Skip to main content

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 4 - கீதையின் Genre



இளவயதில் சரஸ்வதி பூஜைக்கு எடுத்து அடுக்கிய புத்தகங்களில் தவறாமல் சித்பவானந்தர் எழுதிய கீதையும் இருக்கும். ஒரு நாள் முழுதும் எதுவும் படிக்காமல் இருக்க வேண்டும். படிக்கும் பிராயத்தில் வாழ்க்கையில் ஒரு நாள் எவ்வளவு மதிப்புடையது என்பது தெரியும், தவறவிட்ட நாட்கள் அவைகள்...இப்படி எழுதலாம். படிக்காமல் இருந்த எவ்வளவோ நாட்களில் இதுவும் ஒன்று. அங்கீகாரம் பெற்றது அவ்வளவுதான்.   அப்பா 'புத்தகத்தை திறந்து உட்காரமாட்டேங்காணே' என்று மட்டும் தான் சொல்வார். நானும் புத்தகத்தை மடியில் கிடத்தி , கீழ்த் திண்ணையில் உட்கார்ந்து விடுவேன். எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் இன்னும் விளக்கியே ஆக வேண்டும். நாங்கள் வாழ்ந்த தெருவின் எல்லா வீடுகளிலும் பெரிய திண்ணைகள் இருக்கும். ஒரு ஐந்து ஆறு மாமாக்கள்  பெரிய வட்டமாய் அமர்ந்து மூன்று கட்டு  ரம்மி விளையாடுவார்கள். ஒருவர் எண்ணிக்கை எழுதுவார். அக்காக்கள் மனைவிகள் மேல்திண்ணையில் இருந்து வந்தும் போயும் பார்த்து , மனதிற்குள் வைவார்கள். ஏனென்றால் இது நாள் பூராம் நடக்கும். மொத்தம் 320 எண்ணிக்கை ஆட்டத்தில் இருந்து வெளியேற. பல மாமாக்கள் 'ஸ்க்ரூட்' என்று சொல்லி டிபென்ஸ் ஆடியே ஆட்டத்தை இழுப்பார்கள். எப்போதும் ஸ்க்ரூட் விடுபவர் இந்த ரௌண்டில் ஆட ஆரம்பித்தால் நன்றாய் ஆடிக் கொண்டிருப்பவர்கள் ஸ்க்ரூட் விடுவார்கள்.  ஒரு சைக்காலஜிக்கல் warfare போன்று இருக்கும். இதை எல்லாம், திரிகூடம் போல் இருக்கும், மூன்று பெரிய திண்ணைகளில்,  அடுத்த திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் கோயில் அர்ச்சகர் அல்லது பரமாத்மா.  அங்கு  முக்குணங்கள் திரிபு பட்டு  சமநிலை இழந்து  சீட்டாடிக் கொண்டிருப்பவர்கள் இவரது தம்பிகள் , தம்பி பிள்ளைகளே, ஜீவாத்மாக்கள் .  இவர் முக்குணத்திற்க்கு அப்பால் நிற்பவர். ஒன்றும் சொல்ல மாட்டார் , பார்த்துக்கொண்டிருப்பார். ஏனென்றால்  பிரகிருதியின் செயல் அலையில் , கரை ஏற  , மறு நாள் மார்கழிக்  காலையில் இவருடன் பிரபந்தம் பாடப் இருப்பவர்களும்  இவர்களே. இதை எல்லாம்  ஏன் சொல்கிறேன் என்றால் அவ்வளவு பெரிய திண்ணை. எங்கள் வீட்டில் திண்ணை இரண்டு, மேலும் , கீழுமாக. நுழைவின் வலது புறம் திண்ணை மேல் ஒரு திண்ணை இருக்கும். அதாவது படுக்கை. சரியாக ஒரு ஆள் அகலம் மட்டுமே. 32-34 இடுப்பளவு மட்டுமே கொள்ளும். மேலே இருந்தால் , உடல் வெளியே விழும், கனத்தவர்கள் ஒருச்சாய்த்து நிறைய நேரம் படுக்க முடியாது. மண் குறைத்து , சிமெண்ட் பாலில் ஊற்றிய பச்சை உடல். தலைக்கு சிமெண்டில் மெல் மணல் குழைத்த , நன்றாய் இழைத்த கல் தலையணை. இதற்க்கு மாப்பிள்ளை படுக்கை என்று பெயர்.  வீட்டில் படி என்றால் இங்கு வந்து கால் நீட்டி உட்கார்ந்து , பின்னிருக்கும் அழியில் சாய்ந்து மடியில் புத்தகத்தை வைத்துக்கொள்வேன். எதோ ஒரு சைக்கிள் கடந்து செல்லும். ஒருவர் செருப்பு உரசும், கம்பு நிலத்தில் ஊன்றும். அம்மா 'வாய் விட்டுப் படி ' என்பார். ஆக அப்பாவை சமாளிக்க புத்தகம் திறந்து இருக்க வேண்டும். அம்மாவிற்கு வாயில் இருந்து சத்தம் வர வேண்டும்.

இப்படி கீதையின் என் முதல் அறிமுகம், சரஸ்வதி பூஜை மறுநாள் , ஒரு ஆயுத பூஜை அன்று தான் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அன்று அம்மா சம்பிரதாயமாக பிள்ளைகளை கீதையை எடுத்து , திறந்த உடனே வரும் செய்யுளை வாய் விட்டு , பாட்டும் கருத்தும் படிக்க வைப்பார். கிளி ஏடு எடுப்பது போல் ஆகும். என்ன யோகம் , என்ன செய்யுள் வருகிறது என்பதை எடுத்துச் சொல்வார்.  பக்கம் குறித்து வைத்து மாப்பிள்ளைத் திண்ணையில் சென்று , ஒரு ஜோசிய எதிர்பார்ப்புடன் , மீண்டும் அதே பக்கத்தைப் படித்துப் பார்ப்பேன். இதை வைத்து என்ன செய்ய என்று தான் தோன்றும். எங்காவது அர்ஜுன உவாச , பகவான் உவாச என்று இருப்பதை படித்து நல்லது வந்துள்ளது என்று நினைத்துக் கொள்வேன்.  

இன்னொரு கீதை என்கவுண்டர் இப்படிப்போகும். தெருவில் யாரவது யமனிடம் டெஸ்ட் மேட்ச் அல்லது ஒரு சிலர் போல் டெஸ்ட் சீரிஸ் விளையாடிக்கொண்டிருந்தால் , படுக்கைத் தலைமாட்டில் கூடி கீதையும் , பிரபந்தமும் நாளெல்லாம் படிப்பார்கள். பையன்கள் சண்டையில் , கேலியில் வார்த்தைகள் ஒழிந்து போகும்போது, ' என்ன உனக்கும் ,கீதை படிக்கணுமா  ?' - என்பார்கள்.  இதில் ஒருவர் கீதா கிருஷ்ணன் என்று இருந்தார். பெரும்பாலும் இந்தக் கேள்வியின் எதிர் முனையில் அவரே இருந்தார்.       

புத்தகத்தில் சிவப்பு அட்டை போட்டு, பொன் எழுத்தால் பெயர் எழுதியபின் , எல்லோர் வீட்டின் பீரோவில் உள்ளே  மேல் தட்டில் மட்டுமே இருக்கும், நெருக்கடியில் கையில் எடுக்கப்படும்  இந்தப் புத்தகம் ஒரு மிஸ்டரி என்றே மனதில் பதிவாகியிருக்கிறது.     

கீதையை நித்ய சைதன்ய யதி ஒரு உபநிடதம் என்று வகைப்படுத்துகிறார். பதினெட்டு அத்தியாயங்களும் தனித் தனியே உபநிடதங்கள் என்று சொல்லத்தக்கவை என்று கூறுகிறார். உபநிடதங்கள் பிரமாணங்களை அடுத்து வருபவை. தொடக்க கால உபநிடதங்கள் வேள்விகளை கேள்விக்குள்ளாக்குகின்றன.  எல்லா உபநிடதங்களும் ஒரே பொருள் குறித்தே குவிகின்றன. அவை இரண்டு சொல்லால் குறிக்கப் படுகின்றன. ஒன்று பிரம்மம் , மற்றது ஆத்மா. இது பண்டைய இந்திய கலாச்சாரம் வெளியே இருக்கும் யதார்த்தம் தனக்குள்ளேயும் இருப்பதாகக் கண்டதைக் குறிக்கிறது. பிரம்மம் தனக்கு வெளியே இருக்கும் உற்பத்தி ஸ்தானம். தன் உள்ளிருக்கும் ஆத்மா என்பது இதை பிரதிபலிக்கும் கண்ணாடி.  இது இரண்டும் ஒன்றே என்று கண்டுகொண்ட தருணமே புராணங்களை மீறி தத்துவம் வெளியே வந்த தருணம்.  மனிதனுக்குள் உடலை மீறி இருக்கும் சாரத்தை தேடிக் கண்டறிந்த தருணம். தனி மனிதனை ஒட்டு மொத்த பிரபஞ்ச நடுவில் வைத்து உடலைத் தவிர என்ன என்று சிந்தனை செய்ததின் அடையாளம். புருஷ சுக்தத்தில் மனித உடல்  மாபெரும் பிரபஞ்ச உடலுக்கு உருவகமாக கூறப்பட்டிருக்கிறது. மற்றொரு இடத்தில இறந்தவரின் கண்கள் சூரியனிடம் திரும்பிச் செல்வதாக வருகிறது. மூச்சு பேரண்டத்தின் மூச்சில் கலப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் தன் உள்ளே ஒடுங்கும் ஒரே புள்ளி ஆத்மா. 

இதைப்போலவே வெளியே தெரிவது என்ன என்ற கேள்வியும் உபநிடதங்களில் தொடர் கேள்வியாக வருகிறது. இவ்வாறு வெளியில் தெரியும் எல்லாம் கடைசியில் போய் முடியும் புள்ளி பிரம்மம் எனப்பட்டது. மேலும் கீழிருந்து விரித்தால் தெரிவதும், மேலிருந்து இறங்கிக்கொண்டே வந்தால் தெரிவதும் ஒன்றே. தத்வ மஸி , அகம் ப்ரம்மாஸ்மி போன்ற ஆப்த வாக்கியங்கள் குறிப்பதும் அதுவே. பிரம்மத்தைப் பற்றி அறிவதை பர வித்தை  (para vidya, para - அங்கிருப்பது )  என்று மரபில் சொல்லப்படுகிறது. மற்றதெல்லாம் அபர வித்தை.  இது உயர்ந்த நிலை அறிவு எனப் படுகிறது, ஏனென்றால் களிமண் பற்றி அறிவது களிமண்ணால் செய்த எல்லாப் பொருள்களைப் பற்றி அறிவதற்கு மேல் ஆகும். இதை இயற்கை என்றும் , மனித மனத்தால் அல்லது நமக்கு இருக்கும் புலன்களை வைத்து வரையறுக்க முடியாது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதை Absolute , Cosmic, Transcendental  என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த அறிய முடியாமை , அளவிட முடியாமை பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உச்சம் என்று ஹரியண்ணா வேதாந்த சூத்திரத்தில் வரும் இந்த இடத்தைச் சொல்கிறார். மாணவர் ஆசிரியரிடம் பிரம்மத்தை விளக்கக் கேட்கிறார். சரி என்று சொல்லி ஆரம்பிக்கிறார். காத்திருந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கவே , மாணவர் மீண்டும் 'சொல்க ஆசிரியரே ' என்கிறார். ஆசிரியர் மௌனமாய் இருந்தார் . மூன்றாவது, நான்காவது முறை முடியவே , கடைசியில் ' நான் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். நீ கேட்க மறந்தாய் ' என்று சொல்கிறார். பிரம்மம் என்பது மௌனமே, வெற்றிடமே என்கிறார். அளவிட முடியாத பிரபஞ்சம், அதன் இடையிலா ஆக்கமும் , அழிவும்  ஒருபுறமும்  , உனக்குள் இருக்கும் அழியாத ஒன்றும் அதுவே  என்று மறுபுறமும் சொல்லும் போது அது ஏற்புடையதாகவே தோன்றுகிறது.

இதைத் தெரிந்து கொள்வதே முக்தி , மோக்ஷம் , விடுதலை என்பது. இது எதற்கு , பின் வருவன பாரதியாரின் கீதை முன்னுரையின் வரிகள்:

கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

'ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், 'முக்தியாவது யாது?'

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) 'ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்.

எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?

'எல்லாம் சிவன் செயல்' என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? 'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?'

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?"


ஆக கவலை இல்லாமல் வாழ , கவலை இல்லாமல் வேலையைச் செய்ய, தத்துவத்தோடு நில்லாமல் நடைமுறை வழிகளை சொல்கிறது. 

எல்லாத் தத்துவங்களும் மரணத்தின் முன்னர் முட்டி நிற்கின்றன என்று ஜெயமோகன் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். இது போன்ற அனுபவம் ஆறேழு வருடத்திற்க்கு முன் என்னுடைய பாட்டியின் இறுதி நாள்களில் எனக்கு ஏற்பட்டது. அம்மாவின் துணையாக எனது பாட்டியுடன் கழித்த கடைசி பத்து நாட்கள் வாழ்வின் என்றும்  மறக்க முடியாத நாட்களாகவே இருக்கும். ஏறத்தாழ இறை பக்தியே வாழ்வு என்று இறுதி நாட்களில் இருந்தவர். உடம்பில் இருந்து உயிர் பிரிவது படிப்படியாக நிகழ்ந்ததைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மனதின் கட்டளைக்கு உடம்பு வேலை செய்வதை நிறுத்தியது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. நடு இரவில் நீர் கேட்டு ஒலிக்கவிருக்கும் பாட்டியின்  கைவளை இரும்புக்கட்டிலை  தட்டும் ஓசையை எதிர்பார்த்து இரவெல்லாம் தூங்காமல் விழித்திருப்பேன். நீரோ , காப்பியோ கொடுப்பேன். மரணத்தை பெரும்பாலும் அனுமதித்தபடி தான் இருந்தார். ஆனாலும் அந்த இறுதி சில மணிகள் உயிர் இன்னும் வாழ முயற்சிப்பதையே பார்த்தேன். அடுத்த ஒரு சில மாதங்களில் யாரும் எதிர்பார்க்காமல் மரணமடைந்த மாமனாரின் உடல் மின் மயானத்தில் ஒரு மாபெரும் தீப்பிழம்பாக ,அந்த நாள் வரை  வாழ்வில் என்  கண்கள் பார்த்தே இராத , பல நூறு சூரியன்கள் கூடிய ஒரு வீரிய ஒளியுடன், எங்கோ இரண்டு பெரிய இரும்புத்தூண்கள் மோதும் பெரிய ஒலியுடன், அவர் உடல்  ஒன்றும் இல்லாமல் போனது நினைவில் நிற்கிறது.  இன்னும் மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன, என் தந்தை உள்பட. நானும் பார்த்தும் படித்துமே இருக்கிறேன். கடைசியாக Why We Die: The New Science of Ageing and Longevity
 என்று வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் படித்தேன். விஞ்ஞானம் வாழ்வை நீட்டிப்பதைப் பற்றியே ஆராய முடியும். ஆனால் தத்துவார்த்தமான  கேள்விக்கு அதில் விடை இல்லை. என் வரையில் இந்து ஞான மரபில் இருக்கும் விடையே மரணத்தை எதிர் கொள்ள இன்றுள்ள மிகச் சிறந்த வழியாகும். 

பாரதியாரின் ஞானப் பாடல்களில் பல அத்வைதப் பாடல்கள். இதில் இருக்கும் பரசிவ வெள்ளம் என்னும் பாடல் பிரம்மத்தைக் குறித்த தமிழின் சிறந்த  பாடல் என்று  நினைக்கிறேன். ஆம் "இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார் ; வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையும்; ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;"  எப்படிக்  கண்டடைவது - "காவித் துணிவேண்டா  கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே; சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா."
பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய்  உள்ளதெலாந் தானாகும்வெள்ள மொன் றுண்டாமதனைத்  தெய்வமென்பார் வேதியரே.1

 காணுவன நெஞ்சிற்   கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும்   பிறப்பதந்த வெள்ளத்தே.2

 எல்லைபிரி வற்றதுவாய்   யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுள தென்றறிஞர்   என்றுமய லெய்துவதாய்.3

 வெட்டவெளி யாயறிவாய்    வேறுபல சக்திகளைக்கொட்டுமுகி லாயணுக்கள்    கூட்டிப் பிரிப்பதுவாயை4

 தூல வணுக்களாய்ச்   சூக்குமமாய்ச் சூக்குமத்திற்சாலவுமே நுண்ணியதாய்த்   தன்மையெலாந் தானாகி5

 தன்மையொன்றி லாததுவாய்த்   தானே ஒரு பொருளாய்த்தன்மை பலவுடைத்தாய்த்   தான்பலவாய் நிற்பதுவே.6

 எங்குமுளான் யாவும்வலான்   யாவுமறி வானெனவேதங்கு பலமதத்தோர்   சாற்றுவதும் இங்கிதையே.7

வேண்டுவோர் வேட்கையாய்   வேட்பாராய் வேட்பாருக்கீண்டுபொரு ளாயதனை   யீட்டுவதாய் நிற்குமிதே.8

காண்பார்தங் காட்சியாய்க்   காண்பாராய்க் காண்பொருளாய்மாண்பார்ந் திருக்கும்,   வகுத்துரைக்க வொண்ணாதே.9

 எல்லாந் தானாகி   யிருந்திடினும் இஃதறியவல்லார் சிலர்ரென்பர்   வாய்மையெல்லாங் கண்டவரே. 10

 மற்றிதனைக் கண்டார்   மலமற்றார் துன்பமற்றார்பற்றிதனைக் கொண்டார்   பயனனைத்துங் கண்டாரே.11

 இப்பொருளைக் கண்டார்   இடருக்கோர் எல்லைகண்டார்எப்பொருளுந் தாம்பெற்றிங்   கின்பநிலை யெய்துவரே. 12

 வேண்டுவ வெலாம் பெறுவார்   வேண்டா ரெதனையுமற்றீண்டுபுவி யோரவரை   யீசரெனப் போற்றுவரே.13

 ஒன்றுமே வேண்டா   துலகனைத்தும் ஆளுவர்காண்என்றுமே யிப்பொருளோ   டேகாந்தத் துள்ளவரே. 14

 வெள்ளமடா தம்பி   விரும்பியபோ தெய்திநினதுள்ளமிசைத் தானமுத   வூற்றாய்ப் பொழியுமடா. 15

 யாண்டுமிந்த இன்பவெள்ளம்   என்று நின்னுள் வீழ்வதற்கேவேண்டு முபாயம்   மிகவுமெளி தாகுமடா.16

 எண்ணமிட்டா லேபோதும்   எண்ணுவதே இவ்வின்பத்தண்ணமுதை யுள்ளே   ததும்பப் புரியுமடா. 17

 எங்கு நிறைந்திருந்த   ஈசவெள்ள மென்னகத்தேபொங்குகின்ற தென்றெண்ணிப்     போற்றி நின்றாற் போதுமடா. 18

 யாதுமாம் ஈசவெள்ளம்   என்னுள் நிரம்பியதென்றோதுவதே போதுமதை   உள்ளுவதே போதுமடா. 19

 காவித் துணிவேண்டா   கற்றைச் சடைவேண்டாபாவித்தல் போதும்   பரமநிலை யெய்துதற்கே. 20

 சாத்திரங்கள் வேண்டா   சதுமறைக ளேதுமில்லைதோத்திரங்க ளில்லையுளந்   தொட்டுநின்றாற் போதுமடா. 21

 .தவமொன்று மில்லையொரு   சாதனையு மில்லையடாசிவமொன்றே யுள்ளதெனச்   சிந்தைசெய்தாற் போதுமடா. 22

 சந்ததமு மெங்குமெல்லாந்   தானாகி நின்றசிவம்வந்தெனுளே பாயுதென்று   வாய்சொன்னாற் போதுமடா.23

 .நித்தசிவ வெள்ளமென்னுள்   வீழ்ந்து நிரம்புதென்றுன்சித்தமிசைக் கொள்ளுஞ்   சிரத்தை யொன்றே போதுமடா.24

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...