எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண் 2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை, பிரம்பால் மேஜையில் தட்டி ' சத்தம்' என்பார். கீழே எதோ நோட்டை பார்த்தபடி இருப்பார் . அந்திப்பொழுதில் ஆல மரத்தில் எறிந்த கல்லாய் , சில மணித்துளிகளில், பறவைகள் ஒலி உச்சத்தைத் தொடும். யாரையும் , திட்டவோ, அடிக்கவோ மாட்டார். எதிர்பாராத ஒரு கணத்தில் எழுந்து , உயிர் எழுத்துக்களை எழுதி, எல்லோரையும் எழுதச் சொல்லி, வகுப்பை வலம் வருவார். கை பிடித்து எழுதச் சொல்லித்தருவார் . சாப்பிட டீச்சர்கள் , மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்து போவார்கள். சாயங்காலம் டீச்சர்கள் வீட்டுக்கு வந்து மற்ற உலக , ஊர் , தெருச்செய்திகளையும் பேசுவார்கள்.
வீட்டில் இது பத்தாது என்று தான் வெளியூர் பள்ளிக்கு அனுப்பினார்கள். பஸ் ஏறி அடுத்த ஊர் சென்று படிப்பது அப்போதெல்லாம் வழக்கில் இல்லை. உலகம் நகர்வதென்பது இது தான் இல்லையா ? ஸ்கூல் பஸ் என்பது அப்பாவின் தொழிற்சாலை குவார்ட்டர்ஸில் இருந்து கிளம்புவது. குவார்ட்டர்ஸில் வசிக்காத நம் போன்றவர்கள் வழியில் ஏறிக் கொள்ளவேண்டும். இரண்டு பஸ்கள் , இடம் கிடைக்க முதல் வருஷமே பதிவு செய்ய வேண்டும். ராஜபாளையத்தில் இருந்த இரண்டு மூன்று பள்ளிகளில் ஏற்றி இறக்கி , வரும்போது பணியாளர்களை ஏற்றிச் செல்லும். இரண்டு பஸ்கள் . முதல் நம்பர் நமக்கு. எதற்கு இவ்வளவையும் சொல்லவேண்டும் என்றால் , எப்போதும் நம் ஊருக்கு வரும் போதே நிரம்பியே வரும். ஆனால் இன்னும் சிக்கல், நின்று செல்ல விட மாட்டார்கள். பெண்களுக்கென்று முன் பாதி, நாம் செல்ல முடியாது, அக்கா சென்று அமர்ந்து விடுவார். யாரும் தானாக இடம் விட மாட்டார்கள். எல்லோரும் அமர்ந்திருக்கும் போது , நிற்பவனின் மனச் சிக்கல் தான் என்ன? 6-ம் வகுப்பில் திரும்ப பள்ளி வண்டியில் இடமில்லாமல் போன போது , பொதுப் போக்குவரத்து வண்டியில் பயணம் செய்தேன். அங்கு இந்த மனச்சிக்கல் இல்லை. எல்லோரும் நின்றுதான் ஆக வேண்டும். பருத்தி மூட்டைகளில் உட்கார்ந்தால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். நிற்கும்பொழுது பைகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள். நம் நினைப்பெல்லாம் மேலே இருக்கும் கம்பியை பிடித்து நிற்க எப்போது முடியும் என்பதே. ஒரு சில பஸ்களில் , ஒரு கருத்த வார்ப்பட்டை எட்டு வடிவில் கம்பியில் தொங்கும். நிற்க , பள்ளி வாகனத்தில் நின்று கொண்டிருக்கும் நான், பின் சீட்டில் இருக்கும் நடத்துனரைப் பார்ப்பேன். அவர் என்னைப் பார்க்கும் போது , எழுந்து வந்து வந்து யாரையாவது தள்ளி , கம்பியைப் பிடித்து , சைடு வாக்கில் அமர வைப்பார். வரும்போது இந்தச் சிக்கல் இருக்காது. முண்டி ஏறும் திறமையைப் பொறுத்து இடம், எல்லா நாளும் தோற்க வேண்டியதில்லை. தோற்றாலும் முயற்சி முன் வந்து ஆற வைக்கும்.
சாப்பாட்டு மணி அடித்ததும் டிபன் பாக்ஸ் திறந்தால் , ஒரு சில தினம், கையே நுழையாது. அம்மா நேரடியாக டிபன் பாக்ஸை குக்கரில் வேக வைத்திருப்பாரோ தெரியவில்லை. வராண்டாவிலோ இல்லை வகுப்புகளின் நடுவில் தெரியும் பரந்த வெளியில் நிற்கும் மரங்களின் கீழோ அமர்ந்து உண்ண வேண்டும். பலர் டிபன் பாக்ஸை இரு காலுக்கு நடுவிலோ , இல்லை மரத்தில், தூணில் வைத்து கழுத்தில் அடித்து திறப்பார்கள். மீண்டும் அந்திப் பறவைகள் மரத்தில் கூடி எழுப்பும் அதே சத்தம். ஊரில் இருந்து கொண்டு வந்த குடி தண்ணியை பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி முடிந்ததும் ஒரு சில நிமிடங்களில் பெரும்பாலும் வெற்றிடமாய் இருக்கும். கச்சிதமாய் ஏற்கனவே வந்து நிற்கும் பேருந்தில் ஏறுபவர்கள், நுழைவாயில் வெளிக்கதவை காற்றாய்க் கிழித்து பறப்பபவர்கள் , நேர் வழியைப் புறக்கணித்து , குறுக்கு வழியில் , மைதானத்தில் இறங்கி , இலந்தை முட்ச்செடிகள் மண்டிய பாழ் வெளியில் நடக்க ஆரம்பித்தவர்கள், ஒவ்வொன்றாய் மூடி வரும் பள்ளி அறைகள் , என ஒவ்வொன்றாய் நடந்து முடியும். எல்லாம் முடிந்து வந்தாலும், நம்முடைய வண்டி வர இன்னும் நேரம் பிடிக்கும். மிக நீண்ட சாலையை இப்போது தெளிவாய்ப் பார்க்க முடியும். இருபுறமும் இடைவிடாத புளிய மரங்கள். சாலையெல்லாம் கொட்டிக் கிடக்கும் புளியம்பூக்கள். பின்னர் இன்னும் உயர்ந்த மேல் வகுப்புக் கட்டிடங்கள். மாலை வெயிலில் அமைதியாய் எரிந்து கொண்டு இருப்பது போல் தெரியும் விளையாட்டு மைதானம், அதன் பின் தெரியும் பெரிய பாழ் நிலம்.
என் வகுப்பில் படிக்கும் எவரும் பள்ளிப்பேருந்தில் என்னுடன் வருவதிற்கில்லை. பாண்ட் அணிந்தவர்கள் , நம்முடன் பேசவோ , விளையாடவோ மாட்டார்கள். ட்ரான்சிட்டில் இருக்கும் போது தீவிரமாய் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் பள்ளியிலேயே எல்லா பேஸ்டும் பிதுக்கி எடுக்கப்பட்டுவிட்டதால் , இன்னும் நமக்குள் மூழ்கி எடுக்க அன்றைக்கு ஒன்றும் மிச்சமும் இல்லை.
இப்படி இருக்கும் நிலையில், ஒரு நீள் ஒட்டுத்திண்ணையில் பையை அருகில் வைத்து நான் உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து அமர்ந்தவர்தான் செல்வக்குமார். என்னை விட ஒரு நான்கைந்து வகுப்புகளாவது அதிகம் இருக்க வேண்டும். 'தம்பி உன் பேரு என்னப்பா ' . இந்த இடத்தில் இப்போதும் எனக்கு ஒரு முடிவெடுத்தாக வேண்டும். எந்தப் பேரைச் சொல்வது, வழக்கில் இருப்பதா இல்லை...சரி இவருக்கு ரெஜிஸ்டர் பெயர், சுருக்கவா, அப்படியே முழுதாகவா? முதல் மூன்றெழுத்து மட்டும் சொன்னேன். இந்த இடத்தில் 'அப்பா எங்க வேலை பாக்கிறாரு' என்பது அடுத்ததாக இருக்கும். எல்லார் அப்பாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் இந்தக் கேள்வி இவரிடத்தில் வராது. அடுத்து என்ன ஊர் கேள்வியோ என்று நினைக்கும் போது தன் பையை என்னருகே வைத்து உட்கார்ந்தார். பையில் இருந்து ஒரு நோட்டையும் , பெட்டியைத் திறந்து ஒரு பேனாவையும் எடுத்தார். அப்போது தான் கவனித்தேன் , கட்டை விரல் , ஆட்காட்டிவிரல் இரண்டிலும் நாள்பட்ட பேனா மைத் தடம் . மைத்தடத்துடன் பிறந்தாரோ ? நோட்டைப் பிடித்து விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.
'இது என்ன எழுதறீங்க, வீட்டுப்பாடமா? ' என்று கேட்டேன்.
'இல்லப்பா கதை எழுதறேன் '
'கதையா?'
'ஸ்டெல்லா புரூஸ் , தெரியுமா?'
'...'
'நம்மூர்க்காரர்..எழுத்தாளர்...ராஜேஷ் குமார்ன்னு இன்னொருத்தர்.. க்ரைம் நாவல் எழுதுறவர்.. டிடெக்ட்டிவ் ஸ்டோரீஸ் '
'...'
'போலீஸ் பிடிக்க முடியாத தப்பு செஞ்சவங்கள..ரொம்ப யோசிச்சு, தடயங்கள தேடி எடுத்து, டிடெக்ட்டிவ் கண்டு பிடிக்கிறது... அத மாதிரி ஒரு கதைய தான் எழுத்திக்கிட்டுருக்கேன்...இன்னைக்கு எழுத வேண்டியத முடிச்சுட்டு குடுக்குறேன் படிச்சுப் பாரு '
உட்கார்ந்த வண்ணம் மட மடவென்று எழுதிக் கொண்டே இருந்தார். ஏற்கனவே ஒரு குயரில் பாதிக்கு மேல் முடிந்து விட்டது. ஒளிக்கூண்டின் வழியாக பேனா மை இல்லாதது தெரிந்தது. அப்புறம் ஓரிடத்தில் நோட்டை என் கையில் கொடுத்து எழுந்து நடந்தார். தலையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறதோ ? . திருடர் ஓடினார், டிடெக்ட்டிவ் துரத்தினார், இருவரும் ஓடிக் களைத்தார்கள். பலமுறை திருடர் தப்பி இருந்தார். துப்புக் கொடுப்பவர்கள், மாறு வேடத்தில் உலா வருபவர்கள் , கார் சேசிங், டிடெக்ட்டிவ் வந்ததும் எழுந்து நிற்கும் போலீஸ்...என எழுந்து வந்து கொண்டே இருந்தது.
பின்னர் நோட்டில் சில பக்கங்களை தனக்கென வைத்து, ஒரு பத்து இருபது பக்கங்கள் பின்னால் இருக்குமாறு , ஒரு தாளை முக்கோணமாய் மடித்து பேஜ் டிவைடர் செய்தார். பின்னர் நோட்டையும் , மேல் பையில் இருந்த பேனாவையும் என்னிடம் திருப்பித் தந்தார்.
' சரி , இப்ப ,இன்னைலே இருந்து நீயும் ஒரு கதை எழுது.. ' என்றார்.
'...'
'பஸ்ஸுக்கு வெயிட் பண்ணும் போது எழுதுனா ...கொஞ்ச நாள்ல முடிஞ்சிரும்'
தலையை ஆட்டினேன். எனக்கு ஒன்றும் கேட்கத் தெரியவில்லை.
'என்ன எழுதுறதுன்னா ' என்று மட்டுமே கேட்டேன்.
'என்ன மனசுல தோணுதோ எழுது ' என்றார்.
சில நாள் முன் ஸ்ரீ கேட்டதும் , நான் சொன்னதும் அதுவே தான்.

Comments
Post a Comment