சனிக்கிழமையன்று இப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல் வாரநாட்களை விட அதிகமாய் இருக்கிறது. ஒட்டுமொத்த அவுட்டர் ரிங் ரோடும் , ஸ்டெண்டுகளால் தூக்கி நிமிர்த்தப்பட்ட ஒரு ரத்தக்குழாய் போல் காட்சி தருகிறது. மேலே மெட்ரோ எனும் இதய சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. கீழே நகரம் ஒரு மாதிரி வளைந்து கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ,இரண்டு நண்பர்களும் இணைந்து செல்வதாகத் திட்டம். ஒரு வழியாக பத்துநிமிட முன்னதாக சென்று சேர்ந்தோம். வெளியே புத்தகக் கடை வைக்கப்பட்டிருந்ததது. புத்தகம் விற்கும் பெண்மணி , 'எல்லாம் வாங்குற புத்தகத்தையே திரும்பி வாங்குறாங்களா?' என்றார். ஒரு கணம் முன் நம்மிடம் எந்த புத்தகம் இருக்கிறது இல்லை என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்று ஒரு தேநீர் குடித்து அமர்ந்ததும் ஜெயமோகன் உள்ளே நுழைந்தார். மிக மெல்லிய சலசலப்பு, பலர் நாற்காலியில் இருந்து எழுந்து, அவரைப் பார்த்து அமர்ந்தனர். சளைக்காமல் கையெழுத்துப் போட்டபடியே இருந்தார்.
சரியாக ஆறு மணிக்கு உரை தொடங்கியது.
வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், பயணம் செய்துகொண்டிருப்பதாகவும் சொல்லி, பயணம் ஏன் முக்கியம் என்று ஓரிரு வரிகளில் விளக்கினார். வரலாறு, காலம் , இயற்கையை நோக்கியே தன் பயணங்கள் என்று கூறினார். கற்கால கனவுகள் என்ற சென்ற வருட பயணத்தில் இருந்து ஆரம்பித்தார். பேச்சு டேக் ஆப் ஆனது.
இப்பயணக் குறிப்பைப் படித்திருந்தேன். இவை கொங்கன் கடற்கரையின் ரத்னகிரி கோலாப்பூர் பகுதிகளில் உள்ள பாறைசெதுக்குகளைப்[petroglyph] பற்றியது. பாறைஓவியம் [pictograph] பாறைச்செதுக்கு ஓவியம் . மாபெரும் யானையின் வயிற்றினுள் வரையப் பட்டிருந்த சிறு மிருகங்கள் நினைவில் இருந்தது. பேச்சின் பின் மறுபடியும் அக்கட்டுரைகளைப் படித்தேன்.
தக்காணப் பீடபூமியில் காணக் கிடைக்கும் உயர்ந்த பாறைக்குவியலின் நடுவே, மனிதர்கள் வேட்டையடிகளாய் அலைந்து வாழ்ந்த நாட்களில் வரையப்பட்டவை இந்த பாறைச் செதுக்குகள். 15000 -த்திலிருந்து 30000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. மனிதன் ஓரிடத்தில் இருந்து கொண்டு கால்நடைகளைப் பழக்கி , மேய்ச்சல் செய்ய ஆரம்பிக்கும் முன் இருந்த காலகட்டம். ஏனெனில் மேய்ச்சல் சம்பந்தப்பட்ட எந்த தடயமும் இவ்வோவியங்களில் இல்லை. கற்கால ஓவியங்கள் என்று வகுத்திருக்கிறார்கள். சொறிக்கல் என்று சொல்லப்படும் , கரிய பாறைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் பெய்த இடைவிடாத மழையால், மண்குழைந்து பாறையாய் உருவானவை. மழைக்காலத்தில் குழைந்து காணப்படும், இதன் மேல் புற்கள் முளைக்கும். இதன் மேல் கூரிய கற்களால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஒரு பெரிய திரட்சி மீன் , அதன் வயிற்றினுள் பல சிறிய மீன்கள். அந்த மீனே ஒரு கடல் போல, ஒரு பேரன்னை போல. மாபெரும் மனித உருவங்கள் , மனித உருவம் இரு தோள்களில் தூக்கிப்பிடித்த விலங்கோ , சிங்கமோ , புலியோ , தலையில்லாத பிரசவிக்கும் நிலையில் ஒரு பெண் உருவம். இவையெல்லாம் விலங்குகளைப் பழக்கத் தெரியாத , விவசாயம் செய்யாத , கற்களே ஆயுதமாகக் கொண்ட ஒரு வேட்டை வாழ் சமூகத்திற்கு எதற்கு? குறுக்கெழுத்துப் போட்டியில் இருக்கும் கட்டங்களாய் கட்டப்பட்டுள்ள , maze போன்ற , முடிவே இல்லாத ஒரு படம் எதைக் குறிக்க? இன்று நாம் இருக்கும் இடத்தில் இருந்து பின்னோக்கிச் சென்று அவற்றுக்கு அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால் நம்முடைய இன்றைய மதம், மொழி , நாகரிகத்திற்கு முந்தயவை. இன்றைய சிவனையோ , உலகளந்த பெருமாளையோ அதற்க்கு அர்த்தப் படுத்தக் கூடாது.
இந்த உரையின் மையம் என்பது நம் மொழி , மதங்களுக்கு முன் வரும் இந்த மாபெரும் மனித உருவத்தின் பொருள் தான் என்ன? இவை ஏன் திரும்பத் திரும்ப உலகெங்கும் காணக் கிடைக்கின்றன? இந்தப் பெரு உருவத்தில் நம் ஆழ்மனம் கொள்ளும் அர்த்தம் தான் என்ன? இந்தப் பெருநிலை முதலில் வந்து, கலாச்சாரம் இதைப் பின் தொடர்ந்ததா ?
பெருநிலை உடல் சார்ந்த , மனம் சார்ந்த குறியீடாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பெருநிலை என்பதை உடலின் எல்லையை மீறும் குறியீடாகச் சிந்திக்கலாம். களைப்பு, நோய் , மரணம் எனும் இவை மூன்றும் உடலின் எல்லைகள். இவைகளைத் தாண்டிச் செல்வதே இப்பெருநிலை. உலகெங்கும் கதைகளில் காணக் கிடைக்கும் பெரு மனிதர்கள் யாவரும் இதையே சுட்டுகிறார்கள் , இல்லையா? அனுமன், பீஷ்மர், தீர்க்கதமஸ், திருதராஷ்டிரர் , பீமன் இவர் அனைவரும் பெரு மனிதர்களாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் மனித ஆற்றல் எல்லைக்கு வெளியே தான் விழுகின்றன. இந்தக் கட்டுக்குள் அடங்க மறுக்கும் மனிதனின் அறைகூவல் தான் இந்தப் பெருநிலை என்பதா ?
மனதின் தளைகள் என்பன மூன்று - கவலை , அச்சம், தீமை. இவை மூன்றையும் வென்றவர்கள் மாமனிதர்கள் என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புத்தர், அருகர் ஆகியோர் எப்போதும் மாபெரும் உருவங்களாக படைக்கப் பட்டுள்ளனர். கிருஷ்ணருடைய முக்தி காட்டும் நிலை , விசுவரூப நிலையாகவே காணக்கிடைக்கிறது.
நம் வரலாறும் எப்போதும் இந்த மாமனிதர்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதே ஆகும்- உலகம் என்பதோர் உயர்ந்தோர் மாட்டே .
பின் வருவது புகழ் பெற்ற ப்ருஹதாரண்ய உபநிடத ஸ்லோகம்.
அசதோம சத்கமய - மெய்யற்றத்திலிருந்து மெய் நோக்கியும்
தமஸோ மா ஜ்யோதிர்கமய - இருளில் இருந்து ஒளிக்கும்
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய - இறப்பிலிருந்து இறப்பற்ற நிலைக்கும் , கொண்டு சேர்ப்பாயாக !!!
இதில் சொல்லப்படும் சாவு என்பது , அச்சம், கீழ்மையில் இருந்து விடுபட்ட நிலையே. ஒவ்வொரு கணத்திலும் நிகழக்கூடிய இந்த இறப்பு, அதில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுபடுவது என்பதே. இது வாழ்ந்து முடித்து கப்பம் எல்லாம் கட்டி கடைசியில் வரும் இறப்பு அல்ல. இந்த விடுபட்ட நிலையே மேலே அமிர்தம் என்று சொல்லப்படுகிறது. தினம் தினம் செய்யும் பயணம், அந்தக் கணத்தின், அன்றைய நாளின் இறவா நிலை.
ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா என்னும் புகழ் பெற்ற நாவல் உள்ளது. இவர் புத்தரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜெர்மனிய எழுத்தாளர். இந்தக் கதை புத்தர் வாழும் காலத்தில் அமைகிறது. நேரே புத்தரைக் காணும் தேடல் உள்ள இளவரசன் நாடு , வீடு துறந்து , மடாலயத்தில் சேர்ந்து , புலனறுத்து , தியானம் முயன்று, விடை ஏதும் கிடைக்காமல் வெளியேறுகிறான். பின் ஒரு வணிகனிடம் கணக்கராய்ச் சேர்ந்து, பணம், புகழ் தேடி, பெண்களின் பின்னே அலைந்து, சலித்துப்பின் , அதில் ஒரு பெண்ணை மணம் செய்து , ஆண் குழந்தை பெறுகிறான். இதற்கிடையில் , மடத்தை விட்டு வெளியேறும் போது , அந்தப் படகோட்டியைச் சந்திக்கிறான். இந்தப் புற உலக வெற்றியும் அவனைத் திருப்திப் படுத்த வில்லை. ஒரு இரவில் எல்லாம் உதறி வெளியேறுகிறான். மனம் உடைந்து ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் போது , பழைய படகோட்டியை அங்கு பார்க்கிறான். இவன் கூடவே வீட்டை விட்டு வெளியேறிய நண்பன் மடாதிபதியாகி , நதிக்கரையில் கடக்கிறான். இவனது செல்வந்தன் ஆனது கண்டு வியக்கிறான். சித்தார்த்தன் தான் துறவியும் இல்லை , செல்வந்தனும் இல்லை. செல்லும் இடம் இன்னும் தெரியவில்லை என்கிறான். பழைய படகோட்டி வசுதேவன் கீழ் படகோட்டியாகச் சேர்கிறான். அந்த நதியே தனக்கு ஞானம் அளிப்பதாக வசுதேவன் சொல்கிறான். எல்லா நதியும் மலையில் பிறந்து , கடலில் கலந்து, மீண்டும் மழையாய் மீள்வது போல், வாழ்க்கையும் தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று கூறுகிறான். சித்தார்த்தனின் மகனும் அவனைப் போலவே தந்தையின் சொல் கேளாது வீட்டை விட்டு வெளியேறுகிறான். நண்பன் கோவிந்தனும் பல வருடங்கள் பின், ஒரு துறவியான படகோட்டியைத் தேடி மீண்டும் வந்து சித்தார்தனைக் கண்டடைகிறான்.
இந்தக் கதையை எளிதாக உலகில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற இருத்தலியல் பார்வையில் விளக்கலாம். படகோட்டிதான் ஆவதென்றால் , இதில் பெருநிலை எங்குள்ளது? சும்மா இருத்தல் தான் என்றால் எப்படி ஆகும்.
இன்பமும் சலிப்பும் எப்போதும் இரு முனைகள். இன்பம் வந்ததும் பின்னால் சலிப்பும் தோளில் கை போட்டு வருகிறது.
சென்ற வாரம், புதுமைப் பித்தன் எழுதிய நாரத ராமாயணம் என்ற குறு நாவல் படித்தேன். ராமாயண கதை மாந்தர்களின் போருக்குப்பின் வரும் இருத்தலிய சிக்கல் பற்றி பேசுகிறது. இது ஒரு மிகச்சிறந்த ராமாயணப் பகடி.
சீனாவில் கண்டெடுத்த ராமாயண கால ஓலைச்சுவடியின் மொழிபெயர்ப்பு , பாதி தான் கிடைத்ததாகவும் , சொல்லி , ராமாயணத்தில் வருவது போல சர்க்கங்களாக , உள்ளே எண்ணிட்ட ஸ்லோகங்களாக சொல்லிச் செல்கிறார்.
ராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின், நாட்டில் அமைதியும் செல்வமுமாய் எல்லாம் சுபிட்சமாக இருக்கிறது. நாட்டை நாலாய் பிரித்து தம்பிகளுக்கு கொடுத்தாயிற்று. ராமனுக்கு மேல்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. தினமும் எவ்வளவுதான் மந்திரி சுமந்திரன் அறிக்கைகளையே கேட்பது. பிள்ளைகள் பிறக்கிறது. பிள்ளையை தூக்கவும் தெரியவில்லை , வந்தாலே கத்தி அழுகிறது. அசுரனை அழித்தவனுக்கு பிள்ளை தூக்க தெரியாதா என்கிறார்கள் . இவ்வாறு சிறு சிறு சிக்கல்கள் ராமனின் நெஞ்சில் வேல் போல் பாய்ந்தன. 'மனஸ்தாபம் என்ற கால்வாய் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வந்தது'.
எப்போதும் சண்டை , சண்டை பற்றிய திட்டமிடல் என்று இருந்ததால் சண்டையில்லாமல் பொழுது போகவில்லை என்று அனுமன் உணர்கிறார். தெற்கே அசுரர்கள் காலி. வடக்கே போகலாம் என்று நினைத்து ராமனிடம் சொல்கிறார். பிள்ளைக்கு பட்டத்தை மாற்றுகிறார். ஏக பத்தினி விரதன் என்றால் என்ன என்று தெரிகிறது. ஒன்றுக்கு மேல் தமக்கும் இருந்திருந்தால் எங்கு அப்பா நிலை ஏற்பட்டிருக்குமோ என்று ஒரு கணம் நினைக்கிறார்.
ராமன், சீதை, அனுமன் மூவரும் காட்டுக்குள் மீண்டும் செல்கிறார்கள். தம்பி இந்த முறை தூரத்தில் இருப்பதால் , நாளாகும் வரவில்லை. ஒரு இடம் பாக்கி இல்லாமல் தேடியாயிற்று, அரக்கர்கள் ஒருவரும் அகப்படவில்லை. விபீஷண மார்க்கத்தில் அனைவரும் திருந்தி நல்வழி சேர்த்தாயிற்று. ஒரு பர்ணசாலை அமைத்து சீதையை தங்க வைத்து, அனுமன் நாலைந்து நாளாய் தேவதாரு மரத்தின் மேலிருந்து பார்த்தும் ஒருவரும் சிக்கவில்லை. தம்பி நன்றாய் பர்ணசாலை அமைத்தார் , இது என்ன இப்படி, எவ்வாறு தரையில் தூங்குவது என்று சீதாபிராட்டி கேட்கிறார் . அந்நேரம் அனுமன் சரயு நதிப்பக்கம் போய் தர்ப்பைப்பாய் கோர்த்துக் கொடுக்கிறார். மற்ற இருவரும் தூங்கி விடுகிறார்கள். ராமனுக்கு உறக்கமில்லை. எழுந்து அனுமன் அமைத்த பாதையில் இரவில் சரயு நதிப்பக்கம் போய் , பாறையில் அமர்கிறார். மேலே விண்மீன்கள், கீழே குளிர்ந்த சரயு ஓடிக்கொண்டிருந்தது, வாடைக்காற்று உடம்பை நடுக்கிக்கொண்டிருந்தது. சரயுவில் குதித்து ஏன் உயிரையும் , உடலையும் மாய்த்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது. குதித்து விடுகிறார். ஆனால் கழுத்து மூழ்கும் அளவுக்கு கூட தண்ணீர் இல்லை. ஈர உடையுடன் வீடு திரும்புகிறார். சீதை 'என்ன நனைந்திருக்கிறீர்கள்' என்று கேட்கிறார். 'வியர்த்தது , குளித்தேன் ' என்று சொல்லி படுத்து விடுகிறார். விஷயம் தெரிந்து அனுமனும், சீதையும் கூடிப்பேசி அயோத்திக்கு மீள்கிறார்கள். வேறு ஒரு தளத்தில் , இப்பகடி ஆங்கில அரசு அமைந்து , காந்தி(இளைய பரதன் ) உண்ணாவிரதம் வரை நீள்கிறது.


Comments
Post a Comment