரு அபங்கம் போல் தான் காதில் கேட்கிறது.   

இந்தப் பத்தியை எழுத நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஜெயமோகன் குடியை விமர்சித்து எழுதிய ஒரு விரிவான கட்டுரை வெளி வந்தது. https://www.jeyamohan.in/197808/. குடி நிதானமாய் விளிம்புகளில் இருந்து மையத்தை பிடித்துவிட்டது என்று சொல்கிறார். புல்லரித்து , குடி உன்னதமாகும் நிலை வந்துவிட்டது என்கிறார். நிஜம்தான் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதைப் படித்துப் பின் பழைய பாடல்களை எண்ணிப் பார்த்தேன். மது மயக்கத்தில் பாடிய பாடல்கள் என கூகுளை தேடினேன். ஆச்சரியப்பட ஏதுமில்லை, பலபேர் பிளே லிஸ்ட் தொகுத்திருந்தார்கள். இதுவும் ஒன்று  : https://www.youtube.com/watch?v=td_YogpjKCY . இறக்கும் தருவாயில் ஒட்டுமொத்த வாழ்வும் ஹயிலைட்ஸ் காட்சிகளாக சில மணித்துளிகள் ஓடும் என்று சாவின்  விளிம்புக்குச் சென்று வந்தவர்கள் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஏக்கங்கள் மறுபிறவியாய் ஆகின்றன. இந்தப் படக்காட்சியும் குடி என்ற கருதுகோளின் ஹயிலைட்ஸ் என்றே எண்ணுகிறேன். குடியும் இறந்து மீண்டும் பிறந்தபடியே இருக்கிறது. ஒரு சிறந்த மீயூசியத்திற்குள் நுழைந்து வெளியே வருவது போல, குடிப்பதின் ஒரு மின்னல் வேக வரலாறு, ஒரு பவர்பாயிண்ட் கீ  நோட். கள்ளில் இருந்து, எரிசாராயமாய் மாறி, பின் இன்றுவரை உள்ள வித விதமான மேலை நாகரிகங்கள்  தந்த சிறிதும் பெரிதுமான நளினமான போத்தல்களாய் ...அதை வேண்டா வெறுப்பாய்த் தொடுபவர்கள், விரும்பித் தொடுபவர்கள்,கட்டி அணைப்பவர்கள்...வேட்டி லுங்கிகள் அணிந்தவர்கள் , கால்ச்சட்டைகள்,  கோட்டு அணிந்த கனவான்கள் , நிதானமாய் நிற்பவர்கள், தள்ளாடுபவர்கள், ஆடுபவர்கள் , ஓடுபவர்கள்...இவர்களை எல்லாம் பார்த்து குடி  இன்னும் வற்றாத ஆறாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

மனிதன் உட்கொள்ளும் ஆல்கஹால் எத்தனால் என்னும் வகையில் சேர்வது. மொத்தம் மூன்று. இது நாம் பயன்படுத்தும்  லோஷன், கிரீம்களில் ஆன்டிசெப்டிக் ஆக இருக்கிறது. உடலில் அடிக்கும் வாசனைப்பொருள்களில்(body spray, perfume  ) சேர்க்கப்படுகிறது. பல நாடுகளில் பெட்ரோலுடன் சேர்த்து எரிபொருளாக விநியோகம் செய்யப்படுகிறது. இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் - அதாவது பிற வேதிப்பொருள்கள் கரையும் கரைப்பானாக பயன்படுகிறது. 

முக்கியமாக இது நீரிலும் கொழும்பிலும் கரையும். இதனால் உடம்பில் எல்லா செல்களுக்குள்ளேயும் நேராக நுழைய முடியும். எத்தனாலை  விஷம் அ  நச்சு (toxic)  என்றே வேதியியல் வகைப்படுத்துகிறது. உடம்பில் நுழைந்தவுடன் இது அசிட்டால்டிஹைடு என்று மாற்றம் பெறுகிறது. இது எத்தனாலை விடக் கொடியது. இது செல்களை அழிக்கும் , பாரபட்சம் கிடையாது. மனித  உடம்பு  இதை எதிர்கொள்ளும் வழி அசிட்டால்டிஹைடை ஆற்றலாய் (அசிடேட் ) மாற்றுவது. இதை உடம்பால் எவ்வளவு வேகமாய் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு சேதம் குறைவு,. ஆனால் விடம் விரைவில் பொங்கி வெளியேறும். தேவரும் அசுரரும் பாற்கடல் கடையும் போது எழுந்த விஷத்தை நீலகண்டன் கழுத்தில் தேக்கினார். ஆனால் உண்மையில் கல்லீரலே இதைச் செய்ய முடியும். தேக்கிவைத்த அவர் கழுத்து என்ன ஆனதோ தெரியாது, இங்கு கல்லீரல் கையை விரித்து விடும். 

இந்த இடத்தில் சிறிது நிறுத்தி மனித மூளையைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இதை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். 

அடுக்கு 1 - கற்கால மூளை, காலத்தால் பிந்தியது, விலங்குகளில், ஊர்வன , போன்றவற்றில் காணப்படும் மூளையை ஒத்தது. தன்னிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது. உடல் வெப்பத்தை சீராக வைப்பது, ரத்தத்தில் சர்க்கரை குறையும் போது பசியை உண்டாக்குவது, அடிபடும் போது ரத்தத்தை அந்தப் பகுதிக்கு கடத்துவது போன்ற செயல்கள் இங்கு நடக்கின்றன. இதை reptillian brain என்று இதை வகுத்த பால் மேக்லீன் குறிப்பிடுகிறார். உள்ளுணர்வு, உயிர்வாழ்தல் என்ற இரு சொற்களில் இப்பகுதியை அடக்கலாம் . 

அடுக்கு 2 - காலத்தில் அடுத்து வருவது, பாலூட்டிகளில் விரிவடைந்த பகுதி. உணர்வுகளைக் கையாள்வது. அடிபட்ட ஒருவரையோ , வேண்டாத ஒருவரையோ காணும்போது ஏற்படும் உணர்வுகளை கட்டளைகளாக மாற்றி முதல் அடுக்கிற்கு அனுப்புகிறது.  முதல் அடுக்கு உடம்பை ஒரு நெருக்கடிக்கு தயார் செய்ய ஆரம்பிக்கிறது. மொத்தத்தில் லிம்பிக் சிஸ்டம் என்பது இதன் பெயர். புலன் உறுப்புகளில் இருக்கும் நியூரான்களினால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதயம், நுரையீரல், கல்லீரல், வயிறு ஆகிய யாவையும் மூளையில் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வலைகள் என்பவை புலனில் இருந்தே எப்போதும் எழுகின்றன. அடுக்கு 1-ஐயும் 2- ஐயும் சமன்செய்வது ஹைப்போதலாமஸ், உணர்வையும் உடலையும் இணைக்கும் பகுதி. உடல் நெருக்கடியில் இருக்கிறதா அல்லது ஓய்வு நிலையில் இருக்கிறதா என்பது இங்கேயே தீர்மானமாகிறது. இத்தைப்பொறுத்து அடுக்கு 1 இரண்டாவதைத் தூண்டுகிறது. சமநிலை என்பது இதயத்துடிப்பு, உடல்வெப்பம், மூச்சின் வேகம், போன்ற நாம் அறியாத செயல்கள் நிதானமாக நடைபெறுவதாகும். நெருக்கடி என்பது இந்த அளவுகளை குலைப்பது என்று கொள்ளலாம். உடல் நெருக்கடி பெரும்பாலும் உடனே சமநிலைக்கு திரும்பிவிடும். நீண்டகால நெருக்கடி என்பது பெரும்பாலும் கற்பனையில் நிகழ்வது. ஆராய்ச்சியாளர்கள் இரு எலிகளை சக்கரத்தில் சுழல வைத்தனர். ஒன்று தான் விரும்பிய நேரம் சக்கரத்தில் ஏறி சுழன்றது. முதலாவது ஏறி சுழலும் அதே நேரத்தில், வலுக்கட்டாயமாக இரண்டாவதை ஏற்றி பரிசோதனை செய்தனர். ஒரே செயல் , இரு விளைவுகள். இரண்டாவது எலி ஆபத்து என்று நினைத்ததால், இதயத்துடிப்பு, ரத்தவேகம் அதிகரித்தது. சலிப்பும் , அழுத்தமும் இரு துருவங்கள். சமநிலை என்பது இதனிடையில் ஊசலாடும் ஒரு தராசுத் தட்டு.

அடுக்கு 3 - பரிணாமத்தில் கடைசியில் உருவானது, மூளையின் மேற்பகுதி. மேலே சொன்ன உணர்வுகளை கட்டுப்படுத்துவது, அந்தக் கணநேர உந்துதலை கட்டுப்படுத்துவது, நினைவாற்றல், கற்றல், தொகுத்தல், இரண்டில் ஒன்றை முடிவெடுப்பது, நாளைய திட்டங்கள் போன்ற நிர்வாகச் செயல்கள் இங்குதான் நிகழ்கின்றன. இன்னும் சில விஷயங்கள் : இது கடைசிவரை வளர்ந்த வண்ணம் உள்ளது. மூளையின் எடை மிகுந்த பகுதி, குரங்கை விட மனித மூளையில் இங்குதான் இணைப்புகள் அதிகம். இந்த இணைப்புகள் தான் மனிதனை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுத்துகின்றன. சமூகம் என்ற கருதுகோள் இங்குதான் நிர்ணயமாகிறது. யானை, திமிங்கலம், டால்பின்களில் போன்ற சமூக விலங்குகளில் மட்டுமே இருக்கும் ஒரு தனிவகை நியூரான் இங்கேயே இருக்கிறது.  எல்லா சமூக விதிகளும் இங்குதான் எழுதப்பட்டுள்ளன. உடலிலே அதிக ஆற்றல் செலவு செய்யும் உறுப்பு மூளை. மூளையின் அதிக ஆற்றல் கோரும் பகுதி Neo Cortex எனும் இந்த இடமே ஆகும். 

ஆல்கஹால் பத்து நிமிடத்திற்குள் அசிட்டால்டிஹைடாக , நச்சாக மாறி, கல்லீரலால் எதிர்கொள்ள முடியாமல் உடம்பில் பரவுகிறது, மூளை விதிவிலக்கல்ல, ஏனெனில் இது நீரில் , கொழுப்பில் கரையும். அடுத்த ஒரு சில நிமிடங்களில் மூன்றாம் அடுக்கில் உள்ள செல்களை செயலிழக்கச் செய்கிறது. இதன் பின் சொல்ல நினைக்கும் வார்த்தைகளுக்கு தடையில்லை . நினைத்ததை செய்ய கால், கைக்கு கட்டுகள் இருப்பதில்லை.  மூன்றாம் அடுக்கு செயலில் இல்லை என்றால் நமக்கு கட்டுப்பாடு இல்லை. நினைவாற்றல் இங்குதான் இருக்கிறது. குடிநிலையில் செய்யும் செயல்கள் மறப்பதில் புதிர் ஒன்றும் இல்லை. இன்னும் கவலையான விஷயம், நீண்ட நாள் குடிப்பவர்கள் மூளையில் , குடிக்காமலிருக்கும் போதும், குறிப்பிட்ட நேரத்தில் மூன்றாம் அடுக்கு கட்டுப்பாட்டை தானாகவே இழக்கிறது. 


குடிநிலையில் முதலில் ஒரு எழுச்சி, மகிழ்ச்சி ஏற்படக் காரணம் , செரோடோனின் எனும் நரம்பியல் கடத்திகள் இருக்கும் இணைப்புகளில் அசிட்டால்டிஹைடு புகுவதால் ஆகும். இந்த மகிழ்ச்சி குறைவான நேரமே, இது ஒரு பக்க விளைவே ஆகும். எனவே இதைத் தேடி மேலும் பெக்குகளை குடிக்கும்போது திரும்பி அன்று அகப்படாது. இரண்டாம் அடுக்கிலும் , முதல் அடுக்கிலும் நச்சு அசிட்டால்டிஹைடு பரவி , வாய் , கால், கை குளறி, மூளைச் செயல் இல்லாமல் தூக்கம் போல் ஒன்றில் போய் முடியும். இது தூக்கமும் கிடையாது என்று Mathew Walker , தூக்கத்தைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சிசெய்தவர், குறிப்பிடுகிறார். உடம்பில் கார்டிசோல் அதிகம் சுரக்கும். இது நெருக்கடியில் சுரக்கும் ஹார்மோன். வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கெட்ட பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார்கள், இத்துடன் நிற்கட்டும். 

மூளையைப் பற்றி தெரிந்துகொள்ளும் போது, மூளை செயலிழப்பது தான் இறப்பு என்பதா, நாம் நினைத்ததை செய்யும் என்ற  ஒன்று இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றுகிறது. எதாவது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. Robert Saplosky என்ற நரம்பியல் விஞ்ஞானி freewill என்ற ஒன்று இல்லை. சூழ்நிலை ஒன்றே நம் கட்டுப்பாட்டில் இருப்பது என்று சொல்கிறார். சூழ்நிலையில் நம்முடைய எதிர்வினையை மாற்றவே முடியாது. ஆனால் அந்தச் சூழ்நிலையில் இல்லாமல் இருக்க முடியும். 

இதையெல்லாம் தெரிந்துகொள்வது ஒன்றுதான் எஞ்சுகிறது போலும்.

பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம்....சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ...

உதவிய தரவுகள்:
Behave - The Biology of Humans at our Best & worst - Robert Sapolsky 
https://www.hubermanlab.com/episode/what-alcohol-does-to-your-body-brain-health

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...