Skip to main content

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1



சென்ற சனியன்று ஒரு சிறு நேர மோதல். அன்று ஸ்ரீயின் பிறந்த நாள். அதே நாளில் ஜெயமோகன் பெங்களூர் கட்டண உரை. இருவரும் நடுவே  ஒரு சில வாரங்களாக  திட்டமிடல். ஒரு வழியாக நட்சத்திரம் காட்டி முந்தய நாள் கொண்டாட முடிவெடுத்தோம். கொண்டாடுவது என்றால், அவனுடைய நண்பர்கள் கூட்டமாய்ச்  சென்று கால்பந்து ஆடுவது, பின்னர் ஒரு சிறு ஸ்னாக்ஸ் பார்ட்டி என்று திட்டம். பாட்டி, தாத்தாக்கள் குடுத்த பணமெல்லாம் எடுத்து புழக்கத்தில் விடுவதாகவும், நடத்தித் தருமாறும் நாளும் வேண்டினார். வேறு வழியில்லை. அவர் காட்டிய மாற்று வழி இன்னும் கடினமானது. காகிதத்தில் பெயர்களை எழுதி , இரு அணிகளாக்கி என்னையும் ஒரு பக்கம்  கோல் கீப்பர் ஆக்கி , ஏழுக்கு நாலு என்று நம் பக்கம் சரியாக தோல்வியில் முடிந்தது. கோலை நான் விடுவதை அவர் அம்மா படம் எடுத்திருந்தார்கள். பந்தை தடுத்து எறியும் பொழுது, ஒரு நாலு பேர் ஓடி வந்து ' வாட் அங்கிள் , யூ ஷுட் நாட் த்ரோ நௌ..யூ ஷுட் புட் இட் டௌன் , கிக்'  ...என்றனர். கீழே வைத்து உதைக்கும் முன் , எறிய வேண்டும் என்றனர். சரியாய் எட்டு மணிக்கு ஆட்டம் முடிந்ததும், ஒரு அலுவலக அழைப்பு , காரில் போட்டு கலந்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.  ஆரம்பித்தவுடன் அமேசான் மியூசிக் தொலைபேசி இணைப்புடன் கலந்தது. 'இதயம் ஒரு கண்ணாடி, உனது பிம்பம் விழுந்ததடி' என்று சன்னமான பேச்சொலியுடன் ஊடே புகுந்தது. ஊமையாக மறுத்தது. வயரை பிடுங்கியதும் , இடிபோல் ஒரு ஓசை, தொடர்ந்து ரேடியோ ஸ்டேஷன் ஒளிபரப்பு முடிந்ததும் வருமே அந்த கூரிய ஒலி. என்னை அங்கிருந்தே ஒருவர் ம்யூட் செய்தார். ஒரு இருண்ட இடத்தில் மரத்தின் கீழ் காருக்குள் ஒரு மணி அமர்ந்திருந்தேன். வயரை செருகும் போது அந்த ஒலி வந்தது. ஒரு விண்வெளிப்பயணமாய் நினைத்துக் கேட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்து, இதுவும் ஒரு வழியாய் இனிதே முடிந்தது. 

அடுத்த நாள் முன்னெழுந்து மதியம் குளித்து கிளம்பினேன். இதற்கிடையில் ஜெயமோகன் இந்த உரைக்கு தான் தயார் செய்வதை இரண்டு நாள் எழுதி இருந்தார். இதுவே ஒரு நடுக்கமாய் ஆனது. சென்ற வருட உரை நேரில் கேட்டது மனதில் வந்தது. கூட்டத்துடன் தனித்திருத்தல் என்ற தலைப்பு.தைத்ரிய உபநிஷத உடலின் ஐந்து உறைகளை மகிழ்ச்சியுடன் பொறுத்திக் காட்டினார். ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சி நோக்கியே செல்ல விழைகிறது. உரையை மீண்டுமொரு தரம் பார்த்தேன். அதைப் பற்றி ஒருவருடம் முன்  நான் எழுதிய குறிப்பைப் படித்தேன், அமெச்சூராக இருந்தது. 

கீழ் வருவது அவர் சென்ற வருடம் பேசியது வார்த்தைகளாய், இப்போது திரும்ப ஒருமுறை எழுதியது. ஏனென்றால் இந்த முறை பேசியதற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். 

அவருடைய முதல் பாதி பேச்சு ஆத்மா என்ற அடி வாங்கி நெளிந்த வார்த்தையை எப்படி ஒரு சராசரி இந்தியன் புரிந்து கொள்கிறான் என்று ஆரம்பிக்கிறது. எல்லாமே பொருளாகவே புறவயமாக பார்க்கக் கற்றுக்கொடுத்திருக்கும் மேலைக்கல்வி நம் மரபை வேரறுத்து விட்டது. மறுபக்கம் நம் மரபில் மிகப் பெரிய வாழ்க்கை தரிசனங்கள் மதத்தில் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டுள்ளன. ஓங்கி உயர்ந்த மலையை ஒரு மின்னல் வெட்டில் பார்த்த ஒருவர் சொல்ல விளைவதே தரிசனம். எங்கோ ஒரு பழைய மூதாதை மண்ணை அன்னமாக கண்டதன் துவக்கமே சாங்கியம். இது ஆழ்மனதில் இருந்த தோன்றுகிறது. ஏன் என்பதை விளக்க முடியாது. அந்த ஒரு ஒளிரும் இடத்தை தத்துவம் வார்த்தைகளால் விளக்க முற்படுகிறது. பின்னர் அதன் மேல் சடங்குகளும், சின்னங்களும் ஏற்றப் படுகின்றன. இதுதான் மதம் என்பது. ஆனால் இன்று நமக்கு இருக்கும் சிக்கல் மரபுக்கல்வி இல்லாமல் அந்த தரிசனங்களை உள்வாங்க முடியாது. இன்று அறிவியல் அறிந்த மாணவன் ஆத்மா என்ற ஒரு வார்த்தை கேட்டவுடன் ஒவ்வாமையே அடைகிறான். இல்லை என்றால் மறுபுறம் ,கண்களை மூடி மரபு சொல்வதை ஸ்லோகம் போல், கடவுள் சொல் போல் நம்ப ஆரம்பிக்கிறான். சிந்தனையில் பாய்ச்சல் என்பது மெட்டாபிசிக்ஸ்(தத்துவமும் அறிவியலும் இணையும் புள்ளி) வழியாகவே நடக்கும். இது கற்பனை சார்ந்தது. ஒரு துரையின் கிறுக்கர்களின் இடம் இங்கேயே இருக்கிறது. இவர்களே பாய்ச்சல் நடத்துகிறார்கள். மெட்டாபிசிக்ஸ் இல்லாத துறை தேங்கியே நிற்கும்.

இந்த இரண்டு விளிம்புகள் தாண்டி மூன்றாவதாக ஒரு நிலை உள்ளது. அது பழைய வார்த்தைகளுக்கு இன்றைய சிந்தனையில் புது அர்த்தம் தேடுவது. இதுவே தேடல் உள்ள ஒரு மாணவன் செய்ய வேண்டியது. ஆத்மா என்ற வார்த்தையை அடித்து பிரக்ஞை (consciousness) என்ற ஒரு சொல்லை வைத்து அறிவியலுக்குள் தேடினால் புது வெளிச்சம் வருகிறது. தத்துவம், மொழியியல்(lingustics) , இயற்பியல், உயிரியல், நரம்பியல் வரை பயணிக்க முடியும். உரையின் இந்த இடம் அபாரமானது. ஒட்டு மொத்த ஐரோப்பிய சிந்தனை பிரக்ஞை (consciousness) பற்றியதே. பிராய்டின் உளவியல் இதை மூன்றாக வகுக்கிறது.  consciousness, sub-consciousness (ஆழ்மனம்), un -consciousness(நினைவிலி).  கார்ல் ஜுங் collective consciousness , ஒட்டு மொத்த பிரக்ஞை என்று ஒன்று சொல்கிறார். பிரக்ஞை எனும் சொல் உயிரியலில் வேறு அர்த்தம் கொள்கிறது. உயிர் என்பது பிரக்ஞையா, ஒவ்வோர் உயிர்க்கும் பிரக்ஞை உள்ளதென்றால் , கோடிக்கணக்கான உயிர்கள் சேர்ந்த நம் பிரக்ஞை என்பது என்ன? நான் இருக்கிறேன், வளர்கிறேன் , விருத்தி செய்கிறேன். விதைக்குள் இருப்பது, நீர் பட்டதும் மரமாய் எழுவது.

மொழியிலாளர்கள் பிரக்ஞை என்பது மொழியில் சொல்லும் தன்னிலை என்று சொன்ன காலம் இருந்தது. இது ஒரு துணுக்குறும் சிந்தனை. தன்னிலை இல்லாமல் மொழி இல்லை. நான்-நீங்கள், நான்-அது, நான் - இவை எல்லாம். பிரக்ஞை என்பது மொழியால் அமைவதா ? பின்னர் இதுவே நரம்பியலில் மறுக்கப்படுகிறது. மொழி என்பது மூளையின் செயல்பாடு. பிரக்ஞைக்கும் மொழிக்கும் தொடர்பில்லை என்கிறார்கள். இயற்பியலில் குவாண்டம் விதி பார்ப்பவரின் பிரக்ஞை , பார்ப்பது துகளா இல்லை அலையா என்று தீர்மானிக்கிறது. இங்கு  பார்ப்பவரைப் பொறுத்தே உலகம் என்றாகிறது.       

மொத்தத்தில் இன்றைய மரபைப் புரிந்துகொள்ள முயலும் ஒருவனுக்கு எதிரே இரு குரல்கள் எழுகின்றன. ஒன்று மரபான ஆச்சாரியர்களின் குரல். மற்றொன்று நவீன ஐரோப்பிய அறிவியலின் குரல். இரண்டுமே மீமாம்சக தரப்பே ஆகும். இரண்டில் ஒன்றை தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயமாகிறது.இதற்கே ஆப்த வார்த்தைகளை அடித்து , நம் அனுபவ வட்டத்தில் கொண்டுவந்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் விக்கிரஹம் என்றால் , அதனுள் கடவுளைப் புகுத்துவது பக்தனுடைய சொந்த அர்த்தமே. சிந்தனை என்பது கல்லாக உறையக்கூடாது. மரமாய் கிளைவிரித்து பரவ வேண்டும். 'ஆற்றங்கரை மரமாமோ , தீர்த்தக்கரை  கோவில்' .   

பின்பு அவர் நான்கு தத்துவ பள்ளிகளில் அலைந்து அடிபட்ட நாட்களை பேசினார். கம்யூனிசம், இருத்தலியல், பௌத்தம், வேதாந்தம் என்பவை அவை. முடிவில் வெறும் தத்துவம் கேட்கும் அடிப்படை கேள்விகள் நீ யார் என்ற ஒன்றே, பதில்கள் வெவ்வேறு. நம்மைப் பற்றித்  தெரியாமல் வறட்டுத் தத்துவம் பரிதாபமாகவே முடியும். இருத்தலியல் ஒரு அலையாக இருந்த காலத்தில், அதை நம்பி தற்கொலை செய்துகொண்ட பலரை பார்த்துள்ளதாக குறிப்பிட்டார். எந்தத் தத்துவமும் ஒரு இரண்டு வாரம் சரியாகவே தோன்றும் என்றார், பின்னர் குழப்பமே மிஞ்சும் . சிலந்தி வலையில் சிக்காத ஒன்று சிலந்திப் பூச்சி ஒன்றே. வலைபின்னத் தெரிந்த அதுவே வலையில் நடமாடும். உள்ளே செல்லும் மற்ற எல்லாம் வலையிலே மாட்டி சிலந்தியால் உண்ணப்படும். வெறும் தத்துவம் அதைப் போன்றதே.   

நான் யார் மற்றும் எனக்கும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களுக்கும்  , சக மனிதர்களுக்கும்  , பிற உயிர்களுக்குமான  உறவு என்ன என்ற கேள்விக்கு , சொந்த வாழ்க்கையிலேயே விடை காண வேண்டும். அவருடைய நிம்மதியற்ற ,அலைபாய்ந்த நாட்களில் தனக்கு ஏற்பட்ட இடைவிடாத எண்ணங்களின் அலையைப் பற்றி பேசினார். ஒருவனுக்கு விதிக்கப்படும் அதிக பட்ச தண்டனையென்பது , வெள்ளையடிக்கப்பட்ட நான்கு சுவர்களுக்குள்ளே , வேளைக்கு உணவு, உட்கார ஒரு நாற்காலி,  மனிதர்கள் யாரையும்  பார்க்க முடியாது என்பதே. 

மனம் என்பது ஓய்வில்லாத தறி நெய்வது போன்றது. நெருக்கடியான தருணங்களில் இந்த இடைவிடாத தறி  நம்மை பயமுறுத்துவது. இன்றும் தூங்கவிடாத, ஓய்வாய் அமர்ந்த இடத்தில் எல்லாம் சிறு கனலாய் எழுந்து , பெரு நெருப்பாய் பிடித்து , நம்மையும் சேர்த்து விழுங்க நினைக்கும் இந்த தறி தான் எத்தகையது? 'எனது உள்ளத்தறியில் உனது பெயரை நெய்தேன் / நீ வரும்போது அணிந்து கொள்ளும் ஆடைக்காக/என் தறியில் பல்லாயிரம் இழைகள் / நீ வரும்போது அணியும் ஆடைக்காக - கபீரின் வரிகள். இந்த பல்லாயிரம் இழையலான மனதைத் தான் self என்றும் பிரக்ஞை என்றும் சொல்வேன்.      

நாய் நம்மை விரட்டும் போது , ஒரு நொடி பின் திரும்பி பார்க்கும் அது நின்று விடுவது போல, இந்தத் தறியை , தறிதான் இது, இந்தத் தறி இவ்வாறுதான் வேலை செய்யும் என்று திரும்பிப் பார்த்து உணர்வது ஒரு முக்கியமான திறப்பு. எல்லோருக்கும் இது அமைவதில்லை. நம் எண்ணங்கள் புற உலகம் நமக்குள் எவ்வாறு அர்த்தப்படுகிறது என்பதும்,  அதே புற உலகம் நமக்கு ஏற்றும் அர்த்தம் என்ன என்பதுமே ஆகும். இதுவே இந்த இடைவிடாத ஊடுபாவு என்பதாகும்.    

உலகம் நம்மிடம் 'define yourself ' என்று ஒவ்வொரு கணமும் கோரிய வண்ணம் உள்ளது. அரசாங்கமே ஆதார் எண்ணில் இருந்து, PAN கார்டு , ரேஷன் கார்டு போல் எண்ணிலடங்கா அட்டைகள் வழியாக நம்மை வரையறை செய்ய நினைக்கிறது. வங்கிகள், அலுவலகங்கள், ஒவ்வொரு app -லும் நம்மை திறந்து காட்ட வேண்டியிருக்கிறது. இதற்க்கு மேல் ஒரு அப்பாவாய் , மகனாய் , தாய் , பிள்ளையாய், நண்பர்களாய் அடையாள அட்டைகள் தான் எத்தனை ? இன்று விடாப்பிடியாக ஸ்மார்ட்போன் இல்லாத ஒருவர் மறுபக்கத்திலிருந்து கிறுக்கன் என்றே வரையறை செய்யப் படுவார். இது நமக்கு அடுத்த வீட்டில் நடக்கிறது. ஆக உள்ளிருந்து நாம் நாமாக நினைக்கும் self - க்கும், வெளியே நம்மில் எதிர்பார்க்கப்படும் self - க்கும் சமநிலையை கண்டடைவது இந்த நூற்றாண்டின் பெரிய சிக்கலாகும். இதை சமநிலையில் சரிவர செய்ய இயலாமல் தான் துன்பத்திற்கு ஆளாகிறோம். இதில் இடது விளிம்பில் தனக்குள் இருக்கும் அடையாளங்களை மட்டுமே சுமப்பவர்கள், பெரும் ஆசார வாதிகளாய், பிறரால் வெறுக்கப்படும் ஆட்களாய் மாறுகிறார்கள். ஒருவரின் நீதி உணர்வு என்பது, வெளியில் இருந்து நம்மில்  எதிர்பார்க்கப்படும் புள்ளியில் இருந்தே துவங்குகிறது. உள்ளே மட்டும் குறுகிய ஒருவருக்கு நீதியுணர்வு இருக்காது. ஆசாரவாதிகள் புறஉலகை வெளியே தள்ளி கதவை அடைத்து விடுகிறார்கள்.     

தைத்திரீய உபநிஷத்தில் உடம்பை ஐந்து உறைகளாலானது -கோசம் -என்றும் , அவை ஐந்தும் மூன்று வகையான உடம்பில் - சரீரம் - கோர்க்கப்பட்டுள்ளன  என்று சொல்லப்பட்டிருக்கிறது.  

தூல  , சூக்கும , காரண சரீரம் - பரு , நுண் , கரு உடம்புகள் என்பன மூவுடம்புகள்.

பின்வரும் ஐந்தும் அதிலுள்ள இருப்புகள். இவை ஒவ்வொன்றுக்கும் மகிழ்ச்சி நிலையும் , மிகுந்தால் ஏற்படும் துன்ப நிலையும் உள்ளது. பின்வருவது இவை ஐந்திற்குமான இன்பங்கள் எவை என்பது.

1. அன்னமய - உணவு, உணர்ச்சி 

அன்னமயகோசம் பருவுடம்பில் சேரும்.

2. பிராண - ஆற்றல் முழுதும் வெளிவிடும் தருணங்கள், ஓடும் போது முகம் மலரும், ஏன் . , 

3. மனோமய , - இசை, அழகு, கலையின்பங்கள் 

4. விஞ்ஞான மய  - அறிதலின் இன்பம் , நான்காவது பேரின்பம். ஆனந்தமய கோசத்திற்கு முன் வருவது.

மேல் மூன்றும் தூல உடம்பில் அடங்கும். 

5. ஆனந்த மய  - காரணமில்லாதது. ஏன் என்று அறிய முடியாதது. ஒரு கன்று பிறந்து வெளியே வந்தவுடன் துள்ளி விளையாடி மகிழ்ச்சியாக இருப்பது- முதல் கணம் நீர்வீழ்ச்சியை, புல் நுனியில் பனித்துளியைக், ஓங்கிய மலையைப் பார்த்தவுடன் வருவது.

இது கருவுடம்பில் இருப்பதென்று சொல்லப்பட்டுள்ளது.

நாம் வாழ்க்கைக்குள் கப்பங்கள் எல்லாம் போக நம் வாழ்க்கையில் காரணம் எதுவுமே இல்லாமல் இன்ப நிலையில் எவ்வளவு கழிக்க முடிந்தது என்பதே. வெளி உலகில் நமக்கு எண்ணிலடங்கா அடையாளங்கள் இருந்தாலும் , எல்லா வெற்றி தோல்விக்கு இடையிலும், காம குரோத மோக நிலைகள் மீறி , வாழ்வில் நாம் எவ்வளவு நேரம் இந்த காரணமில்லாத மகிழ்ச்சி நிலையில் கழித்தோம் என்பதே கேள்வி. எல்லா அடையாள அட்டைகளும் கையில் இருக்க வேண்டும். ஆனால் நமக்கென்று நாமே நிரப்பிக்கொள்ளும் ஒரு வெற்றிடமும் இருக்க வேண்டும்.

உயர்ந்தோர் மாட்டே உலகம் -2

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...