சருகின் எடை
இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார் ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?
// ‘வானே புக்கான் அரும் புதல்வன்’ மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’
தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித் தோன்றியதாக கம்பர் எழுதுகிறார்.
மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.
நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி பூவாய் நிறைந்திருக்கும் சம்பக மரம் சிறு காற்றசைவில் இன்னும் ஓரிரு பூக்களை தரையில் உதிர்த்தது. சில மூங்கில் சருகுகள் கூரிய படை அம்புகளாய்ச் சுழன்று நிலத்தில் வீழ்ந்தன. ஏரி நடுவில் இரு செங்கால் நாரைகள் தவத்தில் இருந்தன. நினைக்கும் போதே ஒன்று தன் கழுத்தை முறித்து, சிலமுறை தலை சுழற்றி , வாய் பிளந்து கொட்டாவி விட்டது. ஒரு கருங்கழுத்து கொக்கு தாழப் பறந்து இடம் மாறி அமர்ந்தது. இரண்டு நாய்கள் வற்றிய நீரின் முனைக்குச் சென்று முகர்ந்து திரும்பின. கால் தவ்வி அமர்ந்த இரு மைனாக்களை துரத்தி ஓடிப் பறக்கச் செய்தன. ஒரு அம்மா இரு பையன்களில் ஒருவனை வைது கொண்டிருந்தார். மற்றொருவன் முகம் சுழித்துப் பார்த்தபடி இருந்தான். ஏரியே பெரும் கிழிந்த தோலாடை அணிந்திருப்பது போல் இருந்தது. கூச்சிட்டபடி எங்கிருந்தோ வந்த மரம்கொத்தி , பட்ட மரம் அமர்ந்து , உடனே மீண்டும் எழுந்து மின்னலென விண்சென்று வந்தமர்ந்தது . உடனே ஒரு முக்குளிப்பான் நீரிலிருந்து தலை எட்டிப் பார்த்தது.
நம் சைக்கிள் பயணத்திற்கும் சவாலாய் அமைபவை ஏப்ரல் மே மாதங்களே. மழை வேறு விதம் , வெயில் வேறு இல்லையா ? போய் சேர்ந்தவுடன் மாற்று உடுப்பு அணிந்தே வேலைக்குள் செல்ல முடியும். பையில் கலையாமல் மாற்று உடுப்பு ஸ்டாக் வைக்க வேண்டும். கடிகாரம் கலோரிகள் அதிகம் காட்ட ஆரம்பிக்கும். பொதுவாக இதயத் துடிப்பு கோடையில் உயர்கிறது. வான் நோக்காத கண்கள்,ஒரு கணம் கடல் தான் விண்ணிலேறி விட்டதோ என நினைக்க வைக்கும். தூய வெள்ளையுடை உடுத்திய துறவியென எங்கோ மூலையில் ஒரு துண்டு மேகம்.
மார்ச்சில் இன்னும் ஒரு நிகழ்வு சொல்லியாக வேண்டும் - DST அல்லது Daylight Saving Time . ஒரு பகுதி உலகம் கூட்டிய பகலை மீண்டும் குறைத்து சரி செய்யும் காலம் . காலம் மாறும் அன்றைக்கு ஒரு நாள் , மணி என்ன என்றால் , நேற்று இந்த நேரம் என்று சொல்லமுடியாது. நேற்று செய்ததை எல்லாம் ஒருமணி முன்னே விரைவாய் செய்ய வேண்டும். கார் பார்க்கிங்கில் கண் பொத்தி விளையாடும் பிள்ளைகள் எண் எண்ணுவது போல, கண்டுபிடிக்கும் ஒரு குழந்தை விரைவாய் பத்தெண்ணி எண்ணி முடிப்பதை போல. ஆனால் சிக்கல் ஒரு வார மீட்டிங் சைக்கிள் பயணத்திற்கு நடுவே விழுந்து விட்டது. ஒரு மணி பயணம், சரியாய் அரைமணியில் ஆரம்பிக்கும். சைக்கிளில் செல்வதா என யோசித்து யோசித்த பின் டீ இடைவேளையில் ஓரமாய் நிறுத்தி மீட்டிங் முடித்து மீண்டும் தொடரலாம் என முடிவு செய்தேன்.
தேநீர் அருந்தும் இடத்தை 30 நிமிடத்திற்குள் அடைய வேண்டும். பொதுவாக இந்தமாதிரி கழுத்தில் கத்தி வர வைத்துக்கொள்வதில்லை.
கால் மிதித்துச் சென்று கொண்டிருக்கும் போது மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இரவில் உதிர்ந்த மஞ்சள் கொன்றைப் பூக்களும், சம்பக பூக்களும் , மூன்று பக்க விளிம்புடன் மிகச்சிறு கோப்பைகளாய் உருண்டு கிடக்கும் புங்கைப்பூக்கள், ஏற்கனவே நேற்று குவித்து ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும் சருகுகள், கட்டவிழ்ந்து சாலைக்குள் உதிர்ந்து விட்டிருக்கும் இன்னும் சில சருகுகள், முன்செல்லும் ஒவ்வொரு வண்டிக்கும் முன்னும் பின்னும் நிலையழியும் மேலும் சில சருகுகள். எல்லாம் உதிர்த்து விட்டிருக்கும் ஒரு சில மரங்கள்.
'இலைகள் உதிர்ந்து நின்ற
சுள்ளிக் கிளைகளில் தான்
எத்தனை அபிநயங்கள் முத்திரைகள்
அழியாச் சித்திரங்களாய்
எத்தனை காலங்கள்' (தேவதேவன் )
BBMP ஊழியர்கள் இரண்டு கைகளில் இரண்டு விளக்குமார்கள் வைத்து பெருக்குவார்கள். அவ்வப்போது ஒரு கை குனிந்த இடுப்பின் மேல் கட்டி ஓய்வில் இருக்கும். ஆனால் பெரும்பாலும் இரு கைகளும் வேலை செய்தாக வேண்டும். கொஞ்சம் நிமிர்ந்தவாறு ரோட்டில் கரையாய் ஒதுங்கியிருக்கும் சருகுகளை குவிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது, தெருவில் பாதி இருக்கலாம் . இடையில் இருப்பவற்றை கூட்டிக் குமிக்க வேண்டும். நடுவில் வந்து, சுத்தம் செய்த இடத்திற்கு எதிரே உள்ள கடைகளில் டீயை வாங்கிகுடிப்பார்கள். அவர்கள் குடிக்கும் போதே குமித்த சருகுகள் சில கட்டவிழ்த்துப் பறக்கும். ஒரு பெண் ஊழியர் நடைபாதையை ஒட்டி பாசி போல், இல்லை மஞ்சள் ஓடை போல் பூவும் சருகுமாய் மிதந்ததை இடுப்பில் இரு துடைப்பக் கைகள் வைத்த வண்ணம் அயர்ந்து பார்த்தார். சூரியன் பலமாய் வேலை செய்து கொண்டிருந்தார்.
'இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!' (தேவதேவன் )
மணி 830 ஆகி இருந்தது. SBI ATM முன் நிறுத்தி மீட்டிங்கில் நுழைந்தேன். பாதுகாப்பு ஊழியர் இங்கு செய்யக் கூடாது என்றார். உரிமைகோர நேரம் இல்லை. மெதுவாக சைக்கிளை ஒட்டி பின் தெருவில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் முன் நிறுத்தி பேச்சைக் கேட்டேன். சாப்ட்வேர் சுத்தக் குறைகள். சீரான பெயருடன் எண்ணிக்கையிடப்பட்டவை. எங்கு யார் எல்லை முடிகிறது, யார் அடுத்து கூட்டவோ குமிக்கவோ வேண்டியது. நாளை என்ன செய்ய வேண்டும், இன்று என்ன செய்ய வேண்டும். ஒரு வார திட்டம் தீட்டி மீட்டிங் முடிந்தது. நாளையும் சருகுகள் மீண்டும் உதிரும், பறக்கும், விளையாடும்.
Comments
Post a Comment